எங்கள் ஊர் நினைவுகள்.2
பிப்ரவரி 15, 2013 at 10:51 முப 36 பின்னூட்டங்கள்
மாசி நிலவு மாத்திரமில்லை. ஆடிப்பூரம் உத்ஸவத்திற்கும் எங்கள்
ஊரில் இரண்டு கோயில்களிலும் அதாவது ,ஈச்வரன் , பெருமாள்
கோயில்களிலும், சாயங்கால வேளையிலிருந்து இரவு 10 மணி
வரையில் கூட,சுமங்கலிப் பெண்களும், பெண் குழந்தைகளும் கூடிக்
கும்மியடித்து மகிழும் வழக்கம் இருந்தது.
காரணம் எல்லோரும் வழக்கமறிந்து பழகிப்போன அவ்வூர்ப் பெண்களே.
கொடுக்கல், வாங்கல் என்ற முறையில் எல்லாப் பெண்களும்
அவ்வூரின்,பெண்களாகவும், நாட்டுப் பெண்களாகவும் இருந்ததின் காரணம்
என்று நினைக்கிறேன்.
இப்போதும், ஒரு,கல்யாணம், உபநயனம், வளைகாப்பு, சீமந்தம், போன்ற
வைபவங்களின் முடிவில் ஒரு சுற்றாவது கும்மி பெரியவர்களும்,
சிறுமிகளுமாக சேர்ந்து, கும்மியடிப்பது வழக்கமாக இருக்கிறது.
ஐயோ எனக்குத் தெரியாது, உனக்குத் தெரியாது என்று பிகு பண்ணிக்
கொண்டாவது கை கொட்டும் வழக்கம் இருக்கிறது.
ஒரு பெரியவர், குனிந்து நிமிர்ந்து கை கொட்டினால் தொடரவேண்டிய
கட்டாயம் வந்து விடுகிறது.
பழைய காலத்தில், பெண்கள் புஷ்பவதி ஆனால், 4,5 தினங்கள் வரை
இவ்வழக்கம் ,ஸந்தோஷமாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது
இதன் தொடர்ச்சிதான் எங்களூர் ஆடிப்பூர உற்சவம்.
அதற்கும் வசூல் செய்து,நான்குநாள் அம்மனை ஊஞ்சலிலிருத்தி,
ஊர் முழுவதிலும் வீட்டுக்கு வீடு, மூன்றாவது நாள், புட்டு,சர்க்கரை,
பழம், முதலானவைகளைமேளதாளம் புடை சூழ ,அலங்காரம்
செய்து கொண்டசிறுமிகளும்,பெரியபெண்களுமாக கொடுத்துவிட்டு வருவது
ஒரு அழகான நிகழ்ச்சியாக இருக்கும்.
ஆடிப்பூரத்தன்று, காலையில் எல்லோருக்கும், வளை அடுக்கி, எண்ணெய்,
மஞ்சள் கொடுப்பார்கள்.
இவையெல்லாம் யாராவது நேர்ந்து கொண்டு செய்வார்கள். எத்த வருஷமும்
இவைகளில்லாமலில்லை. இரண்டு கோயில்களிலும் இவை எல்லாம்
தனித்தனியாக நடக்கும்.
கலியாணமாக,பேரன் பிறக்க, என வேண்டுதல்களில் இவை எல்லாம் அடங்கும்.
மத்தியானம், ஊர் பூராவுக்கும் சாப்பாடு.
சாயங்காலம், அம்மன் ஊரைச் சுற்றி வீதி வலம், இப்படியாக . ஆடிப்பூரம்
நடக்கும்.
கும்மி பாட்டுகளில் தமயந்து ஸுயம்வரம் அழகாக இருக்கும்.
காதலியாள் காதிரண்டும், கத்தரிக்கோல் ஒத்திருக்கும்
திலதத்தின்மலர் போன்றாம், தேன் விழியாள் நாசிகையும்,
கண்ணாடி போல இரு கபோலத்தின் காந்தியும்,
கதிரவன்போல் ஒளி வீசும் கட்டழகி மேனி காண்
முத்துச்சிப்பி திறப்பது போல் முறுவலிடும்,கனி வாயும்
முருக்கம்பூ இதழ் போன்றாம் மெல்லியலாள் அதரமும்
இப்படி தமயந்தியை,வர்ணிப்பது சில ஞாபகம் வருகிரது.
பெரியவர்கள் பாய்ந்தடிப்பது என்று வேகவேகமாக எதிரும் புதிருமாக
இடம்மாறி பாய்ந்தடிப்பார்கள். பருமனாக இருப்பவர்கள் கூட வேகவேகமாகப்
பாயும் போது மற்றவர்களுக்கு குஷியோகுஷி
மங்கை நடையில் அன்னத்தைப் பழித்தாள்
நகையால் மின்னலை ஜெயித்தாள்
நீதி மொழியில் வேதத்தை கெலிப்பாள், மதன் கணைக்கே இளைத்தாள்.
அவள் ஸங்கதி இதுதானே!!!!!!!!!!!!! பாட்டில் வர்ணனை இவைகள்.
இந்த இரண்டுவரிகளும் திடீர் ஞாபகம்.
மாசி நிலவைக்கூப்பிட வந்து ஆடிப்பூரத்திற்கு போய் நினைவலைகளை
பாயவிட்டு , ரஸித்து விட்டு இருக்கும் இடம் வந்து விட்டேன்.
நடந்தவைகளாகவே இருந்தாலும், நினைக்க ரஸிக்க முடிகிரது.
வாங்க மாசி நிலவைப் பார்ப்போம்.
மொத்தம் நாலு தெரு. பாடற பசங்க லீடர். மொத்தம் நாலு, அல்லது
மூன்று ஸெட் தேரும்.
பெரியவா யாராவது கூட வந்து கண்காணிப்பும் உண்டு.
நீ பாடு, நான் பாடியாச்சு, இப்படி வாக்கு வாதமும் வந்து விடும்.
அவரவர்களுக்கு வேண்டிய வீட்டில் நெல் நிரைய வரும்.
என்னால்தான் நெல்லு நிரைய வந்தது. போதும் ஒரு வார்த்தை.
நாளைக்கு நான் வல்லேபோ. பிகுவேரு இருக்கும்.
பக்கபக்கத்தில்தானேவீடு. அந்த பாட்டு பாடு. இது பாடு என்பார்கள்.
பிருந்தாவநத்திலே நாமுமவிளையாடுவோம்.
நாமும் விளையாடுவோம், நந்த மகனைக் கூடுவோம்
கூடுவோம் கோபால கிருஷ்ணன் குணங்களைக் கொண்டாடுவோம்.
பாட்டு அழகானது.. குனிந்து நிமிர்ந்து கொட்டுவோம் கும்மியை.
சின்ன பசங்களும் வருமே.!!!!!!!!!!!!
ல்கூல் பாட்டையெல்லாம் எடுத்து வீசவேண்டியதுதான்.
அவ பாவாடை நன்னா இருந்தது. என்னிது நன்னாலே.
பாட்டி மனஸே ஆகலியா. கூடையோடு நெல்லு குடுங்கோ.
இந்த வருஷம் ஸரியா வெளையலே.
நன்னா வெளெஞ்ஜா நிறைய கொடுப்பேன்.
போங்க பாட்டி, மநஸே ஆகலே உங்களுக்கு.
எங்களுக்கு நெலமே இல்லே. நீங்க பாடுங்கோ. நான் காசு தரேன்.
கால் ரூபாயா, அதுக்கு நெல்லா குடுத்தா எவ்ளோ இருக்கும் தெரியுமா_
நாங்க வெலெக்கு விப்போம் வாங்கமாட்டோம். இப்படி வாக்கு வாதம்,
நெல்லு எடுத்துப் போக ஆள் வைத்து நெல்லைச் சேர்த்து ஒரு வீட்டிலே வைத்து
கடைசியிலே நெல் புழுக்குவதற்கு யாராவது வாங்கிப்பார்கள்.
நான் பாடறேன். நீங்களெல்லாம் பின்னாடி பாடிண்டே கும்மி அடிக்கணும்.
கீழே குனிந்து இரண்டு கொட்டு, மாலே நிமிர்நது றெண்டு கொட்டு,
ஒண்ணு,ரெண்டு,
மூணு, நாலு
பாடுங்கோ, தில்லை, நடராஜரடீ, சிவகாமி நேசனடீ
செண்பகப்பூ மாலை கொண்டு சித்சபையில் வராரடீ
மூன்றாம் திரு நாளிலடி மோக்ஷ வாகனங்களடி
முல்லையரும்பு மாலை கொண்டு முன்னும்,பின்னும் வராரடி
எங்கே பாடிண்டே அடிக்கணும்,
நாலாம் திரு நாளிலடி நாக வாகனங்களடி
நாட்டமுள்ள ஜனங்களுக்கு நல்ல சிவகங்கை ஸ்னானமடி
ஐந்தாம் திரு நாளிலடி அழகான ரிஷபமடி
ஐந்து பஞ்ச பேர்கள் கூடி அழகாய் வீதியில் வராரடி.
மாமி, மீதி அஞ்சு நாள் நாளைக்கு. நெல்லு நிறைய குடுங்கோ!!!!
மூணுநாளும் பாடி ஆடி,அவா ளவாள்வாயெக்காட்டி, நெல்லை வித்து
பாகம் பிரிச்சுண்டு, அவா கட்சிக்கு இவ்ளோ காசு வரலே,
எங்களுக்குதாந் இவ்ளோ காசு வந்தது என்று எல்லோரும்,பெருமை
பேசிண்டு, அடுத்த வருஷம் பாட்டி அனுப்ப மாட்டா. இப்பவே வேண்டாம்னு
சொன்னா, அந்தந்த வட்டாரத்தில் மொட்டை மாடியில் நிலாச்சாப்பாடு
சித்ரான்னங்கள்,பொரித்த வெள்ளை வெளேறென்ற,அரிசி அப்பளாம்,பொரிவடாம்
வாஸனையான கூழ் வடாம், கட்டை வடாம், வத்தல் எல்லாவற்றுடனும் ஒரு
பிடி பிடிக்க, சொன்னா கேக்கலே. மாசிநிலா, பனியிலே சுத்திண்டு வந்துட்டு
ஒரே இருமல். கஷாயம் சித்தரத்தே போட்டு வச்சிருக்கேன். குடிக்க வேறு
பாடு படுத்துங்கோ. எல்லா அம்மாமாரும் ஸந்தோஷமாக சலித்துக் கொள்வதைப்
பார்க்க முடிகிறது, மனக்கண்ணால் மட்டும்.
இப்போ என்ன ஆகிரது. ரொம்ப வருஷங்கள் நடந்து கொண்டு இருந்தது.
யாரும் நிலமே வைத்துக் கொள்வதில்லை. நெல் யார் கொடுப்பார்கள்?
என் பெண்ணும் என் அம்மாவுடனிருந்து இந்த வழக்கங்களில் பங்கு
கொண்டிருக்கிறாள். என் அனுபவம். படிக்கும் உங்களுக்கும் ஏதோ
பழைய அனுபவப் பரிமாரல்.. போதும். இனி திகட்டிவிடும். ஸரியா?
Entry filed under: சில நினைவுகள்.
36 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
இளமதி | 11:15 முப இல் பிப்ரவரி 15, 2013
அம்மா..அம்மம்மா… இத்தனை விஷயம் இருந்திருக்கா…:)
அடடா ஒரு திரைப்படம் பார்த்த மாதிரியெல்லோ இருக்கு.
என்ன அழகா வர்னனையா சொல்லிண்டே போறீங்க. எனக்கு ஆச்சர்யம் தாங்கலை. மொட்டை மாடி, நிலாச்சோறு அப்பப்பா… கற்பனை பண்ணிப்பார்க்கவே எவ்வளவு ஆனந்தமா இருக்கு…
அம்மனுக்கு ஆடிப்பூரம் விஷேசம்ன்னு தெரியும். ஆனாலும் இப்போதான் இவ்வளவு விரிவா உங்கமூல்யமா அறிஞ்சுக்கிறேன் மா. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நானும் பாடிக்கொண்டே கும்மி அடிக்க முயற்சிக்கிறேன். .. பாருங்கம்மா இங்கை வாறவா என்னை கிண்டல் பண்ண வேணாமின்னு சொல்லுங்கோ…:)))
நல்ல பகிர்வு. மிக்க நன்றிமா. இன்னும் இப்படி உங்க நினைவுகள்ள இருந்து தொடர்ந்து தாங்கோ. படிக்க அறிய ஆவலா இருக்கேன்…:)
2.
chollukireen | 10:43 முப இல் பிப்ரவரி 17, 2013
ஓஹோ !!இப்படி கை கொட்டி இருப்பாங்க என்று நீ அநுமாநம் செய்த போது உன்னுடயவர் வந்து ரஸிக்கிறாரா? ரஸியுங்கள் மாப்பிள்ளை. நல்ல பெண் எப்படி ரஸித்து எழுதுகிறாள் என்று நான் பெருமைப் பட்டுக் கொள்கிறேன். இளமதி. இப்படியெல்லாம்
எந்த வயதிலோ நடந்தவற்றை, எண்ணி, எழுதுவதைத் தவிர இந்த வயதில் எனக்கு வேறொன்றும் செய்ய இயலாது. இம்மாதிரி எண்ணங்கள்தான் அடிக்கடி மனதில் தோன்றுகிறது.
அன் அபிமானத்திற்கு நன்றி பெண்ணே!!!!
3.
VAI. GOPALAKRISHNAN | 1:32 பிப இல் பிப்ரவரி 15, 2013
நமஸ்காரம் மாமி,
//சாயங்கால வேளையிலிருந்து இரவு 10 மணி
வரையில் கூட,சுமங்கலிப் பெண்களும், பெண் குழந்தைகளும் கூடிக்கும்மியடித்து மகிழும் வழக்கம் இருந்தது.//
ஆஹா, கோயில்களின் நடைபெறும் அவற்றையெல்லாம் பார்க்கவே எவ்ளோ அழகாக இருக்கும். !!!!!
இப்போ யாராவது ஒரு பதிவர் ஒரு மொக்கைப்ப்பதிவு போடுவதும், அவருக்கு ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து பின்னூட்டக்கருத்துக்கள் கூறுவதுமே, கும்மியடித்தல் என ஆகிப்போச்சு மாமி.
உங்களுக்கு இது தெரியுமோ தெரியாதோன்னு தான் இங்கே இதை பதிவு செய்திருக்கேனாக்கும்.
>>>>>
4.
chollukireen | 10:49 முப இல் பிப்ரவரி 17, 2013
கும்மியடித்தல் என்பதற்கு இப்படி ஒரு வகை அர்த்தம் இருக்கிறதா?நிஜமா தெரியாது. ரொம்ப நல்லதாப் போச்சு.. ஆசிகளும், நன்றியுடனும்
5.
VAI. GOPALAKRISHNAN | 1:42 பிப இல் பிப்ரவரி 15, 2013
//இப்போதும், ஒரு,கல்யாணம், உபநயனம், வளைகாப்பு, சீமந்தம், போன்ற வைபவங்களின் முடிவில் ஒரு சுற்றாவது கும்மி பெரியவர்களும், சிறுமிகளுமாக சேர்ந்து, கும்மியடிப்பது வழக்கமாக இருக்கிறது.
ஐயோ எனக்குத் தெரியாது, உனக்குத் தெரியாது என்று பிகு பண்ணிக்கொண்டாவது கை கொட்டும் வழக்கம் இருக்கிறது.
ஒரு பெரியவர், குனிந்து நிமிர்ந்து கை கொட்டினால் தொடரவேண்டிய கட்டாயம் வந்து விடுகிறது.//
ஆமாம் மாமி, எனக்கு பிக்ஷாண்டார் கோயில் என்ற கிராம அக்ரஹாரத்தில் நாலு நாட்கள் இருவேளை ஒளபாசணத்துடன், கல்யாணம் நடந்தது. அந்த ஊரே கூடி தினமும் கும்மியடித்து கொண்டாடியது.
என் மாமியார் இதிலெல்லாம் ரொம்பவும் எக்ஸ்பர்ட் வேறு.
மாமனாரோ மிகப்பெரிய பஜனை பாகவதர். விடியவிடிய நாலு நாட்களும் கும்மி, பஜனை அது இதுன்னு அமர்க்களப்படுத்தி விட்டார்கள்.
கிராமத்துக்கார எல்லோரும் மிகவும் ஒற்றுமையாகவும் இருப்பார்கள். வெள்ளந்தியான மனஸு அவாளுக்கு, அங்கு போனால் அந்த ஊரில் உள்ள எல்லாப்பெரியவர்களுமே என்னை “வாங்கோ மாப்பிள்ளை” என்று தான் அழைப்பார்கள். அவ்வளவு பிரியம் எல்லோருக்குமே என் மீது.
>>>>>>
6.
chollukireen | 11:07 முப இல் பிப்ரவரி 17, 2013
கிராமங்களிலிருந்தால் இதெல்லாம் ஒரு இயற்கையான தகுதியாகக் கருதப்படுகிறது.. எல்லோரும் அக்கரையுடன் தொடர்ந்து கற்றுக் கொள்கிறார்கள்.. பாருங்கள். உங்கள் கல்யாண நாட்களையும் பார்த்து அநுபவித்தது போன்ற ஒரு
மனத்தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. காவிரிக்கரை கிராமங்கள் எல்லாவற்றிற்கும் பெயர் போனது என்று
கேள்விப் பட்டிருக்கிறேன்..பிக்ஷாண்டார் கோவில் பெண் வாலாம்பாள் அவர்களுக்கும் எல்லா வழக்கங்களும் தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, அன்புடன்
வாலாம்பாளும்
7.
VAI. GOPALAKRISHNAN | 1:50 பிப இல் பிப்ரவரி 15, 2013
//……. …….. …….. ………. இதன் தொடர்ச்சிதான் எங்களூர் ஆடிப்பூர உற்சவம். அதற்கும் வசூல் செய்து,நான்குநாள் அம்மனை ஊஞ்சலிலிருத்தி, ஊர் முழுவதிலும் வீட்டுக்கு வீடு, மூன்றாவது நாள், புட்டு, சர்க்கரை, பழம், முதலானவைகளைமேளதாளம் புடை சூழ ,அலங்காரம்
செய்து கொண்டசிறுமிகளும்,பெரியபெண்களுமாக கொடுத்துவிட்டு வருவது ஒரு அழகான நிகழ்ச்சியாக இருக்கும். ஆடிப்பூரத்தன்று, காலையில் எல்லோருக்கும், வளை அடுக்கி, எண்ணெய், மஞ்சள் கொடுப்பார்கள்.//
எவ்ளோ அழகாச்சொல்லுகிறீர்கள். படிக்கவே சந்தோஷமா இருக்கு, புட்டு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. உடனே சாப்பிடணும் போல ஆசையா இருக்கு. இப்போவெல்லாம் கப்புசிப்புன்னு இருக்கா எல்லோரும். யாரை கூப்பிட்டு புட்டு தருவதெல்லாம் இல்லை. ரொம்ப ரகசியமாக வீட்டோடு இதைக் கொண்டாடுகிறார்கள்,
அதுவும் நல்லது தானோ எனத்தோன்றுகிறது. காலம் மாறிப்போச்சே …. காலம் கெட்டுப்போச்சே !
>>>>>
8.
chollukireen | 11:15 முப இல் பிப்ரவரி 17, 2013
நடந்ததை எழுதினேன். போளி எல்லாம் கிடைக்கும் மாதிரி புட்டு விலைக்கு கிடைப்பதில்லை.காலம் மாத்திரம் மாறிப் போகவில்லை நாமும்தான் மாறிக்கொண்டு இருக்கிறோம்… உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்
9.
VAI. GOPALAKRISHNAN | 1:57 பிப இல் பிப்ரவரி 15, 2013
//”பிருந்தாவநத்திலே நாமுமவிளையாடுவோம். நாமும் விளையாடுவோம், நந்த மகனைக் கூடுவோம் கூடுவோம் கோபால கிருஷ்ணன் குணங்களைக் கொண்டாடுவோம்” பாட்டு அழகானது. குனிந்து நிமிர்ந்து கொட்டுவோம் கும்மியை.//
மிகவும் அழகான அனுபவப்பகிர்வு. ஆடிப்பூரத்தில் நடக்கும் இவ்வளவு விஷயங்களை எவ்வளவு அழகாச் சொல்லி இருக்கிறீங்க.
மனமார்ந்த பாராட்டுக்கள். மனம் பூராவும் சந்தோஷமாக உள்ளது, உங்கள் பதிவினைப்படிக்கும் போது.
பிரியமுள்ள,
கோபாலகிருஷ்ணன்
10.
chollukireen | 11:23 முப இல் பிப்ரவரி 17, 2013
எனக்குக் கூட எழுதும் போது ஸந்தோஷமாக இருந்தது. இதெல்லாம் பாட்டிகால ஸமாசாரம்னு தோன்றும். போஸ்ட் செய்யலாமா வேண்டாமா என்று
யோசித்தேன்.. கண்ணை மூடிண்டு போஸ்ட் செய்து விட்டேன்.. உடனே பாராட்டு எழுதியிருந்தீர்கள்.
பாராட்டுக்கு மகிழாதவர்கள் உண்டா? நன்றியும், மகிழ்ச்சியும்., அன்புடன்
11.
angelin | 6:16 பிப இல் பிப்ரவரி 15, 2013
ஆடிப்பூர நினைவலைகள் அருமை அம்மா !!!
கும்மி கோலாட்டம் எல்லாம் அக்காலத்தில் பெரியோர் ஒரு காரண காரியத்தோடு நமக்கு சொல்லி வளர்த்தவை .
நளினம் சிருங்காரம் எல்லாம் அவாறான நடந்னகளில் இருக்கும் ,,
பாடல்கள் எல்லாம் காதில் ஒலிக்க சிறுமியர் நடனமாடுவது போலவே இருக்குகண்ணெதிரே ..உங்க வர்ணனை :)..
12.
chollukireen | 11:28 முப இல் பிப்ரவரி 17, 2013
அஞ்சு கும்மி கோலாட்டமெல்லாம், பெண்கள் பள்ளிக்கூடத்திலும், சொல்லிக் கொடுப்பார்கள். பாட்டு, தையல் எல்லாம் இல்லாத பெண்கள் பள்ளிக்கூடமே கிடையாது. அந்த நாளைய பொழுது போக்குகளும்
இப்படியாக இருல்தது.. உன் ரஸனைக்கு மிகவும் நன்றி
அன்புடன்
13.
Kumar | 1:59 முப இல் பிப்ரவரி 16, 2013
Akka,
Valavanur neril parthamarithi irunthathu.
vegu veu jore
Kumar
14.
chollukireen | 11:33 முப இல் பிப்ரவரி 17, 2013
நம்மஊர்காரர்கள் நேரில் ரஸித்ததற்கு நன்றி.. வாங்க, அடிக்கடி வந்து மேலான பின்னூட்டங்களைக் கொடுங்கள்.. உங்கள் வரவுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
15.
ranjani135 | 1:27 பிப இல் பிப்ரவரி 16, 2013
உங்களோட கூட வளவனூர் வந்து ஆடிபூர உற்சவத்தில், கும்மி அடித்து, நிலாச் சோறு சாப்பிட்டாயிற்று!
எங்கள் வீட்டுக் கல்யாணங்களில் பாலிகை கொட்டும்போது நான்தான் இந்தக் கும்மியை முன்னால் நின்று நடத்துவேன்.
நீங்கள் எழுதியிருக்கும் கும்மி பாட்டுகள் எத்தனை அழகாக இருக்கின்றன!
தொடரட்டும் உங்கள் ஊர் நினைவுகள்!
16.
chitrasundar5 | 4:49 பிப இல் பிப்ரவரி 16, 2013
ரஞ்சனி,
வாங்கவாங்க,மாட்டினிங்களா?எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டேன்,காணவில்லை.இங்கே பார்த்ததும் ஒரு மகிழ்ச்சி,அவ்வளவுதான்.
17.
ranjani135 | 4:52 பிப இல் பிப்ரவரி 16, 2013
இப்போதான் ஒரு ஒரு பதிவாகப் படித்து கருத்துரை போட்டுக் கொண்டு இருக்கேன்.
மெயில் வந்ததா?
18.
chollukireen | 5:27 முப இல் பிப்ரவரி 18, 2013
நான் கூட அப்படிதான். பிருந்தாவனத்திலே பாடிண்டு குனிந்,நிமிர்ந்து கொடடினால் எல்லோரும் ஃபாலோ பண்ணுவார்கள். பெரிய அடுக்கில் ஜலம் வைத்துக் கரைக்கும் பாலிகைகளாகப் போய்விட்டதே. ஆச்சு, கட்டுசாதத்தையும் வாங்கிண்டு,, மரியாதை தாம்பூலத்தையும் வாங்கிண்டு கிளம்ப வேண்டியதுதான்.. வளைகாப்பு சீமந்தத்டிற்கு மசக்கை கும்மி பாட்டு. மாதம் பூர்ணமாகவே, பாலகன் பிறக்கவே, தந்தை,தசரதர்,போலோயோடீ,தாயார்
கௌசலை சாயலோடீ,செந்தாமரைக் கண்ணனோடீ,
சீரான வைகுண்ட வாஸனடீ, என்று முடியும்.மசக்கை,
வளகாப்பு,சீமந்தம்,பூச்சூட்டல் என்ற வர்ணனையோடு ஆரம்ப மாகும். சிலச் சில எப்போதாவது மனதில் தோன்றுகிறது. உங்கள் பின்னூட்டம், ஞாபகப் படுத்துகிறது. நன்றி. அன்புடன்
19.
ranjani135 | 5:34 முப இல் பிப்ரவரி 18, 2013
இந்தப் பாடல்களையெல்லாம் நினைவு வரும்போது எழுதி வைத்துக் கொள்ளுங்கள், ப்ளீஸ்! அரிய பொக்கிஷங்கள் இவை!
20.
chitrasundar5 | 4:44 பிப இல் பிப்ரவரி 16, 2013
மாசிநிலவு,ஆடிப்பூரம்,கும்மி பாட்டுகள்,அப்போதைய பேச்சுவழக்குகள் இவற்றையெல்லாம் மணக்கண்ணால் நீங்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பதை எங்களையும் ரசிக்க வச்சிட்டீங்க நன்றிமா.
மேலும் நேரமிருக்கும்போது திருவண்ணாமலை நிகழ்ச்சிகளையும் எழுதுங்க. எந்த தெருவில் இருந்திங்க(சன்னதி தெரு?பெரிய தெரு?),எந்தப் பள்ளியில் படிச்சிங்க என எல்லாவற்றையும்.நான் அந்தப் பக்கம் போனால் அப்படியே உங்களையும் நினைத்துக்கொள்வேன்.அன்புடன் சித்ரா.
21.
chollukireen | 5:35 முப இல் பிப்ரவரி 18, 2013
மிகவும் நன்றி .படிக்ரவங்களுக்கு எழுத வேண்டியதுதான். திருவண்ணாமலை நினைவுகள் எழுத வேண்டும்.. சின்ன வயது. அப்போது.. அதிகமில்லாவிட்டாலும் உனக்காகவாவது
எழுதுகிறேன். அன்புடன்
22.
chitrasundar5 | 5:26 முப இல் பிப்ரவரி 19, 2013
பிறந்தது திருவண்னாமலையில்,வளர்ந்தது வளவனூரிலா!நான் மாற்றி நினைத்துவிட்டேன். நேரமிருக்கும்போது எழுதினால் போதும்.உங்க நாளில் அந்த ஊர் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு ஆசை.
“அதிகமில்லாவிட்டாலும் உனக்காகவாவது எழுதுகிறேன்”___இதைப் படித்ததும் காலு தரையில நிக்கல.அன்புடன் சித்ரா.
23.
chollukireen | 6:52 முப இல் பிப்ரவரி 19, 2013
அன்புள்ள சித்ரா பிறந்து, நான்கு க்ளாஸ் வரை படித்து பிறகுதான் வளவனூர் வந்தது. சில நினைவுகள் இருக்கிறது. எழுதுகிறேன். சில நினைவுகளில் முதலில் அதுவும் எழுதியிருக்கிறேன். இன்னும் சில நினைவுகளும் எழுதலாமே? உனக்கெல்லாம் சொல்லாததெது? அன்புடன்
24.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் | 9:31 முப இல் பிப்ரவரி 17, 2013
வணக்கம்
அம்மா
அழகான வர்ணனை நல்ல சொல்லாதிக்கம் கற்பனை வளம்
தமிழர் கும்மிக் கலை அழகான நேர் வெண்பாக்கள் உங்கள் படைப்புக்கு மகுடம் சூட்டுதம்மா வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
25.
chollukireen | 5:44 முப இல் பிப்ரவரி 18, 2013
அன்புள்ள ரூபன் ஆசிகள். உங்கள் பாராட்டுகள் ஸந்தோஷத்தைக் கொடுக்கிறது. கிராமத்து வாழ்க்கை
அப்போது அனுபவிக்க முடிந்தது..இப்போது சௌகரியங்களுக்கு அடிமை ஆகிவிட்டோம்..
நினைத்துப் பார்த்து மகிழும் நினைவுகளாக மாறிப்போனது.நன்றி, அன்புடன்
26.
Mahi | 2:30 முப இல் பிப்ரவரி 19, 2013
பதிவு வெளியான உடனேயே படித்தாச்சும்மா..பின்னூட்டம்தான் கொஞ்சம் தாமதமாகிருச்சு.
கும்மிப்பாடல்கள் எல்லாம் அருமை. எங்கூர்ப்பக்கம் பாட்டுக்கள் வேறுமாதிரி இருக்கும். மிகவும் மங்கலான நினைவுகள். ஆறேழு வயசிருக்கையில என் அக்காக்கள் எல்லாம் கும்மியடிக்கப் போகையில் நானும் கூடப்போய் தூங்கிவழிஞ்சுகிட்டே உட்கார்ந்திருப்பேன். 😉
பெரிய வாசல்களில் கும்மியடிக்க பெரிய வாசலில் சதுரமாய் சுண்ணாம்பும் காவியும் சேர்த்து பெட்டி வரைஞ்சிருப்பாங்க, கூடவே வாசலோரமாய் நாய்களுக்கு உணவிட என்றும் ஒரு சிறுபெட்டி இருக்கும். சின்னக் கிண்ணங்களில் சாதம் எடுத்துகிட்டு, போய் பெட்டியில் உள்ளே வைச்சு, சுத்தி சுத்தி கும்மியடிச்சு, பாடல்கள் பாடி…பிறகு சாப்பிட்டு, நாய்க்குட்டிங்களுக்கும் சாதம் போட்டு, சிரித்துப் பேசி வருவாங்க எல்லாரும். ஹூம்..இப்பல்லாம் இவை மறைந்தே போயின எனலாம்.
உங்க நினைவுகள் எல்லாம் பழைய நினைவுகளை கிளறிவிட்டுருச்சும்மா..பெரீஈஈய்ய பின்னூட்டமாப் போட்டுட்டேன்! 🙂
27.
chollukireen | 6:31 முப இல் பிப்ரவரி 19, 2013
அன்புள்ள மஹி நானும் உன்னுடைய பதிவுகளை பார்த்தேன். ஏன் உடனே பதில் உனக்கு நான் எழுதவில்லை என்ற எண்ணம் நேற்றிரவு இரண்டு மூன்று முறை தோன்றியது. லாப் டாப்பில் எதையோ பார்க்கிறேன். எங்கேயோ போகிறேன். வந்த காரியம் மறந்து விடுகிறது. இன்று உனக்கு எழுத வேண்டும் என்று நினைத்தேன். நீயே முந்திக்கொண்டு விட்டாய். நன்றி பெண்ணே நன்றி. பாரு நீயும், கும்மி, கொட்டுபவர்களுடன் சென்ற அனுபவம் இருக்கிறது. நல்ல நிகழ்ச்சி. நினைவு வந்தது இல்லையா?
காமாட்சி அம்மாவின் மகிமை. அன்புடன்
28.
Mahi | 2:32 முப இல் பிப்ரவரி 19, 2013
தெற்குப் பாத்த திண்ணையிலே, நல்ல
திண்டு தலகாணி மெத்தையிலே..
வடக்குப் பாத்த திண்ணையிலே, நல்ல
வண்ணத் தலகாணி மெத்தையிலே..
—- இப்படியெல்லாம் பாட்டு வரும். சிலவரிகள் மட்டுமே நினைவிருக்கு.
வெள்ளைக் குதிரைக்குச் சீனி கட்டி, வெங்கலச் சீமைக்குப் போகையிலே..
கருப்புக் குதிரைக்குச் சீனி கட்டி…. அவ்வ்வ்வ்வ்…மறந்துபோச்சு!! 🙂
னன்னே, னன்னே, னானனன்னே..பாடி அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க! :))))
29.
chollukireen | 6:45 முப இல் பிப்ரவரி 19, 2013
இதெல்லாமும் பாட்டுகள் அழகாக இருக்கு. கிராமியப் பாடல் டைப். கத்துக்கலாம் போல இருக்கு சுலபமாக ஞாபகம் வரும் டைப். நான் சொன்ன பாட்டுகள் நள,தமயந்தி,ராமர்,கிருஷ்ணர், என்று வழிவழியாக வந்த கதைப் பாடல்கள். பார்,பொழுது போக்கும், ஜன ரஞ்சகமும், அப்போதும் இருந்திருக்கிறது.மேற்கு பாத்த திண்ணையிலே மேன்மையான மெத்தையிலே,கிழக்குப் பாத்த திண்ணையிலே, நல்லஇலவம் பஞ்சு மெத்தையிலே சேர்த்துப் பாடலாம் இல்லையா? உங்கள் ஊர் வழக்கம், கேட்டு புதுசா சில தெரிந்து கொண்டேன். நன்றி மஹி. அன்புடன்
30.
gardenerat60 | 8:24 முப இல் பிப்ரவரி 22, 2013
எளிமையா, எல்லோரும் ஒற்றுமையா, மகிழ்ந்த நாட்கள்!.
இப்போது யாருக்கு எந்த சேனல் வேண்டுமோ அதை பார்த்துக் கொண்டு, தனிமையில் வாடுகிறார்கள்!.
31.
chollukireen | 10:14 முப இல் பிப்ரவரி 23, 2013
ஆமாம் வாஸ்தவம். அந்த வயஸில் அது ஸரியாக இருந்தது. இப்போது சூழ் நிலையில்
அதே வயதுக்காரர்களிடம் இந்த நிகழ்ச்சியை சொன்னால் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அவர்களுடைய கம்யுட்டர், ஸெல்போன் நாலட்ஜ் முன்காலத்தில் உண்டா என்று கேட்பார்கள். அந்தந்த காலத்தில் என்ன என்ன, என்ன புதுமை உண்டோ அதுதான்
அவரவர்களுக்காக இருக்கிறது. நன்றி அன்புடன்
32.
chollukireen | 12:35 பிப இல் நவம்பர் 17, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
எங்கள் ஊர் நினைவுகளின் இரண்டாம் பாகமிது. இதையும்தான் நீங்கள் படிக்கட்டுமே என்றுமீள்பதிவு செய்திருக்கிறேன். படியுங்கள். அன்புடன்
33.
ஸ்ரீராம் | 1:07 பிப இல் நவம்பர் 17, 2022
இந்த மாதிரி கொண்டாட்டங்களை நான் கண்டதில்லை. உங்கள் வர்ணனையில் படித்து ரசித்தேன்.
34.
chollukireen | 12:28 பிப இல் நவம்பர் 18, 2022
எனக்கே திரும்பப் பார்க்க வேண்டுமென்றாலும் கிடைக்காது.அவ்வளவு பின்னோக்கிய கால நினைவுகள்.ரஸித்ததற்கு மிகவும் நன்றி. அன்புடன்
35.
Geetha Sambasivam | 1:29 முப இல் நவம்பர் 18, 2022
அருமையான நினைவுகள் அம்மா. பாடல்களைக் கூட மறக்காமல் எழுதி இருப்பது மிக ஆச்சரியமாகவே உள்ளது. சின்ன வயது நினைவுகள் மனதிலிருந்து அழியவே அழியாது இல்லையா? இம்மாதிரியான சம்பிரதாயங்கள் எல்லாம் இப்போவும் இருக்குமா என்ன? இப்போத்தான் கிராமங்களே இல்லையே! அதோடு சுவாமி புறப்பாடெல்லாமும் பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டி இருக்கு. அந்தக் காலம் பொற்காலம் தான். நினைக்க நினைக்க ஆனந்தம்.
36.
chollukireen | 12:36 பிப இல் நவம்பர் 18, 2022
இப்போது விழாக்கள் கொண்டாட ஊ ராருக்கு ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை. தமயந்தி ஸுயமவரம் புத்தகமே அந்த நாளில் உண்டு. நீங்கள் சொல்வதுபோல பொற்காலம்தான் அந்தக்காலம்.அருமையான பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்