மீனா மாமியா பாட்டியா?
ஒக்ரோபர் 15, 2012 at 2:34 பிப 44 பின்னூட்டங்கள்
ஏறியை அடுத்த வழல் வீடுகளிலிருந்து வளர்க்கும் சேவல்கள் கொக்கரகோகோ
பொட்டைகோழி கூவி பொழுது விடியுமா என்ன? சேவல்களினாலேயே பொழுது
விடிந்து விட்டது. சக்சக்கென்று எல்லார் வீட்டிலும் சாணி கறைத்து தெளிக்கப்
பட்டுக் கொண்டிருக்கிறது. விடிந்தும் விடியாத காலை நேரம்.
பொழுது புலர்ந்தது, பொற்கோழி கூவிற்று, பொன்னான வேலரே எழுந்திரும்,
கண்ணான வேலரே எழுந்ந்ந்ந்திரும்!ம்
மீனாமாமி உதயராகம் பாடத் துவங்கியாயிற்று.
காய்ந்த தென்னமட்டையில் குச்சியை அரிவாள் மணையில் சீவி யெடுத்துவிட்டு
பாக்கிஓலையை சின்ன சின்ன கட்டாக கட்டி எறியவிட லாகவமாய்.
குச்சிகள் கட்டி ஈரம் பெருக்கும் துடப்பமாக,
அம்மா பாலு. நேராக போகிணியிலே பால்
.இரும்படுப்பில் கறிபோகிணியில்
4 கரண்டி ஜலம் ஓலையைப்போட்டு எறியவிட்டு கொதிக்கவைத்து குட்டியூண்டு
பில்டரில் காஃபிப்பொடி அமுங்க ஸ்நானம் செய்கிரது.
மெல்ல டொக்டொக். பில்டருக்குச் செல்லத் தட்டல்.
சின்ன அருவியாய் அடிப்பாத்திரம் 2 தரம் ரொம்பறது.
திரும்பவும் ஓலை எறியறது.
கரி போகிணியில் பால் ஸந்தோஷமாய் மேலே வரது.
ஸரி பாதியா பிறித்து சக்கரையைப் போட்டு, இரண்டாந்தரம்
காஃபிக்கு ஸ்டாக் மூடியாகிறது.
வாசல்லேபோட்ட கோலத்தைவிட பக்கத்திலிருக்கும், பெருமாள்
கோவிலோட ஹனுமானுக்கு ஒரு சின்ன கோலம். சாமியை
சுத்திட்டு வரச்சே கிடைக்கற 2 பூவை வீட்டு படத்திற்கு
ஒரு பூஜை.
ஆனந்த மஹத்வம் அகில ஜகம் அத்தனையும்,
அனந்த மஹத்வம் மாமுனிவரெல்லாரும்.
காவேரியம்மன் கமலமலர்த் தாள் பணிந்தே
கங்கை யமுனையம்மன் செங்கமலர்த் தாள் பணிந்தே
காவேரிமாலை அடிமேலடியாக தொடருகிறது.
காவேரி , கங்கை வாதம் கேட்கிறது.
அப்பளாத்திற்கு பிரண்டையும் சேப்பங் கிழங்கையும் அறைத்துக்கொண்டே
பெண்ணை,கருடநதி,பேர் பெற்ற வெள்ளாறு,தாமிர பரணி, இதமானஸத்யநதி,
திவ்ய தீர்த்தமெல்லாம் சேர்ந்த கௌதமியும்,
ஸரயோர்க்கவையும் ஸரிக்கொத்த கண்டகியும்
நேத்ராவதியுடனே நேர்வடக்கே பெருகி நின்னா! கங்கை சொல்வது
காவேறி—பூக்கும் பயிர்களுக்கு புதுஜலத்தை காணாட்டா,
காய்க்கும் பயிர்களுக்கு காவேரி காணாட்டா
வாடித் தவிப்பரம்மா மா ஜனங்கள ளெல்லோரும்.
இப்போதய நிலவரம் அப்பவே தெறியும் போலிருக்கு!!
அரைச்சாச்சு. பிரண்டையை. வழிச்சாச்சு ஏனத்தில்
கையில் குழிவான நீள காம்போடு இலுப்பைக்கரண்டி.
யார் முன்னாடி அடுப்பை மூட்டிருப்பா? விடி வெளக்குலே ஓலை
பத்தவச்சு காபி போட்டாச்சு. அடுப்பை மூட்டிட்டா
ராத்ரிக்கு யார் முன்னே வெளக்கேத்தராளோ அங்க போனா
வளக்ககெ ஏத்தண்டு வந்திடலாம். வெத்துபொட்டி
வாங்காத தள்ளணும். அவ்வளவுதான்.
அக்கா வென்னீர் சுட்டாச்சா?இன்னும் குளிக்கலையா நீ?
துளி தணல் எடுத்துக்க வந்தேன். விறகை நெறித்து தணல் எடுத்தாச்சு.
அப்படியே விசிறிட்டுப்போ. இல்லாட்டா அடுப்பு அணைஞ்சுடும்.
தணலுக்கு கூலி.
கரண்டியில் ரெண்டு வரட்டியை பிச்சு போட்டுண்டு புகையவிட்டுண்டு,
வீட்டில் வந்து அடுப்பை மூட்டியாச்சு.
முதலடுப்பில் அப்பளாத்திற்கு அரைத்ததைப் போட்டு உப்பு ஜலம்காச்சி மடியா
எடுத்து வைச்சுட்டு, குமட்டியில் தணலெப்போட்டு சின்ன உருளியிலே
பருப்பு வேகறது.
காயெப்போட்டு ஒரு பருப்புக் குழம்பு, ஒரு கறி, சம்ப்ரமமா சாப்பாடுதயார்.
அடுப்பு வேலெ ஆனதும் தணலெத் தள்ளி அணைத்து மறுநாளுக்கு
குமட்டிக்குகறி தயார். ஆச்சு. உளுத்தமாவை உப்பு ஜலம்விட்டு
கெட்டியாகப் பிசைந்து இடிக்க, மாவு ரெடி.
மாவு இடிக்கலாமாம்மா? சிவப்பிவந்தாச்சு. டங்டங்டங்
திருப்பிப்போடம்மா, இப்படி,அப்படி கைதேர்ந்த கைகாரியாய்ப் பதம்
சொல்லிச் சொல்லி இடியோஇடித்து, அம்மா எண்ணெ கொணாந்து
போடம்மா,. விளக்கெண்ணெய் ததும்பத் தடவி சீரக வாஸனையுடன்
ஸோடாஉப்பு சேத்த மாவு பளபள என்று தயார்.
அப்பளாத்துருண்டை கூட ருசிதான். ஏனோ எண்ணெய்வாஸனை
கூட தெறியலே!!! என்ன மாயமோ?
தெரட்டி ஒரே சீரா உருட்டி அஞ்சு அஞ்சா உண்டெய அடுக்கி கணக்கு
சுலபமா போட அடுக்கில் போட்டு எண்ணி மூடியாச்சு.
அரிசிமாவு, மணை,குழவிகளும் ரெடியா எடுத்து வைச்சு அப்பளாக்
கச்சேரிக்கு களம் ரெடியாயிடுத்து.
நிம்மதியா சாப்பிட உட்கார்ந்தா மாமின்னு கோபு பெண்டாட்டி வந்து
நிக்கறா. என்னடீ என்னஸமாசாரம், ஒருவாய் சாப்பிடலாம்னா
ஸரியா வந்து நிக்கறயே?
இல்லே மாமி ஒரு அவஸரம். மூணு வரகான் வேணும்.குடுங்கோ.
என்ன கொணந்திருக்கே. வெள்ளியா, பவுனா?
சின்ன தட்டு மாமி.
ஸரி இந்தப் பையிலே போடு. நான் ஸாயங்காலம் எழுதி வைக்கிறேன்.
அப்புரம் இன்னும் பணம் கேட்கக் கூடாது. வட்டி தெறியுமோன்னோ,
வரகானுக்கு ஓரணா. வட்டி மாஸாமாஸம் கொடுக்கணும்.
அதான் எனக்குச் சாப்பாடு தெறியுமா?
தெறியாதாயென்ன மாமி உங்களவிட்டா சட்டுனு பணம் எங்கே
பிரட்ட முடியும்?
மாமி ரொம்ப கரார். சின்ன வயதிலே விதவை ஆயிட்டா.ஆனாலும்
இருக்கறதை வித்து சுட்டு கொஞ்சம் பைஸா கையிலே. சின்னதா வீடு
ஒண்ணு.எப்பவும் புராண கதைகளின் வசனம் போன்ற பாட்டுகள்.
அப்பளாம் இட்டு வரகாசு, வட்டிகாசு, மாமி யாரிடமும் நிக்கலேன்னு
பெருமையாவும் சொல்ரதோட மத்தவாளை அசடுன்னு, கூசாத சமத்து
போறாது. எப்பபாத்தாலும் கடன் கேட்டுண்டு, என்ன குடுத்தனம் பண்ரா?
மாமிக்கு மூணறை ரூபா கணக்குதான் தெறியும். ஒரு வராகனாம் அது.
அதுக்கு மாஸம் ஓரணா. கிட்டதட்ட 4, 5 ரூபா வட்டிவருமோ என்னவோ?
மீதி அஞ்சு ரூபா அப்பளாம் இட்டே ஸம்பாதிச்சுடுவா.
வயணமா சாப்பிடணுமே. கணக்கெல்லாம் நான் எழுதி மாமிக்கு
எல்லார் கணக்கையும் படித்சு காட்றதாலே எனக்கு சலுகை
இதோ இன்னும் மாமிகளெல்லாம் வந்தாச்சு. ஒருவா இதோ சாப்டூட்டு
வந்துடரேன்.
பசங்களைக் கூட அழைத்து வந்தால் மாமிக்கு பிடிக்காது. இங்கே எதுக்கு
ஜடை கொச்சு எல்லாம் வேண்டிக் கிடக்கு. நிம்மதியா வந்தமா, நல்லவார்த்தை
நாலு சொன்னமான்னு போகாம என்ன சீரு இதெல்லாம்.
நீ என்ன வேணுமானாலும் நினைச்சுக்கோ. எனக்கு பிடிக்கிரதில்லே.
இல்லே சொன்னதை கேக்காம வந்துடுத்துங்கோ!
எல்லாம் அப்பறமா வாங்கோ போங்கோ. மீனா
பாட்டிக்கு பயந்து பசங்களெல்லாம் ஓட்டம்
ஆளுக்கொரு மணை, குழவி.
இன்னிக்கு என்னபாட்டு?
காவேரி மாலை கடைசி அடி
கலி விமோசனங்கள் பண்ணும் காவேரி அம்மன் நான்
அதனாலே நானதிகம் அன்ன நடையாளே
உமையாள் ஸகோதரிக்கு உபமானங்கள் சொல்லி நின்றாள்.
வட்டம் எல்லாம் ஸரியா இடுங்கோ!வட்டங்கள் குவியரது.
எட்டும், பத்துமா வட்டங்கள் ஒண்ணுமேலே ஒண்ணா வைச்சு
அப்பளாங்களாக அரிசிமாவைத் தொட்டு இரண்டொரு நிமிஷத்தில்
ஓட்டி அப்பளாம் வடிவெடுத்து விடுகிரது.
மறுநாள் அப்பளாம் காயவைச்சு த் துணியாலே தொடைச்சு
அப்பளாம் ஒரே சீரா அமுங்க மேலே சந்தனக்கல்லை வைச்சு
ஸமமா அமுங்க வைத்தாகிறது.
நமுத்த வாழை நாறைக்கொண்டு
ஐம்பது ஐம்பதா எண்ணி வாழை நாரால் ப்ளஸும்,
பெருக்கல் குறியுமாக கட்டி அழகான கட்டு தயாராகிவிடுகிரது.
வாங்கிரதுக்கு மனுஷாளுக்கு பஞ்ஜமா என்ன?
ஒருநாள் பருப்பு உலத்தி அரைக்கிரது.மறுநாள் இடிச்சு அப்பளாம்
நாளு வருஷமா உருண்டு மாமி, பாட்டியாயாச்சு.
பணம் மதிப்பு குறைஞ்சு போச்சு. எல்லா பணமும் காலியாச்சு.
மன தைரியம் . ஒரு முடிவு பண்ணிட்டா பாட்டி.பார்வையும் குறைய
ஆரம்பிச்சுடுத்து. தைரியமா கிளம்பிட்டா. எங்கே?
நாராயணா கோபாலம்.
நான்தான் நாராயண கோபாலம் சொல்றேன்.
முடிஞ்சதைக் குடுங்கோ. நாராயணா சொல்ல தெம்பு கொடுங்கோ.
அரிசிக்கு பஞ்சமே இல்லை. நாலு நாளுக்கு ஒரருதரம் போனா
போரும்.
மீந்த மோர், காய் கறி எல்லாம் கொடுத்தா எல்லாரும்.
இரண்டொரு வருஷம் போச்சு. இன்னும் தள்ளாமை.
தூரத்து உறவு. பேத்தி புருஷன் .பணக்காரன். பாட்டி
நீ ஏன் கஷ்டப்படறே? நான் போடறேன் சாப்பாடு. நீ இருக்ற வரைக்கும்
இந்த வீட்லேயே இரு. நீ போனாக்க இழுத்து போட்டூடறேன்.
பழமும் பக்ஷ்க்ஷணமும் மதியை மறித்து பாட்டி இரண்டாம்
பேருக்குத் தெறியாமல் ரிசிஸ்டராபீஸ்வரை போய் கை நாட்டும்
போட்டாச்சு.
ஸொந்தக்காரன் கையிலே நிக்காம அசலாத்துப் பிள்ளை பாத்துக்குவான்.
பூரண நம்பிக்கை.
ரெண்டு வேளை சாப்பாடு ஸரியா வந்தது. பாட்டி நாராயண கோபாலம்
போகலை இரண்டு வருஷத்துக்கு மேலே ஆச்சு.
அசலாத்துப் பிள்ளை வந்தான் ஒரு நாள்.
வீட்டு விலைக்கு மேலே சாப்பாடு போட்டாச்சு. நீ வீட்லெ இருந்துகோ.
என்ன பண்ணுவையோ எனக்குத் தெறியாது.
இரண்டொரு பாட்டு சொல்லிக்ரவா வந்தா. பாட்டி கதை சொல்லி
அழுதா. பிச்சைக்கு போக கூட தெம்பில்லெயே?
பெறிய ஊர். எல்லாரும் சாப்பாடா பேசி வைச்சக் கொடுத்தா.
அசலாத்து பிள்ளைக்கு கொஞ்சம் ஒரைச்சு அவாளும் கொடுக்கிற
மாதிறி ஏதோ கொடுத்தா! யாருக்குத் தெறியும்?
பாட்டி வீதிக்கு வந்தாச்சு. எல்லோரும் ஏதோ எறும்புக்கு வராமபோடும்
மருந்தை கலந்து கொடுத்துட்டா போலிருக்கு அப்படி இப்படி.
எல்லோரும் பந்தோபஸ்தா பாட்டியை உள்ளே கொண்டுவிட்டு உபகாரம்
பண்ணினா.
பாட்டி யாருண்டையும் உறவுகாராகிட்ட நிக்கலேன்ற
எண்ணத்துடன்ஒருநாள்போய்ச்சேந்தா. அசலாத்துப் பிள்ளை
காத்திருந்தவன் மாதிறி ஓடி வந்தான். குறை ப்ராணன் போறதுக்
குள்ளாகவே தூக்கிப்போக ஏற்பாடு செய்து கோவிந்தா கொள்ளி
போடவைத்துட்டான்.
பாட்டி பதமா போய்ட்டா.எவ்வளவு உழைச்சு தன்மானமா இருந்தா ?
வயோதிகம் யாரை விட்டது?
பங்காளிகள் காரியமும் செய்தார்கள். எதிலும் குறைவில்லை.
20, 30ஆகி 1000 உசன்த முதியோர் பென்ஷன் இப்போ இருக்கு.
பாட்டிக்கு உறத்த மனம்தான் இருந்தது.
மீனாமாமியா, மீனா சித்தியா, மீனா பாட்டியா நினைச்சிண்டா
முதியோர் பென்ஷன் தான் ஞாபகம் வரது.
‘
Entry filed under: கதைகள்.
44 பின்னூட்டங்கள் Add your own
இளமதி க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 4:33 பிப இல் ஒக்ரோபர் 15, 2012
அன்புள்ள மாமி, அநேக நமஸ்காரங்கள்.
இதை ரொம்பவும் சூப்பரா எழுதியிருக்கேள். மிகவும் ரஸித்துப்படித்தேன். இருங்கோ ஒவ்வொன்றாச் சொல்றேன்.
……. 2
2.
chollukireen | 11:30 முப இல் ஒக்ரோபர் 16, 2012
ஆசிகள். உங்கள் வரவு மிக்க ஸந்தோஷம். நன்றியும்.அப்படியா? சொல்லுங்கோ. இவ்வளவு சீக்கிரமா வந்து சொல்றேள். படிக்கிறேன்.
3.
VAI. GOPALAKRISHNAN | 4:35 பிப இல் ஒக்ரோபர் 15, 2012
2]
//காய்ந்த தென்னமட்டையில் குச்சியை அரிவாள் மணையில் சீவி யெடுத்துவிட்டு, பாக்கிஓலையை சின்ன சின்ன கட்டாக கட்டி எறியவிட லாகவமாய்.
குச்சிகள் கட்டி ஈரம் பெருக்கும் துடப்பமாக,//
எங்க மாமியார் ஆத்திலே இதுபோலவே தான் செய்வா. 😉
…. 3
4.
chollukireen | 11:35 முப இல் ஒக்ரோபர் 16, 2012
தென்னமரத்து எதையும் வீணாக்காது உபயோகிக்கும்
டெக்னிக் நகரத்திலே வாழ்றவாளுக்குத்தான் தெறியாது..மாமியாருக்குஜே போடலாம்.
5.
VAI. GOPALAKRISHNAN | 4:39 பிப இல் ஒக்ரோபர் 15, 2012
3]
//பில்டரில் காஃபிப்பொடி அமுங்க ஸ்நானம் செய்கிரது.
மெல்ல டொக்டொக். பில்டருக்குச் செல்லத் தட்டல்.
சின்ன அருவியாய் அடிப்பாத்திரம் 2 தரம் ரொம்பறது.
திரும்பவும் ஓலை எறியறது.
கரி போகிணியில் பால் ஸந்தோஷமாய் மேலே வரது.
சரி பாதியா பிரித்து சக்கரையைப் போட்டு, இரண்டாந்தரம் காஃபிக்கு ஸ்டாக் மூடியாகிறது//
ஆஹா, நம்மாத்து சம்ப்ரதாயங்களை எவ்வளவு அழகா, நேர்முக வர்ணனையா எழுதியிருக்கேள். சந்தோஷமா இருக்கு, எனக்கு.
….. 4
6.
chollukireen | 11:40 முப இல் ஒக்ரோபர் 16, 2012
நான் காபி குடிச்சதில்லே. அப்படி ஒரு பழக்கம். காபி நன்னா போடுவேன். ரொம்ப சின்ன வயஸுலே
காபி பாத்திரம் கூட அலம்பமாட்டேன்னு சொல்லுவேன். வர்ணனை ஸரியாயிருக்கா?
பாஸாயிட்டேன்.
7.
VAI. GOPALAKRISHNAN | 4:54 பிப இல் ஒக்ரோபர் 15, 2012
4]
//அப்பளாத்திற்கு பிரண்டையும் சேப்பங் கிழங்கையும் அறைத்துக்கொண்டே//
மாமி இது என்ன புதுக்கதையா இருக்கு, பிரண்டை தான் என் மாமியார் சேர்ப்பா, அப்பளமும் இடுவா, பார்த்திருக்கேன்.
சேப்பங்கிழங்கைப்போய் சேர்ப்பார்களா என்ன? இன்னுமே அப்பளம் சாப்பிடவே நான் யோசிக்க ஆரம்பிச்சுடுவேன். ஏன்னாக்க எனக்கு இந்த உருளைக்கிழங்கைத் தவிர ஒரு கிழங்கும் பார்த்தாலே பிடிக்காது. குமட்டிக்கொண்டு வரும்.
சில ஹோட்டல்களிலே தேங்காய்ச்சட்னியில் தேங்காய்க்கு பதிலாக சேனைக்கிழங்கு என்ற சனியனைக் கலந்து விடுகிறார்கள். துளி உள்ளே போனாலும் எனக்கு வாந்தி வந்து விடும்.
ஹோட்டலில் சாப்பிடும் போது நான் நேராக சரக்கு மாஸ்டரிடம் கேட்டு விட்டுத்தான், சட்னியையே தொடுவேன்.
அப்புறம் கோபத்தில் சிலர் “உன்னைப்பெத்த வயத்திலே பிரண்டையைத்தான் கட்டிக்கணும்” ன்னு ஒரு பழமொழி சொல்றாளே மாமி, அதற்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சா சொல்லுங்கோளேன்.
பிரஸவித்தவாளுக்கோ அல்லது நிறைமாத கர்ப்பணிக்கோ பிரண்டை நல்லதோ, அதனால் அதுபோலச் சொல்கிறார்களோ. ரொம்ப நாளா இது எனக்கு ஓர் சந்தேகம். உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்கோ.
……… 5
8.
chollukireen | 11:56 முப இல் ஒக்ரோபர் 16, 2012
புதுக்கதை இல்லை. பிரண்டை காரல்ருசி,கொழகொழப்பு, சேப்பங்கிழங்கும் அதே
கேட்டகிரி. விளக்கெண்ணெய் கொழகொழப்பூ, உளுத்தம் மாவு என்ன? அதுவும் அதேதான்.
அதனாலே எல்லாமாக ஸங்கமமாகி ஸோடாஉப்பையும் சேத்துண்டு அப்பளாத்திற்கு
நன்றாக சீறிக்கொண்டு பொரியும் தன்மையைக் கொடுக்கும் என்பது என் யூகம். இப்பல்லாம் ஒண்ணுமே இருக்காது. பயமில்லாமல் சாப்பிடுங்கோ!!!!!!!!!!!!!!!!!!!!! ஓட்டல் சட்ணியில்
சேனைக்கிழங்கா!! புது ரிஸிப்பி. பாக்றேன்.
9.
chollukireen | 12:22 பிப இல் ஒக்ரோபர் 16, 2012
பெத்த வயிறு மேல் தோல் டெலிவரிக்குப் பின்னால்
சுருங்குவதற்காக அறிப்பு எடுக்கும். எண்ணெயும் மஞ்சளும் குழைத்துத் தடவி குளிக்கச் சொல்வா.
பசங்கள் ஸரியில்லாவிட்டால் பெத்த வயிற்றில் பிரண்டையையயும் அறைத்துக் கட்டிக்கொண்டால்
அறிப்பு பிச்சு தள்ளிவிடாதா? அதைவிட கஷ்டமே வேண்டாம். இதைதான் ஸூசகமாகச் சொல்லுவார்கள். யாருக்கு எந்த பிள்ளைகளுக்கு
அந்த அறிப்பு, எறிச்சல் தெறியும்? /யாராவது டெஸ்ட்
பண்ணி இருப்பாளா?
10.
VAI. GOPALAKRISHNAN | 5:03 பிப இல் ஒக்ரோபர் 15, 2012
5] அப்புறம் இன்னும் பணம் கேட்கக் கூடாது.
வட்டி தெறியுமோன்னோ,
வரகானுக்கு ஓரணா வட்டி மாஸாமாஸம் கொடுக்கணும்.
அதான் எனக்குச் சாப்பாடு தெறியுமா?//
எவ்வளவு சாமர்த்தியமா இருந்திருக்கா பாருங்கோ.
வராகன் = மூன்றரை ரூபாய் மாமி
ரூபாய் = 16 அணா மாமி
56 அணாவுக்கு ஒரு அணா மாதவட்டி ஆகிறது.
கிட்டத்தட்ட இரண்டு ரூபாய் வட்டி போல [24% ]
வருஷத்துக்கு ரூ100 க்கு 24 ரூபாய் என்ற கணக்கு ஆகிறது.
…….. 6
11.
chollukireen | 12:26 பிப இல் ஒக்ரோபர் 16, 2012
192 தம்படி 1ரூபா. 3தம்படி காலணா. அந்த கணக்கிலும் பிரத்யக்ஷ்க்ஷ காலம் தெறியும்.
12.
VAI. GOPALAKRISHNAN | 5:07 பிப இல் ஒக்ரோபர் 15, 2012
6] மாமி, எல்லாமே ஜோராத்தான் எழுதிருக்கீங்க.
ஆனால் இதையே கொஞ்சம் கம்மியாகப்போடுங்கோ.
பிரிச்சுப்பிரிச்சு இதையே மூணு பதிவாகத் தொடராகப் போடுங்கோ. இல்லாவிட்டால் படிக்க சற்று சிரமமாகவும் அலுப்பாகவும் இருக்கும்.
நிறைய எழுதினா நிறைய பேர் படிக்க சோம்பல் படுவா. அதனால் தயவுசெய்து சின்ன போஸ்டா போடுங்கோ.
ஏஞ்சலின் [நிர்மலா] சொல்லித்தான் இங்கே வந்தேன்.
ரொம்ப சந்தோஷமா இருக்கு. பாராட்டுக்கள்.
அன்புடன்
கோபாலகிருஷ்ணன்
13.
Angelin | 6:14 பிப இல் ஒக்ரோபர் 15, 2012
காமாட்சியம்மா !!! அருமையான வர்ணனை…அந்தஅதிகாலை சூழ்நிலைக்கே அழைத்து சென்றார்போல இருக்கு .அப்பளம் தட்டுவதை வர்ணித்து அப்படியே நேரில் பார்ப்பது போல இருக்கு ..முன்பெல்லாம் ஓலை வைத்து தான் நெருப்பு பற்ற வைப்பார்களா !!
மீனா பாட்டி மனதில் நிற்கிறார்கள்
14.
chollukireen | 12:44 பிப இல் ஒக்ரோபர் 16, 2012
சிக்கனம் எறி பொருள். அவஸரத்துக்கு பேப்பரை கூட கொளுத்தி குமட்டி பற்ற வைப்பார்கள். மீனா பாட்டியின் சிக்கனம் அது. ஸ்டவ், காஸ், ஹீட்டர்
எதுவும் இல்லாத காலம். நினைத்ததும் எறியும்
காய்ந்த ஓலைகள். அப்பளாம் எப்படி இடறா?
ஒரு பதிவு போடலாம். யாரும் பண்ண மாட்டார்கள்.
அன்புடன் . நீ நிர்மலாவா. அழகான பெயர்
15.
chollukireen | 12:36 பிப இல் ஒக்ரோபர் 16, 2012
நான் கூட நினைத்தேன். இதில் கருவே துளியூண்டு.
இதை எப்படி பிறிப்பது? முன்னால் ரஸிக்க யாராவது
இருக்காளா பாக்கணும். நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.அதன்படி இனி எழுதினால் செய்கிறேன். இது முன்னோட்டம்தான். விகடன்
ஸினிமா விமர்சனம் மாதிறி ஏதாவது மார்க் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். மிகவும்
நன்றியும் ஆசிகளும் மாமி
16.
ranjani135 | 6:30 முப இல் ஒக்ரோபர் 16, 2012
ஒவ்வொரு பதிவும் ஒண்ணை ஒண்ணு தூக்கி சாப்பிடறா மாதிரி இருக்கு.
முதலில் எத்தனை சாமர்த்தியம் இந்த மாமிக்கு என்று நினைத்தாலும், போகப்போக கவனித்துக் கொள்ள ஆள் இல்லாமல் பாவம் என்று தோன்றிவிட்டது.
எத்தனையோ மீனா மாமிகள் – சின்ன வயதில் கல்யாணம் ஆகி புருஷன் முகமே தெரியாமல்……
மனதை கனக்கச் செய்துவிட்டது இந்த உங்களின் பதிவு.
17.
chollukireen | 12:51 பிப இல் ஒக்ரோபர் 16, 2012
மனதை லேசாக்கிக்கொள். ரஞ்சனி எங்கிருந்தோ வந்தாள். திரியைத் தூண்டிவிட நினைத்து முன் மொழிந்தாள். திரு. ஸைபர் ஸிம்ஹன் விடமின் உபயோகப்படுத்தச் சொன்னார். ஸரியா வேலை செய்கிறதாவென பார்க்கலாம். மிகவும் அன்புடனும்
ஆசிகளுடனும்
18.
Sheela | 8:21 முப இல் ஒக்ரோபர் 16, 2012
மாமி,
நமஸ்காரம். ரொம்ப அருமை. எத்தனயோ மீனா பாட்டிகள் நினைவுக்கு வருகிறார்கள். அடுத்து என்ன எழுத போகிறீர்கள் என ஆவலாக உள்ளது. ஆனால் தெரியும். எத்தனை எழுதினாலும் இன்னும் நிறைய விஷயங்கள் உங்களிடம் இருக்கும் என்று.
Regds
19.
chollukireen | 12:56 பிப இல் ஒக்ரோபர் 16, 2012
ஆசிகள். என்ன தோன்றதோ பார்க்கலாம். உன் அன்பு பின்னூட்டத்திற்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.. உன் அப்பாவிடமும் சொல்லு. ஸந்தோஷப்படுவார். எல்லோருக்கும் என் அன்பும், ஆசிகளும். அன்புடன் மாமி
20.
adhi venkat | 1:16 பிப இல் ஒக்ரோபர் 16, 2012
மீனா பாட்டியை பற்றி நாங்களும் தெரிந்து கொண்டோம். காபி போடற அழகை அழகா சொல்லியிருக்கேள். ஆனா நான் இதுவரை காபியே குடித்ததில்லை.
அப்பளாத்து மாவு நான் சாப்பிட்டிருக்கேன். பிரமாதமா இருக்குமே…..
21.
chitrasundar5 | 9:13 பிப இல் ஒக்ரோபர் 16, 2012
காமாட்சிமா,
மீனா பாட்டியைப்பற்றி சொல்லும்போதே அந்த நாள் பழக்க வழக்கங்கள், கணக்குவழக்குகள், அப்பளமிடுதல், துடைப்பம் சீவுதல்,நெருப்பெடுப்பது போன்ற எவ்வளவு விஷயங்களையும் சொல்லிட்டுப்போறீங்க!எழுத்துநடை (காமாட்சி அம்மா ஸ்டைல்) வித்தியாசமா,சூப்பரா இருக்குமா.ரசிகர்ளாயிட்டோம். பலமுறை திரும்பத் திரும்பப் படித்து.மனப்பாடமே ஆயிடுச்சுன்னா பாத்துக்கோங்க.
மீனா பாட்டியை எங்களாலும் மறக்க முடியாது.
22.
chollukireen | 9:58 முப இல் ஒக்ரோபர் 20, 2012
ரொம்பவே ஸந்தோஷத்தைத் தருகிறது.உன் பின்னூட்டம். உங்களுடைய ஸப்போர்ட் இல்லாம காமாட்சிமா கிடையாது. தொடர்ந்த நட்பையும், அன்பையும் கொடுத்துக் கொண்டிருக்கவும். அன்புடன் சொல்லுகிறேன் ப்ளஸ் நவராத்திரி ஆசிகளையும்.
23.
இளமதி | 6:06 முப இல் ஒக்ரோபர் 18, 2012
அம்மா ரொம்ம்பவே அனுபவிச்சு ரசிச்சு எழுதியுள்ளீர்கள். வாசிக்கும் போது அங்கங்கே கண்களை முட்டி தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து , அதன் பின் சுதாகரித்து விட்ட இடம் தேடி வாசித்தேன்.
வாசித்தேன் என்பதைவிட மீனா பாட்டியோடே கூடவே நிழலா வாழ்ந்த மாதிரி உணர்வாய் இருந்திச்சு.
அருமையாக எழுதியுள்ளீர்கள்.
டயலாக் ஓரளவுக்கு தெரிஞ்சாலும் மறுபடி 2 தரம் வாசித்து முழுவதையும் புரிஞ்சுக்க கொஞ்சம் அவகாசமாயிடுத்து.
இப்படி ஒரே மூச்சில் எழுதணும்னு இல்லாமல் மேலே கோபாலகிருஷ்ணன் ஐயா சொன்னது போல 2, 3 பகுதியா பிரிச்சு போடுங்கோ. எழுதுரது உங்களுக்கும் சுகம். வாசிப்பவங்களுக்கும் ஈஸியா புரிஞ்சுக்க முடியும்.
அற்புதமாக இருக்கும்மா கதை. என்பாட்டி கிட்டத்தட்ட இந்த மீனா பாட்டிபோலவேதான் அவங்களை மறுபடி நினைச்சுக்கிட்டேன். ரொம்ப நன்றிம்மா. தொடர்ந்தும் எழுதுங்கோ. நாங்களும் கூடவே வாறோம்:)
24.
chollukireen | 10:11 முப இல் ஒக்ரோபர் 20, 2012
அன்புள்ள இளமதி எவ்வளவு உணர்ச்சி பூர்வமாக வாசித்திருக்கிராய் என்பதை உன் பின்னூட்டம் காட்டிக் கொடுக்கிறது. ரொம்ப நன்றியம்மா! இம்மாதிரி ஒரு பின்னூட்டம் எழுதியதற்கு. அடுத்து ஏதாவது கதை எழுதினால்
பிரித்துப்போட்டு எழுத முயற்சிக்கிறேன். எழுதும் போது ஒரே மன நிலையில் எழுதி, கண்ணை மூடிண்டு போஸ்ட் பண்ணி விட்டேன்.
கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அன்புடன் பதிலெழுதினமைக்கு நன்றிகளும், ஆசிகளும். அடிக்கடி உன்னை எதிர் பார்க்கிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.
25.
innamburan | 6:17 முப இல் ஒக்ரோபர் 19, 2012
உலகம் பூரா சுருங்கிப்போயிடுத்து, காமாக்ஷியம்மா. மீனா மாமி/பாட்டியை பத்தி நீங்க ஜெனீவாலேருந்து எழுதினதை படிக்கச் சொல்லி, இப்போது இங்கிலாந்தில் இருக்கும் என்னை படிக்கச்சொல்லி இந்த புவனத்தின் இன்னொரு மூலைலேருந்து கடுதாசு வந்தது. சமாசாரமோ நம்மூர் அக்ரஹாரம். நான் இதெல்லாம் தெரியாமலே, ரொம்பநாளுக்கு முன்னாலே மீனா மாமியை பத்தி ‘பாதாள கரண்டி’ ந்னு ஒரு கதை எழுதியிருக்கேனே! தெரியுமோ? ‘பொன்னான வேலரே எழுந்திரும்/கண்ணான வேலரே எழுந்ந்ந்ந்திரும்!ம்’ ம்ன மீனாமாமியோட உதயராகம் இப்போ இங்கே விடிகாலேலெ காதிலெ தேன் பாயறது. தேங்க்ஸ், மாமி.
26.
chollukireen | 10:32 முப இல் ஒக்ரோபர் 20, 2012
தற்சமயம் நான் உடல் நலம் குன்றிய என் வீட்டுக்காரருடன் மும்பையில்இருக்கிறேன். ஆமாம் உலகம் மிகவும் சுருங்கித்தான் போய்விட்டது. லண்டனில் உள்ள நீங்கள் ஏதோ மற்ற ஒரு கடைகோடியிலுள்ள கண்டத்தின், அல்லது தேசத்திலுள்ளவர்களால்
மீனாமாமியைப் படிக்கச் சொன்னால் அது எவ்வளவு ஆர்வமுடையதாக இருக்கும் என்று
ஒரு ஸெகண்டாவது யோசிக்க வைத்திருக்கும்!!!!!!!!!!!!!
அதை நீங்கள் அழகாக தெறிவித்து பின்னூட்டம் எழுதியிருப்பதும், எனக்கு நெகிழ்ச்சியையும்,மகிழ்ச்சியையும் ஒரு சேரக் கொடுத்தது. நன்றிகள் நிறையச் சொல்லலாம்.
உங்கள் ப்ளாகைப் போய்ப் பார்க்கிறேன்.நீங்கள்
எழுதிய கதையையும் படிக்கிறேன். அடிக்கடி வந்து அபிப்ராயம் எழுதுங்கள். ஜெனிவா விஸா
இருக்கிரது. என் கடைசி,பிள்ளை குடும்பத்துடன் அவ்விடம் வசிக்கிறான்.
யாரோ படிக்கச் சொல்லி சொன்னார்களே. அவர்களுக்கும் என் நன்றிகள். ஆசிகளுடன்
சொல்லுகிறேன்.
27.
gardenerat60 | 5:30 பிப இல் ஒக்ரோபர் 29, 2012
அம்மா, சின்ன வயசிலே நான் பார்த்த வாழ்க்கை முறைகளையும் , மனிதர்களையும் , நினைவுக்கு வர செய்தது , இந்த பதிவு.
அப்பளம் இடித்து, இட்டு, காய வைத்து, அடுக்கி வைத்த அனுபவங்கள், மேலோங்குகின்றன. எங்கள் அம்மா எவ்வளவு வேலைகளை செய்து, எங்களுக்காக தேய்ந்தார்கள் என்று, வியப்பும், மலைப்பும் ஏற்படுகிறது.
இன்னும் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.நன்றி.
நமஸ்காரம்
28.
chollukireen | 10:14 முப இல் ஒக்ரோபர் 31, 2012
இதெல்லாம், அப்பளாம் இடுவதெல்லாம் எங்கள் பால்ய நாட்களில் வீட்டுக்குவீடு வழக்கமாக இருந்தது. இப்போ இடவேண்டும் என்று மனதால் நினைத்தால் கூட குழவியும்,மணையும்கிடைக்குமே
தவிர மற்றது எந்த வசதியும் கிடைக்காது. அப்போது
காரியங்கள் தெறிந்திருப்பது ப்ரெஸ்டிஜாக இருந்தது.
அம்மாவை நினைவு கூற வைத்துவிட்டது அப்பளாங்கள் .நன்றி அன்புடன்
29.
Rajarajeswari jaghamani | 3:10 முப இல் ஓகஸ்ட் 19, 2014
கால இயந்திரத்திரத்தில் ஏறி தாங்கள் சொல்லும் கதையை நேரில் பார்க்கிறமாதிரியான அருமையான கதை..பாராட்டுக்கள் மாமி..!
30.
chollukireen | 8:07 முப இல் ஓகஸ்ட் 19, 2014
வயது காரணமோ என்னவோ? முதியோர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதைகளே மனதில் உருவாகிறது. உங்களின் பாராட்டுதல்களுக்கு மிகவும் நன்றி. தொடர்ந்து ஊக்கம் கொடுங்கள். அன்புடன்
31.
Geetha Sambasivam | 11:45 முப இல் ஓகஸ்ட் 18, 2015
அருமையா இருக்கு! ஆனால் அப்பளத்திற்குப் பிரண்டை தான் கேள்விப் பட்டிருக்கேன். சேப்பங்கிழங்கு புதுசு! என் மாமியார் வீட்டிலேயும் (புக்ககம்) காஃபி அடுப்பு ஓலையைப் போட்டு எரித்துத் தான் எரியும். பாலில், காஃபியில் எல்லாம் ஓலை வாசனை வருதுனு என் உள் மனம் சொல்லும். வெளியே சொல்ல முடியாதே! 🙂 மற்றபடி ஓலையைப் போட்டு நானும் அங்கே அடுப்பை எரித்திருக்கிறேன். விறகு அடுப்பிலும் சமைச்சிருக்கேன். பிறந்த வீட்டில் குமுட்டி அடுப்புத் தான். ஸ்டவ் கூடக் கிட்டே வரப்படாதுனு அப்பா கண்டிப்பு. பாவாடையில் எங்கேயானும் நெருப்புப் பட்டுடுமோனு பயம்!
32.
chollukireen | 8:14 முப இல் ஓகஸ்ட் 19, 2015
பிரண்டை,சேப்பங்கிழங்கு என்ன இப்போது செம்பருத்தி இலையும் சொல்லி இருக்கிறேன். எல்லாம் கொழகொழ வஸ்த்துக்கள். எனக்கும் இந்த உப்பு ஜலம் காய்ச்சத் தெரியும். ஒரு காலத்தில் வளவனூர் அப்பளாம் ஏற்றுமதி கூட ஆனது. வீட்டுக்கு வீடு பால்ய விதவைகள். ஒரே வழி அப்பளாம் தான். அந்தக்காலமில்லை இப்போது. அப்பளாமும் இடஒருவருமில்லை என்று கேள்வி. குடிக்க வென்னீரென்றால் ஓலையைப்போட்டு சுட வைப்பார்கள். ஓலை வாஸனை வென்னீரே வேண்டாம் என்று சொல்ல வைக்கும். பணப்புழக்கம் அதிகமில்லாத காலம். நீங்கள் அருமைப் பெண் என்று நினைக்கிறேன். கிராமத்து மருமகளுக்குத்தான் கஷ்டம். பெண்களுக்குப் பழக்கமிருக்கும். நல்ல ஸ்வாரஸ்யமான பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்
33.
Geetha Sambasivam | 12:32 பிப இல் ஓகஸ்ட் 19, 2015
//நீங்கள் அருமைப் பெண் என்று நினைக்கிறேன். கிராமத்து மருமகளுக்குத்தான் கஷ்டம். //
ஹாஹா, அப்படி எல்லாம் இல்லை அம்மா. நான் இரண்டு பிள்ளைகளுக்கு நடுவில் ஒரே பெண் என்றாலும் சலுகைகள் எல்லாம் அண்ணா, தம்பிக்குத் தான். 🙂 பனிரண்டு வயதில் இருந்து அடுப்பங்கரை வேலை! வேலை செய்தால் தான் பள்ளிக்கே போக அனுமதி கிடைக்கும். அப்பா அவ்வளவு கண்டிப்பு. பதினைந்து வயதுக்குள்ளாகக் கொழுக்கட்டைச் சொப்புப் பண்ணவும் பதினெட்டு வயதுக்குள்ளாக முறுக்குச் சுற்றவும் கற்றுக் கொண்டேன். மதுரையிலேயே பிறந்து வளர்ந்ததால் மின் விளக்குக் கூட இல்லாத கிராமத்தில் வாழ்க்கைப்பட்டதும் ஓர் ஆச்சரியம் எதைப் பார்த்தாலும் அதே சமயம் மதுரைப்பக்கத்துக் கிராமங்களில் மின் விளக்கு, குழாய் வசதி அப்போதே இருந்தது. படிப்பு விகிதமும் கிராமங்களில் அதிகம். படித்துவிட்டுக் கிராம வாழ்க்கையில் இருந்தவர் பலர்! 🙂
34.
chollukireen | 11:04 முப இல் ஜனவரி 30, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
நான் எழுதிய கதை இது. திருப்பிப் பார்க்கும் போது இதை மீள் பதிவுசெய்யலாமே என்றுதோன்றியது. சிலஸமயம் மீள்பதிவும் ஸரியாக ஆவதில்லை. இதைப் போட்டுப் பார்க்கலாம் என்று தோன்றியது. பார்ப்போம். அடிஷனல் தாட்ஸ் வந்தது.போனவாரம் புடலங்காய் கறி மீள் பதிவு செய்தேன். பார்ப்போம இதை. அன்புடன்
35.
Geetha Sambasivam | 11:37 முப இல் ஜனவரி 30, 2021
மறுபடி படிச்சு ரசிச்சேன் அம்மா. இதெல்லாம் எத்தனை படித்தாலும் அலுக்காத ஒன்று.
36.
chollukireen | 12:21 பிப இல் ஜனவரி 30, 2021
ரஸித்தற்கு மிகவும் நன்றி.அன்புடன்
37.
ஸ்ரீராம் | 12:00 பிப இல் ஜனவரி 30, 2021
பாட்டியின் கதை மனதை உருக்குகிறது. என்ன வாழ்க்கையோ!
38.
chollukireen | 12:23 பிப இல் ஜனவரி 30, 2021
வயதான வாழ்ககை பலவிதங்களில் அமைகிறது. இவைகள்தான் உண்மை. நனறி வருகைக்கு.அன்புடன்
39.
நெல்லைத்தமிழன் | 3:02 பிப இல் ஜனவரி 30, 2021
கதையை ரசித்தேன். ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் எப்படி கஷ்டத்துடன் செல்கிறது என்று யோசிக்கிறேன். பாவம்…
எல்லோரும் அப்பளத்துக்கு பிரண்டை ஏன் என நினைக்கிறா. பிரண்டை அப்பளத்தின் gas generatingக்கு மாற்று. பிரசவத்திற்குப் பிறகு வயிற்றில் gastric troubleக்குக்காகத்தான் பிரண்டை என்று படித்த நினைவு.
40.
chollukireen | 11:57 முப இல் ஜனவரி 31, 2021
அப்பளாம் சீறிக்கொண்டு பொரியவும் இவையெல்லாம் ஒத்தாசை செய்கிறது. வாய்வுக்கும் மாற்று என்பதுதான் உம்மையான கருத்தாகவும் ஏற்க வைக்கிறது.எந்த முறையிலாவது நாட்பட வைத்திருக்கும் பண்டங்களில் மூலிகைகளை சேர்த்திருக்கிரார்கள். ஒரு விதத்தில் வியப்புதான். வயோதிக வாழ்க்கைதான் ஸரியாக அமைவது கடவுளின் நன்கொடையாக இருக்கும். நன்றி. அன்புடன்
41.
நெல்லைத்தமிழன் | 3:05 பிப இல் ஜனவரி 30, 2021
போகிணி, ஏனம் – இதெல்லாம் படித்து/கேட்டு எத்தனை காலமாயிற்று
42.
chollukireen | 12:04 பிப இல் ஜனவரி 31, 2021
கறிபோகிணியில் பத்துஸாமான்கள் வைக்க மாட்டார்கள். மைஸூர்போகிணி இப்படி அப்படி எனறு பல பெயர்கள் ஏனமெல்லாம் தேய்க்காமல் கிடக்கிறது, இதெல்லாம் இங்கும் உபயோகத்தில் இல்லை.நிசம்தான். அன்புடன்
43.
Revathi Narasimhan | 2:26 முப இல் ஜனவரி 31, 2021
நான் எங்கள் பாட்டி காலத்துக்கே போய்விட்டேன் காமாட்சிமா.
எத்தனை அருமையான காவேரி மாலை பாடல்.
மீனாமாமி மாதிரி எத்தனை பேரோ.
இவ்வளவு கோர்வையாக எழுதி இருக்கிறீர்களே.
2012இல் வந்த பதிவா இது.
மிகச் சிறப்பு. அந்தக் காலத்து வாழ்க்கை முறை
பாட்டி தவித்தது கலங்க வைக்கிறது.
பிரண்டை சேம்பு சேர்ப்பதை இப்போதுதான் கேள்விப் படுகிறேன்.
பாட்டி நன்றாக இருந்திருக்கலாம். பாவம்.
44.
chollukireen | 12:19 பிப இல் ஜனவரி 31, 2021
அந்த நாட்களில் கல் உப்பு இல்லையா/ மாவு பிசைவதற்கு முதல்நாளே உப்பை தண்ணீர்விட்டு அடுப்பிலேற்றிக் காய்ச்சுவார்கள். பின்னர் பிரண்டையை கைபடாமல் அரைத்துச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி வடிக்கட்டி வைப்பார்கள் மாவு பிசையஅந்தத் தண்ணீரைத்தான் உபயோகிப்பார்கள்.ஸோடாஉப்பு,சீரகம்,சேர்ப்பார்கள். நீஙகள் மறுமொழி இட்டது வரவேற்கத் தக்கது. காவேரிமாலை அழகானது.பூராவும் எழுதி வைத்துக் கொள்ளவில்லை. அன்னையர் தினப்பதிவு என்ற தொடரையும்திங்கட் கிழமைகளில் மீள்பதிவு செய்கிறேன். வருகவருக என்று வரவேற்கிறேன். அன்புடன