மூலிபரோட்டா என்று அழைக்கப்படும் முள்ளங்கி சேர்த்த ரொட்டி
திசெம்பர் 2, 2014 at 10:52 முப 15 பின்னூட்டங்கள்
நாம் இதுவரை பலவித ரொட்டிகள் செய்திருக்கிறோம். அதில்
மூலி பரோட்டாவும் ஒன்று.
இது செய்முறை சற்று மாறுபட்டது. நல்ல நவம்பர்,டிஸம்பர்
மாதங்களில், குளிர் காலத்தில் செழுமையான நல்ல முள்ளங்கி
கிடைக்கும். நீரோட்டமாக ருசியும் நன்றாக இருக்கும்.
நம் பக்கத்தில் ஸாம்பார்,கறி,கோசுமல்லி என்று செய்தாலும்
அதிகம் பரோட்டா செய்வதில்லை.
வடஇந்தியாவில் இருந்ததால் எனக்குச் செய்துக் கொடுப்பது,
என்பது வழக்கமாகப் போய்விட்டது.
ஸரி,முள்ளங்கியைப் பாரத்ததும், இதை இதுநாள் வரை
எழுதவில்லையே என்றுத் தோன்றியது.
மாவுடன் முள்ளங்கியைச் சேர்த்துப் பிசைந்துச் செய்வது உண்டு.
இப்பொழுதெல்லாம் முள்ளங்கித் துருவலை உள்ளடக்கித்தான் செய்கிறேன்.
மைதா,கோதுமைமாவு எதில் வேண்டுமானாலும் செய்யலாம்.
இரண்டு மாவைக் கலந்தும் செய்யலாம்.
வேண்டிய ,ஸாமான்கள்
நல்ல பருமனான முள்ளங்கி—-1
சீரகப்பொடி—-அரை டீஸ்பூன்
தனியாப்பொடி—அரைடீஸ்பூன்
பச்சைமிளகாய்—காரத்திற்குத் தகுந்த மாதிரி. 1
இலையாக ஆய்ந்த பச்சைக் கொத்தமல்லி—-சிறிது
கோதுமைமாவு—2கப்
ருசிக்கு—உப்பு
எண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
மேல்மாவு—சிறிது.
செய்முறை.
முள்ளங்கியைச் சுத்தம் செய்து, தோலைச் சீவிவிட்டு, சற்றுப்
பெரியதான சைஸில் கொப்பரைத் துருவலில் துருவிக் கொள்ளவும்.
துருவிய முள்ளங்கித் துருவலை நன்றாகப் பிழிந்து ஒரு கிண்ணத்தில்
சாற்றை எடுத்துக் கொள்ளவும்.
மெல்லிய தேங்காய்த் துருவல்போல முள்ளங்கி இருக்கட்டும்.
பச்சை மிளகாயைக் கீறி விதை நீக்கி,கண்ணிற்குத் தெரியாத அளவிற்குப்
பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கொத்தமல்லி இலையையும் நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய்,பொடிகள்,,கொத்தமல்லி சேர்த்துத் துருவலைக் கலந்து
வைத்துக் கொள்ளவும்.
மாவுடன்,உப்பு,எண்ணெய் கலந்துபிழிந்து வைத்திருக்கும் முள்ளங்கிச்
சாற்றை விட்டு மாவைப் பிசையவும்.
மேற்கொண்டு வேண்டிய அளவிற்குத் தண்ணீரைவிட்டு
கெட்டியான மாவாகப் பிசைந்து சிறிது நேரம் மூடி வைத்து ஊற
விடவும். பிசைந்த மாவின் படம் போடவில்லை.
உங்களுக்கே தெரியுமல்லவா?
மாவை இழுத்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாகப் பிரித்து
உருட்டிக் கொள்ளவும்.
அப்பளாம் இடும்போது சிறிய வட்டங்கள் முதலில் இட்டுக் கொள்வோமே.
முதலில் அதுமாதிரி சிறிய பூரியளவிற்கு , 2 வட்டங்கள் மேல் மாவில்
உருண்டையைப் பிரட்டித் தயாரித்துக் கொள்வோம்.
ஒரு வட்டத்தின் மேல் லேசாக எண்ணெயைத் தடவவும்.
கலந்து வைத்திருக்கும் முள்ளங்கித் துருவலில் லேசாக உப்பைக் கலந்து
வட்டத்தின் ஓரத்தில் மார்ஜின் மாதிரி துளி இடத்தை விட்டு விட்டு
சிறிதளவு துருவலைப் பரப்பவும்.
அடுத்து வைத்துள்ள மற்ற வட்டத்தை, ஸரியாக மேலே போட்டு
ஓரத்தை நன்றாக அழுத்தவும்.
மேல் மாவை ஒற்றி எடுத்து,, முடிந்தஅளவிற்கு பரோட்டாவாக இடவும்.
குழவியால் மிகவும் அழுத்தாமல் இடவும்.
மேல் மாவை லேசாகத் தூவித் துடைத்தும் செய்யலாம்.
இப்படியே ஒவ்வொன்றாகத் தயார் செய்து, காயும் தோசைக்கல்லில்
பரோட்டாவைப் போட்டுத் திருப்பி,லேசாக அழுத்தம் கொடுத்து, நெய்யோ,
எண்ணெயோ எது இஷ்டமோ அதை விட்டு நல்ல பதத்தில் இரண்டு புறமும்
சிவக்க செய்தெடுக்கவும்.
சட்னி,டால்,தயிர், கூட்டுகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
கார ஸாரமாகச் செய்தால் அப்படியே கூடச் சாப்பிடலாம்.
உடன் சாப்பிட கடலைப்பருப்பு ஸப்ஜியும் கீழே இருக்கிறது.
பின் குறிப்பு—- முள்ளங்கியில்நார்ச்சத்து,புரதம்,இரும்பு,பாஸ்பரஸ்,
கால்ஷியம் என எல்லா ஸத்துக்களும் உள்ளது.
முள்ளங்கியின் காய்களை வட இந்தியாவில் மூங்ரா என்று சொல்வார்கள்.
அதிலும் கறிவகைகள் செய்யலாம். என்னுடைய கறிவகைக் குறிப்புகளில்
மூங்ரா ஸப்ஜியும் உள்ளது.
முள்ளங்கிக் கீரை இளசாக நருக்கிச் சேர்த்து ரொட்டியும் செய்வதுண்டு.
வெந்தயக்கீரை ரொட்டி,அதுதான் மேதிப் பரோட்டா மாதிரி.
நிறைய படங்களா?
Entry filed under: ரொட்டி வகைகள்.
15 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
mahalakshmivijayan | 4:34 முப இல் திசெம்பர் 3, 2014
நான் சூரத்தில் இருக்கும் போது மேத்தி பரோட்டா செய்து ருசித்து இருக்கிறேன். பக்கத்து வீட்டில் இருந்த தோழி ஒருவர் ஆலூ பரோட்டாவும் கோபி பரோட்டாவும் செய்ய கற்று கொடுத்தார். முள்ளங்கி பரோட்டா இதுவரை சாப்பிட்டது இல்லை.. செய்து பார்க்கிறேன் 🙂
2.
chollukireen | 8:39 முப இல் திசெம்பர் 5, 2014
மற்ற பரோட்டாக்கள் செய்து பழக்கமிருப்பதால் இதுவும் எளிதில் செய்து விடலாம். கல்கத்தாவில் ஒவ்வொரு முள்ளங்கியும் அதிக எடையுடன் இளசாகவும் கிடைக்கும். ருசியும் அலாதி..இப்படிச் சில ஊர்களில் சில பொருள்கள் விசேஷமாகக் கிடைக்கும்.
அதிலும் சிவப்பு முள்ளங்கி எனப்படும் மஜந்தா கலர் என்று நான் சொல்லும் முள்ளங்கி மிகவும் விசேஷமானது. கிடைக்கும் முள்ளங்கியில் செய்து பார். உடனே கமென்டிற்கு மிகவும் நன்றி. கார்த்திகை
ஆசிகள். அன்புடன்
3.
பார்வதி இராமச்சந்திரன். | 9:58 முப இல் திசெம்பர் 3, 2014
இது வரை நான் செய்யாதது இது!.. இது போல் கொஞ்சம் வித்தியாசமாகச் செய்தால் ஒரு ‘வெரைட்டி’ கிடைக்குமே!.. கடலைப் பருப்பு சப்ஜி எப்படி செய்ய வேண்டும் என்று பதிவில் இருக்கிறதா அம்மா?!.
4.
chollukireen | 8:42 முப இல் திசெம்பர் 5, 2014
வினாவும் நீயே விடையும் நீயே. ஆசிகள் அன்புடன்
5.
பார்வதி இராமச்சந்திரன். | 10:10 முப இல் திசெம்பர் 3, 2014
பதிவில், டால் வகைகளின் கீழ், கடலைப்பருப்பு சப்ஜி செய்முறை இருப்பதைப் பார்த்து விட்டேன் அம்மா!.. கட்டாயம் செய்து பார்க்கிறேன் இரண்டையும்.. அளவுகள் தாங்கள் குறிப்பிடுவது துல்யமாக இருக்கிறது எப்போதும்!.. மிக்க நன்றி!.
6.
chollukireen | 8:44 முப இல் திசெம்பர் 5, 2014
மிக்க மகிழ்ச்சி. எதனுடனும் சாப்பிடலாம். அப்படியேவும் சாப்பிடலாம். அக்கரையுடன் பார்த்திருக்கிராய்.செய்தும்பார். நன்றி அன்புடன்
7.
chitrasundar | 4:26 பிப இல் திசெம்பர் 3, 2014
காமாக்ஷிமா,
சிரமம் பாராது படங்களுடன் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சிதானேம்மா.
நான் எல்லாவற்றையும் வதக்கி மாவுடன் பிசைந்து செய்வேன். இது வித்தியாசமாக இருக்கிறது. வார இறுதியில்தான் முள்ளங்கி வாங்கிவந்து செய்ய வேண்டும். ஸப்ஜி டாலையும் பார்த்தாச்சு. அடுத்த திங்கள் கிழமை இரவுக்கு இப்பொழுதே ஒரு சமையல் ரெடி. ஹா! ஹா! ஹா! அன்புடன் சித்ரா.
8.
chollukireen | 8:51 முப இல் திசெம்பர் 5, 2014
பதிவுபோட நினைக்கவே இல்லை. போட்டேன். மகிழ்வுதான். நானும் உன்மாதிரி செய்ததுண்டு. சமையல்களே நம்முடையதும் மாறிக்கொண்டே வருகிறது. அதுபோல் இதுவும். செய்து பழக்கம் வந்து விட்டால் எதுவுமே பிரமாதமில்லை. ஆனால் இப்போது
சமையல் உள் கிடைத்து சான்ஸைப் பிரயோசனப்படுத்துகிறேன். எப்போதாவது. நன்றி அன்புடன்
9.
chollukireen | 11:51 முப இல் ஜூலை 28, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
மூலி பரோட்டா மீள் பதிவு செய்து இருக்கிறேன். பாருங்கள் செய்து. இது ஒருவகை. அன்புடன்
10.
ஸ்ரீராம் | 12:21 முப இல் ஜூலை 29, 2021
ஏற்கெனவே படித்த நினைவு. இன்னமும் முயற்சித்துப் பார்க்கவில்லை. சிரமம் என்னவென்றால் வீட்டில் முள்ளங்கி பிடித்தது நான் மட்டும்தான்!
11.
chollukireen | 11:25 முப இல் ஜூலை 29, 2021
இப்படியும் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டால் போதும்.நன்றி. அன்புடன்
12.
நெல்லைத்தமிழன் | 3:01 முப இல் ஜூலை 29, 2021
படங்களோடு செய்முறை அருமையாக வந்துள்ளது. பாராட்டுகள்.
எங்க வீட்டில் இது போணியாகுமான்னு சந்தேகம். வெகு அபூர்வமாக வாங்கும் முள்ளங்கியில் சாம்பார் செய்யச் சொல்லி வெண்பொங்கலுக்குச் சாப்பிடுவேன்.
13.
chollukireen | 11:31 முப இல் ஜூலை 29, 2021
மிக்க நன்றி. எல்லாமே செய்ய வேண்டுமா என்ன
நீங்கள் பதிவு 28 அன்னையர் தினம் பார்க்கவில்லையா? ஸாம்பாரில் முள்ளங்கி மிக்க ருசிதான். அன்புடன்
14.
Revathi Narasimhan | 11:13 பிப இல் ஜூலை 29, 2021
அன்பு காமாட்சிமா,
மூலி பரோட்டாவுக்கு மிக நன்றி.
அருமையாகப் படம் எடுத்துப் போட்டு இருக்கிறிர்கள்.
மருமகள் நிறைய செய்வாள்.
தில்லிப் பெண்:)
முள்ளங்கி பிடிக்காதவர்களுக்கு சிரமம்.
அதற்குப் பதிலாக வேற காய்கறி
போட முடியுமா என்று பார்க்கிறேன் மா.
படங்களுடன் சொன்ன விதம் அருமை …
15.
chollukireen | 11:34 முப இல் ஜூலை 30, 2021
என்னுடைய தில்லி மருமகள் பப்பாளிக்காயைத் துருவி செய்வாள். எனக்கு அந்த ருசி அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ருசிகளும் இப்படிப் பல விதம். பாராட்டுகள் மிகவும் நன்றி. அருமையாக இருக்கிறதா. அன்புடன்