வேப்பிலைக் கட்டி.
ஏப்ரல் 8, 2011 at 7:20 முப 2 பின்னூட்டங்கள்
பெயரைப் பார்த்து இது ஒரு கசப்பான பொருளாக இருக்கும்
என்றுமுடிவுக்கு வந்து விடவேண்டாம். வாய்க்கு,ருசியாகவும்,
ஆரோக்கியமுமான , தயிர் சாதத்துடன் ஊறுகாய் ஸ்தானத்தில்
உபயோகப்படுத்தப்படும் ஒரு எளிய தயாரிப்பு இது. பெரிய,
பெரிய, சாப்பாட்டுப் பந்திகளில்கூட வேப்பிலைக் கட்டி
விசாரிப்பு அலாதியானது. துளி தொட்டுண்டு பாருங்கோ இன்னும்
இன்னும் கொஞ்சம் சாப்பிடணும்னு தோணும், சொல்லிக்
கொண்டே போடுவார்கள். எங்கம்மாவும் இப்படி சொல்லி, பிறருக்கு
போடுவது அடிக்கடி ஞாபகம் வரும்போது எழுத வேண்டும்
என்று நினைப்பேன். இலைக்கு எங்கு போவது?
சமய வாய்ப்பாக சென்ற வாரம் 5, 6 நாட்களுக்கு சென்னையில்
என் பெண் வீட்டிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த செடி அவர்களின் தோட்டத்தின் ஒரு மூலையில் மரமாக
வளர்ந்து இருந்தது. நாரத்தையா, சாத்துக்குடியா என்ற யோசனை
தானாக வளர்ந்த செடியின் மீது தீர்ந்து, நாரத்தை என்று உறுதி
யானது. எனக்கு மிகவும் ஸந்தோஷம். ப்ளாகில் போட ஒரு
பழைய உருப்படி, தயாராகிவிட்டது வேப்பிலைக்கட்டி.
அன்றைக்கென்று என்னைப் பார்த்துப் போக வந்தவர்கள்
சாப்பிடும்போது ரஸித்து சாப்பிட்டுவிட்டு மிகுதியிருந்த
வேப்பிலைக்கட்டியை எடுத்தும் போனார்கள். முடிந்தவர்கள்,
கிடைக்கும் போது செய்யுங்கள். அல்லது இப்படியும் ஒன்று
செய்யலாம் என்பதை மனதிற் கொள்ளுங்கள். பாலக்காட்டு
பந்தி உபசரிப்பிலும் முதன்மையானது இது. ரெடிமேடாக
கிடைக்கவும் செய்கிறது. அம்பிகாஸ்டோர்களில்.
வேண்டியவைகள்.
நாரத்தை, அல்லது எலுமிச்சை இலைகள்—–அடைத்தமாதிரி 2 கப்
கறிவேப்பிலை—அரைகப்
மிளகாய் வற்றல்—-3
ஓமம், அல்லதுசீரகம் 2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி— அரை டீஸ்பூன்
அழுத்தமாக உருட்டிய புளி—-ஒரு நெல்லிக்காயளவு
ருசிக்கு—-உப்பு
கடுகு, வெந்தயம் வகைக்கு கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய்—–சிறிது
செய்முறை.
நாரத்தை இலைகளைத் தண்ணீரில் அலசித் துடைத்து நல்ல
துணியில் போட்டு காற்றாடவிட்டு ஈரத்தைப் போக்கவும்.
வெற்றிலையை மடித்து காம்பிலிருந்து நுணிவரை நரம்பை
எடுப்பதுபோல் இந்த இலைகளிலும் அதே முறையில் இலைகளை
மடித்து, நடு நரம்பை நீக்கவும்.கறிவேப்பிலை அப்படியே
சேர்க்கலாம்.
வெறும் வாணலியில் கடுகு,வெந்தயத்தை சிவக்கவும்,ஓமத்தை
வாஸனை வரும்படியும் வறுத்து ஆறவிடவும்.
மிளகாயைத் துளி எண்ணெயில் வறுத்து , உப்பு,பெருங்காயம்
சேர்த்து யாவற்றையும் மிக்ஸியிலிட்டு பொடிக்கவும்.
பொடித்தவுடன் இந்த இலைகள், புளி யாவற்றையும் சேர்த்து
மிக்ஸியை ஓடவிடவும். ஒரு முறை கிளறிவிட்டு ஒன்று சேர
பொடிக்கவும். ஜலம் அறவே சேர்க்க வேண்டாம்.
சற்று கெட்டியாக மசிந்ததை எடுத்து சிறிய வில்லைகளாகவோ
உருண்டையாகவோ செய்து ஊறுகாயிற்கு பதில் சிறிது சிறிதாக
உபயோகிக்கலாம்.
சிறிய பாட்டில்களில் போட்டு மூடிவைத்து உபயோகிக்கவும்.
நாரத்தை, எலுமிச்சை,இலைகள் பித்தத்தை நீக்கி நாவிற்கு
ருசியைக் கொடுக்கும்.
நம்முடைய சித்திரை தமிழ் வருஷப் பிறப்பன்று ஒரேஒரு
வேப்பந் துளிரை இதனுடன் சேர்த்து, எமனுக்கு வேம்பாக
இருக்க வேண்டுமென ஆசீர்வதித்து சாப்பிடும்போது துளி
போடும் வழக்கத்தையும் எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன்.
அதனால்தான் இது வேப்பிலைக் கட்டி என சொல்லப் படுகிறது
போலும். குட்டி குறிப்பு. விரிந்த எண்ணங்கள்.நான் சொல்வது
ஸரிதானே?
நாள்பட இருந்தால் ஈரம் உலர்ந்து சற்று பொடியாக உதிரும்.
நான் இதை பொடி வகைகளில்தான் சேர்த்திருக்கிறேன்.
Entry filed under: பொடி வகைகள்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Meera Janakiraman | 8:47 முப இல் ஜூன் 6, 2014
நாரத்தை இலையை வறுக்க வேண்டுமா? வேண்டாமா என்று தெளிவுபடுத்தவும். நல்ல பதிவிற்கு நன்றி.
2.
chollukireen | 8:35 முப இல் ஜூன் 7, 2014
வறுக்க வேண்டிய அவசியமில்லை. இலைகளை அலம்பித் துடைத்து ஈரமில்லாமல் போட்டால்ப் போதும்.
செய்தால் எழுதவும். அன்புடன்