அன்னையர்தினத் தொடர்வு.7
செப்ரெம்பர் 23, 2013 at 7:04 முப 16 பின்னூட்டங்கள்
உங்களை எல்லாம் ஸஷ்டி அப்த பூர்த்திக்கு கூப்பிட்டேனேல்லவா?
எங்கு ஏது என்று யாருமே கேட்கவில்லை.
இராமேசுவரத்தில் தான் அறுபதாம் கல்யாணம். அப்படித்தான் பெயர்
சொல்லுவார்கள்.
இந்த நாளில் பெண்கள் சிலருக்கு முப்பத்தைந்து வயதுகூட விவாகத்தின்
போது ஆகி விடுகிறது.
அம்மாவுக்கோ அப்பாவின் ஷஷ்டியப்த பூர்த்தி.
பிள்ளைக்காக நிறைய சாந்திகள்,செய்ய வேண்டும், ஹோமங்கள்
வளர்த்துப் பரிஹாரங்கள் செய்து ஸமுத்திர ஸ்னானம் செய்ய வேண்டும்.
கன்னி கடலாடு என்று, பெண் குழந்தைகளுக்கும் நல்லது.
இப்படி அபார யோசனைகளோடு ஒரு சேது ஸ்நானம், ராமேசுவரப்
பிரயாணம். பயணம் நிச்சயம்
அவ்விடம் நல்லதாக வீடு ஒன்று பார்த்து, 8,10 நாட்கள் தங்கி எல்லாம்
செய்வதாகத் தீர்மானம்.
தேரழுந்தூரிலிருந்து அப்பாவின் ஷட்டகர் ராமநாத ஜடாவல்லபர் வந்து
எல்லாவற்றையும் செவ்வனே நடத்துவதாகவும், எல்லா ஏற்பாடும்
அவர் செய்வதாக ஒப்புக் கொண்டாகியும் விட்டது.
அப்பாவின் இரண்டாவது மனைவியின் அத்திம்பேர் அவர். உறவுகள்
நீடித்தது அக்காலத்தில்.
பெரிய வேத வித்து. அவர். முக்கிய விருந்தாளியும், அவர்தான்
ஒரு புடவை, வேஷ்டி வாங்கிக் கொண்டுவந்திருந்து பிரயாணம் பூராவும்
உடனிருந்தவர்.
எங்களுக்குப் புதியதாகத் தைத்த பாவாடையையும்,சொக்காயையும்
எப்போது கொடுப்பார்கள், அதைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
இப்படிதான் எண்ண ஓட்டங்கள் இருந்தது.
அத்தை,பருப்புத் தேங்காய் முதல்,சமையலுக்குப் பாத்திரங்கள்,விதவித
பக்ஷணங்கள், பொடி வகைகள், படுக்க தலைகாணி போர்வைகள்,
சுக்கு,ஓமம்,லேகியங்கள், மடி துணி எடுத்து வைக்க, 4,5 மடிஸஞ்சிகள்
என பிரயாண ஸாமான்களைத் , தனிப்படுத்தி ஏற்பாடு துரித கதியில்.
யார் செய்கிரார்களோ இல்லையோ என அப்பாவின் செலவிலேயே
அரை பவுன் திருமங்கலியம், 12 ரூபாய்க்கு நல்ல ஸரிகை போட்ட
ஒன்பது கெஜ நூல்ப்புடவை ரவிக்கை,வேஷ்டி அங்க வஸ்திரம்,எல்லாம்
வாங்கியாகி விட்டது.
யாரோ மெட்ராஸிலிருந்து வருபவர்களிடம், சின்ன மாமா வேறு,குட்டியாக
ஒரு திருமங்கல்யமும், புடவைரவிக்கை, வேஷ்டி அங்க வஸ்திரம்,
மஞ்சள்,குங்குமத்திற்காக பணமும் அனுப்பி இருந்தார்.
அத்தைக்குப் பெருமை.
நாள்,கிழமையை விடாது என் பிள்ளை செய்து அனுப்பி இருக்கிரான் என்று
பெருமையாக சொல்லிக்கொண்டு, இரண்டு புடவை ,வேஷ்டி,
திருமங்கலியங்களை எல்லோருக்கும் எடுத்துக் காட்டிக் கொண்டும் இருந்தார்.
கிராமங்களானாலும் ஸரி, பெரிய ஊர்களானாலும் ஸரி, கலியாணம், மற்றும்
எந்த முக்கிய நிகழ்வுகளானாலும் அவர்கள் சீர் செய்வதையும் ஸரி,
சீர் வரிசை வந்தாலும் ஸரி, உற்றார் யாவருக்கும் கண்காட்சி மாதிரி காட்டி
ஸந்தோஷப் படுவார்கள்.
பார்ப்பவர்களும் எவ்வளவு நன்றாக உள்ளது என்றும் சொல்வார்கள்.
அது இல்லை,இது இல்லை என்று பின்னாடி குறை சொல்பவர்களும் உண்டு.
நாங்கள் எங்கள்த் துணிகளைக் காட்டி மகிழுவோம்.
திருமங்கலியம் இரண்டா. நல்லதுதான். கலியாணத்தில் ஒன்றுதானே!
இப்போது இரண்டு நல்லதுதான்.
ஏன் இப்படி சொல்கிரார்கள்? என்ன கணக்கு என்று நான் கேட்க
அத்தை அது அப்படிதான். இரண்டாம் தரம் என்றால் முதல் மனைவியின்
திருமங்கல்யம் ஒண்ணுதான் கட்டுவார்கள்.
அதை நினைச்சுண்டு அவா சொல்ரா. இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம்.
அத்தையின் வியாக்யானம் அது.
அப்போது விளங்கவில்லை. இப்போது விளங்குகிறது.
அதாவது முதல் மனைவி இரந்து இரண்டாவது மனைவி விவாகம் செய்தால்
முதல் மனைவிக்கு அணிவித்த அதே திருமங்கலியத்தில் ஒன்றைக் கொணர்ந்து
அணிவிப்பதென்பது வழக்கமாம்.
ஒரு வேளை குழந்தைகளில்லாது முதல் மனைவி இறந்து விட்டாரென்று
வைத்துக் கொண்டால்கூட தர்ம நியாயமுள்ளவர்கள் அவரின்,நகை மற்றும்
பொருட்களை அவர்களின் பிறந்த வீட்டிற்கு கொடுத்து விடுவார்களாம்.
அப்படிக் கொடுத்தாற் கூட திருமங்கலியம் ஒன்று இவர்களிடமே இருக்குமாம்.
அதைக் கொண்டுவந்து கட்டுவதென்பதுதான் மரபு.
எப்படி எல்லாம் நியாயங்கள்,வழிமுறைகள். வியப்புதான்.
அக்காவின் புகுந்த வீட்டு உறவில் யாருக்கோ மறைவு. அதனால் அக்கா
பிரயாணத்தில் கலக்க முடியவில்லை.
நாங்கள் மட்டும் தான் பயணம். அந்த நாளில் நீண்ட பிரயாணமாகத் தோன்றியது.
ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டு,கறித்தூள் கண்ணில் விழுந்து,கண்ணைக்
கசக்கிக்கொண்டு,திட்டுகள் வாங்கிக்கொண்டு, ஒரு நோட்டுப் புத்தகத்தில் எல்லா
ஸ்டேஶன்களின் பெயரையும் எழுதிக்கொண்டே இராமேசுவரம் போய்ச் சேர்ந்தோம்.
இரவு தூங்கும் போது ஸ்டேஶன்கள் பெயர் விட்டுப் போயிருக்கும். மனதில்
நினைத்துக் கொண்டோமோ என்னவோ? ஞாபகம்வரலை.
என்ன வழக்கம்போல போன இடத்தில் ஒரே பூஜை மயம்தான். எந்தப் பக்கம் போனாலும்
ஸமுத்திரம். ஸமுத்திர ஓசை. காலை வேளையில் ஸமுத்திர ஸ்னானம்
செய்து விட்டு வந்துதான் மற்ற வேலைகள்.
கோவில் எவ்வளவு பெரிசு, ஓடிப்பிடித்து விலையாடலாம் போன்ற பிரகாரங்கள்.
இப்படித்தான் எண்ணங்கள் போய்க் கொண்டிருந்தது என்று நினைக்கிறேன்.
கோவிலின் புனிதக் கிணறுகளில் நீராடல். ஏராளமான கூட்டமொன்றுமில்லை.
கிணறுகளுடன் பக்கெட்,தாம்பக்கயிறு முதலானவைகள் இருந்தது.22 கிணறுகள்
என்று ஞாபகம்.
மடியாக இழுத்துக் கொடுப்பவர்களும் இருந்தார்கள். தானாகவும் இழுத்துக்
கொள்ளவும் முடியும். கிணற்றில் மிக அருகில் தண்ணீர்.
போட்டி போட்டுக்கொண்டு ஸ்னானம் செய்தோம். எல்லா இடங்களிலும் ஸங்கல்பம்
சொல்லுவதைக் கேட்டுக் கேட்டு நாங்களும் கூடவே சொல்ல ஆரம்பித்து விட்டோம்.
அத்தை, காசியிலிருந்து கொண்டுவந்த கங்கையை, கோவிலில் ராமநாத ஸ்வாமிக்கு
அபிஶேகம் செய்தது எல்லாம் பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தார்.
இறங்கின இடத்தில் இன்னும் வாத்தியார்களையெல்லாம் கூப்பிட்டு ஶஶ்டி
அப்த பூர்த்தி விசேஶமாகக் கொண்டாடியது. அத்தை நன்றாக சமைத்து
வந்தவர்களுக்குப் பரிமாறினார்கள்.
ஒரு வழியாக எங்களுக்கு புது பாவாடை,சொக்காய் போட்டுக் கொள்ள முடிந்தது.
கோவிலின் வாசலில் உள்ள கடைகளில்
நிறைய பேருக்கு,சோழிகள்,சங்கு மாலைகள், கிளிஞ்சல்கள் என வாங்கியது
ஞாபகம் உள்ளது.
அடுத்து கோடிக்கரை. அதான் தனுஶ்கோடி. ரயிலில்தான் போனோம்.
இன்னமும் ஸ்டேஶனில் புகை கக்கிக் கொண்டு நின்று கொண்டிருந்த ரயிலில்
ஏறிப் பயணம் செய்தது, அவ்விடம் போய்த் தங்கியது.
இரவில் ஸமுத்திர அலை ஓசை தூஙக முடியாமல், பயந்தது,எதுவும்
மறக்கவில்லை.
காலையில் ஸமுத்திர ஸ்னானம் செய்யப் போனால் ஹோ என்ற இரைச்சலுடன்
ராட்சஸ அலைகளுடன்,ஒருபக்கம் கடல். ரத்னாஹாரம் என்று பெயர் சொன்னார்கள்.
இந்து மஹா ஸமுத்திரம்.
குட்டி,குட்டி அலைகளுடன் பரம ஸாதுவாக ஒரு கடல் இன்னொரு பக்கம்.
வங்காள விரிகுடா. இதில் ஸ்னானம் செய்தோம்.
கடல் மணலில் நடந்து,நடந்து ஒரேபசி. ரோடு ஓரத்திலே ஒரு வயதான தம்பதி
ஒரு மாட்டு வண்டியில் இட்லி,வடை,சட்னி, குடிக்கத் தண்ணீர்,இங்கே வாங்கோ
மடியா செஞ்சு விக்கிறோம்.
இன்னும் பசி ஜாஸ்தியாகச் சொன்னோம்.
ஒரு வழியாக அவர்கள் குலம் கோத்திரமெல்லாம் விசாரித்து அவர்கள்
வீட்டிற்கு சாப்பிட வந்தது போல இவர்களும்,நிறையப் பேசி இட்டிலி
வாங்கிக் கொடுத்தது இன்றும் ஞாபகம் வருகிறது.
கல்மாதிரி இட்லி,புளியங்காசட்னி சிவப்பாக,காரமாக, அன்பாக பேசி
ஒரளவு வியாபாரம் ஆகியது அவர்களுக்கு. பசி வந்திடப் பத்தும் பறந்து போம்.
ஊறுகாய் வேறு இருந்தது. இன்னும் இவைகள் ஞாபகம் உள்ளது.
இன்னும் வரவாளுக்கும் உங்களைப் பற்றி சொல்லுகிறோம் என்று பிரியா
விடை பெற்று வந்தது எங்கள் குடும்பம். அம்மாவிற்கென்னவோ வந்த இடத்தில்
தன் பிள்ளைக்கு சுகவீனம் ஏற்படக்கூடாதென்ற ஒரே கவலைதான்.
எதுவும் ஏற்படாமல்,திரும்ப ராமேசுவரம் வந்து கங்கை எடுத்துக் கொண்டு,தர்ப்ப
சயனம்,நவபாஶாணம் முதலிய இடங்களிலும் பரிஹார பூஜைகள் முடித்துக் கொண்டு
மாயவரம்,வந்து சேர்ந்தோம். இதுவரை பிள்ளைக்கு சுகவீனமில்லை. பகவானே
மிகுதி நாட்களும் இப்படியே நிம்மதியைக் கொடுராப்பாவென்று வாய்விட்டே அம்மா
வேண்டிக் கொண்டாள். பார்ப்போமா? தொடருவோம்.
Entry filed under: அன்னையர் தினம்.
16 பின்னூட்டங்கள் Add your own
Geetha Sambasivam க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
GOPALAKRISHNAN. VAI | 7:24 முப இல் செப்ரெம்பர் 23, 2013
அநேக நமஸ்கரங்கள். அழகாக எழுதியுள்ளீர்கள்.
//ஒரு வேளை குழந்தைகளில்லாது முதல் மனைவி இறந்து விட்டாரென்று வைத்துக் கொண்டால்கூட தர்ம நியாயமுள்ளவர்கள் அவரின்,நகை மற்றும்
பொருட்களை அவர்களின் பிறந்த வீட்டிற்கு கொடுத்து விடுவார்களாம். அப்படிக் கொடுத்தாற் கூட திருமங்கலியம் ஒன்று இவர்களிடமே இருக்குமாம்.//
எவ்வளவு தர்ம நியாயமாக நடந்து கொண்டுள்ளார்கள் பாருங்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 10:29 முப இல் செப்ரெம்பர் 29, 2013
உங்கள் மறு மொழிக்கு மிகவும் நன்றி. நான்தான் தாமதமாக நன்றி சொல்லுகிறேன். அன்புடன்
3.
ranjani135 | 9:16 முப இல் செப்ரெம்பர் 23, 2013
அந்தகாலத்து ரயில் பிரயாணம், கையில் நோட்டுப் புத்தகத்தின் ஸ்டேஷன் பெயர்கள் எழுதிக் கொண்டு போனது, சீர் வரிசை செய்வது, அதை எல்லோரிடமும் காண்பிப்பது என்று நினைவாக எல்லாவற்றையும் எழுதி, எங்களையும் சஷ்டி அப்த பூர்த்திக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டீர்கள்.
நானும் என் தம்பியும் கூட இதைபோல ஸ்ரீரங்கம் போகும்போதெல்லாம் ஸ்டேஷன் பெயர்களை எழுதிக் கொண்டே வருவோம். கண்ணில் கரி நுழைந்து கண்ணைக் கசக்கும் அனுபவமும் உண்டு!
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் எழுத்தைப் படிக்க ஆரம்பிப்பது நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.
4.
chollukireen | 10:38 முப இல் செப்ரெம்பர் 29, 2013
பார்த்தீர்களா, ரயில் அனுபவங்கள் சின்ன வயதில் ஒரே மாதிரி இருந்துள்ளது. இன்னும் எனக்கு தனுஶ்கோடி இட்லி சட்னி சாப்பிட்டது,சமுத்திரக்கரை,யெல்லாம் பசுமையாக ஞாபகம் வருகிரது.. அந்த இடம் ஸமுத்திரம் அபேஸ் பண்ணிக்கொண்டு போய்விட்டது.
மானஸீகமாக எங்கே வேண்டுமானாலும் அழைத்துப் போக முடிகிறது.. உங்கள் பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது..
கொலு வைக்க ஏற்பாடெல்லாம் நடக்கிறதா?
அன்புடன்
5.
chitrasundar5 | 6:06 பிப இல் செப்ரெம்பர் 25, 2013
காமாக்ஷிமா,
பழைய நினைவுகள் எல்லாம் மனதின் ஆழத்தில் பதிந்து கிடப்பது தெரிகிறது. அத்தை தன்னை முன்னிலைப்படுத்த முயற்சிப்பது,சீர்வரிசைகள்,குட்டிப் பிள்ளைகளின் மனநிலை,சம்பிரதாயங்கள்,அம்மாவின் மனநிலை என எல்லாவற்றையும் அழகா சொல்லியிருக்கீங்கமா.காலம் பீன்னோக்கி சென்றதுபோல் உள்ளது.இன்னும் எழுதுங்கமா,படிக்க சுவாரஸியமா இருக்கு. அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 10:42 முப இல் செப்ரெம்பர் 29, 2013
அன்புள்ள சித்ரா படித்து பரிவாக எழுதியிருப்பது மிக்க மகிழ்ச்சி.. சுவாரஸ்யமாக இருக்கா? அதுதான் வேண்டும். அன்புடன்
7.
chollukireen | 1:16 பிப இல் மார்ச் 6, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
அன்னையர்தின ஏழாவது பதிப்பு வழக்கப்படி திங்களன்று பிரசுரிக்க முடியவில்லை. கணினி ரிபேர். இதிலும் பழக்க வழக்கங்களும்,இராமேசுவர அனுபவங்களும். அடுத்து திங்களன்று எட்டாவதுப் பதிவும் வரும். பாருங்கள்.படியுங்கள். அன்புடன்
8.
ஸ்ரீராம் | 2:50 பிப இல் மார்ச் 6, 2021
அருமையான அனுபவங்கள்.
9.
chollukireen | 11:01 முப இல் மார்ச் 7, 2021
மறக்கமுடியாத அனுபவங்கள்தான். நன்றி. அன்புடன்
10.
நெல்லைத்தமிழன் | 3:06 பிப இல் மார்ச் 6, 2021
இரயில் பிரயாணம், கரி, சஷ்டியப்தபூர்த்தி, ‘மடியோடு செய்து விற்பவர்கள்’ என்று ரசனையாகச் செல்லுகிறது. அந்தக் காலத்துப் பயணங்களையும் கொண்டாட்டங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது.
11.
chollukireen | 11:07 முப இல் மார்ச் 7, 2021
நினைத்துப் பார்த்துக் கொண்டால் எனக்கே புதியதாகத் தோன்றிவிடும்போலுள்ளது. அந்த அளவிற்கு பிரயாணங்களில் மாறுதல்களை அனுபவித்தாகிவிட்டது.மறுமொழிக்கு மிகவும் நன்றி. அன்புடன்
12.
chollukireen | 11:22 முப இல் மார்ச் 7, 2021
ஆமாம் இப்போது மடியாவது,விழுப்பாவது எதுவும் மனதளவில்தான். தள்ளாவிட்டால் ஆசாரமில்லை. இல்லா விட்டால் உபசாரமில்லை. ஸரியான பழமொழி. அன்புடன்
13.
Geetha Sambasivam | 7:30 முப இல் மார்ச் 7, 2021
மிக அருமை. அந்தக் காலத்துப் பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. நாங்களும் இந்த மாதிரிப் புகை கக்கும் கரி வண்டியில் போயிருக்கோம். அவ்வளவு ஏன்? கல்யாணம் ஆன புதுசில் அம்பத்தூரில் இருந்து சென்னை/சென்ட்ரல் போகக் கரி வண்டி தான். பின்னாட்களில் தான் டீசல் எண்பதுகளில் வந்தது. அதன் பின்னரே மின்சார வண்டி.
14.
Geetha Sambasivam | 7:36 முப இல் மார்ச் 7, 2021
சுவாரசியமாகச் செல்கிறது ராமேஸ்வரம் பயணம். அந்தக் காலங்களில் இப்போதுள்ளது போல் கூட்டமும் இருந்திருக்காது. நன்கு ரசித்திருக்கிறீர்கள் தனுஷ்கோடியின் இட்லியும், சட்னியும். சொல்லும்போதே சாப்பிட்ட உணர்வு.
15.
chollukireen | 11:18 முப இல் மார்ச் 7, 2021
சின்ன வயதில் ஸமுத்திரஸ்னாநம்,பல இடங்கள்,கோயில்கள் என மறக்கமுடியாத நிகழ்வுகள்தான் பிரயாணம் நீண்டதுதான். வேகம் கிடையாது. இம்மாதிரி கூட்டங்கள் எப்போதுமே கிடையாது. இட்லி சட்னி தனுஷ்கோடி போதுமா? அன்புடன்
16.
chollukireen | 11:10 முப இல் மார்ச் 7, 2021
யாவருக்கும் ஒரே மாதிரி எண்ணங்களைத் தோன்றவைத்துவிட்ட நிகழ்வுகள் மிகவும் நன்றி. அன்புடன்