அன்னையர் தினத் தொடர்வு.2
மே 29, 2013 at 12:19 பிப 22 பின்னூட்டங்கள்
அது ஒருகாலம். குழந்தை வைத்தியம் ஸரிவர இல்லாத
காலமென்றும் சொல்லலாம். மருந்துகள் கண்டு பிடித்த காலம்
அது என்றும் சொல்லலாம்.
எங்கு நோக்கினாலும் ஒரு வயதுக் குழந்தைகள் வயிற்றைப்
பெரியதாக முன்நோக்கித் தள்ளிக் கொண்டு, சரிந்த தோள்களும்,
மெலிந்த கால்களுமாக உட்கார்ந்து கொண்டிருக்குமே தவிர சுரு
சுருப்பாக இராது. கண்களில் ஒரு ஏக்கம். அழுகை என ஈரல்
,குலைக்கட்டிக்கு ஆளாகி இம்மாதிரிக் குழந்தைகள்தான் பார்க்கக்
கிடைக்கும்.
கட்டி விழுந்த குழந்தை., மாதமொரு முறை ஜம்மி வெங்கட
ரமணய்யாவின் அருகிலிருக்கும் பெரிய ஊர்களுக்கு அவரின் விஜயம்
எல்லா மாதங்களிலும் ஒரே குறிப்பிட்ட தேதியில் அவர் வருகைக்காக
அம்மாவுடன் பயணிக்கும்.
நல்ல வார்த்தை டாக்டர் சொல்ல வேண்டுமே என்று வேண்டும்
தாயின் உள்ளங்கள்.
பத்துரூபாய் மருந்து என்ரால் பாப்பையா மருந்து. வியாதி கடினம்.
ஐந்து ரூபாய் மருந்து என்ரால் ஜம்மியோ,ஜிம்மியோ? வியாதி ஆரம்பம்.
அப்படிப் பெயர்போன மருந்துகள். மிகவும்,கஷ்டம்.
எத்தனை தேரும்,தேராது என்பது.
ஒரு முப்பது வருஷ காலங்கள் இம்மாதிரிதான் ஓடிக்கொண்டிருந்தது.
நான் நிறைய இம்மாதிரி குழந்தைகள் பார்த்திருக்கிறேன்.
ஒரு ஐம்பது வருஷமாக இம்மாதிரி அவல நிலை ஓய்ந்தது என
நினைக்கிறேன்.
அம்மாவின் முதல் ஆண் குழந்தை இம்மாதிரி இழப்பு. அடுத்து ஒரு
ஆண் குழந்தை.
என் அப்பா என்ன வாக இருந்தார் என்று சொல்லவில்லை.
அவர் ஒரு தமிழ்ப் பண்டிதர். என்ன படிப்பு படித்து வித்வானானார்
என்றெல்லாம் அப்பொழுது கேட்கவும் தெரியாது. அம்மாவிற்கும்
தெரியாது. கடலூரில் தமிழ் வித்தகர் பலராம ஐயர் என்பவரிடம்
படித்ததாகச் சொல்லி இருக்கிரார்.
பலராமய்யர், பரிதிமார்க் கலைஞர் திரு சூரியநாராயண சாஸ்திரி அவர்களிடம்
பாடம் கேட்டவர் என்றும் சொல்லியுள்ளார்.
நல்ல புலமை அப்பாவிற்கு ஆங்கிலத்திலும் உண்டு
அம்மாவிற்கு அவரைப் பற்றி, ஊரை சுற்றிவா, இம்மாதிரி, இங்லீஷ்
தமிழ் படித்தவர், சட்டை போட்டுக்கொண்டு வேலைக்குப் போகிரவர்கள்
யாராவது இந்த ஊரில் உண்டா என்றுதான் சிபாரிசு செய்தனராம்.
ஷர்ட்டை , சட்டை,சொக்காய் என்றுதான் சொல்வார்களாம்.
மாயூரத்தில் நேஷநல் ஹைஸ்கூலில் பத்து வருஷ அனுபவம்.
மாயூரம்,சுதேசமித்திரன் என வேலை செய்து விட்டுத் டேனிஷ் மிஷனில்
, திருவண்ணாமலையில் வேலை செய்யும் போதுதான் என் அம்மா
அப்பாவிற்கு வாழ்க்கைப் பட்டது. இருபத்திரண்டு வருஷ வாஸம்.
ஸன்னதித் தெரு, திருவண்ணாமலையில் திட்டு வாசல் அருகே வீடு.
ஸ்வாமி தரிசனம், எப்பொழுதும் உறவினர்களின் விஜயம், தேர்
,திருவிழா, வருஷம் முழுதும் கஷ்டம் உணர நேரமில்லாத வீட்டு
வேலைகள், குழந்தைகள் பிறப்பு, வளர்ப்பு, என ரொடீன் வேலைகள்.
பெண்களிடம் நிதி நிர்வாகம் எதுவும் கிடையாது. குடி தண்ணீருக்கு அருணாஜலேசுவரர் ஆலய பிள்ளையார் கோயிலுக்குக் கீழே இருக்கும்
கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டும். வேலைகள்
ஆதலால் அவர்கள் கண்டது சமையல்,ஸாமான்களும், காய் கறிகளும் தான்.
அப்பா வேலை செய்தது
மெஷினரி நடத்தும் ஸ்கூல் ஆதலால் ஏழைப் பசங்கள் படிக்கும் ஒரு
ஹைல்கூலில் வருமானமும் லிமிட்தான்.
ஏழைப்பசங்களுக்கு, வாரச் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்து அம்மாதிரி
பசங்கள் இரண்டு பேர் வீட்டிலேயும் தங்கிப் படித்தனராம்.
படிப்பில் பின் தங்கி இருக்கும் பிள்ளைகளுக்கு இலவசமாக படிப்பும்
வீட்டில் சொல்லிக் கொடுத்து சேமிப்பு என்ற வார்த்தைக்கே அர்த்தமில்லாத
வாழ்க்கை வீட்டிலே.
எங்கள் அக்கா நல்ல அழகான சூதுவாது அறியாத ஒரு பெண்ணாக
வளர்ந்து வந்தாளாம்.
மாற்றாந்தாய் என்ற பேச்சுக்கே இடமில்லாது என் அம்மாவுடன்
அவ்வளவு அன்பான வளர்ப்பு.
கூடவே என் அண்ணாவும்
அப்பாவுக்குத் தெரிந்த அத்தனையும் பிள்ளைக்கு சொல்லிக்கொடுத்து
வயதுக்கு மீறிய பொது அறிவு. நன்னூல் தலைகீழ்ப் பாடம்.
சாரதா சட்டம் என்ற பாலிய விவாகத்தை தடுக்கும் சட்டம் அமுலாகப் போகிற
வருஷம். அக்காவுக்கு பன்னிரண்டு வயது.
ஊரில்,உலகத்தில் இந்தியாவில் இருக்கும் அத்தனை கன்னிப் பெண்களுக்கும்
அவஸர,அவஸரமாக வரன் பார்த்து சட்டம் முடியுமுன்னர் கலியாணம்.
பவுன் பன்னிரண்டு ரூபாய்க்கு விற்றது பதினான்கு ரூபாயாக உயர்ந்து
விட்டதாம். அப்பவும் ஸொந்தத்தில்தான் வரன் பார்த்துக் கொடுக்கும் வழக்கம்.
அக்காவிற்கு கல்யாணம் செய்யணுமே?இதெல்லாம் 1930 வருஷத்தில்.
பாட்டி அந்த பொருப்பை ஏற்றுக் கொண்டாள்.
நிறைய கொண்டு ,கொடுத்து ,கலியாணங்கள் செய்து அனுபவப்
பட்டவளாயிற்றே!!
எத்தனை பிசிறலான உறவுகள் உள்ளவளாயிற்றே!!!!!!!!!!!
தாயில்லாது செல்லமாக வளர்த்த குழந்தை.
யோசித்துப் பார்த்து முடிவி்ல் பாட்டியின் மருமகளின் தம்பியை
மனதில் நினைத்து அவர்களிடம் பேசுவதாக முடிவானது.
எதையோ சொல்லி எங்கோ போகிறேனென்று நினைக்கிறீர்களா?கோர்வையாக
நிகழ்வுகள் கேட்டதை மனதில்க் கொண்டால், கட்,ஷார்ட்
எல்லாம் வேறு எங்கோ ஓடிப்போய்விடுகிறது.
மருமகளின் அத்தை தான் அவர்கள் வீட்டு பாஸ்.
அவர் பெங்களூர் போகிரார். அவரை ஸந்தித்து பேச வேண்டும்.
வளவநூரிலிருந்து பெங்களூர்போக விழுப்புறம் காட்பாடி வழி.
நடுவில் திருவண்ணாமலை. அவர்கள் பிள்ளையின் வழி உறவாயிற்றே.
திருவண்ணாமலையில் கரி இஞ்ஜின் தண்ணீர் குடிக்கும்.
அந்த நாளைய பாஷை!!!!!!!!!!
அரை மணி ரயில் நிற்கும். பாட்டி, அப்பா, காபியுடனும், டிபனுடனும்
பெண்ணை கொடுப்பதற்கு ஆரம்ப பிள்ளையார் சுழி போடக் ரயில்வே
ஸ்டேஷனுக்குப் போகிரார்கள்.
சாரதா சட்டத்திற்கு பயந்து உத்தரவு வாங்கப் போகிரார்கள்.
நீங்கள் யாவரும் வாருங்கள். ஸ்டேஷனுக்குப் போகலாம். தொடர்வோம்
நான் அப்போது பிறக்கவே இல்லையாம். அதனாலென்ன?
Entry filed under: அன்னையர் தினம்.
22 பின்னூட்டங்கள் Add your own
வை. கோபாலகிருஷ்ணன் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 12:28 பிப இல் மே 29, 2013
//சாரதா சட்டம் என்ற பாலிய விவாகத்தை தடுக்கும் சட்டம் அமுலாகப் போகிற வருஷம்.
அக்காவுக்கு பன்னிரண்டு வயது.
ஊரில்,உலகத்தில் இந்தியாவில் இருக்கும் அத்தனை கன்னிப் பெண்களுக்கும் அவஸர, அவஸரமாக வரன் பார்த்து சட்டம் முடியுமுன்னர் கலியாணம்.
இதெல்லாம் 1930 வருஷத்தில்.//
நானும் இதை என் அப்பா, அம்மா, மாமியார், மாமனார் மூலம் கேள்விப்பட்டுள்ளேன்.
>>>>>
2.
வை. கோபாலகிருஷ்ணன் | 12:45 பிப இல் மே 29, 2013
என் மாமியாருக்கும், அவர்களின் தங்கைக்கும் இதுபோலத்தான் அவசர அவசரமாக ஒரே மேடையில் ஒரே நாளில், மிகச்சிறிய வயதில் விவாஹம் நடந்ததாம்.
என் மாமியார் + மாமனார் இப்போது இல்லை.
மாமியாரின் தங்கை [என் சின்ன மாமியார்] மட்டும் மதுரையில் இன்னும் இருக்கிறார்கள்.
3.
chollukireen | 12:31 பிப இல் மே 29, 2013
எவ்வளவு க்விக்கான பதில். ஆச்சரியமாக இருக்கு. பரவாயில்லையா பதிவு?
4.
chollukireen | 12:32 பிப இல் மே 29, 2013
நன்றி சொல்ல வேண்டாமா?
5.
chollukireen | 12:34 பிப இல் மே 29, 2013
மிகவும் நன்றி. அன்புடனும். ஆசிகளுடனும். அன்புடன்
6.
வை. கோபாலகிருஷ்ணன் | 12:39 பிப இல் மே 29, 2013
என் கம்ப்யூட்டரே சரியாக நெட் கிடைக்காமல் படுத்தி வருகிறது. ஏதோ இப்போது தான் கிடைத்தது. உங்கள் பதிவு கண்ணில் பட்டது. மெயிலில் தகவல் பார்த்தேன். உடனே கருத்துச்சொன்னேன். உங்கள் ஆசீர்வாதங்களுக்கு மிக்க நன்றி, மாமி.
7.
வை. கோபாலகிருஷ்ணன் | 12:34 பிப இல் மே 29, 2013
//கட்டி விழுந்த குழந்தை, மாதமொரு முறை ஜம்மி வெங்கட ரமணய்யாவின் அருகிலிருக்கும் பெரிய ஊர்களுக்கு அவரின் விஜயம்.
எல்லா மாதங்களிலும் ஒரே குறிப்பிட்ட தேதியில் அவர் வருகைக்காக அம்மாவுடன் பயணிக்கும்.
நல்ல வார்த்தை டாக்டர் சொல்ல வேண்டுமே என்று வேண்டும் தாயின் உள்ளங்கள்.பத்துரூபாய் மருந்து என்றால் பாப்பையா மருந்து. வியாதி கடினம்.
ஐந்து ரூபாய் மருந்து என்றால் ஜம்மியோ,ஜிம்மியோ?
வியாதி ஆரம்பம். அப்படிப் பெயர்போன மருந்துகள். மிகவும்,கஷ்டம். எத்தனை தேறும்,தேறாது என்பது.//
1970 வரைகூட இந்த ’ஜிம்மி லிவர்க்யூர்’ வைத்தியம் இருந்தது. என் வீட்டருகே இதே வைத்தியசாலையில் வேலை பார்த்த ஒருவர் இருந்தார். அவர் பெயரே ’லிவர்க்யூர் மணி ஐயர்’ என்று சொல்லுவார்கள். அவருக்கு ஏகப்பட்ட குழந்தைகள். 5 பெண்கள் + 3 பிள்ளைகள் வரை எனக்கே இன்னும் ஞாபகம் இருக்கிறது.
>>>>>
8.
வை. கோபாலகிருஷ்ணன் | 12:35 பிப இல் மே 29, 2013
அனுபவங்கள் அத்தனையும் அழகாக எழுதி வருகிறீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கோ.
நமஸ்காரங்களுடன் கோபாலகிருஷ்ணன்
9.
gardenerat60 | 2:37 பிப இல் மே 29, 2013
கரி எஞ்சினும், திருவண்ணாமலையும் ஒரு ஆவலை தூண்டுகின்றன.
ஒரு எண்ணம் மனசிலே. இந்த வாழ்க்கையில் , ஒரு பேட்டர்ன். ஒரு சுற்றுபுற சூயல் மாசு படாமல், லோகலில் விளைந்த பயிர் வகைகள், காய் கனிகை உபயோக படுத்தினார்கள். பெட்ரோல் பாசி இர்ரை, குடி தண்ணீர் எதேஷ்ட்டம். பாட்டில் என்பது கேள்விப்படிறாத ஒன்று.தாமிர பாத்திரங்கள், ஓலை போட்டு வென்னீர், மண் அடுப்பு. கொட்டிலில் பசு. சாணி மெழுகிய வீடுகள்.
இப்போது, இந்த வாழ்க்கை முறை எவ்வளவு உயர்ந்தது என்று, பெரிய மகாநாடு போட்டு கொண்டாடுகிறார்கள்.;-)
Life coming back to full circle.
10.
chollukireen | 6:18 முப இல் ஜூன் 1, 2013
நீண்ட தூரப் பிரயாணங்களின்போது,இன்ஜினுக்கு ஜலம் ரொப்ப என்று ஜங்ஷன்களில் அரைமணிக்கு மேலாகவே ரயில்கள் நிற்கும். அதே நேரத்தில் அதே
ப்ளாட்பாரத்திலுள்ள சாப்பாடு விடுதியில் இலைபோட்டு சாப்பாடு ரெடியாக இருக்கும் பிரயாணிகள். அவஸரஅவஸரமாக . சாப்பிட்டுவிட்டு
இருக்கைக்கு திரும்ப வருவார்கள். யாராவது வொருவர் பார்த்துக் கொள்வார்கள். இம்மாதிரி ஸாமல்கோட்டில் சாப்பிட்டது ஞாபகம் வருகிரது.
ஹோட்டல்கள் கூட சுத்தமாக இருந்தது. தண்ணீர் பஞ்சமில்லை. எளிய முறையில்,சுத்தமும்,ஸுகாதாரமும், இருந்தது.
இயற்கைமுறை விளைந்த எல்லாம் கிடைத்தது. உங்கள் வரவிற்கு மிகவும் நன்றி. பகிர்வுக்கும் நன்றி..
மனது நிம்மதி ஆயிற்று. அன்புடன்
11.
gardenerat60 | 5:18 பிப இல் ஜூன் 1, 2013
ஆம் உண்மை தான். அப்போது சாப்பாடு விற்றவர்கள், கலப்படம் செய்யாமல் கொள்ளை லாபம் பற்றி நினைக்காமல் வியாபாரம் செய்தார்கள். எங்கெயோ, வழியில், காலம் மாறி, வியாபாரம் துரோக சிந்தனம் ஆகி விட்டது. பெஜவாடா அய்யார் ரூமில் கிடைத்த சாப்பாடு பற்றி எத்தனை முறை கேட்டிருக்கிறேன்.
12.
chollukireen | 10:20 முப இல் ஜூன் 12, 2013
சென்னைto ஹௌரா மீல்ஸ் ஸ்டேஷனெல்லாம் அத்துபடியாக அந்தகாலத்தில் தெரியும். ஸ்லீப்பிங் கோச் வசதியெல்லாம் கூட கிடையாது. எல்லா காலத்திலும், கிடைத்தவைகள் நன்றாக இருந்தது. விஜயவாடா சாப்பாடு நன்றாக யிருக்கும் என்று எல்லோரும் புகழ்வார்கள். உங்கள் பதில் நிதரிசனம். அன்புடன்
13.
gardenerat60 | 2:40 பிப இல் மே 29, 2013
sorry.. there is a mistake..
”பெட்ரோல் தூசு இல்லை” என்று இருக்கவேண்டும்.
14.
chitrasundar5 | 3:14 முப இல் மே 30, 2013
காமாக்ஷிமா,
மாப்பிள்ளையை பற்றிய யதார்த்தமான விமர்சனம் சூப்பர்.இன்னமும்கூட சட்டை என்று சொல்வது வழக்கத்தில் உள்ளது.
“ஸன்னதித் தெரு,திருவண்ணாமலையில் திட்டு வாசல் அருகே வீடு”___ சன்னதித் தெரு அத்துபடி.ஆனால் திட்டு வாசல்?___போகும்போது விசாரித்துப் பார்த்து முடிந்தால் படம் எடுத்து வருகிறேன்மா.
“அவர்கள் கண்டது சமையல்,ஸாமான்களும்,காய் கறிகளும் தான்”____ யதார்த்தமான உண்மை. இவ்வளவையும் தாங்கும் அம்மாக்கள் பல குழந்தைகளின் இழப்பையும் தாங்குவதுதான் கொடுமை.
ஸ்டேஷனில் என்ன பேச்சுவார்த்தை,எப்படி நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலில் இருக்கிறேன். அன்புடன் சித்ரா.
15.
ranjani135 | 6:21 முப இல் மே 30, 2013
அந்தக் காலத்தை அப்படியே கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள்.
ஜம்மி பில்டிங்க்ஸ் என்றே ஒரு இடம் உண்டு அந்த நாளைய மதராசில். எங்கள் வீட்டிலும் சில குழந்தைகளுக்கு அங்கு வைத்தியம் பார்த்தாக அம்மா சொல்லுவாள்.
அந்தக் காலக் கல்யாணம், கணவனைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் கழுத்தை நீட்டும் பெண்களின் நிலை என்று பலவற்றையும் உங்கள் எழுத்தில் படிக்கும்போது பல விஷயங்கள் புரிகின்றன.
ஸ்டேஷனில் நடந்தது என்ன? விறுவிறுப்பாக எழுதி ஒரு சஸ்பென்ஸ் கொடுத்திருக்கிறீர்கள்!
காத்திருக்கிறோம் தொடர்ந்து படிக்க.
16.
chollukireen | 6:37 முப இல் ஜூன் 1, 2013
உங்களையெல்லாம் ஸ்டேஷனுக்குக் கூப்பிட்டேனே!!!
திட்டு வாசல் என்பது கோபுர வாசல் பக்கத்திலிருக்கும்
ஸாதாரண வாசல். அது வழி தரிசனத்தின் போது ஒருநாள் மட்டும் சுவாமி வெளியில் வருவார் என்று சொல்லியதாக ஞாபகம். அந்தத் தெருவும் ஸன்னதித் தெருவுதான். பூராவும் அழகழகான துணிக்கடைகள் ஆக்ரமித்துள்ளன. ஒரு வருஷத்திற்கு முன் நெடுகிலும்
இறங்கிப் பார்த்தேன். 4 எட்டு எதிரில் பதினாறுகால் மண்டபம். அன்புடன்
17.
chollukireen | 6:41 முப இல் ஜூன் 1, 2013
வாவா ரஞ்ஜனி. பணம்காசு பற்றாக்குறை பெற்றவர்களுக்கு இருந்தாலும், கிடைத்த மாப்பிள்ளைதான் அந்த நாட்களில். உன் வரவு மகிழ்ச்சியைத் தருகிரது. அன்புடன்
18.
chollukireen | 11:09 முப இல் ஜனவரி 25, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
ஈரல் குலைக்கட்டி என்ற நோய். அந்தநாளைய குழந்தைகளின் நிலை. அம்மாவின் நிலை. தொடர்வு. பகிர்ந்திருக்கிறேன். அன்னையர் தினத் தொடர்வு இது. பாருங்கள். அன்புடன்
19.
Geetha Sambasivam | 11:32 முப இல் ஜனவரி 25, 2021
இந்த ஈரல், குலைக்கட்டி நோய் என் நாத்தனாரின் பெண்ணுக்கு இருந்ததாகவும் ஜம்மியில் லிவர்க்யூர் தான் கொடுத்ததாகவும் மாமியார்/.மாமனார் சொல்லுவார்கள். என் சித்தி பிள்ளைகளில் கூட யாரோ ஒரு பிள்ளைக்கு இருந்தது. சென்னையில் ஜம்மி பில்டிங்க் என்றே பேருந்து நிலையம் இருந்ததாகவும் சொல்லுவார்கள். அருமையாய் எழுதி இருக்கிறீர்கள். வளவனூர் பற்றி நீங்க பிறந்த பின்னர் உள்ள நிலைமையையும் பகிர்வீர்கள் என நம்புகிறேன். அக்கா கல்யாணம் என்ன ஆச்சு எனத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் காத்திருக்கேன்.
20.
chollukireen | 12:06 பிப இல் ஜனவரி 25, 2021
இந்தக் கதைகளையெல்லாம் கேட்டுக் கேட்டும் நேரிலே பாரத்தும்இருப்பதால் நானும் முதலில் சற்று அஞ்சியே குழந்தைகளை சோதனைக்கெல்லாம் உட்படுத்தி இருக்கிறேன். அறுபது வருஷங்களுக்கு முன்னர் இது கட்டுபபாட்டில் வந்திருந்தும், பரவலாக நோய் பார்க்க முடிந்தது. ஜம்மி பில்டிங்கே சென்னையில் இருந்தது. மாதமுழுவதும் டாக்டரைப் பார்க்க முடியும். நான் பிறப்பதற்கு முன்னரே அக்காவின் விவாகம். இருந்தாலும் நான் எழுதும்போது எல்லோரையும் கூப்பிடுகிரேன். நிறைய வருகிறது இந்தத் தொடர்.மறுமொழிக்கு மிகவும் நன்றி. அன்புடன்
21.
நெல்லைத்தமிழன் | 4:11 பிப இல் ஜனவரி 25, 2021
அட..இந்த டேனிஷ் மிஷன் ஸ்கூலில்தான் ஓரிரு வருடங்கள் என் தம்பி படித்தான் (79-80ல்). காக்கி டிரவுசர், பச்சை சட்டை யூனிஃபார்ம்.
திட்டு வாசல் – அதி திட்டி வாசலாக இருக்கும். பெரிய கதவில், சிறிய கதவு ஒன்று இருக்கும். அது தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் இருக்கும். இது மாதிரி கதவு பல பெரிய கோவில்களில் பார்க்கலாம். பெரிய கோபுரம் இருக்கும் இடத்தில், சிறிய கதவுகள் உண்டு.
சரியான இடத்தில் நிறுத்திவிட்டீர்களே…
எனக்குத் தெரிந்து, 85களில் 8-10 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்தார்கள். இப்போதும் தில்லை அந்தணர்களிடம் இந்தப் பழக்கம் உண்டு என்று நினைக்கிறேன்.
22.
chollukireen | 12:14 பிப இல் ஜனவரி 26, 2021
நான் சொல்வது 1920இல் இருந்து 40 வரையில்.அப்போதெல்லாம் யூனிபாரம் கிடையாது. முனிஸிபல் ஹைஸ்கூல் ஒன்று இருந்தது. இதில் பணக்காரப் பிள்ளகளேமுக்கால் வாசி. ஏழைப்பிள்ளைகள் இந்த ஸ்கூலில்படித்தனர். அதிலும் கன்வர்ட் கிறிஸ்துவர்கள்.
நீங்கள் திருவண்ணாமலையில் இருந்திருக்கிறீர்கள். நான் என் எட்டாவது வயதுவரைதான் திருவண்ணாமலை வாஸம். பின் வளவனூர். திட்டுவாசல் வழியே ஒருநாள்தான் தான் ஸ்வாமி வெளியே வருவார். உங்கள் தகவல்களுக்கு மிகவும் நன்றி.அன்புடன்