சிறு கிழங்கு கிரேவியுடன்
மார்ச் 17, 2012 at 12:21 பிப 7 பின்னூட்டங்கள்
நான் கூட இந்தக் கிழங்கை அதிகம் உபயோகப்படுத்தியது
இல்லை.இரண்டொருமுறை சாப்பிட்டிருக்கிறேன். அவ்வளவுதான்.
எங்கள் மருமகன் கோயம்பேட்டிலிருந்து வாங்கிக்கொண்டு
வந்ததுமல்லாமல் ருசி பிஸ்கெட் மாதிரி நன்றாக இருக்கும் என்று
கடைக்காரர் சொன்னதாகவும் சொன்னார்.
ஸரி செய்து பார்ப்போம். எங்கு சாப்பிட்டோம் என்பதுஞாபகத்திற்கு
வந்தது.பாலக்காட்டு தெறிந்தவர்களின் வீட்டில் சாப்பிட்டது
ஞாபகத்திற்கு வந்தது. உடனே ஓரளவு ருசியும் இப்படிதான்
இருந்தது என்ற எண்ணமும் ஏற்பட்டது.
என்னவோ நான் செய்ததை எழுதுகிறேன்.
வேண்டியவைகள்—-அரை கிலோ சிறுகிழங்கு
தேங்காய்த் துறுவல்—அரைகப். சிறிது குறைவானாலும் ஸரி.
பச்சை மிளகாய்—–3
சின்ன வெங்காயம்–10, அல்லது 12
பெறிய வெங்காயம்—1
சீரகம்—1 டீஸ்பூன்
எண்ணெய்—2, 3 டேபிள்ஸ்பூன்
தாளித்துக் கொட்ட—-கடுகு, உளுத்தம் பருப்பு சிறிது
கறிவேப்பிலை—சிறிது. மஞ்சள்ப் பொடி சிறிது
செய்முறை
கிழங்கு பார்ப்பதற்கு ஒரே மண்ணாக இருக்கும் போல
இருக்கிறது. வெளிநாட்டில் எப்படி கிடைக்குமோதெறியலே.
நிறையத் தண்ணீரில் 1 மணிநேரம் ஊறவைத்தேன்.
பிறகு பலமுறை தண்ணீரில் அலம்பி அலம்பி மண்ணைப்
போக்கி வடித்து அதன் மெல்லியதான தோலைச் சீவி எடுத்தேன்
.மெல்லிய துண்டங்களாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்தேன்
உறித்த சின்னபெறிய வெங்காயம், மிளகாய், சீரகம்,தேங்காய்
இவைகளை மிக்ஸியில் நன்றாக அரைத்து வைத்தேன்.
பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து கிழங்குத்
துண்டுகளை நன்றாக வேக வைத்து வடிக்கட்டினேன்.
வாணலியில்எண்ணெயில் கடுகு உ. பருப்பைத் தாளித்துக்கொட்டி
கிழங்கை வதக்கி உப்பு சேர்த்து அரைத்த விழுதைச் சற்று
ஜலம் சேர்த்துக் கலக்கி அதனுடன் சேர்த்தேன்.கொதித்ததும்
இறக்கி கறிவேப்பிலை சேர்த்து ருசி பார்க்கக் கொடுத்தேன்.
ரொம்ப நன்னாயிருக்கு என்ற கமென்ட்தான் வந்தது.
தேங்காயெண்ணை சேர்த்தால் அவியல் ருசியும் எட்டிப் பார்க்கும்.
அறைத்த விழுதைக் கெட்டியாகச் சேர்த்துப் பிரட்டினால் கறி
வகையாகும்.
இஞ்சி, பூண்டு, வெங்காயம்,மஸாலா சேர்த்தும் பண்ணலாம்.
நிறைய ஐடியாக்கள் எனக்கும், எல்லோருக்கும் தோன்றும்.
முதல்தரம் பண்ணியதால் ப்ரமாதமாக பீடிகை கொடுத்து
விட்டேன்.
அதுதான் உண்மையும் கூட. எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது.
கிழங்கு ருசியாக இருக்கிறது.
இதை கூர்க்கன் கிழங்கு என்றும் சொல்வார்கள்
இரண்டாவது படம் கிரேவியுடன் சிறுகிழங்கு.
காரம் வேண்டுமானால் மிளகாய் அதிகம் சேர்க்கவும்.

Entry filed under: கிரேவி வகைகள்.
7 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 8:38 பிப இல் மார்ச் 17, 2012
ஊரிலே எங்க வீட்டுப்பக்கம் நிறையப்பேர் மலையாளிகள்தான். அதனால் இந்தக்கிழங்கு எனக்கு நல்லாவே நினைவிருக்கு! 🙂
இதனை தோல் சீவுவது கொஞ்சம் பொறுமை தேவைப்படும் வேலையாச்சே அம்மா! கோணிப்பையில் இந்தக் கிழங்கைப் போட்டு அம்மிக்கல்லில்/தரையில் அடித்து கிழங்கின் தோலை எடுப்பார் எங்க வீட்டுப்பக்கமிருந்த அக்கா! ருசி சொல்லவே வேண்டாம்,அமோகமா இருக்கும்! 😛
நீங்க செய்திருக்கும் கறியும் பார்க்கவே அவியல் போன்ற கலரில் பிரமாதமாயிருக்கு! 🙂
2.
chollukireen | 9:26 முப இல் மார்ச் 22, 2012
உடனே பதில் கொடுக்கலே. உட்காரவே நேரம் கிடைக்கலே. நீ ஸரியானபடி கமென்ட் கொடுத்திருக்கே. கொஞ்சம் பொருமையாகச் செய்தாலும் ருசியான ஒரு
சமையலைச் சாப்பாட்டுடன் ருசிக்க முடிகறது. அடுத்து பிடிகரணைக் கிழங்கு மசியல் எழுதி வைத்திருக்கிறேன். இதுவும் நான் செய்து ரொம்ப வருஷங்கள் ஆகிவிட்டது. இங்கே 2, 3, முறை செய்து விட்டேன்.
நீ உன் பதிவைப் போட்டவுடனே நான்
பார்க்கும்படியாக என்ன செய்ய வேண்டும்? அதை சொல்லிக்கொடு முதலில். அன்புடன்
3.
Mahi | 3:30 பிப இல் மார்ச் 23, 2012
/நீ உன் பதிவைப் போட்டவுடனே நான்
பார்க்கும்படியாக என்ன செய்ய வேண்டும்? / காமாட்சிம்மா,அது எப்படினு எனக்கும் தெரியலையேங்கமா..கூகுள் ப்ளாகர்னா என்ன செய்யணும் என்று சொல்லிருவேன், wordpress ப்ளாக் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. 😐
நீங்க நேரம் கிடைக்கையில் பதில் சொல்லுங்க,ஒண்ணும் அவசரமில்லை,நன்றிமா!
4.
chitrasundar5 | 4:48 முப இல் மார்ச் 24, 2012
காமாஷி அம்மா,
சிறு கிழங்கு கிரேவி பார்க்கவே படு சூப்பராக உள்ளது.நீங்கள் படத்தை மட்டும் போடவில்லையென்றால் நான் சிறுவள்ளிக் கிழங்கு என்றுதான் நினைத்திருப்பேன்.
இந்தக் கிழங்கைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.நீங்களும்,மகியும் சொல்வதைப் பார்த்தால் கிழங்கைக் குக்கரில் போட்டுவிட்டுக் கவலையில்லாமல் ஹாயாக இருக்கலாம் போலிருக்கிறதே.
பச்சையாகத்தான் தோலை எடுக்க வேண்டுமா? வேக வைத்து உரிக்கக்கூடாதா?இப்போதே கேட்டுவைத்துக்கொண்டால் என்றாவது வாங்கினால் தோலெடுக்க வசதியாக இருக்கும்.ருஸி அதிகம் என்பதால் கண்டிப்பாக செய்துவிட வேண்டும்.இது மாதிரியான குறிப்புகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.பகிர்வுக்கு நன்றி அம்மா.
5.
chollukireen | 10:42 முப இல் மார்ச் 25, 2012
நிஜமாகவே சிறு கிழங்கு ருசியாக இருக்கு. இரண்டொரு முறை சமைத்தால் சுலப வழியும் தெறிந்துவிடும்.
ஸமயங்களில் இந்த எரர் மிகவும் படுத்துகிறது. எனக்கும்
அதை எப்படி நிவர்த்திப்பது தெறியவில்லை. ஈமெயிலையும்
எப்படி ப்ளாகில் பேஸ்ட் பண்ணுவது? அதுவும் தெறியவில்லை.
நான் ஏதோ எழுதி போஸ்ட் பண்ற அளவுக்குத்தான் ஸரி.
கிழங்கு கிடைக்கும் போது செய்துபார். அன்புடன்
6.
Geetha Sambasivam | 2:53 முப இல் ஜூலை 8, 2015
சிறு கிழங்கு மதுரைப் பக்கம் அக்டோபர் நவம்பரிலிருந்து ஆரம்பித்துக் கிடைக்கும். தண்ணீரில் ஊறவைத்துச் சாக்கில் போட்டுத் தேய்த்து அலம்பினால் தோல், மண் எல்லாம் போய்க் கிழங்கு வெள்ளையாக வரும். அதை வேக வைத்துக் காரக்கறி தான் என் அம்மா செய்வார். திருவாதிரைக்களிக்குச் செய்யும் ஏழுதான் குழம்பிலும் போடுவோம். நல்ல வாசனையாக இருக்கும். இதற்கும் வெங்காயம் சேர்த்துச் செய்தது இல்லை.
7.
chollukireen | 8:58 முப இல் ஜூலை 8, 2015
இந்த வெங்காயம் சேர்த்துச் செய்வதெல்லாம் இந்தக்காலப் பசங்களுக்காக. வெங்காயம் அபூர்வமாகத்தான் தனியாகச் செய்து போடுவார்கள். இந்தச் சிறுகிழங்கைத்தான் காவத்தன் கிழங்கு என்பார்கள். களியும்,காவத்தனுமில்லாத திருவாதிரையா என்பார்கள் பாலக்காட்டுத் தமிழர்கள். வேக வைத்தக் கிழங்கில் தேங்காயும்,பச்சை மிளகாயும் சிதைத்துப்போட்டு வதக்குவது காவத்தன். நான் இப்போது உங்கள் முறையில்தான் கிழங்கை சுத்தம் செய்கிறேன். . வெளிநாட்டில் வேறெதெதோ கிழங்குகள். அன்புடன்