பிரண்டைத் துவையல்.
ஏப்ரல் 26, 2012 at 12:54 பிப 13 பின்னூட்டங்கள்
பிரண்டை ஒரு மருத்துவ குணமுள்ள கொடிவகையைச் சேர்ந்த
தாவரம்.
மருத்துவத்தில் பலவகைகளில் உபயோகமாவதை சமையலிலும்
சில வழிகளில் சேர்த்துச் செய்வதுண்டு. சிரார்த்தம் செய்யும் போது
முக்கியமாக பிரண்டை சேர்த்துத் துவையல் செய்வது முக்கிய
வியஞ்ஜனமாகக் கொடுப்பது வழக்கத்திலுள்ளது.
பெண்களிருந்தால் கட்டாயம் பிரண்டைத் துவையல் சமையலில்
இடம் பெறும்.
வாய்வுத் தொந்திரவு ஏற்படாமல் விசேஷ சாப்பாட்டைச்
சீரணம் செய்யும் கருத்தில்தான் இப்பழக்கம் வழக்கத்தில்
இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இதே போல உளுந்து அப்பளாம் தயாரிக்கும் போது பிரண்டையை
அரைத்து உப்புடன் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிக்கட்டி
ஆறினவுடன் உளுத்தமாவில் சேர்த்துப் பிசைந்து இடித்துத்தான்
அப்பளாம் தயாரிப்பது வழக்கம்.
எனக்கு சென்னையில் தொட்டியில் துளிர் விட்டிருந்த பிரண்டையைப்
பார்த்ததும், குறைந்த பட்சம் துவையலும், ப்ளாகும் மனஸில்
வந்து விட்டது.
இப்படி அப்படி பெண்ணைப் பண்ணச் சொல்லி சொல்லிப் படம்
எடுத்து வந்து விட்டேன்.
கொஞ்சம் கூடவே சில மாறுதலும் செய்து செய்தது.
என்ன ஒன்று ? செய்ய முடிந்தாலும் முடியாவிட்டாலும்
இப்படியும் ஒரு துவையல் செய்யலாம்.சொல்லுகிறேனையும்
நீங்கள் யாவரும் ஏதாவதொரு ஸமயத்தில்
நினைக்கலாம் என்ற ஒரு நப்பாசை. பதம் ஸரிதானே?
வேண்டியவைகள்.
வெள்ளை எள்-2-டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-2டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு-1 ஸ்பூன்
குண்டு மிளகாய்-8. வேறு மிளகாய்
ஆனால் காரத்திற்குத் தக்கபடி
தோல் சீவிய நீண்ட அளவு 2இஞ்சி
எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
புளி சின்ன எலுமிச்சையளவு.
பெருங்காயம்—சிறிது
உப்பு –ருசிக்கு . மிளகு—6 எண்ணிக்கையில்
தேங்காய்த் துருவல்–2 டேபிள்ஸ்பூன்
பிரண்டையை தண்ணீரில் அலம்பித் துடைக்கவும்.
இளம் பிரண்டை—4பாகங்கள். நடு கணுவை நீக்கி நறுக்கவும்.
இரண்டு பாகத்தையும் சேர்க்கும் இடம் கணுவு . கரும்புடைய
ஜாயின்ட் மாதிரி.
பிரண்டைக்கு நறுக்கிய பாகம் தொட்டால் சிறிது அறிக்கும்
தன்மை உண்டு.
நறுக்கியதைக் கரண்டியால் எடுக்கவும்.
செய்முறை
முதலில் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய
பிரண்டையை சிவக்க வறுத்து எடுக்கவும்.
பின்னர் நறுக்கிய இஞ்சியையும் வதக்கி எடுக்கவும்.
பருப்புகளையும்.மிளகாய், பெருங்காயத்தையும் சிவக்க வறுத்து
எள்ளையும் சேர்த்து வறுத்து இறக்கவும்.
புளி, மிளகாய், இஞ்சி, வதக்கிய பிரண்டை, தேங்காய்த் துருவல்
யாவற்றையும் சிறிது தண்ணீர் தெளித்து மிக்ஸியில் மசிய
அறைக்கவும்.
மிகுதி வருத்த ஸாமான்கள் உப்பு சேர்த்து மேலும் சற்று
கரகர பதத்தில் கெட்டியான துவையலாக அரைத்தெடுக்கவும்.
துவையலில் காரல் ஒன்றும் இருக்காது. சாதத்தில் நெய்
சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.
பச்சைமோர், மோர்க்குழம்பு என தொட்டுக் கொண்டு
சாப்பிட ருசிதான்.
சிரார்த்த துவையலில். தேங்காயிராது. கறிவேப்பிலையும்
எள்ளுண்டையும் வைத்து பருப்புகள்,மிளகாய், புளி சேர்த்து
அரைப்பார்கள்.
அதுவும் ருசியாகத்தான் இருக்கும்.
எதுவோ எனக்குப் பிடித்தமானது. எழுத பிரண்டை கிடைத்தது.
அதுதான் விசேஷம்.
Entry filed under: துவையல் வகைகள்.
13 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar5 | 3:55 பிப இல் ஏப்ரல் 26, 2012
காமாஷி அம்மா,
Dashboard லுள்ள அண்மைய பதிவுகளில் பார்த்துவிட்டு வருகிறேன்.மிகமிக உபயோகமான குறிப்பு.இதனருமை இருக்கும்போது தெரியவில்லை.கண்களாலேயே பார்த்து சாப்பிட்டு முடிச்சாச்சு.துவையல் அருமை.குறிப்புக்கு நன்றி அம்மா.
2.
chollukireen | 10:35 முப இல் ஏப்ரல் 28, 2012
இப்போ பிரண்டையைப் பற்றி மனதில் குறிப்பாகிவிட்டது. அது போதும். பிரண்டைத் துவையலுக்கு.சாப்பிட்டும் முடிச்சாச்சு. அதுவும் போதும். மனதுக்கு ஸந்தோஷமாக இருந்தது. இதுதான் வேண்டும். அன்புடன்
3.
Mahi | 7:09 பிப இல் ஏப்ரல் 26, 2012
ஊரில் ஒரு மலைக்கோயிலில் படியேறிப் போகையில் காட்டுக்குள் நிறையப் பிரண்டைக்கொடிகள் பார்த்த நினைவு இருக்கு..ஆங்காங்கே வேலிகளிலும் பார்த்திருக்கிறேன், ஆனால் சமைத்ததில்லை. ருசித்ததும் இல்லை.
துவையல் நல்லா இருக்குதும்மா! 🙂
4.
chollukireen | 10:30 முப இல் ஏப்ரல் 28, 2012
இது அனேகமாக எல்லோருக்கும் நினைவிற்கான ஒரு
குறிப்புதான். பிரண்டையை தெறிந்திருப்பதே ஒரு நல்ல விஷயம்தான். 4 வரியில் எழுதிப்போக வேண்டிய குறிப்பு.
நான் கதை எழுதியிருக்கிறேன். நீ இவ்வளவு அழகாக பதில்
எழுதியதற்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும். அன்புடன்
5.
பிரபுவின் | 7:06 முப இல் ஏப்ரல் 28, 2012
மிகவும் உபயோகமான குறிப்பு.படிக்கும் போதே சாப்பிட்ட மாதிரி உணர்வு தோன்றுகிறது.நன்றி அம்மா.
6.
chollukireen | 10:23 முப இல் ஏப்ரல் 28, 2012
பரவாயில்லே. உங்கள் நல்ல உணர்வுகளுக்கு மிகவும் நன்றி.
7.
Darshinik | 9:28 முப இல் ஏப்ரல் 28, 2012
பிரண்டை துவையல் என் பெரியம்மா செய்வார்கள் . ஊருக்கு போகும் பொது எல்லாம் என் பெரியம்மாவை செய்து தர சொல்லி கொண்டு வருவேன் ஆசையாக.
ஆனால் ஒரு நாளுக்கு மேல் அது நன்றாக இருந்தது இல்லை. பிரண்டை துவையலை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு சாப்பிடுவது மிகவும் பிடிக்கும் . இப்போ செய்முறை தெரிந்து கொண்டேன் . இனி மார்க்கெட் போகும் பொது எல்லாம் பிரண்டை இருகிறதா என்று தேடி பிடித்து கொண்டு வந்து செய்து பார்க்கணும் . தேங்க்ஸ் பாட்டிமா
8.
chollukireen | 10:20 முப இல் ஏப்ரல் 28, 2012
இதெல்லாம் அபூர்வமாகச் செய்து சாப்பிடும் துவையல்தான். இதே, கறிவேப்பிலை, புதினா துவையல்
என்றால் துவையலை அதிக எண்ணெய்விட்டு வதக்கி
கெட்டியாக எடுத்து ஃப்ரிஜ்ஜில் வைத்து பின்னும் சில நாட்கள் உபயோகிக்கலாம். பிறண்டைத் துவையல் எப்போதாவது ஒருநாள் சாப்பிட்டாலே போதும். தர்ஷிணி
இன்னும் ஏதாவது கேட்கவேண்டுமானாலும் அவ்வப்போது கேள். உன்நை வரவேற்கிரேன். அன்புடன்
9.
chollukireen | 1:51 பிப இல் ஜனவரி 20, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இதுவும் பத்து வருஷங்களுக்கு முன்னர் எழுதிது தான். பிடித்தவர்கள் செய்யலாம். பாருங்கள். அன்புடன்
10.
நெல்லைத்தமிழன் | 11:00 பிப இல் ஜனவரி 20, 2022
பிரண்டைத் துவையல் பிடித்தமானது.
வீட்டில் பிரண்டை இருக்கிறது, ஆனால் செழிப்பாக வளரவில்லை. இந்த வாரம் செய்துவிடுகிறேன்.
11.
chollukireen | 12:15 பிப இல் ஜனவரி 21, 2022
தானாக வளர்ந்து கிடக்கும் செடி. உபசாரம் செய்தால் பிகு செய்து கொள்கிறதோ என்னவோ!சின்ன அளவில் செய்யுங்கள். நன்றி. அன்புடன்
12.
geetha | 8:25 முப இல் ஜனவரி 21, 2022
ஆமாம் பிரண்டை ரொம்ப நல்லதுதான். வீட்டில் இப்படிச் செய்வதை அடிக்கடி செய்வதுண்டு.
நம் வீட்டில் திவசத்தன்று கண்டிப்பாகப் பிரண்டைத் துவையல் உண்டு அது பருப்பில் உளுத்தம் பருப்பு மட்டுமே சேர்க்கப்படும். கறிவேப்பிலை வைத்து இஞ்சி வைத்து, புளி உப்பு போட்டு அரைத்துக் கடைசியில் தேங்காயும் சேர்த்து அரைப்பது. பெருங்காயம் அன்று சேர்ப்பதிலை. சில சமயம் கொஞ்சம் எள்ளுருடையும் சேர்த்துச் செய்வதுண்டு அது தனி ருசியாக இருக்கும்.
இப்பவும் நான் வீட்டில் அப்பளம் அவ்வப்போது செய்யும் போது பிரண்டைச் சார் சேர்த்துதான் செய்கிறேன் காமாட்சிம்மா. ஒரு கப் ஒரு கப் போட்டுத்தான் செய்கிறேன். பிறந்த வீட்டில் இருந்த போது பாட்டி நாங்கள் எலலம் வருடம் தோறும் செய்வது போல அதிகமாகச் செய்வதில்லை இப்போது.
இப்போது பிரண்டை இங்கு நட்டு வைத்ததை எலி கொண்டு சென்றுவிட்டது. எனவே பிரண்டைப் பொடி கிடைப்பதை வாங்கி வைத்திருக்கிறேன். அதைத்தான் பயன்படுத்துகிறேன்
கீதா
13.
chollukireen | 12:26 பிப இல் ஜனவரி 21, 2022
எங்கள் ஊர் உளுந்து அப்பளாம் ஒரு காலத்தில் பெயர் போனது. இப்போது இடுபவர் யாருமே இல்லை. ஆமாம் நீங்கள்அப்பளாம் கூட தயாரிக்கிரீர்களா எப்படி முடிகிறது. நன்றாக இடிக்க வேண்டுமே!!!!!!!!!!! அம்மிக்கும் உலக்கைக்கும் எங்கு போவது. சின்ன அளவாக இருந்தாலும். சிரார்த ஸாமானில் பெருங்காயம்,தேங்காய்,கடலைப்பருப்பு கிடைடாதுதான். நான் பிரண்டையைப் பார்த்தேன் துவையல் செய்தேன் அவ்வளவுதான். பிரண்டைப் பொடி கிடைக்கிறது. எனக்குத் தெரியாத விஷயம். நன்றி. அன்புடன்