காரடை. உப்பு
மார்ச் 14, 2012 at 10:56 முப 6 பின்னூட்டங்கள்
பச்சரிசி–1கப்
தேங்காய்த் துருவல்—அரைகப்
பச்சைமிளகாய்—2
இஞ்சி—சிறியதாக நறுக்கியது—2டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு—வகைக்கு சிறிதளவு
ஊறிய காராமணி—-2டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்—வாஸனைக்கு
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு.
தாளித்துக் கொட்ட—எண்ணெய் சிறிதளவு
செய்முறை—-அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து சிறிது நேரம்
ஊறவைத்து வடிக்கட்டி நிழல் உலர்த்தலாக ஒரு துணியின் மீது
உலர்த்தவும்.
கலகலஎன்று உலர்ந்த அரிசியை நிதானதீயில் வாணலியை
வைத்து சற்று சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும்.
ஆறியபின் வறுத்த அரிசியை ரவையாக மிக்ஸியில்
பொடிக்கவும்.
காராமணியை வெறும் வாணலியில் சற்று முன்னதாகவே
வறுத்து ஹாட்கேஸில் வென்னீர் விட்டு ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு,உ.பருப்பு
தாளித்து இஞ்சி, பச்சைமிளகாயை வதக்கி ரவையின் அளவைப்
போல இரண்டு பங்கு தண்ணீரைச் சேர்க்கவும்.
வேண்டிய உப்பு, தேங்காய்த் துருவல்,கறிவேப்பிலை சேர்த்து
தண்ணீரைக் கொதிக்க விடவும்.
ஊறின காராமணி, பெருங்காயத்தையும் சேர்க்கவும்.
கொதிக்கும் நீரில் ரவையச் சேர்த்துக் கிளறவும்.
தீயை மட்டுப் படுத்தவும்.
பந்துபோல வெந்து சேர்ந்து வரும்போது கிளறி மூடி இறக்கி
வைக்கவும்.
சற்று நன்றாக ஆறியபின் மாவைப் பிறித்து ஸமமாக உருட்டி
கனமான வடைகளின் உருவத்தில் , ஒரு பாலிதீன் கவர் மீது
எண்ணெயோ ஜலமோ தொட்டுத் தடவி
தட்டி எடுத்து, நீராவியில் 15 நிமிஷங்கள் வேகவைத்து
எடுக்கவும்.
இட்லி ஸ்டீம் செய்வது போலவேதான்.
உப்பு அடை தயார். தேங்காய் மணத்துடன் உப்பு காரத்துடன்
கூடிய மெத்தென்ற காரடை தயார்.
எது இஷ்டமோ அதை கூடச் சாப்பிடலாம்.
2010 மார்ச் 11 காரடை இனிப்பு எழுதினேன். இன்று
2012 மார்ச் 14 சென்னையினின்றும் காரடை உப்பு எழுதுகிறேன்.
பெண் செய்தாள். இன்று காரடையான் நோன்பு. இதை
எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். அடையைச்
சொல்கிறேன். அரிசி ஊறவைத்து உலர்த்தி வறுத்துச் செய்வதால்
அடை மிருதுவாக மெத்தென்று வருகிறது. உடன் வெண்ணெய்,
வேறு இன்று சாப்பிடுவதால் எல்லாமே ஸாஃப்ட்தான்.
Entry filed under: இனிப்பு வகைகள், Uncategorized.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
சித்ராசுந்தர் | 5:08 பிப இல் மார்ச் 14, 2012
காமாட்சி அம்மா,
காரடை,இனிப்படை இரண்டுமே நல்லாருக்குமா. இன்றுதான் இனிப்படை குறிப்பைப் பார்த்தேன். இவற்றைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் செய்ததில்லை. ஒரு நாளைக்கு இரண்டு அடைகளையும் செய்திட வேண்டியதுதான்.குறிப்புக்கு நன்றி அம்மா.
அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 9:42 முப இல் மார்ச் 17, 2012
ரொம்பவே மனதிற்கு இதமாக இருக்கிறது. கிட்டேவா இருக்கிறீர்கள். எதைச் செய்தாலும் வேண்டியவர்களுக்குக் கொடுத்துவிட்டுதான் மறு காரியம் பார்க்கும் ஸ்வபாவம் எனக்கு.
இப்போது நினைத்துப் பார்த்து மனதை அசைபோடும் நிலைதான். செய்வது செய்யாதது
இருக்கட்டும். ரஸித்து எழுதுவதே படிக்க
ஸந்தோஷமாக இருக்கிறது.இப்படியே வந்துகொண்டிரும்மா.
3.
Mahi | 1:18 முப இல் மார்ச் 15, 2012
காரடை நல்லா இருக்குமா! இனிப்பு அடை குறிப்பை இனிமேல்தான் பார்க்கணும். ஒருநாள் செய்துபார்க்கிறேன்.
4.
chollukireen | 9:51 முப இல் மார்ச் 17, 2012
நன்றாக இருக்கு இல்லையா? இந்தியா வரும்போது கட்டாயம் செய்து கொடுக்கிறேன்.
இல்லையா நான் ஜெனிவா போனால் கட்டாயம் அங்கு வா. ஊரைப் பார்த்தமாதிரி உங்களுக்கும், உங்களைப் பார்த்த மாதிரி எங்களுக்கும் இருக்கும். Mr .அருணுக்கும் சேர்த்த அழைப்பு இது.
5.
chollukireen | 12:12 பிப இல் மார்ச் 11, 2014
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
ருசிமிக்க உப்படையும் செய்வது யாவருக்கும் வழக்கம். அதையும் செய்ய வேண்டுமல்லவா?செய்யுங்கள்.ருசித்து மகிழுங்கள். திரும்பவும் ஆசிகளுடன்
6.
mahalakshmivijayan | 4:33 முப இல் மார்ச் 12, 2014
இனிப்பு, உப்பு இரண்டு ரெசிபியையும் எழுதி வைத்து கொண்டேன் காமாட்சி அம்மா! கண்டிப்பாக செய்து பார்க்க விரும்புகிறேன்.. எனக்கு இவை இரண்டுமே புதிது 🙂