தோசையும் சுலப சட்னியும்.
பிப்ரவரி 25, 2011 at 10:45 முப 22 பின்னூட்டங்கள்
இதுவும் வழக்கமான தோசைதான். நான் எந்த விகிதத்தில் அரிசி,
பருப்பு, கலந்து செய்கிறேனென்பதுதான் சொல்ல வந்த விஷயம்
என்று கூடத் தோன்றும். கரகரவென்று தோசை குழந்தைகளுக்குப்
பிடிக்கிரது. அதனால் நான் எப்படிச் செய்கிறேனென்று சொல்லுகிறேன்.
வேண்டியவைகள்.
இட்டிலிக்கு உபயோகிக்கும் புழுங்கலரிசி—3 கப்
பச்சரிசி—–1 கப்
துவரம்பருப்பு—-கால்கப்
வெந்தயம்—5 டீஸ்பூன்
நல்ல விழுது காணும் உளுத்தம் பருப்பு—-1 கப்
தேவைக்கு—-உப்பு
செய்முறை
அரிசிவகைகள், துவரம்பருப்பு, வெந்தயம் இவைகளைத் தண்ணீர்-
-விட்டுக் களைந்து சுத்தம் செய்து நல்ல ஜலம் விட்டு ஊற வைக்கவும்.
இதே போல் உளுத்தம் பருப்பையும் நன்றாகக் களைந்துத் தனியாக
ஜலம் விட்டு ஊறவைக்கவும்.
அரிசி நன்றாக ஊறினால் சீக்கிரம் அரைபடும்.
குறைந்த பக்ஷம் 5, 6 மணிநேரம் ஊறினால் நல்லது.
பருப்பு 2, 3 மணி நேரம் ஊறினால் கூட போதும்.
கிரைண்டரை நன்றாகச் சுத்தம் செய்து அலம்பி முதலில்
உளுத்தம் பருப்பைப் போட்டு திட்டமாக ஜலம் தெளித்து நன்றாக
அரைக்கவும். பஞ்சுப் பொதி மாதிரி, நன்றாகக் குமிழ்கள் வரும்படி
அரைக்கவும். நல்ல கிரைண்டரானால் 40 நிமிஷமாவது ஆகும்.
உளுந்து மாவைப் பூரவும் எடுத்துவிட்டு, அரிசியைச் சிறிது,சிறிதாகக்
கிரைண்டரில் போட்டு தண்ணீர் திட்டமாகச் சேர்த்து நன்றாக மசிய
வெண்ணெய் போல அறைக்கவும். இட்டிலி மாவைப்போல அல்ல.
நைஸாக அறைக்கவும். இப்போது வேண்டிய உப்பையும் சேர்க்கவும்.
2, 3 சுற்றுகள் சுற்றி முதலில் அறைத்து வைத்த உளுந்து விழுதையும்
சேர்த்து அறைக்கவும்.
இரண்டு மூன்று நிமிஷத்தில் மாவுக்கலவை ஒன்று சேர்ந்துவிடும்.
நல்ல சுத்தமான பாத்திரத்தில் மாவை எடுக்கவும்.சிலவுக்குத் தக்கபடி மாவைக் கொஞ்சம் வெளியில் வைத்தும்,
மிகுதியை ப்ரிஜ்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.
மாவு சற்று பொங்கி வருமளவிற்கு முதல்உபயோக மாவு வெளியில்
இருக்கலாம் . மிகுதி பிரிஜ்ஜில் இருந்தால்கூட மாவை 2, 3, மணி நேரம்,
தோசை வார்க்குமுன்னர் வெளியே எடுத்து வைத்தால் கூட போதும்.
மாவு பதமாக இருக்கும்.
தோசை வார்ப்பதற்கு நான் ஸ்டிக் தோசைக் கல்தான் சுலபமாகவுள்ளது.
கல்லில் எண்ணெய் தடவ, உருளைக் கிழங்கை பாதியாக நறுக்கி
எண்ணெயில் தோய்த்து உபயோகிக்கலாம்.
மாவைச் சற்று கெட்டியாகவே கறைத்து வைத்துக் கொள்ளவும்.
கல்லில் எண்ணெய் தடவி சூடாக்கவும்.
தீயை ஸிம்மில் வைத்து ஒரு கரண்டி மாவைக் கல்லில் விட்டு அடி-
-தட்டையான கரண்டியினால் மாவைச் சுழற்றி தோசையாகப்
பரப்பவும்.
தீயை அதிகமாக்கி, தோசையைச் சுற்றிலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய்
விடவும்.
தோசையின் மேல் பல பொத்தல்களுடன் ஈரப்பதம் குறையும்.
பதமாக தோசையைத் திருப்பிப் போட்டு தீயைக் குறைக்கவும்.
அடிபாக தோசை சிவக்க ஆரம்பித்தவுடன், திருப்பிப் போட்டு
மடித்து எடுக்கவும்.
கரகரஎன்று தோசை நன்றாக வரும்.
எண்ணெய் தடவி தோசையைப்பரப்பி, தீயை அதிகமாக்கி சுற்றிலும்
எண்ணெய்விட்டு , மேலே சொன்னபடிதான் மிகுதியும்.
இதுவே ஹாட் ப்ளேட்டானால் தீயைக் குறைத்தால் கூட ஒரு
தோசையின்இடைவெளியில் மற்றொன்று வார்க்குமுன் சிறிது
தண்ணீரைத் தெளித்து கல்லைத் துடைத்து வார்த்தால் தோசை
ஸரியாக எடுபடும்.
ஸரியாக புரிந்து கொண்டால் தோசை பட்டு பட்டாக வரும்.
தோசைத் திருப்பியை நுணியில் மாவு ஒட்டாமல் சுத்தமாக
வைத்துக் கொள்ளுதல் அவசியம்.
பசங்களுக்கு சட்டென்று அரைத்துப் போட ஒரு சட்னியும் கூட இதோ.
1வெங்காயம், ஒரு தக்காளிப்பழம், 1 பச்சைமிளகாய் நறுக்கிக்கொண்டு
எண்ணெயில் வதக்கவும்.
3டேபிள்ஸ்பூன் வேர்க்கடலையையும் சிவக்க வறுத்து கூட வைத்து
உப்பு சேர்த்து அரைத்தால் திடீர் சட்னியும் தயார். வேறு என்ன சேர்க்க
நினைக்கிறீர்களோ அதையும் சேர்த்து அரையுங்கள்.
வீட்டில் தோசை மாவு இருந்தால் துணைக்கு ஒருவர் இருப்பது போல
என்பது வசனம். வசனம் ஸரியாகத்தான் இருக்கும். இல்லையா
உருளைக்கிழங்கு கறி வைத்த மஸால் தோசை செய்யலாம்.
லேசாக சீஸ் தூவி தோசையை மடிக்கலாம்.
டொமேடோ, வெங்காயம் வதக்கி வைத்து தோசையை மடிக்கலாம்.
தோசையை மடக்கும் போது சிறிது வெண்ணெயைத் தடவி துப்பா-
-தோசை தயாரிக்கலாம்.
ஊத்தப்பம், நமது ரஸனைக்கேற்ப பொருள்களைக் கூட்டி விதவிதமாக
தயாரிக்கலாம்.
சுடச்சுட சாப்பிட கரகரதோசையும், எடுத்துப் போக மெத்தென்ற
மிருதுவான தோசையும் தயாரிக்கலாம்.
பலவித சட்டினி வகைகளும், மிளகாய்ப் பொடி தயாரிப்பும் ஏற்கெனவே
கொடுத்திருக்கிறேன்.
1.
மகி | 3:35 முப இல் பிப்ரவரி 27, 2011
/வீட்டில் தோசை மாவு இருந்தால் துணைக்கு ஒருவர் இருப்பது போல – என்பது வசனம். / கரெக்ட்டா சொன்னீங்கமா! அதுவும் வீகெண்ட்ல மாவில்லைன்னா மண்டையப்பிச்சுக்கலாம் போலிருக்கும்! 🙂
தோசையும் சட்னியும் அருமையா இருக்கு!
2.
chollukireen | 10:30 முப இல் பிப்ரவரி 28, 2011
திடீர் கெஸ்ட், அவஸர வேலை, இப்படி சமய ஸஞ்சீவினிதான் இந்த மாவு வகைகளே. பல உப பொருள்களைச் சேர்த்து பஜ்ஜி, போண்டா.பக்கோடா என உறுமாற்றங்களையும் செய்து ஜமாய்க்கலாம். உன் பதில்
எதிரில் பேசுவதுபோல உணர்ந்து எழுதியது. அன்புடன் அம்மாவும் நன்றியுடன்.
3.
Mahi | 8:21 பிப இல் ஓகஸ்ட் 1, 2012
சுலப சட்னி செய்து என் வலைப்பூவில் படமும் இணைத்திருக்கேன் அம்மா..நல்ல ருசியாக இருந்தது சட்னி. என்ன ஒன்றே ஒன்று, இந்தமுறை பச்சைமிளகாய்தான் காரமே இல்லாமல் பலமிளகாய்கள் சேர்த்து அரைக்க வேண்டியாதாப் போச்சு! 😉 🙂
4.
chollukireen | 6:28 முப இல் ஓகஸ்ட் 11, 2012
கம்பியூட்டர் உபயோகத்திற்கு இன்றுதான் லாயக்காகி வந்தது. எதுவும் செய்ய முடியாமல் கையைக் கட்டிப்போட்டாற்போல இருந்தது.
உன் வலைப்பூவில் சுலப சட்னியும், அரிசி கீரும் பார்க்க அதுவும் அருமையான படங்களுடன் பார்க்க மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
காரசாரமாகப் பண்ண மிளகாய்கள் சேர்ப்பது நல்லதுதானே. என் வலைப்பூவிற்கும் உன் வழி நிறையப் பார்வையாளர்கள். ரொம்ப நன்றி மஹி.
இப்படியே எல்லோரையும் அறிமுகமும் ஆகிறது. தொடரட்டும் இவ்வகை உதவிகள். அன்புடன்
5.
visalatchi @ viji | 7:11 முப இல் பிப்ரவரி 13, 2013
நல்ல குறிப்பு மாமி நான் வீட்டில் செய்து பார்க்குறேன். நன்றி……………
6.
chollukireen | 7:28 முப இல் பிப்ரவரி 13, 2013
இப்போதுதான் நீங்கள் முதள் முறையாக வந்திருக்கிறீர்கள். ஸந்தோஷம். செய்து பாரம்மா. திரும்ப வந்து கமென்ட் கொடம்மா. அன்புடன்
7.
visalatchi @ viji | 9:49 முப இல் பிப்ரவரி 13, 2013
நிச்சயாமாக மாமி நீங்கள் சமையல் குறிப்ப்ய் மட்டும் தான் தருவீகளா அல்லது வேறு என்ன குறிப்புகள் உங்களிடம் தெரிந்துக்கொள்ளாலாம்
8.
chollukireen | 9:57 முப இல் பிப்ரவரி 14, 2013
இல்லேம்மா. நான் 80 வயதுக்கு மேலானவளம்மா. வேரெ ஒன்றும் எழுதலே. அன்புடன்
காமாட்சி
9.
visalatchi @ viji | 6:39 முப இல் பிப்ரவரி 14, 2013
மாமி இன்று நீங்கள் சொன்ன சட்டினிதான் அதுல நான் செஞ்ச தவறு வெங்காயம் தக்காளியை தாளிக்க வில்லை மறுமுறை திருத்திக் கொள்கிறேன்
10.
chollukireen | 10:03 முப இல் பிப்ரவரி 14, 2013
அரைத்த சட்னியை வதக்கினாலும் ஸரியாக இருக்கும்.
11.
visalatchi @ viji | 10:14 முப இல் பிப்ரவரி 14, 2013
இல்ல மாமி நான் அதை சுடு பண்ணினேன் ஆனால் பச்சை வடை அடிக்கிறது
12.
chollukireen | 3:42 முப இல் பிப்ரவரி 15, 2013
வதக்கறது என்றால் எண்ணெயில் சுருள வதக்க வேண்டும்.. போனால் போகிறது. இனிமேல் சட்னி அறைப்பதற்கு முன்னாலே ஞாபகமாக வெங்காயம்,தக்காளியை எண்ணெயில் வதக்கி அரை. இதுதான் ஸரி.
13.
visalatchi @ viji | 6:01 முப இல் பிப்ரவரி 15, 2013
nandri mami i fallo
14.
Pattu | 1:58 பிப இல் ஜனவரி 22, 2014
அய்யா! டிப் கிடைச்சுது!. துவரம் பருப்பு கலந்து செய்ய!. முயற்சிக்க வேண்டியது தான். தேங்க்ஸ் மா!
15.
chollukireen | 2:19 பிப இல் ஜனவரி 22, 2014
நானும் பார்த்தேன் உங்கள் ஸந்தோஷ,த்தை. தோசை வார்த்து விட்டுக் கூப்பிடுங்கள். சாப்பிட நானும் வருகிறேன். அன்புடன்
16.
மகிஅருண் | 5:12 முப இல் ஜூலை 12, 2014
காமாட்சிம்மா, பல நாட்கள் கழித்து திடீர்னு ஒரு முறை இந்த சுலப சட்னி நினைவு வரவும் செய்தேன், கூட கொஞ்சூண்டு புளியும் சேர்த்து! என்னவருக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிடுச்சு. இப்ப அடிக்கடி இந்த சுலப சட்னிதான் இட்லி-தோசைக்கு. நன்றிம்மா! ஒரு முறை உங்க முறைப்படி தோசை மாவு அரைச்சு செய்து பார்க்கணும். 🙂
17.
chollukireen | 2:01 பிப இல் ஜூலை 14, 2014
எங்கள் வீட்டில் பேத்திகளுக்குப் பிடித்த சட்னி இது. உன்னுடைய பாராட்டுதள்களுக்கு மிகவும் ஸந்தோஷம்.
லயா செல்லம் எப்படி இருக்கு? என் அன்பு. தோசை செய்து என்னையும் கூப்பிடு. ஆசிகளும், அன்பும்.
18.
chollukireen | 12:56 பிப இல் நவம்பர் 4, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
பார்த்தேன். போடவேண்டும் போலத் தோன்றியது. பார்கககககதப்போம்
பதிவைப் பார்த்ததும் மீள்பதிவு செய்யத் தோன்றியது. பாருங்கள். கூட ஒரு சட்னியும் உள்ளது. அன்புடன்
19.
ஸ்ரீராம் | 3:16 பிப இல் நவம்பர் 4, 2022
கொஞ்சம் அடை டைப்பில் இருக்கிறதோ… தோசை மெல்லிசாக வருமா? சட்சட் சட்னியும் சூப்பர். டிப்ஸ்களும் அருமை.
20.
chollukireen | 4:49 பிப இல் நவம்பர் 4, 2022
அதெல்லாம் இல்லை தோசை தான் நன்றாக மெல்லியதாக செய்யலாம் உங்கள் வரவிற்கு மிகவும் நன்றி பாராட்டுதல்களுக்கு மிகவும் சந்தோஷம் அன்புடன்
21.
நெல்லைத்தமிழன் | 12:59 பிப இல் நவம்பர் 5, 2022
தோசையைப் பார்த்ததும் பசிக்கிறது. சட்னிகளும் சூப்பர்.
இன்னைக்கு பருப்பு கொழுக்கட்டை சரியா வரலை (மனைவி செய்தது). அதனால் பசி இருக்கு. ஹா ஹா ஹா.
நேற்றுக் காலையில் லிஃப்டில் வந்துகொண்டிருந்தபோது, ஊத்தாப்பம் செய்யச்சொல்லணும் என்று நினைத்தேன்.
22.
chollukireen | 12:46 பிப இல் நவம்பர் 7, 2022
என்னவோ போங்கள். பசித்தால் சாப்பிட வேண்டியதுதானே. என்ன பிரமாதம். ஊத்தாப்பம் இன்னும் ருசி. நீங்கள்கூட செய்யலாமே. புரியலேயா. அன்புடன்