காரக்குழம்பு
நவம்பர் 7, 2014 at 11:49 முப 19 பின்னூட்டங்கள்
சமையல் எழுதியும் வெகு நாட்களாயிற்று. ஏதாவது எழுதுவோம்
என்றுத் தோன்றியது.
சென்னையிலிருந்தபோது என் பெண்ணின் சினேகிதி ஒருவர்
வந்திருந்தாள்.
இது எப்படி,செய்வீர்கள், அது எப்படிச் செய்வீர்களென்று பல வித
குறிப்புகளைக் கேட்டுக் கொண்டே இருந்தாள்.
எனக்கும் கேட்ட விஷயங்களில், சில வித்தியாஸமான அவளின்
சமையல் குறிப்புகளையும் சொன்னாள்.
நமது வழக்கமான குறிப்புகளில் அவர்களது சின்ன வித்தியாஸம்.
நான் காரக்குழம்பு என்ற பெயரில் செய்ததில்லை. மற்றும்
ஹோட்டலில் சாப்பிடப் போனால் கூட இப்படி ஒரு வகையும்
கொடுப்பது தெரிந்தது.
ஸரி இதையும் செய்ததில், நல்ல சுவையுடன் விரும்பிச்
சாப்பிடுவதை பார்க்க முடிந்தது.
ப்ரமாதம் ஒன்றுமில்லை. வெங்காயப்,பூண்டு சேர்மானம்.
பிடித்தவர்களுக்கு ருசி.
வாருங்கள். செய்து ருசியுங்கள். சின்ன அளவில்ச் செய்தது.
அதையே நீங்களும் செய்து பாருங்கள்.
வேண்டியவைகளைப் பார்ப்போம்.
அரைப்பதற்கு
வெங்காயம்—-ஒன்று. ஸாம்பார் வெங்காயமானால் எண்ணிக்கையில்
ஏழு அல்லது எட்டு. தோல் நீக்கவும்.
தக்காளிப்பழம்—-ஒன்று
உரித்த பூண்டு இதழ்கள்—5
மிளகு—8.
கரைக்க— புளிஒரு பெரிய நெல்லிக்காயளவு
பொடிகள்
ஸாம்பார்பொடி—1 டீஸ்பூன்
வெந்தயப்பொடி—கால் டீஸ்பூன்.
தாளித்துக் கொட்ட
கடுகு,உளுத்தம் பருப்பு—சிறிதளவு
பெருங்காயம்—சிறிது
மிளகாய் வற்றல்—1
நல்லெண்ணெய்—-4 டீஸ்பூன்.
வாஸனைக்கு—கரிவேப்பிலை
ருசிக்கு—உப்பு.
செய்முறை.
புளியை நன்றாக ஊற வைத்து ஒரு கப் அளவிற்குக் கரைத்துக் கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் தண்ணீர் விடாது அரைத்துக்
கொள்ளவும்.
புளித் தண்ணீரில் அரைத்ததைச் சேர்த்துக் கரைக்கவும்.
திட்டமாக உப்பு சேர்க்கவும்.
ஸாம்பார்பொடி,வெந்தயப் பொடியையும் சேர்க்கவும்.
குழம்புப் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி,தாளிக்கக் கொடுத்தவற்றை
தாளித்துக் கொட்டி, புளிக் கலவையை சேர்த்துக் கொதிக்க விடவும்.
பாதியளவாகச் சுண்டி வரும்போது இறக்கிவைத்து கறிவேப்பிலையால்
அலங்கரிக்கவும்.
வாஸனையாகவும் இருக்கும், அழகாகவும் இருக்கும்.
எல்லாவற்றுடனும் சேர்த்து விருப்பம் போலச் சாப்பிடலாம்.
இருக்கும் ஸாமான்களை வைத்தே காரக் குழம்பாம்.
மிக்க நன்றாக இருக்கிறதென்று செலவாயிற்று.
நீங்களும் செய்யலாமே.
காரம் அதிகம் வேண்டுமானால் மிளகாய் அதிகப்படுத்தவும்.
Entry filed under: குழம்பு வகைகள்.
19 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 12:13 பிப இல் நவம்பர் 7, 2014
காரசாரமான மிகவும் விறுவிறுப்பான பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 7:47 முப இல் நவம்பர் 11, 2014
முதல் மறுமொழி. வழக்கம்போல் ஸந்தோஷம். .ஆசிகளுடனும், அன்புடனும்.
3.
ranjani135 | 5:13 பிப இல் நவம்பர் 7, 2014
தேவையான பொருட்கள் எல்லாமே வீட்டில் இருப்பதுதான். அதேபோல செய்முறையும் சுலபமாக இருக்கிறது. ஒருநாள் செய்து பார்க்கவேண்டும். போட்டோவில் பார்க்க நாவில் நீர் ஊறுகிறது.
பாராட்டுக்கள்!
4.
chollukireen | 7:51 முப இல் நவம்பர் 11, 2014
பூண்டு சேர்ப்பதில்லை,மாட்டுப் பெண்ணிற்கும்,பெண்ணிற்கும் சொல்கிறேன் என்று எழுதுவீர்களென்று நினைத்தேன்.. செய்து பாருங்கள்.
எது வேண்டாமோ அதை நீக்கி,வெறெதுவாவது சேர்த்தும் செய்யலாம். நன்றி அனபுடன்
5.
பார்வதி இராமச்சந்திரன். | 1:56 முப இல் நவம்பர் 9, 2014
ஹோட்டல்களில் சாப்பிடும் போது எப்படி செய்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வதுண்டு.. இப்போது செய்முறை தந்துவிட்டீர்கள்!.. தாங்கள் குறிப்புகள் எழுதும் முறையே மிக நேர்த்தியாக இருக்கிறதம்மா!..இன்று விடுமுறை.. செய்து பார்க்கிறேன். ரொம்ப நன்றிம்மா!..
6.
chollukireen | 7:54 முப இல் நவம்பர் 11, 2014
செய்து ருசித்தாயா பார்வதி! நான் கூட உன் மாதிரி நினைத்ததுண்டு. உன் பாராட்டுதலுக்கு நன்றி பெண்ணே..
7.
yarlpavanan | 7:15 முப இல் நவம்பர் 10, 2014
சிறந்த செய்முறை வழிகாட்டல்
தொடருங்கள்
8.
chollukireen | 7:55 முப இல் நவம்பர் 11, 2014
அப்படியா?உங்கள் பாராட்டுதலை வரவேற்கிறேன். நன்றி. அன்புடன்
9.
angelin | 8:47 முப இல் நவம்பர் 10, 2014
என்னக்கு மிகவும் பிடிக்குமம்மா இந்த கார குழம்பு !! இட்லி தோசைபொங்கல் உப்புமா ரொட்டி என எல்லாத்துக்கும் இதை தொட்டு சாப்பிடுவேன் !!நான் செய்யும் பொது நீர்த்து வரும் இப்போ தான் அறிந்தேன் அரைக்காமல் செய்தா அப்படிதான் வரும் இம்முறையில் செய்கிறேன் ..ருசியான பகிர்வுக்கு நன்றிம்மா 🙂
10.
chollukireen | 7:57 முப இல் நவம்பர் 11, 2014
அஞ்சு உனக்குப் பிடிக்கும் என்றுதான் எழுதினேன் போலும்.. கேட்க ஸந்தோஷமாக இருக்கிரது.. சுவையான உன் மறுமொழி வரவேற்பைப் பெருகிறது. அன்புடன்
11.
chitrasundar | 10:33 பிப இல் நவம்பர் 10, 2014
காமாஷிமா,
காரக் குழம்பின் நிறமும், கருவேப்பிலையிலிருந்து வரும் வாசமும் உடனே செய்து சாப்பிட வேண்டும்போல் உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்ததில் மகிழ்ச்சிம்மா. அன்புடன் சித்ரா.
12.
chollukireen | 8:05 முப இல் நவம்பர் 11, 2014
இந்தியா போய் வந்த பிறகு , அனுபவ உணர்ச்சிகள் குறித்துத் தகவல்கள் வரும் என்று எதிர்ப்பார்த்தேன்.
எல்லோரையும் பார்த்து வந்தபிறகு மனம் சற்று ஆறுதலடைந்திருக்கும்.. மைனஸ்–அம்மா இல்லாத பிறந்தகம் . நான் மனதிலே கற்பனை செய்துகொண்டு இருக்கிறேன். உன்னைப் பற்றி..
யாவரும் சுகமா?
பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி. அன்புடன்
13.
மகிஅருண் | 6:07 முப இல் நவம்பர் 22, 2014
காமாட்சிம்மா, காரக்குழம்பு செய்தேன், எங்கள் வீட்டிலும் மிக்க நன்றாயிருக்கின்றதென்று செலவாயிற்று! 🙂
14.
chollukireen | 12:20 பிப இல் திசெம்பர் 6, 2014
மிக்க ஸந்தோஷம் மஹி நீபாராட்டினால் அது மிகவும் ருசிதான்.அன்புடன்
15.
மகிஅருண் | 6:07 முப இல் நவம்பர் 22, 2014
அடுத்த முறை செய்யும்போது படமெடுத்து பகிர்கிறேன் அம்மா! குறிப்புக்கு மிக்க நன்றி!
16.
chollukireen | 12:22 பிப இல் திசெம்பர் 6, 2014
பகிரும்போது தவராமல் எனக்குச் சொல்லு. அதிக ஸந்தோஷம் ஏற்படும். அன்புடன்
17.
MahiArun | 3:13 முப இல் மார்ச் 22, 2015
காமாட்சிம்மா, காரக்குழம்பு ப்ளாகில் போட்டிருக்கேன். இட்லி தோசை வகைகளுக்கு நல்ல பொருத்தம். நேரம் இருக்கையில் பாருங்க, நன்றி அம்மா!
http://mahikitchen.blogspot.com/2015/03/blog-post_20.html
18.
ஸ்ரீராம் | 12:41 முப இல் ஜூலை 30, 2018
அம்மா… இந்தப் பதிவு இப்போதான் பார்க்கிறேன். அஞ்சுவுக்கு நன்றி! இதே அளவில் நானும் ஒருமுறை செய்து பார்த்து விடுகிறேன்.
19.
chollukireen | 7:22 முப இல் ஜூலை 30, 2018
நான் இம்மாதிரி,கண்டது,கேட்டது மாதிரி சிலவகைகள் அவ்வப்போது எழுதி இருக்கிறேன். நீங்கள் இங்கு வந்து பார்த்து பின்னூட்டம் எழுதியுள்ளீர்கள். ஸந்தோஷம். அன்புடன்