நொய் புளி உப்புமா அல்லது புளிப் பொங்கல்.
பிப்ரவரி 28, 2012 at 10:09 முப 13 பின்னூட்டங்கள்
கிராமங்களில் அடிக்கடி செய்யக்கூடியது இந்தவகை. யாவரும் நெல்லை
மிஷினி்ல் கொடுத்து அரிசியாக செய்து வரும்போது எப்படியும் சிறிதளவாவது
அரிசி இடிந்து நொய்யாக அதாவது குருணையாக மாறும். அதைத் தனியாக
எடுத்துப் பல விதங்களில் உபயோகப் படுத்துவார்கள். புழுங்கலரிசியில் அதிகம்
நொய் விழுவதில்லை. நான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே இந்தப் புளி உப்புமாவை
எழுத நினைத்தும் ஒன்று நொய் கிடைப்பதில்லை. இவ்விடம்
வரும்போது கவனத்தில் வருவதில்லை. இந்த ஸமயம் எல்லாம்
கூடி வந்தது. வகையாகவும் அமைந்தது. இது என்ன மஹாப்பெறிய
வஸ்துவென்று நினைக்கலாம். இங்கே சென்னையில் வீட்டைச் சுற்றி
பெயின்டிங் வேலை நடைபெற்றது. வேலையாட்கள் மிகவும் தூரத்திலிருந்து
வருவதால் அவர்களுக்கு டிபன், சாப்பாடு வீட்டிலேயே செய்து
கொடுத்தார்கள். இதில் நானும் இந்த உப்புமாவைச் செய்யும்படி சொல்லி
ஞாபகப்படுத்திக் கொண்டேன். எனக்கு உங்கள் யாவருடனும் அதைப்
பகிர்ந்து கொள்வதுதானே முக்கியக் காரணம். புளிப்பொங்கல் எனக்கு
ரொம்பவே பிடித்திருந்தது. கதையில்லை நிஜம் இது. சிறிய அளவில்
வேண்டியதைப் பார்ப்போம்.
வேண்டியவைகள்—
அரிசி நொய்–2 கப்
புளி—ஒரு கெட்டியான பெரிய நெல்லிக்காயளவு.
நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
கடுகு—அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு—வகைக்கு 2டீஸ்பூன்கள்
மிளகாய்வற்றல்—3
வெந்தயம்–கால் டீஸ்பூன்
பெருங்காயம்–ஒரு சிறிய கட்டி
ருசிக்கு—உப்பு
தேவைக்கேற்ப—வெங்காய, பூண்டுத் துண்டங்கள்
கறிவேப்பிலை—10 அல்லது 15 இலைகள்
சிறிது மஞ்சள்ப் பொடி
செய்முறை—
நாம் இதை ரைஸ் குக்கரிலேயே செய்வோம். மிகவும் சுலபம்
அரிசி நொய்யைக் களைந்து கல்லில்லாமல் அறித்தெடு்த்து தண்ணீரை
வடிக்கட்டவும்.
புளியைத் தண்ணீரில் ஊற வைத்து 2,3 முறை தண்ணீர்விட்டுக்
கறைத்துச் சக்கையை நீக்கவும்.
புளித்தண்ணீரை அளந்து விடவும்.மேற்கொண்டு தண்ணீர் சேர்த்து
ஒரு பங்கு நொய்யிற்கு 3 பங்கு தண்ணீரென மொத்தக் கணக்கில்
அளந்து விடவும்.
வாணலியில் நல்லெண்ணெயைக் காயவைத்து, கடுகு,வெந்தயம்,மிளகாய்,
பருப்புகள், பெருங்காயம் இவைகளைத் தாளித்துகறிவேப்பிலை,பூண்டு,
வெங்காயத் துண்டுகள் இவைகளையும் சேர்த்து வதக்கி புளித்தண்ணீருடன்
கூடிய நொய்யில் சேர்க்கவும்.
வேண்டிய உப்பு, மஞ்சள்ப்பொடி சேர்த்து ரைஸ் குக்கரில் இவைகளை
மாற்றி குக்கரை ஆன் செய்யவும்.
பதமாக வெந்து முடிந்ததும், குக்கரைத் திறந்து கரண்டிக் காம்பினால்
வெந்த கலவையை நன்றாகக் கிளறி மூடவும்.
5 நிமிஷங்கள் கழித்துத் தயாரான புளிப் பொங்கலை சுடச்சுடப்
பகிர்ந்து உண்ண வேண்டியதுதான்.
புளி, காரம் இரண்டுமே அதிகப்படுத்தலாம். இஞ்சி, பச்சை மிளகாய்
சேர்க்கலாம். வேர்க்கடலை தாளிக்கலாம். ரிச்சாக தயாரிப்பதானால்
இருக்கவே இருக்கிறது முந்திரி.
பாஸ்மதி அரிசியின் நொய் ஆனால் 2 பங்கு ஜலமே போதும்.
இது ஸிம்பிள் தயாரிப்பு.
பொங்கலோ, உப்புமாவோ எந்த பெயர் வேண்டுமானாலும் நாம்
சொல்லலாம்.
4 கப் செய்ததை அப்படியே போட்டிருக்கேன். யார் வேண்டுமானாலும்
எடுத்துச் சாப்பிடலாம்.
.
சேர்த்துப்
Entry filed under: டிபன் வகைகள்.
13 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
சித்ராசுந்தர் | 3:56 பிப இல் பிப்ரவரி 28, 2012
காமாஷி அம்மா,
நொய் உப்புமா வாசனையுடன் சாப்பிடத் தயாராகிவிட்டது. நல்லாருக்குமா.
எங்க வீட்டிலும் புழுங்கலரிசி அரைத்த கொஞ்ச நாட்களுக்கு,அடிக்கடி இந்த நொய் உப்புமாவை சாதாரண உப்புமா மாதிரியே செய்வாங்க.இதற்கு புளி,வெந்தயம் சேர்க்கமாட்டோம்.பழமையான சமையலை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி அம்மா.
அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 6:25 முப இல் பிப்ரவரி 29, 2012
இந்த நொய் உப்புமாக்களெல்லாம்தான் புலவு வகைக்கு முன்னோடியோ என்னவோ? புளிசேர்த்து செய்பவைகளுடன் வெந்தயம் ஸரியான ஜோடி. சும்மா தாளிப்புடன் துளி தேங்காய் சேர்த்து ப்ளெயினாக செய்வதும் உண்டு.. பரவாயில்லை. நீயும்
ருசித்ததுதான் இது.மகிழ்ச்சி. அன்புடன் சொல்லுகிறேன்
3.
Mahi | 3:51 முப இல் பிப்ரவரி 29, 2012
ஈஸியான ரெசிப்பியாக இருக்கும்மா! இங்கே குறுணை அரிசி எங்கே கிடைக்குது..மிக்ஸியில் பொடித்தால் என் மனசுக்கு திருப்தியாவே இல்லை.
சாதம் நல்லா இருக்கு, பார்க்க!
4.
chollukireen | 8:57 முப இல் பிப்ரவரி 29, 2012
மிக்ஸியில் பொடித்தால் ரவை கிடைக்கும். அதற்கும் அரிசியை துளி ஜலம் விட்டுப் பிசறி அரைமணி நேரம் வைத்துப் பின்னர் பொடித்தால் நல்ல ரவை கிடைக்கும்..குருணை அப்படி இல்லை. நானும் கிடைத்த இடத்தில் எழுதியிருக்கிறேன் இல்லையா?
பார்க்க, படிக்க ஒரு குறிப்பு. நன்றி மகி
5.
சந்திரமால்யா | 6:59 பிப இல் மார்ச் 3, 2012
உங்களின் இந்த ரெசிப்பியை பார்த்ததும் நேற்று இங்கு சாதாரணமாக வாங்கக்கூடிய Bulger என்று சொல்லப்படும் எங்களூர் புழுங்கல் அரிசிக்குருணை போலுள்ள கோதுமைக்குருணையில் செய்து பார்த்தேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது. Bulger புளியோதரைன்னு இதை என் வீட்டில் சொன்னார்கள்.:) இன்னும் காரத்திற்கு சிறிது மிளகாய்ப்பொடி சேர்த்திருக்கலாம் என்று என் கணவர் கூறினார்.
அடிக்கடி செய்யலாம் அதுவும் சுலபமாக என்பதில் எனக்கு ரொம்பவும் மகிழ்சியாக இருக்கிறது. நல்ல குறிப்பினைத் தந்துள்ளீர்கள். மிகவும் நன்றி அம்மா.
6.
chollukireen | 9:39 முப இல் மார்ச் 4, 2012
சந்திரமால்யா ரொம்பவே ஸந்தோஷம்.கோதுமைக் குருணையில் செய்தும் பின்னூட்டம் கொடுத்திருக்கிறாய். சுவை நன்றாக இருப்பதாக எழுதியதற்கு மிகவும் நன்றி. காரம் இன்னும் போடலாம். சொல்லிய உங்கள் கணவருக்கும் நன்றி. ஆமாம். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? சொல்லவில்லையே? நீங்கள் உங்கள் வேலைக்கிடையே எனக்கும் நேரம் ஒதுக்கியுள்ளீர்கள். அதுதான் பெறிய விஷயம். மீண்டும் மீண்டும்
ஸந்தோஷமாக ஸந்திப்போம். அன்புடன் சொல்லுகிறேன்.
7.
chollukireen | 11:41 முப இல் ஏப்ரல் 11, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இதுஒரு பழையகாலத் தயாரிப்பு.ஸாதாரணமாக வெங்காயம் சேர்க்க மாட்டார்கள். இது வேலை செய்பவர்களின் சாய்ஸ். இன்னும் வேண்டியவைகளைச் சேர்த்து செய்து பாருங்கள்.அன்புடன்
8.
Geetha Sambasivam | 12:17 பிப இல் ஏப்ரல் 11, 2022
Super amma. We used to cook puli pongal often. We like the taste. I am using the uruli always for these traditional foods. With out garlic and onion of course. Side dish chutta kathirikay thayir pachauri.
9.
chollukireen | 11:58 முப இல் ஏப்ரல் 12, 2022
அருமையான ஜோடி பச்சடி. வேண்டியவர்களுக்குத்தான் பூண்டு வெங்காயம் முதலானது. மிக்க நன்றி. அன்புடன்
10.
ஸ்ரீராம் | 1:41 பிப இல் ஏப்ரல் 11, 2022
நாங்கள் அடிக்கடி செய்வது. ஆனால் வெங்காயம், பூண்டு இல்லாமல்!
11.
chollukireen | 12:00 பிப இல் ஏப்ரல் 12, 2022
தெரிந்த ஒன்றுதான் என்கிறீர்கள். மிக்க நன்றி. அன்புடன்
12.
நெல்லைத்தமிழன். | 9:38 பிப இல் ஏப்ரல் 11, 2022
புளி உப்புமா மிகப் பிடிக்கும். பத்து நாட்களாக நாளைக்கா அல்லது அடுத்த தினமா என,று போய்க்கொண்டிருக்கு.
எங்கள் வீட்டுப் புளி உப்புமா அசப்பில் புளிக்காய்ச்சல் கலந்த மாதிரி இருக்கும். இந்தப் படத்தில் அவல் உப்புமா போல் காட்சி தருது.
13.
chollukireen | 12:06 பிப இல் ஏப்ரல் 12, 2022
முந்திய நாட்களில் அவல்கூட வீட்டிலிடித்தது கெட்டியாக இருக்கும். அதைப் பொடித்தும் புளிஜலம் பிசறிச் செய்வார்கள். ஒருவேளை அதுமாதிரி தோன்றியதா.ஐயங்கார் வகுப்பினர் புளியோதரை பெயர் போனது. அதான் இப்படித் தோன்றியது உங்களுக்கோ. செய்தாயிற்றா. சாப்பிடுங்கள். மிக்க நன்றி. அன்புடன்