அரைக்கீரை மசியல்.
மே 26, 2012 at 2:30 பிப 8 பின்னூட்டங்கள்
இந்தக்கீரையும் ருசியானதுதான்.பார்ப்போம்.
வேண்டியவைகள்
அரைக்கீரை—ஒருகட்டு
கீரையை ஆய்ந்து அலசி ப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளிப்பழம்—ஒன்று
பச்சைமிளகாய்—2
நறுக்கிய வெங்காயம்—சிறிது
பூண்டு இதழ்—-4
மிளகு—அரை டீஸ்பூன்
சீரகம்—-1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—1 டீஸ்பூன்
பயத்தம் பருப்பு—-2 பிடித்தபிடி
எண்ணெய்—-1டேபிள்ஸ்பூன்
செய்முறை.
பருப்பைச் சற்று வறுத்துக் களைந்து கீரையையும் வடிக்கட்டிச்
சேர்த்து திட்டமான தண்ணீருடன் ப்ரஷர் குக்கரில் வேக
வைத்து இறக்கவும்.
2 விஸிலே போதுமானது.
உளுத்தம் பருப்பையும், மிளகையும் சிறிது எண்ணெயில் வறுத்து
நறுக்கிய தக்காளி, பச்சைமிளகாய்,பூண்டு, வெங்காயம் சேர்த்து
வதக்கவும்.
சீரகம் சேர்த்து மிக்ஸியில் அறைத்துக் கொள்ளவும்.
வெந்த பருப்புடன் கூடிய கீரையை நன்றாக மசிக்கவும்.
அறைத்த விழுதைக் கொட்டி உப்பு சேர்த்துக் கொதிக்க
விடவும். மசியலாக பதத்தில் இறக்கவும்.
கடுகு தாளித்துக் கொட்டவும்.
தேங்காயும் வேண்டுமானால் அறைக்கும் போது சேர்க்கவும்.
Entry filed under: மசியல்கள்.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 5:22 பிப இல் மே 26, 2012
வித்யாசமான மசியலாக இருக்கும்மா! பாலக்கீரையில் செய்து பார்க்கிறேன். பொதுவா கீரையை ப்ரெஷர் குக்கரில் வேகவைக்க மாட்டேன். அதனால கொஞ்சம் செய்முறை மாறும்,பருப்பு தனியா வேகவிட்டு சேர்த்து செய்யணும். 🙂
2.
chollukireen | 6:21 முப இல் மே 28, 2012
;சுலபமாக இருப்பதால் பருப்பும் கீரையும் சேர்ந்து மசியலுக்கு தயார் நிலையில் பக்குவமாக அமைவதால் இந்த முறை செய்யப் படுகிறது. இப்போ நான் உட்கார்ந்து
வேலை செய்யாமல் சாப்பிடுகிறேன்.. நாட்டுப் பெண்கள் சமையல்தான் இனி எழுதப் போகிறேன். நீ செய்யும் முறையும் ஸரிதான். ஸமயத்துக்குத் தகுந்த மாதிறி மாற்றி செய்வதும் உபயோகமாக இருக்கும்.. பருப்பை வேக வைத்துக் கொண்டு ஸாம்பார்,ரஸம், கூட்டு என்றும் தானே செய்கிறோம்.. உன்னுடன் பேசியதில் மிகவும் மகிழ்ச்சி. அன்புடன்
3.
ranjani135 | 2:21 பிப இல் ஜூன் 19, 2012
சமீபத்தில் கேரளா போயிருந்தோம். அங்கு ஹோட்டலில் இந்த மாதிரி செய்த கீரை மசியலில் மாங்காய்த் துண்டுகளும் சேர்த்திருந்தார்கள். வெகு ருசியாக மாறுபட்டு இருந்தது.
நான் எப்போதும் துவரம் பருப்பைச் சேர்த்துப் பண்ணுவேன். அரைத்து விடாமல், கடுகு, கடலைப்பருப்பு, மெந்தியம், காய்ந்த மிளகாய் பெருங்காயம் தாளித்துக் கொட்டுவேன்.
நீங்க எழுதியிருப்பது சற்று வித்தியாசமாக இருக்கிறது. இதையும் ஒரு முறை செய்து பார்க்கிறேன்.
4.
chollukireen | 11:12 முப இல் ஏப்ரல் 18, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இந்த அரைக்கீரை மசியல் பூண்டு வெங்காயம் சேர்த்துச் செய்தது. வெங்காயம்,பூண்டு பிடிக்காதவர்கள் தேங்காயைச் சேர்த்து அரைத்துச் செய்யலாம். பாருங்கள். இதுவும் ஒரு ருசிதான். அன்புடன்
5.
Geetha Sambasivam | 11:49 முப இல் ஏப்ரல் 18, 2022
வித்தியாசமான கீரை மசியல். பாசிப்பருப்புப் போட்டுக் கீரை மசித்தாலும் குக்கரில் எல்லாம் வைப்பதில்லை. அதோடு தக்காளி, வெங்காயம், பூண்டு சேர்த்து உபருப்பு மிளகு வறுத்து அரைத்ததில்லை. பாசிப்பருப்புக் குழைவாக வேக வைத்து மசித்த கீரையில் சேர்த்து மி.வத்தல், தேங்காய், பச்சையாக ஜீரகம் ஒரு தேக்கரண்டி வைத்து அரைத்து விடுவோம். அல்லது மோர்க்கீரை, புளிக்கீரையாகப் பண்ணுவோம். சப்பாத்திக்குத் தொட்டுக்கறாப்போலவும் பண்ணுவோம். பாலக் கீரையில் நீங்க சொல்லி இருக்காப் போல் பண்ணலாம்னு நினைக்கிறேன். ஒரு நாள் சப்பாத்திக்கு இம்முறையில் பூண்டு சேர்க்காமல் செய்து பார்க்கிறேன்.
6.
chollukireen | 11:29 முப இல் ஏப்ரல் 19, 2022
பல விதங்களில் கீரை செய்யலாம். அவஸரத்துக்கு ஆபீஸ் போகிறவர்கள் செய்ய குக்கரில் வசதியல்லவா. வெறும் பச்சைமிளகாயும் போட்டுபெருங்காயம் சேர்த்து குக்கரில் அரைக்கீரையும்,பருப்பையும் வேகவைத்து மசிப்பவர்கள் கூ டஉணடு. ஒன்று எழுதினால் நான்கு கிடைக்கிறது மற்றவர்களுக்கு. அதுதான் வித்தியாஸம். மிக்க நன்றி . அன்புடன்
7.
ஸ்ரீராம் | 2:21 பிப இல் ஏப்ரல் 18, 2022
ஆம். நாங்கள் பூண்டு வெங்காயம் சேர்க்காமல் தேங்காய் அரைத்துத்தான் செய்வோம்.
8.
chollukireen | 11:32 முப இல் ஏப்ரல் 19, 2022
பொதுவான செய்முறைதான் அது. ஸுலபமானதும் கூட.மிக்க நன்றி. அன்புடன்