எங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை
ஓகஸ்ட் 11, 2013 at 8:45 முப 24 பின்னூட்டங்கள்
பெயரே வரலக்ஷ்மி பூஜை. கேட்ட வரங்களை அள்ளிக் கொடுக்கும் பூஜை.
இதைத் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா,மஹாராஷ்டிராமுதலான இடங்களில்
விவாகமான பெண்கள், தலைமுறைத்,தலைமுறையாகக் கொண்டாடி,
வரலக்ஷ்மி அம்மனிடம் நல்ல வரங்கள் வேண்டிப் பூஜித்துவரும் ஒரு நோன்பு.
பல குடும்பங்களில் வழக்கமில்லாதும் இருக்கலாம்.
பிறந்த வீட்டில் உண்டு, புகுந்த வீட்டில் இல்லை என்றும் சொல்வதுமுண்டு.
பொதுவில் குடும்பத்தின் ஐசுவரிய வளத்திற்கும், வளமான வாழ்க்கைக்கும்
கணவரின் க்ஷேமத்திற்காகவும் கொண்டாடப் படுகிறது,அனுஷ்டிக்கப் படுகிறது
என்பதுதான் எங்களின் முன்னோர்கள் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது.
நாங்கள் எங்கள் குடும்பத்தில் எப்படிக் கொண்டாடுகிறோம் என்பதுதான்
நான் சொல்ல வந்தது.
ஏறக்குறைய எல்லோருமே அம்மனைக் கலசத்திலிருத்தி அலங்காரங்கள் செய்து,
வீட்டற்குள் அழைத்து, மண்டபத்திலிருத்தி நல்ல முறையில் பூஜை செய்வது வழக்கம்.
சிற்சில விஷயங்களில், மாறுபாடு இருந்தாலும்,கொள்கையும்,பூஜையின்
காரணங்களும் ஒன்றேதான்.
தமிழ் நாட்டில் ஸுமங்கலிப் பெண்கள், இப்பூஜையை செய்வது வழக்கம்.
கர்நாடகாவில், கணவனும், மனைவியுமாகச் சேர்ந்து, சாயங்காலவேளையில்
இப்பூஜைகளைச் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.
வடை,பாயஸம்,இட்டிலி. கொழுக்கட்டை, மஹாநிவேதநம்,பலவகைச் சமையல்கள்,
பருப்பு,சுண்டல்கள், வகை,வகையான பழங்கள் இவை யாவும் அவரவர்கள்
சவுகரியப்பட்டதை சிரத்தையாகச்,சேகரித்தும்,பூஜையில் நிவேதனம் செய்வார்கள்
பலவித பக்ஷணங்களைச் செய்து, அவைகளை நிவேதனம் செய்யும்
முறை உள்ளவர்களும் உண்டு.
ஆவணிமாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில்
இந்த நோன்பு வரும்.
சில ஸமயம் இது ஆடி மாதத்தில் அமையும். இந்த வருஷம் ஆடி மாதம்
வருகிரது.
ஆடி 31 ஆம்தேதி அதாவது ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரலக்ஷ்மி விரதம்.
வருஷாவருஷம்,தொடர்ந்து செய்து வரும் இந்த விரதத்தை, ஏதாவது
ஸௌகரியக் குறைவு ஏற்பட்டாலும், அருகிலுள்வர்கள் பூஜிக்கும்
வீட்டிற்காவது சென்று, இந்த பூஜையை விடாது செய்வது வழக்கம்.
புதியதாகக் கல்யாணமாகி வரும், மருமகளுக்கு இதைத் தலை நோன்பு
என்று சொல்வது வழக்கம்.
பெண்ணிற்கு பிறந்த வீட்டில் எல்லா சீர் வகைகளும் செய்து அனுப்புவார்கள்
அம்மனின் முகம், கலசம்,பூஜைக்கு வேண்டிய உபகரணங்கள் ,பழங்கள்
என சிறப்பாக செய்து அனுப்புவது வழக்கம்.
நான் தலை நோன்பாக இருந்தால் பருப்புத்தேங்காய், அதிரஸம் என அதையும்
செய்து, பூஜையைக் கொண்டாடுவேன்.
பூஜை செய்யுமிடம் துப்புறவாக சுத்தம் செய்து அம்மனை இருத்த இடம் தயார்
செய்யப்படும். முன் காலங்களில் மண் தரை ஆதலால் பசுஞ் சாணத்தைக்
கொண்டு தரை மெழுகப்படும்.
சுவரில் சுண்ணாம்படித்து மண்டபத்தில் கலசத்தில் வரலக்ஷ்மி வீற்றிருப்பதைப்
போல் வண்ணக் கலவைகளினால் சித்திரம் தீட்டப்படும்.
இப்போது அநேகமாக படமே மாட்டப் படுகிறது.
அழகாக பந்தல் அமைக்கப்படும்.
முன் காலத்தில், வரலக்ஷ்மி,முகங்கள் என்று வெள்ளியில் செய்தது எதுவும்
கிடையாது.
கண்,மூக்கு,வாய்,காது என்று வெள்ளியில் செய்த அவயவங்கள்தான் கிடைக்கும்.
வெள்ளி,பித்தளை,வெண்கல,செப்புச் செம்புகளிலோ,சிறிய குடங்களிலோ
கலசம் வைப்பார்கள்.
அந்தக் கலசங்களில் சந்தனத்தைப் பருமனாக அப்புவார்கள்.
மையினால் அடையாளமிட்டு அவயவங்களைப் பொருத்துவார்கள்.
கலசத்தினுள் அரிசியை நிரப்பி,வெற்றிலைப்பாக்கு,மஞ்சள், வெள்ளிக்காசுகள்,
பவுன்ஏதாவது சிறிதுபோட்டு, அதன்மேல் ஒரு சுத்தமான மாவிலைக்கொத்தைச்
சொருகி, குடுமியுடன் கூடிய நல்ல தேங்காயை, மஞ்சள்ப்பூசி பொருத்துவார்கள்.
ஒரு எலுமிச்சம் பழத்தையும் வைக்கும் பழக்கமும் உண்டு.
விச்சோலை, கருகமணி அவசியம் வைப்பார்கள்.
இப்போது வெள்ளியில் செய்த வரலக்ஷ்மி முகம் அழகான நகை,நட்டுகளுடன்
கிடைக்கிறது.
அதை வாங்கிக் கலசத்தின் மேல் பொருத்தி விடுகிறோம்.
அதே முகத்தைப் பத்திரமாகப் பாதுகாத்து வருஷா வருஷம் வரலக்ஷ்மி பூஜை
செய்ய உபயோகமாக இருக்கிரது.
எந்த நாளிலும் அம்மனுக்கு பின்னழகிற்கு செயற்கைப் பின்னலில்,பூ அலங்காரம்
தாழம்பூ,மல்லிகைப் பூவினால் செய்வதுண்டு. பின்னழகு தெரிய நிலைக் கண்ணாடி
வைப்பதுண்டு.
நகை,நட்டுகளினாலும் அலங்கரிக்கிரோம் அம்மனுக்கென்றே தயாரித்து
விதவிதமான பாவாடை, புடவைகளையும் அணிவித்து தற்காலத்தில்
அழகாகவே ரஸனையைப் பொருத்து அலங்காரங்கள் செய்கிறோம்.
இம்மாதிரி எல்லாம் அலங்கரித்து ,அம்மனை தனியான இடத்தில் அமர்த்துகிறோம்.
பூஜை செய்யப்போகும் இடத்தில் அழகான மாக்கோலமிட்டு,செம்மண்
பூசி அழகாக பந்தல் அமைக்கிறோம்.
ஒன்றுமில்லாவிட்டாலும்,ஒரு மேஜையைக் கொண்டாகிலும், நான்குகால்களைக்
கொண்ட பந்தல் அமைத்து, வாழைக் கன்றுகளைக் கட்டி, மாவிலைத் தோரணங்கள்
அமைத்து அலங்கரித்து வைக்கிறோம்.
முதல் நாளே மடியாக செய்யக்கூடிய, இட்லி, குழக்கட்டைக்கு,மாவு,பூரணங்கள்
ஆயத்தம் செய்கிறோம்.
தாழம்பூ அம்மனுக்கு மிகவும் உகந்த பூ. தாமரை,மல்லிகை,மருக்கொழுந்து
ரோஜா ஸம்பங்கி, என வாஸனை புஷ்பங்கள், மாலைகள், சேகரிக்கிறோம்.
குத்து விளக்குகளை மங்களகரமாக ஏற்றி வைக்கிரோம்.
தன,தான்ய லக்ஷ்மியுடன், வரலக்ஷ்மி சேர்த்து ஒன்பது லக்ஷ்மிகள்.
நோன்பின் முக்கிய அம்சமாக நோன்புக்கயிறு வைத்து ,அதையும் பூசை
செய்து , சரட்டை வலதுகையில் பெரியவர்களைக் கொண்டு அணிந்து கொள்கிறோம்.
பூஜை செய்யும் பந்தலின் உள் ஒரு தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி,
மணையின் மீதோ,முக்காலியின் மீதோ கலசம் வைக்க தயார் செய்கிரோம்.
பூஜைக்கு வேண்டிய எல்லா ஸாமான்களும் தயார் செய்கிறோம்.
வியாழக்கிழமையே சாயங்காலத்திற்குப் பின் அம்மனுக்கு விளக்கேற்றி
குங்கும சந்தன,பூக்களுடன்,வழிபட்டு,நமஸ்கரிக்கிரோம்.
வெள்ளிக்கிழமை, காலை. விடியற்காலை. பரபரவென்று இயங்குகிறோம்.
வாசலில் கோலம்போடுவதில் ஆரம்பித்து, குளித்து ,மடியாக நிவேதனங்களைத்
தயாரித்து, மண்டபத்தில் கோலம்போட்டு செம்மணிட்டு , பூஜைக்கு ஏற்றவைகளைச்
செய்து, அம்மனை அழைக்கத் தயாராகிறோம்.
வசதி இருந்தால் வாத்தியார் வருகிரார்.
எல்லாரிடத்திலும், பூஜையை செய்துவிக்க வாத்தியார் செய்து வைக்கும் கேஸட்
இருக்கிறது.
அயல் நாட்டில் இதுவே ஸமயத்திற்கு உதவியாக இருக்கிறது.
அலங்கரித்த அம்மனை வீட்டு வாசற்படியினருகே வெளியில் ஒரு
ஸ்டூலில் வைத்து விளக்கேற்றி, குங்கும,சந்தன உபசாரங்கள்,தூப,தீபங்கள்
,நிவேதனம் செய்து, கற்பூர ஆரதி எடுத்து, நமஸ்கரித்து, பக்தி,சிரத்தையாக
உடன் ஒருஸுமங்கலி,அல்லது, கன்னிகை உதவியுடன், ஸௌபாக்கியத்தைக்
கொடுக்கும் லக்ஷ்மி தேவியே ,அம்மாவே,நீங்கள் வரவேண்டுமம்மா என்று
பக்தி,சிரத்தையுடன் பாடல்களைப் பாடி அதி கவனமாக கலசத்தை உள்ளே
எடுத்துவந்து தயாராக அலங்கரித்து,தீபங்களுடன்ம கூடிய ண்டபத்தில்,.
கிழக்கு முகமாக அதி ஜாக்ரதையாக வைக்கிறோம்.
பாக்யத லக்ஷ்மி,பாரம்மா, லக்ஷ்மி,ராவேமா இண்டிகி. இரண்டும் பிரஸித்தமான
பாடல்கள்.
இராகு காலத்திற்கு முன் பூஜை ஆரம்பமாகிறது. பிள்ளையார் பூஜையுடன்
வாத்தியார் சொல்லும் முறையில் கவனமாக மந்திரங்களைச் சொல்லி
அம்மனுக்கு எல்லாவித உபசாரங்களையும் செய்து ஆஸனத்தில் இருத்தி
ஆடை,ஆபரணங்கள்,ரவிக்கைத் துணி,பஞ்சு வஸ்திர மாலைகள்,அணிவித்து
அஷ்டோத்திர சத நாமாவளிகளினால் பூக்களினால் அர்ச்சனை செய்கிறோம்.
தூப,தீபங்களைக் காட்டி, நிவேதனப்பொருள்களை வைத்து நிவேதனம்
செய்கிறோம். சகலமான பொருள்களும் நிவேதனமாகிரது.
வெற்றிலைப்,பாக்கு,பழங்கள், உடைத்த தேங்காய், பழவகைகள்
நிவேதனமாகிறது.கற்பூர தீபம் காட்டுகிறோம்.
புஷ்பாஞ்சலி செய்து,ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்கிறோம். ப்ரார்த்தனை
நோன்புச் சரடுகளில் ஒவ்வொரு புஷ்பங்களைாகத் தொடுத்து வைத்திருப்பதை
அம்மனின் பாதங்களில் வைத்து அதற்கும் தனிப்பட பூஜை செய்கிறோம்
பூஜை முடிந்து ஒவ்வொரு சரடாக எடுத்துப் பெரியவர்களால் சுமங்கலிகளுக்கும்,
கன்யாப் பெண்களுக்கும், வலது கையில் கட்டப் படுகிரது.
அப்படிக் கட்டும்போது கையில்,வெற்றிலைப்பாக்கு,மஞ்சள்,பூ,தேங்காய்,பழங்களைக்
கொடுத்துக், குங்குமமிட்டு சரடைக் கட்டுவார்கள்.
பெரியவர்களை நமஸ்கரித்து ஆசிர்வாதம் பெறுவார்கள்.
ஸுமங்கலி,கன்யாப் பெண்களுக்கு, தாம்பூலம் கொடுத்து, பிரஸாதம்
அளித்து, ஆரதி எடுத்து, மருநாளும், புனர்ப் பூஜைகள் செய்து ஸாயங்காலம்
சுண்டல் முதலானது செய்து யாவருக்கும் வினியோகிப்பது வழக்கம்
இரவு ஆரதி எடுத்து கலசத்தை அரிசி வைக்கும் பெரிய சேமிப்புக் கலங்களில்
வைத்து, நல்லபடியாக போய்விட்டு வாருங்களம்மா என்று கூறி வேண்டிக்
கொள்வது வழக்கம்.
தெலுங்குப்பாடலில் அத்தகாரிண்டிகி போயிராவம்மா,மாமகாரிண்டிகி
போயிராவம்மா என்றுப் பாடுவது வழக்கம். மாமியார் வீட்டுக்குப் போவதாக ஐதீகம்.
லாலி,ஊஞ்சல், பக்திப்பாடல்கள், மனது லயித்து பூஜை மெய்மறந்த
ஸந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
எல்லோருக்கும் வரலக்ஷ்மி வேண்டிய வரங்களை அளிக்க வேண்டுகிறேன்
தவறுகளை மன்னிக்க வேண்டுமம்மா. நெடு நாளைய ஆசை இந்தப்பதிவு.
குருவிற்கு,தக்ஷிணை,தாம்பூலம்,கொடுத்தும், இதைப் படிக்கும் எல்லோருக்கும்
ஸௌபாக்கியங்களைக் கொடுக்க வேண்டியும்,இவ்வருஷ பூஜையை நன்றாகச் செய்ய
அருள் வேண்டியும், எல்லோரும் மங்களகரமாக இருக்க வேண்டியும் ,அம்மனின்
தாளடி பணிந்து நமஸ்காரம் செய்கிறேன்.
அவரவர்கள் குல ஆசாரப்படி புடவை அணிய வேண்டுவதும் முக்கியம். மஞ்சள்,குங்குமமும் வெற்றிலைப் பாக்கும், ப்ரஸாதமும் யாவரும்
எடுத்துக் கொள்ளுங்கள்.
Entry filed under: பூஜைகள்.
24 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 8:49 முப இல் ஓகஸ்ட் 11, 2013
அநேக நமஸ்காரங்கள்.
மிகவும் அருமையான அழகான பதிவு. வரலக்ஷ்மி நோன்பு எங்கள் ஆத்திலும் உண்டு.
>>>>>
2.
chollukireen | 11:10 முப இல் ஓகஸ்ட் 13, 2013
உங்களாத்திலும் பூஜை உண்டு. ஸந்தோஷம். நோன்பு செய்வது மெய் மறந்த ஒன்றுதான். நன்றி அன்புடன்
3.
VAI. GOPALAKRISHNAN | 8:50 முப இல் ஓகஸ்ட் 11, 2013
படங்கள் அத்தனையும் அழகோ அழகாக உள்ளன.
அதுவும் “பாக்யத லக்ஷ்மி பாரம்மா ” பாட்டுடன், சூப்பராக உள்ளது.
>>>>>
4.
chollukireen | 11:23 முப இல் ஓகஸ்ட் 13, 2013
பேரன் மனைவியும்,பெண்ணும் நியூஜெர்ஸி
கடைசி நாட்டுப் பெண்ணுடன் ஜெனிவா,
மூன்றாவது மும்பை நாட்டுப் பெண்ணுடன்.
படங்களைப் பாராட்டி இருப்பதால், உறவுகளை எழுதியிருக்கிறேன். லக்ஷ்மி ராவேமா இண்டிகி,
தெலுங்குப் பாடல்.
பாக்யத லக்ஷ்மி பாரம்மா கன்னடப் பாடல். புரந்தர
தாஸர் பாட்டு. சூப்பர் என எழுதியிருப்பது அதிக ஸந்தோஷம். ஆசிகளுடன்
தாஸருடையது. அன்புடன்
5.
VAI. GOPALAKRISHNAN | 8:55 முப இல் ஓகஸ்ட் 11, 2013
பூஜை செய்யும் முறைகள், சரடு கட்டிக்கொள்ளுதல், முன்னேற்பாடாக செய்ய வேண்டிய காரியங்கள், நைவேத்யம், அம்மனை அழைத்தல், அலங்காரங்கள் செய்தல் என ஒன்றுவிடாமல் பொறுமையாகவும், அருமையாகவும் எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கும் பதிவுக்கும் நன்றிகள்.
அன்புடன் கோபு
6.
chollukireen | 11:28 முப இல் ஓகஸ்ட் 13, 2013
ஸரியாக சொல்லி இருக்கிறேன் அல்லவா? மருமகள் வாலாம்பாள் என்ன சொல்கிறார். அவருக்கு என் விசாரிப்புகளும், ஆசிகளும்.
பாராட்டுகள் இருந்தால்தான் கொஞ்சம் உற்சாகம் வரும்.
அந்த முறையில் எவ்வளவு நஅறி சொன்னாலும் தகும்.
அன்புடன்
7.
chollukireen | 12:00 பிப இல் ஓகஸ்ட் 13, 2013
செய்து,செய்தும், மற்றவர்களுக்குச் சொல்லியும் பழக்கமானது. ஆயினும் மனதில் சிறிது அச்சம்தான்.
உங்கள் பாராட்டுதலில் எல்லாம் விடைபெற்றுக்கொண்டு விட்டது. நன்றி எல்லோருக்குமே. அன்புடன்
8.
ranjani135 | 10:28 முப இல் ஓகஸ்ட் 11, 2013
ரொம்பவும் விவரமாக செய்முறை, பூஜைக்கு தயார் செய்து கொள்ளுதல் என்று வரும்போது பாக்யதா லக்ஷ்மிபாரம்மா, பூஜை முடிந்தபின் போயிராவம்மா பாடுதல் என்று அத்தனை விவரங்களையும் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறி இருக்கிறீர்கள். வெளியூரில் அல்லது வெளிநாட்டில் இருப்பவர்கள் உங்கள் இந்தப் பதிவை பார்த்து பூஜையை வெகு திருப்தியாகச் சுலபமாக செய்துவிடலாம்.
நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் பதிவைப் படிப்பது உற்சாகம் தருகிறது.
9.
chollukireen | 11:44 முப இல் ஓகஸ்ட் 13, 2013
பாட்டுகளெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான். ஏனூ தன்யளோ லக்ஷ்மி எந்த மான்யளோ என்று பாட்டு உங்கள்மனதில் தோன்றியிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். நன்றாகக் கூறியிருப்பதாக எழுதியிருப்பதை அன்புடன் வரவேற்கிறேன். அடுத்தவாரம் நோன்பு. எல்லோரையும் அன்புடன் வரவேற்கிறேன். நன்றி. அன்புடன்
10.
Kumar | 2:09 பிப இல் ஓகஸ்ட் 11, 2013
Varalakshmi nombu appadiye padikkumpothey pannuvathupol
rombavum santhisamaga irunthathu Pudthiyathaga kondadugiravarkalukku rombavum upayogamaga irukkum
11.
chollukireen | 11:48 முப இல் ஓகஸ்ட் 13, 2013
இது ரொம்ப நாளைய ஆசை. கண் ஆபரேஷனுக்குப் பிறகு எழுதுவது நல்லதாக இருக்கட்டும் என்று தோன்றியது. உங்களுடைய கருத்தை வரவேற்கிறேன்.
நன்றி. அன்புடன்
12.
chitrasundar5 | 3:32 பிப இல் ஓகஸ்ட் 11, 2013
காமாக்ஷிமா,
வரலக்ஷ்மி பூஜையை மேற்கொள்பவர்களுக்கு உதவும் பதிவு. தேவையான படங்களுடன் அசத்திட்டீங்க.
மீண்டும் பதிவிடுவதில் மகிழ்ச்சிமா.அன்புடன் சித்ராசுந்தர்.
13.
chollukireen | 11:52 முப இல் ஓகஸ்ட் 13, 2013
அன்புள்ள சித்ரா படங்களெல்லாம் ஸரியாக அமைந்து விட்டது அல்லவா? அசத்திட்டீங்க
என்ன ஒரு பாராட்டு. அன்பில் வரும் ஒரு வார்த்தை.
நன்றி. அன்புடன் சொல்லுகிறேன்
14.
adhi venkat | 7:38 முப இல் ஓகஸ்ட் 14, 2013
வரலஷ்மி நோன்பு பற்றி அழகாச் சொல்லியிருக்கீங்க… நோன்பு என் பிறந்த வீட்டிலும் உண்டு புகுந்த வீட்டிலும் உண்டு. பத்து வருட தில்லி வாழ்க்கைக்குப் பின் சென்ற வருடம் முதல் என் மாமியாருடன் நோன்பு பண்ணுகிறேன். என் பிறந்த வீட்டில் கலசத்தில் தண்ணீர் விடுவார்கள். புகுந்த வீட்டில் அரிசி…
படங்கள் எல்லாமெ அழகு.
15.
chollukireen | 11:36 முப இல் ஓகஸ்ட் 14, 2013
உன்னுடைய வரவை, பின்னூட்டத்தை வெகுவாக வரவேற்கிறேன். மிகவும் ஸந்தோஷமாக யிருக்கிறது
உன் நோன்பைக் குறித்த விஷயங்கள். என் ஆசிகள் உனக்கு
படங்கள் அழகாயிருக்கிரது என்ற வாக்கியம் வரவேற்கிறேன். அடிக்கடி வா என் பெண்ணே. அன்புடன்
16.
Hemaji | 2:51 முப இல் ஓகஸ்ட் 31, 2013
நமஸ்காரங்கள்..பருப்பு உருண்டை குழம்பு receipe தரவும்.
17.
chollukireen | 12:00 பிப இல் செப்ரெம்பர் 1, 2013
ஆசிகள் அனேகம். நல்வரவு அம்மா. கூடிய சீக்கிரம் பதிவிடுகிறேன். அன்புடன்
18.
Rajarajeswari jaghamani | 2:47 முப இல் செப்ரெம்பர் 2, 2013
அலங்கரித்த அம்மன் பிரத்யட்சமாக
அருளாசி வர்ஷிக்கிறார்..
அருமையான பகிர்வுகள்.பாராட்டுக்கள்..!
19.
chollukireen | 7:08 முப இல் செப்ரெம்பர் 2, 2013
பாராட்டுகளுக்கு நன்றி அம்மா. எனக்குக் கடமைகள் அதிகம் இருப்பதால் அடிக்கடி வந்து யாவருக்கும் பின்னூட்டமிடமுடிவதில்லை. அதுவே சிலஸமயம் குரையாக இருக்கிரது. உங்கள் வரவு மனதுக்கு இனிப்பாக இருக்கிரது. அன்புடன்
20.
petunia | 9:18 பிப இல் நவம்பர் 17, 2013
Dear patti, Inda post, naan inda varudam varalakshmi nombukku munnadi naal padithen. Next day, action replay madiri irundadu enakku. Naraya effort eduthu padangal thedi, detailed a ezhudinadukku nandri.
21.
chollukireen | 6:23 முப இல் நவம்பர் 18, 2013
வருஷாவருஷம் ஆக்,ஷன் ரீப்ளேதான். உன் மறுமொழி ஸந்தோஷத்தைக் கொடுக்கிரது. நீ சொல்லிக் கொடுத்த வழிதான் பதிவுகள் இட உபயோகமாகிரது. இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் பெண்ணே. பூஜை பதிவு அழகாக வந்ததில் எனக்குத் திருப்தி. நன்றியும்,ஆசிகளும். அன்புடன்
22.
chollukireen | 8:43 முப இல் ஜூலை 31, 2014
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
ஆகஸ்ட் எட்டாம் தேதி வரலக்ஷ்மி பூஜை. சென்ற வருஷத்திய என் பதிவை திரும்பவும் அளிக்கிறேன்.
படித்து மகிழுங்கள். அன்புடனும்,ஆசிகளுடனும்.
23.
மீனாட்சி | 2:35 பிப இல் ஓகஸ்ட் 13, 2016
தாம்பூலம் எடுத்துக்கொண்டேன் அம்மா.படித்து ஏனோ என் கண் நிரம்பி வழிகின்றன நமஸ்காரம் செய்கிறேன்.
24.
chollukireen | 5:32 முப இல் ஓகஸ்ட் 15, 2016
ஆசிகளும் வாழ்த்துகளும் அம்மா. மனமுருகி வாசித்திருப்பாய். பக்திப்பரவசம். வரலக்ஷ்மி எல்லா பாக்கியங்களையும் அருளுவார். அடிக்கடி ப்ளாக் பக்கம் வா அம்மா. அன்புடன்