தை பிறந்தால்–2
-வாஷிங்டன்லே நல்ல வேலெம்மா எனக்கு. மகளைப் பாத்துபாத்து
அருமையா வளர்க்கவும், அதுக்கு குறையில்லாம எல்லாம் செய்யவும்,
வேலைக்கு போவதும் ,வருவதும்தான் அதுதான் உலகத்திலே ,பெரிசு.
மக நல்லா வளரணும், படிக்கணும், இது ஒண்ணுதாம்மா கனவு.
ஆபீஸ்லே இருக்கரவங்க சொல்லுவாங்க, உனக்குன்னு வாழ்க்கை
வேணும், அதைப்பத்தியும் யோசின்னு சொல்லுவாங்க.
எனக்கு எதுவும் காதுலே விழுந்ததேயில்லைம்மா. வருஷத்துக்கொரு
முறை இந்தியா வந்து போனால், அம்மா கை சாப்பாடு தின்றாலே அது
போதும்மா.
ஜெயந்தி நல்லா படிப்பா. அவங்க அப்பா வழி பாட்டின்னா உசுரு.
அவங்களும் வருஷா வருஷம் கூப்பிடுவாங்க. அனுப்புவேன்.
இப்படியே அவளுக்கு அன்பும் நல்லா கெடைச்சுது.
நான் அவங்ககிட்டே போன் போட்டுதான் பேசுவேன்.
உஷா, ஜெயந்தி வளந்திட்டே வரா. நீ ஜாக்கிரதையா இருக்கோணம்.
அவளுக்கு எல்லாம் நல்லா செய்யணும்!
வெளி நாட்லே இருக்கே!ஞாபகம் இருக்கணும் , இதையே சொல்லுவாங்க.
இது ஏது? புதுக்கதை ஏதாவது பாவம், நமக்கு இதெல்லாம் வேணுமா?
யோசனை வந்து விட்டது.
ட்ரே,ப்ளேட் எல்லாம் எடுக்க ஏர்ஹோஸ்டஸ் வர இரண்டு நிமிஷம் பேச்சு
தடை.
அப்பா சொல்வாங்க, போனிலேதான், உன் மக எதிர்காலம் உன் கையில்.
என் எதிர் காலமே தெரியலே. என்ன சொல்ராங்கன்னு புரியலையா?
ஆபீஸ்லே பெரிய,பெரிய மீட்டிங்லாம் ஏற்பாடு செய்ய என்னிடம்
ஒப்படைப்பாங்க. வெளியிடங்கள்லேந்து ஆட்களெல்லாம் வருவாங்க.
அவங்களுக்கும், எல்லா ஒத்தாசைங்க. ஷாப்பிங் எல்லாம் கூட போய்
முடிந்ததை எல்லாம் செய்வேங்க
ஜெயந்திக்கும் ஷாப்பிங் போக பிடிக்கும். இம் மாதிரி ஸமயங்களில்
அவளையும் அழைத்துப் போவேன்.
சிங்கப்பூரிலிருந்தும்,மற்றும் வெளி யிடங்களிலிருந்தும் அநேகம் பேர்
வருவார்கள்.
யாரைப்பற்றியும் எதுவும் கேட்பது அங்கெல்லாம் ஸரியில்லைங்கோ.
நான் கேட்டதும் கிடையாது.என்னையும் யாரும் கேட்டதில்லெங்கோ!
இப்படிதாங்க ஒரு ஸமயம் ஒரு பெரிய மீட்டிங் ஏற்பாடு ஆகி நடந்தது.
அங்கே ஒரு குரூப்பா ஐந்தாரு பேருக்கு வேண்டியது வாங்க ஷாப்பிங்
போயிருந்தோம். கூடவே ஜெயந்தியும் வந்தது. ஸாமானையெல்லாம்
பார்வையிடும்போது ஜெயந்தி, அம்மா இது வாங்கலாமா? ஒரு குட்டி
கம்யுட்டர்.
வீட்டில் இருப்பது போதாதா, நாம் இங்கேயே இருக்கோம், வாணாம்மா,
தமிழில் மெள்ள பதில்.
வந்ததில் இரண்டொருவர் திரும்பிப் பார்த்தனர்.
தெரியாத மாதிரி நகர்ந்தாலும் அவங்க தெரிந்து கொண்டாங்கஎன்பதை
பார்வை உணர்த்திச்சு.
ஜெயந்தியிடம், இது நல்லதா,அது நல்லாருக்கா, என்று ஷாப்பிங் பூரா
அவளைக் கேட்டுக் கேட்டு, இடையே தமிழ்க் கலந்து பேச ஆரம்பித்தனர்.
ஷாப்பிங் முடிந்து போகும்போது தேங்ஸ் எல்லாம் ஜெயந்திக்கு.
அம்மா நம் வீட்லே எல்லாரும் டீ சாப்டு போக கூப்பிடலாமா?
ஸரிஸரி எல்லாரும் வாங்கன்னு கூப்பிட்டேன்.
டீ,ஸ்னாக்ஸின்னு,கொஞ்சம் மிக்சரும், உருளை வருவலும்.
இஞ்சி, ஏலக்காய் தட்டிப்போட்டு வாஸனையா சுடச்சுட டீ.
தமிழில் பேச ஆள் கிடைத்தால் நாமும் மகிழ்த்து போகிறோம்
இல்லிங்களா?
அவங்களுக்கெல்லாம் நல்லா தேடித்தேடி ஸாமான்கள் பொருக்கி வாங்க
இதுவும் நல்லா உதவி செய்யவே நல்லாவே இதைப் பாராட்டினாங்க.
இப்படி இரண்டு ,மூணு வாட்டி அடிக்கடி ஆபீஸ் விஷயமா மீட்டிங்கு
அது இது என்று வரும்போதெல்லாம் ஷாப்பிங் போக ஜெயந்தி
அவங்களுக்கு பழக்கமாயிடுச்சு.
ஒரு முறை ஒருத்தர் அவங்க மகளைக் கூட்டி வந்திருந்தார். அந்தப்
பொண்ணை நாங்க பாத்துக்கறோம்னு சொல்லியிருந்தோம். அதுவும்
ஜெயந்தி வயஸுதாங்க. அதுவும் நல்லா பழகிடுச்சு. அது வந்த பிற்பாடு
ஜெயந்திக்கும் சிங்கப்பூர் போவ ணும்,சுத்தி பாக்கணும் .சொல்ல
ஆரம்பச்சுடுச்சு.
அது தாயில்லாப் பொண்ணுங்க. அதுக்கு மேலே தாங்க அவங்க
குடும்பத்தைப் பத்தி கூட தெறிஞ்சிட்டோம்.அதாங்க ராதா.
ஜெயந்தியும்,ராதாவும், போன்லே பேசுவாங்க பேசுவாங்க அப்படி
பேசுவாங்க. அப்படி சினேகிதிங்க.
ஜெயந்தியும், நானும்,ஒரு நாலைந்து நாட்களுக்காக , ஊர் பாக்க
சிங்கப்பூர் போனோம். அவங்க வீட்லேதான் தங்கணும்னு
சொல்லிட்டாங்க. ராதாவின் பாட்டி இருந்தாங்க.
அவங்க நல்லா பாத்துகிட்டாங்க.
நம்ம ஊர் மனுஷங்க இல்லையா? என்னைப் பத்தி எல்லா விஷயங்களையும்
துருவித் துருவி விசாரிச்சாங்க. எதுக்கு இப்படி விசாரிக்கிறாங்கன்னு
நினைச்சிட்டேன்.
அவங்க மருமக கார் விபத்தில் போய்ட்டாங்க. பத்து வயஸு பேரன்
அம்மா வழி பாட்டியிடம் வளருதுன்னும் சொன்னாங்க.
வழி அனுப்பும் போது நீ இப்படியே இருக்காதே. வயஸானா தொணை
வேணுண்னாங்க.
வாஷிங்டன் திரும்பியாச்சு.
ஜெயந்தி நீ ஏம்மா இப்படி இருக்கே?
பாட்டி சொன்னாங்க. உங்க தாத்தா பாட்டி கிட்டே மொள்ள கேளு.
உங்கம்மாக்கு கல்யாணம் கட்டிவைக்கச் சொல்லு.நீங்கள்லாம்
படிச்சு வேலை அது யிதுன்னு போய்ட்டா அவங்களுக்கு யாரு?
என்னது கண்டபடி பேச்சு. சும்மா இருடி சின்ன பொண்ணா!
அடக்கி பேசு இப்படி கண்டிச்சு வெச்சேன்.
ராதா பாட்டிமேலேயும் கோவம் வந்திச்சு.
அவங்க ஒரு முறை போன் போட்டப்போ அம்மா இதெல்லாம்
மககிட்ட பேசாதிங்கன்னேன்.
அவங்க, உன்கிட்ட பேசரேன். அப்புரமா மகன்கிட்டே பேசறேன்.
ராதா,ஜெயந்திக்கு நீ எம்மருமகளா ஆவதற்கு ரொம்ப இஷ்டம்.
அவங்கங்களுக்கும் நல்லதும்மா.
பார்ப்போம்மா.சென்னை போறேன். அப்போ பேசி சொல்றேன்.
இடையே ஆபீஸ் மீட்டிங். இதெல்லாந்தான் திரும்ப அவங்களைப்
பார்க்கும்படி ஆயிற்று.
ராதா அப்பா வந்திருந்தார்.
ராதா அனுப்பிய ஜெயந்தியின் கிஃப்டுகளை கொடுத்து விட்டு
உங்களிடம் ஒரு ஐந்து நிமிஷம் பேச வேண்டும், என்றார்.
ஜெயந்தியும் கூட இருந்தது.
என்ன சொல்லுங்கள் என்றேன்.
ஒன்றுமில்லை. ராதா, என் அம்மா, இருவரும் உங்களை அளவுக்கு மீறி
நேசிக்கிரார்கள். ஜெயந்தியும் பாசத்துடன் அவர்களுடன்.
விவரித்து சொல்லவேண்டும் என்றில்லை.
உங்கள் மேலுள்ள அனுதாபத்தாலோ ,அல்லது என் மேலுள்ள கரிசனத்தாலோ
நாமிரண்டுபேரும், வாழ்க்கையில் ஒன்று சேரலாமென்று நினைக்கிரார்கள்.
நான் இதுவரை அப்படி தீவிரமாக யோசிக்கவில்லை.
பாருங்கள்,யோசியுங்கள், ஏதாவது விருப்பமிருந்தால் சொல்லுங்கள்.
இதில் காதல், ஏமாற்றம் என்ற இரண்டும் இல்லை. ஒரு வாழ்க்கைத் துணை
ஒருவர்க்கொருவர் புரிந்து கொள்ளலாம்.
ஸிம்பிளாக சொல்லி முடித்து விட்டார். அலட்டல் எதுவுமில்லை.
நாகரீகமாக சொல்லியமாதிரியும் தோன்றியது.
யாரோ ஒருவரின்,அன்பு, ஆதரவு, அக்கரை இவைதான் தேவையானது.
இது நிறைந்த ஒருவர் எப்படியிருப்பார் என்றெல்லாம் யோசித்ததேயில்லை.
எனக்கு அப்பா, அம்மா இருக்கிரார்கள். பார்ப்போம். என்ற பதில் மட்டும்கொடுத்தேன்.
வழக்கம் போன்ற பேச்சுகள். எந்த மாறுதலுமில்லை.
அடிக்கடி பொதுவான பேச்சுகள் தொடர்ந்தன.
இங்கே அப்பாவிடம் அம்மா சொல்லியபோது ,குதியோகுதிகோவம் வந்து, ஒரு பொண்ணை வச்சிட்டுகுடும்ப கௌரவத்தை பறக்கவிட வாஷிங்டன் போனாளா?
ஒரு போதும் இதெல்லாம் வாணாம்.
அப்பா இப்படிதான் இருப்பாரு. உட்டுடு. பார் நீ ஏதாவது சொல்லாம செஞ்சுகோ.
இது அம்மா சொன்னது. ஸரி அவ்வளவுதான்னு கதையெ முடிச்சுட்டேன் நான்.
அது ஸரிம்மா பாம்பேலெ ஷாப்பிங் போக நல்ல இடம் உங்க மருமகளை
கேட்கிறேன். சில விலாஸங்களும் வாங்கிக் கொண்டாள்.
அதுஸரி எனக்கு எந்த பதிலும் சொல்லலிங்க அம்மா. நீங்க வேரெ யாராவது
கேட்டா என்ன பதில் சொல்வீங்க
அவளும் விடலை. கொஞ்சம் யோசித்தேன்.
பொதுவா இம்மாதிரி நேர்ந்து விடும் போது ,பெற்றவர்கள் பெண்ணிற்கு
மறுமணம் என்பதைப்பற்றி யோசிப்பதில்லை. யாராவது சொன்னாலும்
அதை ஒரு பொருட்டாக ஆலோசிப்பதுமில்லை. இதனால் அரேஞஜ் மேரேஜுக்கு வழி
இல்லாது போய்விடுகிரது. இப்போது பரவாயில்லையோ என்னவோ?
தெரிந்தவர்கள், விரும்பி கேட்கும்போது, நம்முடைய கடமைகளும் முடியும்
தருவாயில், நமக்கும் ஆதரவு தேவையென்று மனது சிந்திக்கும் வேளையில்
நம் ஸந்தித்த ஒருவரை நமது விருப்பங்கள் ஒத்துப் போகுமா என்று பேசி
முடிவெடு.
நமக்கென்று ஒரு ஆதரவு பெண்மைக்குத் தேவைதான்.
வலிய போகாது நல்ல முறையில் அறிந்தவர்களாக இருந்தால் நல்லதே!
வருவாய், குழந்தை பாக்கியம், இருவருக்கும் ஏற்கெனவே இருக்கிறது.
எந்த ஒரு விஷயத்திற்கும், ஈகோவும்,போட்டியும் இல்லாத, விட்டுக்கொடுக்கும்,
மனப்பான்மையைப் பற்றி இருவரும் பேசி, வாழ்க்கைத் துணையாக இருவரும்
அமைந்தால் நன்றாக இருக்கும்.
விவாக ரத்தானவர்கள் மணம் புரிவதில்லையா?
அப்பாவின் கோவம் உங்கள் நல் வாழ்க்கையில் சிறிது சிறிதாகப் போய்விடும்.
ஜெயந்தி என்ன சொல்்்்்்்்்்்்
ஜெயந்திதான் இதற்கே முன் நிற்கிறாள்.!
அபிமானமான மாமியாருக்கும் உன் முடிவைச் சொல்.
எல்லாம் நான்சொல்ரதெல்லாம் ஸரியா,தப்பா, தெரியாது.
சொல்லிக் கொடுக்கும் வார்த்தையும்,கட்டிக்கொடுக்கிர சாப்பாடும்
எத்தனை நாள் வரும்?
பெரிம்மா உங்கள் அட்ரஸ்.
ஃபோன்நம்பர் அட்ரஸ் மனப்பாடம் இல்லே. ஈ .மெயில் சுலபம்.கேட்டுக்கோ
அம்மா அவஸரமா எதுவும் இல்லே. காலேஜ் எல்லாம் சேர்த்த பிறகுதான்.
முடிவுகள் எடுத்த பிறகுதான் உங்களுக்கு கட்டாயம் தகவல் வரும்.
வாஷிங்டன் கிட்டேயே முருகன் கோவில், சிவா,விஷ்ணு ஆலயம் எல்லாம்
இருக்கு இல்லையா.
அம்மா அதுக்கு கூட யோசனை பண்ணிட்டிங்க போலபதில்.
நேரம் போனது தெரியலே. ஃப்ளைட் உயரத்தைக் குறைத்து கீழேவர
ஆரம்பிக்கிறது. ஒரே சத்தம். எது பேசினாலும் காது கேட்காது.
லேண்டிங் ஆகிவிட்டது.
கையைப்பிடித்து அழுத்தி கழுத்தைக் கட்டிக் கொண்டு தேங்யூ அம்மா
சொல்ல முடியாமற் சொல்லி பார்க்கலாம் அம்மா,பார்க்கலாம்.
ஜெயந்தி வந்துட்டா பைமா,பை திரும்பித்திரும்பி பார்த்துக் கொண்டே!!!!
திரும்ப வீல்சேர். பிரயாணிகள் இறங்கிய பின்னர்.
ஒரு ஸீரியல் பார்த்த உணர்ச்சியுடன், என் ன பொண்ணு, எனக்குத் தெரிவிக்கராளாம்
மனதில் ஐயோ பாவம் என்றிருந்தது._
என்னம்மா ரொம்ப க்ளோஸ் ஆயிட்டிங்களா?
அவங்களுடனே போய்விடுவீங்கொன்னு பயமா இருந்தது.
சிரித்தபடி மருமகள் கூருகிராள்.
மாஸங்கள் ஓடிக்கொண்டிருந்தது. பஸ்சிநேகம்,ரயில்சினேகம்,
இது ப்ளேன் சிநேகம். இதுவும் அப்படிதானோ!!!!!
இல்லே அப்படி இருக்காது. மெயில் அட்ரஸ் மறந்து போயிருக்குமோ?
மனது வேறெவேறெ முடிவுகளை மாத்தி மாத்தி யோசித்தது.
காத்தாலே நிதானமா மெயிலை ஓபன் பண்ணினால்
உஷாவின் ஜி.மெயில்.பார்ப்பதற்குள் பதினாயிர மனவோட்டங்கள்.
அன்புள்ள பெரியம்மா. வணக்கங்கள். நிறைய யோசனைகள் இருந்ததாலே
மெயில் எதுவும் அனுப்பவில்லை. மன்னிக்கவும்.
சலனமில்லாத மனது நீங்கள் சொன்னதையும் மனதில் வைத்தது.
அப்பா, கூடவே கூடாது என்பதில்
வரும்போது வரை உறுதியாக இருந்தார்.
அம்மா வேண்டாமென்று சொன்னாலும்,இரண்டுபேரும், ஒரு மருத்துவ
செக்கப் செய்து கொள்ளுங்கள் என்றார்.
ஒரு சிறிய பரிசும் கொடுத்தார்.
உங்கள் கருத்துக்களும் மனதில் ஒட்டிக்கொண்டு இருந்தது
ராதாவின் அப்பாவுடன் நானும் சில சமயங்கள் பேசி மன ஸந்தேகங்களை
போக்கிக் கொண்டேன். போனில்தான்.
மாமியாரிடம் ஓரளவு புரியும்படி விஷயங்கள் சொன்னேன்.
செய்யம்மா. ஜெயந்தியை நாங்கள் பாத்துக்குவோம். அழுது கொண்டே
ஸரிம்மாஸரி என்றார். ஒரு கோவிலில் வைத்து எல்லாம் செய்யுங்கள்
என்று எனக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்க அட்வைஸ் கொடுத்தார்.
சலனப்படாத மனதில் ஒரு முடிவு ஏற்க அவர் உதவினார்.
தை மாதம் ஐந்தாம் தேதி முகூர்த்தம். முருகர்கோவிலில் நடக்கிறது.
என் மாமியார் துபாயிலிருந்து வருகிரார்.
அம்மா கொடுத்த சின்னப் பெட்டியில் குட்டியான ஒரு திரு மாங்கல்யமும்,
ஒரு லக்ஷ்மி காசும் இருந்தது. அது அவரின் எண்ணத்தைக் காட்டியது.
ராதாவின் அப்பாவைப் பற்றி சொல்லவே இல்லையே!
பெண்கள் இரண்டு பேரின் பெயரில் அழைப்பு.
என்னுடைய அம்மா உஷா, என்னுடைய அப்பா கீர்த்திவாஸன்
ஆக இருவரும் இணையும் விவாகத்திற்கு எல்லோரும் வந்திருந்து
எங்கள் பெற்றோர்கள் உஷா,கீர்த்திவாஸனையும், எங்கள் யாவரையும்
ஆசீர்வதிக்கும்படி கேட்டுக் கொள்ளும், ஜெயந்திராதா,மோஹன்.
அழைப்புமடல் எங்கள் குழந்தைகளின் விருப்பம்.
பெரியம்மா எல்லாம் ஒழுங்காக போய்க்கொண்டுள்ளது
மேலும் ஆசீர்வாதங்கள் செய்யுங்கள். உங்கள் ஸந்திப்பையும்,
உங்கள் கருத்துக்களையும் மனதிலிருத்தி நமஸ்கரிக்கும் எங்களை
வாழ்த்துங்கள். அடுத்து ஃபேஸ் புக்கில் எங்களின் திருமணப் போட்டோக்களை
உடனே எடுத்துப் போடுகிறேன். தவராமல் பாருங்கள். அன்புடன் உஷா
அம்மா கட்டாயம் உங்களைத் தொடர்ந்து வருவேன்.
நான் மட்டும் என்ன? மனதாலே தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.
வாழ்த்துகளைக் கூறுவோம். வாழ்க வளமுடன்.
போட்டோ மனதிலேயே உருவாகிவிட்டது.நல்லதொரு குடும்பமாக.
நா ளைக்கு முகூர்த்தம். தை பிறந்தால் வழி பிறந்தது.
பின் குறிப்பு. படைப்பு நீண்டுவிட்டது.
பதிவுப் பக்கத்திலேயே பதிவு செய்வதால் பிறித்துப்போட வழி தெறியவில்லை.
மன்னிக்கவும். கதையில் கற்பனைகள்தான் அதிகம்.
Entry filed under: கதைகள்.