ஆலுபரோட்டா
ஏப்ரல் 8, 2010 at 1:12 பிப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவைகள்.
கோதுமை மாவு—–ஒன்றரை கப்
உருளைக் கிழங்கு—-திட்டமான சைஸ் 4
பச்சை மிளகாய்—2
கொத்தமல்லி இலை—நறுக்கியது கால்கப்
சீரகப் பொடி—அரை டீஸ்பூன்
தனியாப் பொடி–அரை டீஸ்பூன்
மாங்காய்ப் பொடி– அரை டீஸ்பூன்
கரம் மஸாலாப் பொடி—அரை டீஸ்பூன்
உப்பு—-ருசிக்குத் தக்கபடி
எண்ணெய்—மாவிற்கு 2 டீஸ்பூன்
பரோட்டா செய்யத் தேவையான எண்ணெய் அல்லது நெய்
செய்முறை—-உருளைக் கிழங்கை நன்றாக அலம்பி
2 துண்டங்களாகச் செய்து , ஒரு காட்டன் துணியை நனைத்துப்
பிழிந்து கிழங்குகளை அதனுள் வைத்துச் சுருட்டி சிறிது
ஜலம் தெளித்து மைக்ரோவேவ் பாத்திரத்தில் வைத்து
7, 8, நிமிஷங்கள் ஹை பவரில் மைக்ரோ வேவ் செய்து
எடுக்கவும்.
கிழங்கு வெந்திருக்கும். தோலை உறித்து விட்டு, கிழங்கை
சூடு இருக்கும் போதே நன்றாக கட்டி இல்லாமல் மசிக்கவும்.
கோதுமை மாவுடன் உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து ரொட்டி இடும் பதத்தில்பிசைந்து ஊற வைக்கவும்.
மிளகாயைக் குறுக்காக நறுக்கி ,விதைகளை நீக்கி விட்டு மிகவும்
மெல்லியதாக, பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிசைந்த
கிழங்குடன்உப்பு, மற்றும் பொடி வகைகள்,கொத்தமல்லி, மிளகாய் சேர்த்துப்பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாகச் செய்து வைக்கவும்.
ரொட்டி மாவையும் சற்றுப் பெறிய சைஸில் பிரித்து உருட்டிக்
கொள்ளவும்.
மாவை உள்ளங்கை அளவிற்கு ரொட்டியாக இட்டு மேலாக,
லேசாக சிறிது எண்ணெயைத் தடவி, உருளைக் கிழங்கு கலவையை வடைமாதிரி தட்டையாகச் செய்து அதன்
மேல் வைத்து போளி மூடுவது போல மாவின் விளிம்புகளால்
பூரணத்தை நன்றாக மூடவும்.
மேல் மாவைத் தோய்த்து மெல்லிய ரொட்டிகளாகத் தயாரிக்கவும்.
ஒவ்வொன்றாகத் தயாரிக்கும் போதே, திட்டமாகக் காய்ந்த
தோசைக் கல்லில், ரொட்டியைப் போட்டு, மேலாக எண்ணெயோ
நெய்யோ தடவி, திருப்பிப் போட்டு, சற்று தோசைத்திருப்பியினால்
லேசாக அழுத்தம் கொடுத்து எண்ணெய் தடவிரொட்டியைச்செய்து
எடுக்கவும்.
உருளைக் கிழங்கை மைக்ரோவேவில் வேக வைத்தால் தண்ணீர்ப்
பாகம் குறைந்து பரோட்டா செய்ய, ஒட்டாமல் சுலபமாக செய்ய
ஒழுங்காக வருகிரது.
வேகவைத்து எடுத்தால் கிழங்கை முக்கால்வேக்காட்டில் எடுத்து
தோல் உறித்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி மசிக்கலாம்.
ஈரப்பதம் குறைவாக இருக்கும்.
மெல்லியதாக இடுவதற்குதான் இத்தனைப் பதமும்.
ஆலு பரோட்டாவா, உருளைக் கிழங்கு ரொட்டியா?
எல்லாம் ஒன்றேதான்.
Entry filed under: ரொட்டி வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed