உருளை கொத்தமல்லி பரோடா
ஏப்ரல் 11, 2013 at 12:26 பிப 38 பின்னூட்டங்கள்
மைக்ரோவேவில் உருளைக்கிழங்கைப் பதமாக வேகவைத்து.
ருசியான பூரணம் தயாரித்து இந்த ரொட்டியை நாம்
செய்யலாம்.
நிறைய பச்சைக் கொத்தமல்லி சேர்த்துச் செய்தால்
மிகவும் ருசியாக இருக்கிறது.
வேண்டியவைகள்
மூன்று நிதானமான சைஸ்—-உருளைக் கிழங்கு
பச்சைமிளகாய்–2
ருசிக்கு–உப்பு
சீரகப்பொடி,ஆம்சூர்–வகைக்கு அரை டீஸ்பூன்
கோதுமை மாவு–2கப்
வேண்டிய அளவு—எண்ணெய்
நெய்யும் கலந்து உபயோகிக்கலாம்.
ஆய்ந்த இலையாக கொத்தமல்லித் தழை–நிறையவே
செய்முறை—உருளைக்கிழங்கை தண்ணீரில் சுத்தம் செய்து
ஒரு மெல்லிய பாலிதீன் பையில் போட்டுச் சுருட்டி
7நிமிஷம் மைக்ரோவேவில் ஹை பவரில்வைத்து
எடுக்கவும். அல்லது
சுத்த பருத்தித் துணிப் பையை ஈரமாக்கிப் பிழிந்து, அதனுள்
உருளையை வைத்தும் 7 நிமிஷங்கள் ஹை பவரில்
வேகவைத்தும் எடுக்கலாம்.
அல்லது உங்களின் வழக்கம் எதுவோ அதைச் செய்யவும்.
வெந்த உருளைக் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு ஒரு
பாத்திரத்தில் போட்டுக் கிழங்கினை நன்றாக மாவாக
மசிக்கவும்.
கோதுமை மாவில் ஒன்றரை கப் எடுத்து,அதனுடன்
ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் கலந்து, உப்பு சேர்த்து
திட்டமாகத் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து மூடி வைக்கவும்
மாவு ஊறட்டும். மீதி மாவு தோய்த்து இட.
பச்சை மிளகாயை நன்றாக வகிர்ந்து அதனுள்ளிருக்கும்
விதைகளை அகற்றி மெல்லியதாகக் கீறி மிகவும்
பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
திட்டமாக உப்பு ,நறுக்கிய மிளகாய், சொல்லியுள்ள
பொடிகள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்,
மசித்த உருளைக்கிழங்கு இவை யாவையும் ஒன்று
சேர்த்துப் பிசையவும்.
கொத்தமல்லிப் பூரணம் ரெடி
இப்போது மாவைப் பிரித்து, 7, 8 உருண்டைகளாக ஸமமாகப்
பிரிப்போம் .
அதே போல் கிழங்குக் கலவையையும், 7,8 பாகமாகப்
பிரித்து ,உருட்டிக் கொள்வோம்.
அப்பளாம் தயாரிக்கும் விதத்தில் , உருட்டிய மாவைச் சின்ன
வட்டங்களாக இட்டு துளி எண்ணெயை அதன் மேல்
தடவவும்.
கிழங்குக் கலவையை அதன் மேல் தட்டையாகச் செய்து வைத்து,
வட்டத்தின் விளிம்பினால் பூரணம் தெரியாமல் இழுத்து மூடவும்.
மேல் மாவில் பிரட்டி திரும்பவும் வட்டமான,மெல்லியதான
அப்பளாம் போல இடவும். அடிக்கடி மாவு தோய்த்து இடலாம்.
இடும் போதே ஒவ்வொன்றாக எடுத்து , திட்டமான சூட்டில்
தோசைக் கல்லைக் காயவைத்து, இரண்டு பக்கமும் ,திருப்பிப்
போட்டு, எண்ணெயோ,நெய்யோ அதன்மேல் தடவி நன்றாகச்
செய்து எடுக்கவும்.
தயிரோ,ஊறுகாயோ தொட்டுக் கொண்டு கூட சாப்பிட்டு விடலாம்.
ஆறினாலும், மெதுவாக ருசியாக இருக்கும்.
ரொட்டி செய்வது போலதான். இட்டதைக் காயும் கல்லில் போடவும்.
லேசாக எண்ணெயைத் தடவி திருப்பிப் போடவும்.
சிறிது அழுத்தம் கொடுத்தால், உப்பிக்கொண்டு மேலெழும்பும்.
எண்ணெயைத் தடவவும். தீ மிதமாக இருக்கட்டும்.
திருப்பிப் போட்டு பதமாக எடுக்கவும்.
சிறியவர்களுக்குக் கொடுக்கும் போது, மிளகாய்க்குப் பதிலாக
சிறிது பொடி சேர்த்துச் செய்யவும்.
மிளகாய் நறுக்கும்போது கொத்தமல்லியா,மிளகாயா என்று
தோன்றும்படி மிளகாயைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
வாஸனையாக இருக்கும்.
Entry filed under: ரொட்டி வகைகள்.
38 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 12:40 பிப இல் ஏப்ரல் 11, 2013
மிகவும் ருசியான பதிவு. படத்தைப்பார்த்ததும் போளியாக்கும் என்று நினைத்து நான் ஏமாந்து விட்டேன்.
>>>>>
2.
chollukireen | 11:30 முப இல் ஏப்ரல் 12, 2013
உ கிழங்குகாரப் போளி என்று தலைப்பு கொடுத்திருக்கலாம். நன்றி. அன்புடன்
3.
VAI. GOPALAKRISHNAN | 12:43 பிப இல் ஏப்ரல் 11, 2013
//மிளகாய் நறுக்கும்போது கொத்தமல்லியா,மிளகாயா என்று தோன்றும்படி மிளகாயைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். வாஸனையாக இருக்கும்.//
எவ்வளவு அழகாகப் பக்குவம் சொல்லுகிறீர்கள். கேட்கவே சந்தோஷமாக உள்ளது. கொத்தமல்லித்தொகையல் போல ருசியோ ருசி உங்கள் கைப்பக்குவமும். பாராட்டுக்கள்.
4.
chollukireen | 11:35 முப இல் ஏப்ரல் 12, 2013
நீங்கள் சொல்வதுபோல துவையலின் மணமும் இருக்கும். எல்லாம் சேர்ந்துள்ளது அல்லவா? செய்து,செய்து
சொல்வதற்கு பக்குவம், சொல்லுகிறேனல்லவா?அதனால் இருக்கும். அன்புடன்
5.
VAI. GOPALAKRISHNAN | 12:46 பிப இல் ஏப்ரல் 11, 2013
//ரொட்டி செய்வது போலதான். இட்டதைக் காயும் கல்லில் போடவும். லேசாக எண்ணெயைத் தடவி திருப்பிப் போடவும். சிறிது அழுத்தம் கொடுத்தால், உப்பிக்கொண்டு மேலெழும்பும். எண்ணெயைத் தடவவும். தீ மிதமாக இருக்கட்டும். திருப்பிப் போட்டு பதமாக எடுக்கவும்.//
**சிறிது அழுத்தம் கொடுத்தால் உப்பிக்கொண்டு வரும்.**
அருமையான வர்ணனை. வாழ்த்துகள்.
நமஸ்காரங்கள்.
6.
chollukireen | 12:19 பிப இல் ஏப்ரல் 12, 2013
உங்களின் பாராட்டுகளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நன்றி. அன்பும் ஆசிகளும்.+
7.
ranjani135 | 1:09 பிப இல் ஏப்ரல் 11, 2013
உருளைக்கிழங்கு வேக வைக்க நீங்கள் கொடுத்திருக்கும் குறிப்புகள் அருமை. நீங்கள் சொல்லியிருப்பதுபோல உ.கிழங்கு மையாக பிசைந்தால் தான் சுலபமாக இட வரும்.
அருமையான, புகைப்படம் + சுவையான -சமையல் குறிப்பு!
புகைப்படம் ரொம்ப சூப்பர்!
8.
chollukireen | 12:28 பிப இல் ஏப்ரல் 12, 2013
சாயங்காலம் பேத்திக்கு செய்தப்போ இதையும் போடலாமே என்று தோன்றியது. படம் அழகாயிருக்கு ,செய்ததும்,ருசியாகவே இருக்கு. மனதுக்கும் த்ருப்தியாக பின்னூட்டங்கள் அமைந்தது. அதுவும் விசேஷம் இல்லையா/.? ரஞ்ஜனியிடம் சூப்பர் வாங்கியதற்கு மிகவும் நன்றி. அன்புடன்
9.
திண்டுக்கல் தனபாலன் | 3:21 பிப இல் ஏப்ரல் 11, 2013
சுவையான பகிர்வு + படங்கள் அருமை…
குறிப்பிற்கு நன்றி…
10.
chollukireen | 12:29 பிப இல் ஏப்ரல் 12, 2013
பரவாயில்லையா போட்டோ எடுத்தது?மிகவும் நன்றி .அன்புடன்
11.
venkat | 12:58 முப இல் ஏப்ரல் 12, 2013
ஆலூ பராத்தா – கொத்தமல்லி சேர்த்து நன்றாக இருக்கும்…..
சுவையான குறிப்பிற்கு நன்றிம்மா…
12.
chollukireen | 12:31 பிப இல் ஏப்ரல் 12, 2013
சுவையாக பின்னூட்டம். மிகவும் ஸந்தோஷம். அன்புடன்
13.
மகிஅருண் | 1:17 முப இல் ஏப்ரல் 12, 2013
ஆலூ பராத்தா செய்திருக்கேன், அதில் கொத்துமல்லி பேருக்கு சேர்ப்பது வழக்கம். அடுத்தமுறை உங்க ரெசிப்பிய செய்து பார்க்கிறேன். படம் அருமை, பார்க்கவே அப்படியே எடுத்து சாப்பிடலாம் போலுள்ளது. 😛
14.
chollukireen | 11:55 முப இல் ஏப்ரல் 14, 2013
மஹி என் ரெஸிபி நீ போட்டால் எனக்கு அதிகமாக அதைப் பார்க்க பார்வையாளர்கள் வருகிறார்கள்.
ரொம்ப ஸந்தோஷமாக இருக்கு. நன்றி.அன்புடன்
15.
chitrasundar5 | 5:20 முப இல் ஏப்ரல் 12, 2013
காமாக்ஷிமா,
பரோட்டாவுடன்,ப்ளேட்டுகளுகளும் போட்டிபோடுகின்றன.படங்கள் அழகா வந்திருக்கு. மைக்ரோஅவனை நீங்க பயன்படுத்தியிருப்பது வித்தியாசமா இருக்கு.செய்து பார்க்கிறேன்.நன்றிமா.
மகி சொன்ன மாதிரியேதான்,கொத்துமல்லியைக் கொஞ்சமாக கிள்ளிப்போட்டு,எல்லாவற்றையும் லேஸாக வதக்கி ஸ்டஃப் பண்ணுவேன்.
16.
chollukireen | 12:33 பிப இல் ஏப்ரல் 12, 2013
மாறுதலாய் சில பொருள்கள். உன் பாராட்டும் அருமையாக உள்ளது. பரோட்டா சாப்பிட எல்லோரும் வாருங்கள். அன்புடன்
17.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் | 12:26 பிப இல் ஏப்ரல் 12, 2013
வணக்கம்
அம்மா
அழகான செய்முறை விளக்கம் செய்துதான் பார்ப்போம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அனபுடன்-
-ரூபன்-
18.
chollukireen | 10:45 முப இல் ஏப்ரல் 13, 2013
செய்து பார்த்தீர்களானால் ஸந்தோஷமே. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. அன்புடன்
19.
இளமதி | 9:48 பிப இல் ஏப்ரல் 12, 2013
அம்மா… எனக்கும் பரோட்டா மீதம் இருக்குதாம்மா.
நான் வரத்தாமதமாகிவிட்டேனே அதுதான் கேட்டேன்… :).
அருமையாக இருக்கிறது உங்கள் செய்முறையும் படமும்.
கொத்தமல்லிக்கீரை நானிருக்கும் இடத்தில் கிடைப்பது அருமை.கிடைக்கும்போது சேர்த்துச் செய்து பார்க்கின்றேன்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மா!
20.
chollukireen | 10:25 முப இல் ஏப்ரல் 13, 2013
வாழ்த்துக்கு நன்றி இளமதி. இந்தப் பரோட்டா செய்வது ஸுலபம். நீ எப்போது வந்தாலும் சுடச்சுட கிடைக்கும். இது மட்டும் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா விசாரமில்லை.
உனக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிமையான புத்தாண்டு வாழ்த்துகள்.
அன்புடன்.
21.
கோமதி அரசு | 5:28 முப இல் ஏப்ரல் 15, 2013
அருமையான உருளை கொத்துமல்லி பரோட்டா.
என் மகள் உருளை மட்டும் வைத்து செய்வாள். இனி கொத்துமல்லியுடன் செய்து பார்த்து மகளுக்கும் சொல்கிறேன்.
நன்றி அக்கா.
22.
chollukireen | 8:04 முப இல் ஏப்ரல் 16, 2013
மிகவும் மெல்லியதாக இடமுடிகிரது. காரணம் உருளைக் கிழங்கு மைக்ரோ அவனில் வேக வைப்பதால்
ஈரப்பதம் ஸரியான அளவில் இருக்கிரது. செய்து பாருங்கள். பிரகு சொல்லுங்கள். அன்புடன்
23.
adhi venkat | 2:36 பிப இல் ஏப்ரல் 22, 2013
அருமையான ஆலு பராத்தா! சுவையானது.
24.
chollukireen | 2:47 பிப இல் ஏப்ரல் 22, 2013
சுவையானது. உன் விருப்பம் பார்த்து மகிழ்ச்சி. மிகவும் நன்றி. அன்புடன்
25.
chollukireen | 12:16 பிப இல் ஏப்ரல் 2, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இந்தப் பரோட்டா வகையையும் செய்து பாருங்களேன். அன்புடன்
26.
ஸ்ரீராம். | 1:24 முப இல் ஏப்ரல் 3, 2021
மிகவும் சுவையான பகிர்வு. உருளைக்கிழங்கு இல்லாமல் ருசியே இல்லை!
27.
chollukireen | 11:11 முப இல் ஏப்ரல் 3, 2021
உங்களுக்குப் பிடித்தமானதா உருளைக் கிழங்கு. தெரிந்த வகைதானாயிது. ஸந்தோஷம். மீள் பதிவில் எனக்கு ஒரு மகிழ்வு. நன்றி. அன்புடன்
28.
நெல்லைத்தமிழன் | 4:09 முப இல் ஏப்ரல் 3, 2021
கிச்சன் என் கையில் இன்று வந்துவிட்டது. இன்றோ நாளையோ இதனைச் செய்கிறேன். புதிதாகச் செய்த ஆவக்காய் ஊறுகாய், மாங்காய் ஊறுகாய் இரண்டும் இருக்கு. தயிருக்கும் குறைவில்லை. ரொம்ப கஷ்டமான வேலை இல்லை என்று தோன்றுகிறது.
செய்து, மத்தவங்க என்ன சொல்றாங்கன்னுட்டு எழுதறேன்.
29.
chollukireen | 11:19 முப இல் ஏப்ரல் 3, 2021
உங்கள் ஆவக்காய்,மாங்காய் ஊறுகாய்களை வாட்ஸப்பில் பார்த்தேன். ஆவக்காய் ஊறுவதற்குக் கொஞ்சம் நேரம் வேண்டுமே. பரோட்டாவைச் செய்து பார்த்து சொல்லுங்கள். மத்தவங்கள், தங்களுடயதும்.ரிஸல்ட் என்ன பார்க்கலாம். நன்றி. அன்புடன்
30.
நெல்லைத்தமிழன் | 4:10 முப இல் ஏப்ரல் 3, 2021
கொத்தமல்லிக்குப் பதில் புதினா போட்டால் பசங்க ரொம்பவே லைக் பண்ணுவாங்க. ஆனால் புதினா ஸ்டாக் இல்லை.
31.
chollukireen | 11:25 முப இல் ஏப்ரல் 3, 2021
புதினா பரோட்டாவும் இன்னொரு பதிவு இருக்கிரது. பசங்கள் ருசியறிந்து செய்பவர்கள் அம்மா மட்டும் இல்லை. அப்பாவும் தான் ஸரியா? மிக்க ஸந்தோஷம். அன்புடன்
32.
Geetha Sambasivam | 8:52 முப இல் ஏப்ரல் 3, 2021
கொத்துமல்லியோ புதினாவோ எதைப் போட்டாலும் ருசியும் வாசனையும் தான். சாவகாசமாகச் செய்யணும்.ஆலு பராத்தா நிறையப் பண்ணியாச்சு. கொத்துமல்லி போட்டும் செய்து பார்க்கிறேன்.
33.
chollukireen | 11:31 முப இல் ஏப்ரல் 3, 2021
அதானே. புதுப்புது ருசிகளில் வேறு எவ்வளவோ செய்து பார்த்துப் பழக நம்முடைய ஆஸ்தான இடமில்லையா இது. வரவேற்கிறேன் உங்கள் மறுமொழியை. அன்புடன்
34.
நெல்லைத்தமிழன் | 1:22 பிப இல் ஏப்ரல் 3, 2021
செய்துவிட்டேன். நல்லா இருக்குன்னு எல்லோரும் சொன்னாங்க. நன்றி (நான் சாப்பிடலை). பச்சை மிளகாய் கொஞ்சம் குறைத்தால்கூட நல்லா இருக்கும்.
35.
chollukireen | 1:29 பிப இல் ஏப்ரல் 3, 2021
உங்களுடைய இந்த மாதிரி பதில்கள் பாலைவனத்தில் ஒயாசிஸ் ஐ பார்ப்பதுபோல இருக்கிறது நான் இப்படி இரண்டு ஒருவருடன் பின்னூட்டங்கள் மூலம் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் பதில் மிகவும் ருசியாக இருக்கிறது எல்லோருக்கும் என் அன்பு அன்புடன்
36.
chollukireen | 1:31 பிப இல் ஏப்ரல் 3, 2021
மிளகாயின் காரம் வேண்டிய அளவு கூட்டியும் குறைக்கவும் அவரவர்கள் ருசியை பொருத்தது ஊறுகாயுடன் சாப்பிட குறைக்கத்தான் வேண்டும் நன்றி அன்புடன்
37.
Revathi Narasimhan | 3:31 பிப இல் ஏப்ரல் 3, 2021
அன்பு காமாட்சிமா,
நேற்றுதான் மேத்தி ரோட்டி
செய்தேன்.
இந்த உ.கிழங்கு, கொத்தமல்லி கலவை
நன்றாக வே இருக்கும்.
செய்து பார்க்கிறேன் மா.
பார்க்கவே அருமையாக இருக்கு.
நன்றி மிக நன்றி மா.
38.
chollukireen | 11:03 முப இல் ஏப்ரல் 4, 2021
நேற்றே உங்களின் பின்னூட்டம் பார்த்தேன். ஸ்டஃப் செய்யும் பொருளைக்கொண்டு ருசி மாறுகிறது இல்லையா? நன்றி நான்தான் சொல்லவேண்டும். நிறைய பதில்கள் உங்களின் வரவு . ஆரோக்யமாக இருக்க வேண்டும் நீங்கள். அன்புடன்