திருவாதிரைக் களி.
திசெம்பர் 16, 2013 at 6:22 முப 10 பின்னூட்டங்கள்
மூன்று வருஷத்திற்கு முன்பு எழுதியது. படம் பிரகு போடுகிறேன். அன்புடன் சொல்லுகிறேன்
என்னுடைய சொல்லுகிறேனில் எழுதியது. பார்த்தேன். பிரசுரித்தேன் வாழ்த்துகள்.
திருவாதிரை ஒருவாக் களிதின்னாதவா நரகக்குழி
இப்படி ஒரு வசனம் சொல்வார்கள் பழைய காலத்தில்.
நாம் களியை செய்து பார்த்து விடலாம்.
வேண்டியவைகள்—பச்சரிசி—1 கப்
துவரம் பருப்பு—2டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு—2 டேபிள் ஸ்பூன்
வெல்லப்பொடி—-ஒன்றறைக் கப்
நெய்—2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துறுவல்—அரைகப்
முந்திரி திராட்சை—-விருப்பம்போல்
ஏலப்பொடி—-சிறிது
இருந்தால்—ஒருஸ்பூன் தேன்
செய்முறை.——அரிசியைக் களைந்து உலர்த்தி சிவக்க வறுத்து
மிக்ஸியில் ரவை போல் பொடித்துக் கொள்ளவும்.
பருப்புக்களையும் வறுத்து ரவைபதத்தில் பொடிக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் இரண்டரைகப் ஜலத்தைநன்றாகக்
கொதிக்க விடவும். சிறிது நெய் சேர்க்கவும்.
தீயை நிதானப்படுத்தி கொதிக்கும் ஜலத்தில் உடைத்த ரவை,பருப்புக் கலவையைக்
கொட்டிக் கிளறவும். ஒரு துளி உப்பு சேர்க்கலாம்.
உப்புமா வேக வைப்பதுபோல் தட்டினால் மூடி நன்றாக வேக
வைக்கவும்.
வெல்லத்தை அமிழ ஜலம் விட்டுக் கரைத்து ஒரு கொதிவிட்டு
வடிக்கட்டி அதைப் பாகாகக் காய்ச்சவும்.
காய்ச்சிய பாகை வெந்த அரிசி ரவைக் கலவையில் கொட்டி
கலவை கெட்டியாகச் சேரும்வரைக் கிளறவும்.
நெய்யில், முந்திரி, திராட்சையை வறுத்து, தேங்காயைச்
சேர்த்துப் பிரட்டி கலவையில் சேர்க்கவும்.
ஏலப்பொடி, தேன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
களி ரெடி. பருப்பு உடைத்து சேர்ப்பதற்கு பதில்
முக்கால் பதம் வேக வைத்த பருப்பைக் கொஞ்சம்
பிழிந்தும் சேர்க்கலாம். நான் தற்போது டில்லி
வந்திருப்பதால் படம் எடுத்துப் போட சௌகரியப்
படவில்லை.
கொதிக்கும் ஜலத்திலே யே வெல்லத்தைப் போட்டு
கொதிக்கவிட்டு, ரவைக் கலவையைச் சேர்த்து,வேகவைத்துச்
செய்வதும் உண்டு.
View original post 12 more words
Entry filed under: இனிப்பு வகைகள்.
10 பின்னூட்டங்கள் Add your own
adhi venkat க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
GOPALAKRISHNAN. VAI | 9:02 முப இல் திசெம்பர் 16, 2013
திருவாதரைக் களி செய்முறை மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் சந்தோஷம். பகிர்வுக்கு நன்றி.
2.
chollukireen | 7:02 முப இல் திசெம்பர் 17, 2013
உங்கள் வரவுக்கும்,கருத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்
3.
இளமதி | 10:16 முப இல் திசெம்பர் 17, 2013
அம்மா… எனக்கும் ஒரு வா களி தாங்கம்மா…:)
அருமையா இருக்கு உங்க செய்முறையும்!
என் அம்மா செவக்க வறுத்த உ. பருப்பு, சிவப்பரிசி இரண்டையும் நீங்க சொன்னாப்போலவே குறுணையா உடைச்சு (கொஞ்சம் மாவாகவும் இருக்கும்)
சர்க்கரை – வெல்லம் துளி நீரில் கரையவிட்டு தேங்கா பிழிந்து பால் எடுத்து முதலாம் பால் திக்கான பாலை தனியே வைச்சுக்கொண்டு…
இரண்டாம் மூன்றாம் தரம் பிழியும் பாலை சர்க்கரைக் கரைசலில் சேர்த்து நன்கு கொதிக்கும்போது குறுணையை சேத்து கிளறுவாங்க. அப்புறம் அந்த திக்கான பாலை மேலுக்கு விட்டு நன்கு கிளறி நெய்யில் பொரித்த கஜூ, பழவத்தல் சேர்த்து இறக்கும்போது நல்லெண்னை 2 ஸ்பூன் விட்டு இறக்கினா….. வீடே கமகமன்னு போவோர் வருவோரையெல்லாம் கூப்பிடும்!..:)
ஹா… துளி உப்பும் சேர்க்கணும்…அதில்லைன்னா ருசிக்காது!
இது நம்ம ஊர்ல என்னோட அம்மா, அம்மம்மா கைப்பக்குவம்.
இங்க இருக்கும் என் அம்மா காமாக்ஷியம்மா கைப்பக்குவம் நாளைக்கு செய்யப்போறேன். வாரீங்களா சாப்பிட..:)
மிக்க நன்றிமா நல்ல பகிர்வு!
4.
chollukireen | 11:53 முப இல் திசெம்பர் 18, 2013
எடுத்துக்கொள் எவ்வளவு வேண்டுமோ. உனக்கில்லாததா. போவோர் வருவோரைக்கூப்பிடும் உன் அம்மா,அம்மம்மா வின் தேங்காய்ப்பால் சேர்த்த களி செய்து பார்க்கணும். இங்கு சமையல்கூட மைனஸ் தேங்காய். பரவாயில்லை. நீ ஏன் இந்தக் குறிப்புகளை படத்துடன் உன் வலையில் போடக்கூடாதா. என்ன வாரீங்களா கேட்டுள்ளாய்.வந்து பார்த்து,ரஸித்து விட்டுதான் வந்தேன்.மானஸீகமாக.
உன் பதில்களில் அன்பைக் கொட்டி விடுகிறாய். அதற்குத் தகுந்த பதில் ஊஹூம். எழுதத் தெரியவிலலை. வெறும் அன்புடன் மட்டும் தான் எழுத வருகிறது. இன்று அன்னையர்தினம் பதிவு 10 எழுதியுள்ளேன். அன்பிற்கு நன்றி. அன்புடன்
5.
இளமதி | 2:14 பிப இல் திசெம்பர் 18, 2013
அம்மா… நேத்து உங்களுக்கு எழுதியது போலவே இன்னிக்கு காலைல உங்க குறிப்புப் பிரகாரம் செய்து ஸ்வாமிக்கும் வைத்துக் கும்பிட்டு…
வீட்டாருக்குக் கொடுத்து நானும் சாப்பிட்டு…
இதோ கையில நெய் மணம் இன்னும் மணக்க மணக்க ஒடிவந்து எழுதுறேன்.
அருமையாக வந்திச்சு. அரிசிக் குறுணி மெல்லிய ரவைப் பதமா இன்னும் கொஞ்சம் சின்னதாப் போச்சு. ஆனாலும் ருசி அபாரம்.
படம் எடுத்து உங்களுக்கு காண்பிக்கலாம்ன்னு நினைச்சா இங்கின போட முடியாதே. அதனால அந்த யோசனையை கைவிட்டுட்டேன்.
உங்களுக்கு மிக்க நன்றிமா மீண்டும்…:)
6.
chollukireen | 4:12 முப இல் திசெம்பர் 23, 2013
செய்து,நிவேதித்து எல்லோருக்கும் கொடுத்து நீயும் ருசித்து, எவ்வளவு அருமையானசெய்கை. நான்தான் எல்லாம் சொல்ல வேண்டும். படம்பார்த்தமாதிரியே இருக்கிரது உன் சொற்கள். அது போதும். அன்புடன்
7.
Radha rani | 12:11 பிப இல் திசெம்பர் 17, 2013
வணக்கம் அம்மா..இந்த முறை திருவாதிரைக்கு களி,பருப்பு சேர்த்து உங்கள் முறையில் செய்ய போறேன்..மிக்க நன்றிம்மா..
8.
chollukireen | 2:20 பிப இல் திசெம்பர் 17, 2013
ராதாராணி வாம்மா. நல்லது. களி செய்து நிவேதனம் செய்து சாப்பிட்டு விட்டு எழுது. நானும் உன் தளத்தைப் பார்த்தேன். வருகிறேன். அடிக்கடி வந்து பின்னூட்டம் கொடு. மகிழ்ச்சியம்மா. அன்புடன் சொல்லுகிறேன்
9.
adhi venkat | 12:51 பிப இல் திசெம்பர் 18, 2013
ருசிகரமான பதிவு…அழகா சொல்லியிருக்கீங்க…
என்னுடைய திருவாதிரைக் களி இன்று என் பக்கத்தில்…பார்த்து சொல்லுங்கோம்மா..
10.
chollukireen | 4:15 முப இல் திசெம்பர் 23, 2013
உன்னுடைய காரியங்களுக்குக் கேட்கணுமா? உன்பதிவுக்கு பதில் எழுதிவிட்டுதான் இவ்விடம் வந்தேன்.அன்புடன்