ஒன்றில் மூன்று
ஜூலை 13, 2014 at 12:04 பிப 10 பின்னூட்டங்கள்
மாங்காய் ஸீஸனில் வாங்கியுள்ள மாங்காயை மூன்று ரகமாகச்
செய்ததுதான் இது.
இனிப்புத் தொக்கு ஒன்று, காரம் சேர்த்த தொக்கு ஒன்று. மாங்காய்ப்
பச்சடி ஒன்று. ஆக மூன்று ரகம்.
மொத்தமாகத் துருவியதில் மாங்காய்த் துருவல் அதிகமாக இருந்தது.
மூன்றாகப் பிரித்ததில் எல்லா வகையும் செய்ய முடிந்தது.
பச்சடி இன்னும் சுலபம். அடுத்து எழுதுகிறேன்
பார்ப்போமா உங்களுடன்.
காரமாங்காய் தொக்கு.
வேண்டியவைகள்.
துருவிய மாங்காய்—4கப். தோலைச் சீவி விட்டு மாங்காயைத் துருவவும்.
மிளகாய்ப்பொடி—-4 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்ப்பொடி—2 டீஸ்பூன்
நல்லெண்ணெய்–அரைகப்
ருசிக்கு– உப்பு
கடுகு—1 டீஸ்பூன்
வெந்தயம்—1 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன். விருப்பத்திற்கேற்ப சேர்க்கவும்.
செய்முறை–
கடுகையும்,வெந்தயத்தையும், சூடான வாணலியில் எண்ணெய்விடாது
வறுத்துப் பொடிக்கவும்.
செய்முறை
நான்ஸ்டிக் வாணலயிலோ, அல்லது அலுமினியம் வாணலியிலோ பாதி
எண்ணெயைக் காயவைத்து துருவிய மாங்காயைப் போட்டு வதக்கவும்.
புளிப்புக்குத் தக்கபடி உப்பு சேர்க்கவும். மஞ்சளும் சேர்த்து நிதான தீயில்
சுருள வதக்கவும்.
நீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் போது,மிளகாய்ப்பொடி,மீதி
எண்ணெயைச்சேர்த்துக் கிளறி, இறக்கி வெந்தயகடுகுப் பொடியைச் சேர்த்துக்
கிளறவும்.
பெருங்காயப் பொடியைச் சேர்த்துக் கிளறி ஆறினவுடன் ருசி பார்த்து
உப்பு காரம் ருசி பார்த்து சுத்தமான பாட்டலில் வைத்து மூடவும்.
ஃப்ரிஜ்ஜில் வைத்து நாள்ப்படவும் உபயோகப் படுத்தலாம். அடுத்தது
இனி.ப்புத் தொக்கு.
வேண்டியவைகள்
மாங்காய்த் துருவல்—-2கப்
வெல்லம்—-2கப்
உப்பு—ஒரு டீஸ்பூனைவிட அதிகம்
எண்ணெய்—-3 டேபிள்ஸ்பூன்
வறுத்தரைத்த சீரகம்,வெந்தயம், வகைக்கு ஒருஸ்பூன் பொடித்துக் கொள்ளவும்.
மிளகாய்ப் பொடி—-2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்ப்பொடி—சிறிது.
செய்முறை
நான் ஸ்டிக் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாங்காய்த் துருவலை
வதக்கவும். உப்பு , மஞ்சள் சேர்க்கவும்.
துருவல் வதங்கியதும், வெல்லத்தூளைச் சேர்த்துக் கிளறவும். வெல்லம் சேர்த்ததும்
சிறிது இளகும்.
நன்றாகக் கிளறிக்கொண்டே இருந்தால் மாங்காய் சேர்ந்து வெந்து, சுருண்டு வரும்.
கையில் ஒட்டாத பதத்தில் இறக்கி,வெந்தய,சீரகப்பொடியைச் சேர்த்துக் கிளறவும்.
பெருங்காயப்பொடி, அல்லது, சிறிது கரம் மஸாலாவும் சேர்த்துக் கிளறி
உபயோகிக்கலாம்.
இனிப்பு விருப்பமானவர்களுக்கு ரொட்டி,தோசை முதலானவற்றுடன் சேர்த்துச்
சாப்பிட நன்றாக இருக்கும்
. பச்சடியையும் எழுதிவிடுகிறேன்.
வேண்டியவைகள்
மாங்காய்த் துருவல்—அரைகப்
பச்சைமிளகாய்—3
வெல்லம்—-முக்கால்கப்,
துளி–உப்பு
எண்ணெய்—2 டீஸ்பூன்
கடுகு,பெருங்காயம்–சிறிது
வறுத்த வெந்தயப்பொடி,சீரகப்பொடி சிறிது.
செய்முறை
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகை வெடிக்க விட்டுநறுக்கிய பச்சை
மிளகாயை வதக்கி மாங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கவும்.
துருவல் வதங்கியதும் , அரைகப் தண்ணீர் சேர்த்து ,வெல்லமும் சேர்த்து
கொதிக்க விடவும். உப்பு,பெருங்காயம்,மஞ்சள் சேர்க்கவும்.
கொதித்துச் சற்றுக் குறுகி வரும்போது இறக்கி, வெந்தய,சீரகப்பொடியைச்
சேர்க்கவும்.
பச்சடி தயார். நீர்க்க இருந்தால் துளி மாவு கரைத்துச் சேர்த்து ஒரு கொதி விடவும்.
அவ்வளவுதான்.
மொத்தமாக கடுகு வெந்தயப் பொடிகள் இருந்தால் ஊறுகாய் வகைகளுக்கு சீக்கிரமே
தயார் செய்ய உபயோகமாக இருக்கும்.
Entry filed under: Uncategorized.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 8:19 முப இல் ஜூலை 14, 2014
மிக அழகான படங்களுடன் அருமையான செய்முறை சொல்லியிருகிறீர்கள். சந்தோஷம். நான் இனிப்புத் தொக்கோ, மாங்காய் இனிப்புப்பச்சடியோ தொடுவதே இல்லை. காரம் போட்ட மாங்காய்த் தொக்கு எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் கலர் மாறாமல் கருப்பாகாமல் புதுசாயிருந்தால் மட்டும் விரும்பிச் சாப்பிடுவேன்.
பகிர்வுக்கு நன்றிகள், மாமி. அன்புடன் கோபு
2.
chollukireen | 8:07 முப இல் ஜூலை 15, 2014
உங்களுடைய விருப்பங்களே சில தேர்ந்தெடுத்தவைகள்தான் பிடிக்கும். அம்மாதிரியே அவரவர்கள் விருப்பு,வெருப்பு தனிதான். சின்ன வயதில்
இனிப்பே தொடாத நான் இப்போது இனிப்பு விரும்பிச் சாப்பிடுகிறேன். ருசிகள் கூட சில ஸமயம் மாறும்.
உங்களின் பாராட்டுகளுக்கு மிகவும் ஸந்தோஷிக்கிறேன். எல்லாம் சென்னை உபயம்.
உடனுக்குடன் பாராட்டியதற்கு மிகவும் நன்றி. அன்புடன்
3.
adhi venkat | 7:26 முப இல் ஜூலை 15, 2014
மூன்றுமே எனக்கு பிடித்த ரெசிப்பிகள். காரத் தொக்கு எப்போதும் செய்வது தான். பிரமாதம்.
4.
chollukireen | 8:11 முப இல் ஜூலை 15, 2014
உந்தன் மறு மொழிக்கு வரவேற்பம்மா.அதிகச் சிலவாவது காரத் தொக்குதான். மாங்காய் சீஸன் முடிந்து கொண்டு இருக்கிறது. அன்புடன்
5.
இளமதி | 7:57 முப இல் ஜூலை 15, 2014
அம்மா.. அத்தனையும் வாயூற வைக்கின்ற சமாச்சாரங்களாய் இருக்கே..:)
நான் இங்கே மாங்காய் கிடைத்தால் பச்சடி மட்டுமே செய்வதுண்டு. அதற்கே எப்பவாகிலும்தான்… கிடைக்கணுமே!
ஜேர்மனிய சுப்பர் மார்கட்டில் கிடைக்கும் காய்களை நம்பி எதுவும் செய்ய இயலாது. கிட்டத்தட்ட பழுக்கும் நிலைக்கு வந்துவிடும்.
அடுத்த முறை வாங்கும்போது காரத்தொக்கு செய்து பார்க்க ஆவலாயிருக்கு. பார்க்கிறேன்.
அருமையான பதிவு! மிக்க நன்றி அம்மா!
6.
chollukireen | 8:18 முப இல் ஜூலை 15, 2014
இளமதி, மாங்காயை ஊறுகாய்க்கு நறுக்கினால், மஞ்சள் மசுக்க நான் பழுக்கிறேனம்மா என்று சொல்வது போல இருக்கும். அசட்டு புளிப்போடு இருக்கும் அதனை பச்சடிதான் செய்வேன். பார்க்க பச்சையும்,சிவப்புமாக
அழகாக இருக்கும். இந்த அனுபவம் நிறைய எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்த ஞாபகம் வந்தது.
எப்படியானால் என்ன உன்னுடன் அளவளாவச் சான்ஸ் கிடைத்தது. இது போதுமே! அன்புடன்
7.
மகிஅருண் | 11:27 பிப இல் ஜூலை 22, 2014
பார்க்கவே அருமையா இருக்குமா மாங்காய் வகைகள்! நான் இன்னும் மா-பலா சாப்பிட ஆரம்பிக்கலை! சாப்பிட்டாலும் இப்படியான மாங்காய்க்கு இங்கே எங்க போவது?! 😉 🙂
8.
chollukireen | 10:17 முப இல் ஜூலை 25, 2014
கிடைக்கும் மாங்காயைக் கொண்டும் செய்து பார்க்கலாம். சிறிது சிறிதாக எல்லாம் எப்போதாகிலும் உபயோகிக்கலாம்.
உன் மறுமொழி பார்க்க மிகவும் ஸந்தோஷமாக இருக்கிறது. அன்புடன்
9.
chollukireen | 8:01 முப இல் மே 29, 2015
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
மாங்காய் ஸீஸன் இது. நல்ல மாங்காய் கிடைக்கும்போது செய்து ருசிக்க சென்ற மாங்காய் ஸீஸனில் எழுதிய குறிப்புகளே இது. மறுபதிவு செய்யத் தோன்றியது. பார்த்தோ,செய்தோ ருசியுங்கள். ஒரு வரி எழுதுங்கள்.
10.
yarlpavanan | 11:45 முப இல் மே 29, 2015
ஒரு கல்லில
இரண்டு மாங்காய்
கேள்விப் பட்டிருக்கிறேன்!
ஆனால்,
ஒரு மாங்காயில
இனிப்புத் தொக்கு,
காரம் சேர்த்த தொக்கு
மாங்காய்ப் பச்சடி ஆக
மூன்றான கதை – இப்ப தானே
படித்தேன்!
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்