அன்னையர் தினப்பதிவு–19
திசெம்பர் 22, 2014 at 10:45 முப 21 பின்னூட்டங்கள்
தொடருங்கள் எழுதுகிறேன் என்று சொன்னேனல்லவா?
வருஷா வருஷம் குப்பை மேட்டில் தானாக முளைத்துக் காய்க்கும்
சில கொடிகள். தப்பு முதல் என்று சொன்னாலும் காய்கள் அவ்வளவு
செழிப்பாகக் காய்த்து மகசூல் கொடுக்கும். பூசணி,பறங்கியைத்தான்
சொல்கிறேன்.
கிராமங்களில் அதிகம் ஓடு வேய்ந்த வீடுகளல்லவா? இப்படி முளைக்கும்
கொடிகளை மெள்ள ஓட்டின்மீது ஏற்றி விட்டு விட்டால்ப் போதும்.
பிறர் கண்ணுக்குத் தெரியாத அளவிற்குக் காய்களைக் காய்த்துத்
தள்ளும். பறங்கி,பூசணி எதுவானாலும் மார்கழிக்கோலங்களுக்கு அழகு
சேர்க்கஎனக்கு உனக்கென தேவை அதிகமாக இருக்கும்.கோலங்களின்
நடுவே, சிறிய பசுஞ்சாண உருண்டைகளின்மேல் மஞ்சள் நிற இப்பூவை
வைப்பதால் வீட்டிற்கும்,கன்னிப் பெண்களுக்கும் மிகவும் நல்லது என்ற
நம்பிக்கை.
பிஞ்சுகாய், முற்றினது, என வேண்டியவர்கள் எல்லோருக்கும் ஸப்ளை
ஆகும். இது வருஷாவருஷம் நிகழும் நிகழ்ச்சி.
சாம்பல் பூசணிக்காய் என்றால் வெயில் நாளில் பொரிவடாம் இட, சமைக்க
என நிறைய காய்கள் முன் ரிஸர்வு செய்து விடுவார்கள்.
எங்கள் ஊர் பூசணிக்காய் போட்ட பொரிவடாம் மிகவும் பிரஸித்தி..
தனியாகத்தான் பதிவு செய்ய வேண்டும்.
இது எங்கள் வீட்டில் காய்ப்பதும் பிரஸித்தி.
கொடியிலேயே காம்பு காய்ந்து நன்றாக முற்றின காய்களாகப் பார்த்து
பிறகு அதனைப் பறித்து , கயிற்றினாலான உறிகளில் பிரிமணையைப் போட்டு
அதன்மேல் வைத்து விடுவார்கள்.
காய்கள் ஆடாது அசங்காது, கெட்.டும் போகாது.
பார்ப்பதற்கு அவைகள் ஊஞ்சல் ஆடுவது போல் தான் இருக்கும்..
காய்கள் காய்க்கும் போதே முக்கியநாட்களில் அமாவாஸைக்கு முதல்நாள்,
துவாதசிக்கு முதல்நாள் என்று, காயைப் பங்கு போட்டு யாவருக்கும்
கொடுப்பார்கள்..
பொரிவடாம் இடுவதென்பது தேர்த்திருவிழா, கூட்டாஞ்சோறு மாதிரி
நான்கைந்து பேராகச் சேர்ந்து ஒவ்வொருவர் ஒவ்வொருநாள் ஏற்பாடு
செய்து கொண்டு செய்வார்கள்.
இட்டவர்கள் வீட்டில் சாப்பாடு.. காரம் கையில் எரிந்து கொண்டு, எண்ணெயைக்
கையில் தடவிக்கொண்டு,அஸ்,உஸ் என்று தண்ணீரில் கை வைத்துக்கொண்டு
திண்டாடினாலும் வடாம் ஆசை விடவே விடாது..
எங்கம்மாவிற்கு காய்களைப் பார்த்தால் ஏதாவது விசேஷமாக எல்லோரையும்
கூப்பிட்டுச் சாதம் போடவேண்டுமென்ற ஆசை தோன்றும்.
அடிக்கடி சொல்லும் வார்த்தை இது.
அந்த ஆசைக்கேற்றார்போல் பேத்தி பெரியவளானாள்.
எங்கள் காலத்திற்கு முற்பட்ட காலம், சாரதா சட்டத்திற்கு பின்னாடி
பெண்கள் விவாகத்திற்கு முன் வயதுக்கு வந்தால், அதை சொல்லவே
கூசுவார்கள். அதற்காக மூடிமரைத்து தனியாக வைத்தாற்கூட
,ஜுரம் உடம்பு ஸரியில்லை என்று ஏதேதோ சொல்லுவார்கள்.
எல்லோரும் அப்படி இல்லை. இந்த பிராமண வகுப்பாரிடம் இந்த மூட
நம்பிக்கை பரவலாகச் சிறிதுகாலம் இருந்தது.
மற்ற வகுப்பினர் இதை மஞ்சள்த் தண்ணீர் சுற்றுவதென்று பிரமாதமாகக்
கொண்டாடுவார்கள்.
நம்மில் கொண்டாடாவிட்டாலும், புட்டு சமைப்பது,மற்றும் வீட்டுவரையில்க்
கொண்டாடுவதென்பதும் இருந்தது.
எங்கள் காலத்திலேயே அம்மா இதை பிரமாதமாகக் கொண்டாடாவிட்டாலும்
மறைக்க முயலவில்லை.
அம்மாவின் பேத்தி காலத்தில், ஊரில் யாவருமே வைபவமாகக் கொண்டாட
ஆரம்பித்து விட்டார்கள்.
அம்மாவிற்கும் ஒரு சான்ஸ் கிடைத்தது.
நகரங்களில் பெண் குழந்தைகள்
கோ எஜுகேஷனில் படிக்கிரார்கள். ஆதலால் இதெல்லாம் கொண்டாட்டம்
எதற்கு என்று செய்வதில்லை. அம்மாவை நான்
வீட்டில் காய்த்த பூசணிக்காயை சமைத்தும் போட்டிருப்போயே என்று
சொல்வதுண்டு.
எனக்குத் தந்தி மூலம் பெண் பெரியவளானாள் என்ற செய்தி வந்தது.
அப்போதெல்லாம் போன் வசதிகள் கிடையாது.
நான் கருமமே கண்ணாயினாள்.
குடும்பத்தைவிட்டு வரபோக லேசான காரியமில்லை. சிலவும் அதிகம்.
இப்படியாக வாழ்நாளில் அதிகம் எந்த ஸொந்த பங்ஷனில் கூட ஆஜர்
ஆக முடியாத பொறுப்பு…
பொறுப்பா,வெறுப்பா? தெjfயாது?
பேத்தி ஓரளவு படிப்பு முடித்ததும், இனி உன் அம்மாவுடன்தான் நீ
இருக்கவேண்டும் என்று சொல்லி காட்மாண்டு அனுப்பி விட்டாள்.
மேல்படிப்பு அவ்விடம் தொடர்ந்தது.
அம்மா பென்ஷனை விட்டுவர மனதில்லையோ, நான்தான் குளிருக்காக
அழைத்துவரவில்லையா? அந்த நாட்களில் அவ்வளவு எளிதாக
விமானக் கட்டணங்கள் செலவழித்து அழைத்து வரவில்லையோ?
இப்போது சிந்தனைதான் மிஞ்சுகிறது.
ஆண்குழந்தைகளும் பெரியவர்களாகத் துவங்கினார்கள். ஸ்கூல்ஃபைனல்
முடித்ததும் அவர்களை இந்தியா அனுப்பத் தயார் செய்யும் எண்ணம்
இருந்தது.
நேபாலில் அந்தக் காலத்தில் பொதுவாக படிக்கும் ஸமூகம் ,இரண்டு பேக்
பேப்பர்,மூண்று பேக் பேப்பர் என்று ஸர்வ ஸாதாரணமாக சொல்லிக் கொள்ளும்
அவல நிலை இருந்தது.
இந்தச் சூழ் நிலையில் பிள்ளைகள் இங்கு இருப்பது தவறு என்று மனதில்ப்
பட்டு விட்டது.
அப்பா இல்லை.அம்மாவிற்கும் கூட வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம்
எழுந்தது.
நேபாலில் ஜூன் பதினைந்தாம் தேதி எஸ் எஸ் எல் ஸி ரிஸல்ட் வரும்.
சென்னையில் பி யு.ஸி அட்மிஷன் முடிந்து விடும் அந்தத் தேதியில்.
மிக்கத் தெரிந்தவர் ஒருவர்மூலம் அப்ளிகேஷன் கொடுத்து, நேபால்
விவரங்கள் சொல்லி, ரிஸல்ட் வந்தவுடன் சொல்வதாகச் சொல்லி அப்படியே
செய்யவும் செய்தார். இப்படியாக இந்தியாவின் படிப்பு ஆரம்பமாகியது.
எப்படியோ உறவுக்காரர் வீட்டில் பேயிங்கெஸ்டாக ஆரம்பித்து, காலந்தள்ளின
நாட்களில், எவ்வளவு சிரமங்கள் அனுபவிக்க வேண்டி இருந்தது.
பேத்திக்கு பாட்டி விவாகம் செய்விக்கவும் ஆசைப்பட்டாள்.
இப்படியாகத் தொடர்வோம். தவறாமல் வாருங்கள்.
Entry filed under: அன்னையர் தினம்.
21 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
mahalakshmivijayan | 4:44 முப இல் திசெம்பர் 24, 2014
நன்றாக இருக்கிறது காமாட்சி அம்மா! தவறாமல் அடுத்த பதிவை படிக்க வருகிறோம் 🙂
2.
chollukireen | 10:11 முப இல் திசெம்பர் 24, 2014
மிக்க மகிழ்ச்சி. உடனே பார்த்து பதில். நன்றி. அன்புடன்
3.
PRABUWIN | 6:00 முப இல் திசெம்பர் 24, 2014
” தவராமல் வாருங்கள்.”
##########################################
தவறாமல் வாருங்கள் என்பதே சரி.
சுட்டிக் காட்டியதற்கு மன்னிக்கவும்.
தவறாமல் அடுத்த பதிவை படிக்க வருகின்றேன்.
4.
chollukireen | 10:14 முப இல் திசெம்பர் 24, 2014
பலஸமயம் ஷிஃப்டை அழுத்தாமல் இவ்வாறு நேர்ந்து விடுகிறது. திருத்தியாயிற்று. நன்றி அன்புடன்
5.
ranjani135 | 11:26 முப இல் திசெம்பர் 24, 2014
இரண்டு பேக் பேப்பர், மூணு பேக் பேப்பர் என்றால் ‘clear’ ஆகவில்லை என்று அர்த்தமா?
அந்தக் காலத்தில் பேரன் பேத்திகள் பாட்டியுடன் தங்கிப் படிப்பது சாதாரணமாக எல்லோர் விட்டிலும் நடக்கும் போலிருக்கிறது. பாட்டி மட்டுமல்ல, நாங்களும் பேத்தியின் திருமணத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.
6.
chollukireen | 11:17 முப இல் திசெம்பர் 25, 2014
clear ஆகவில்லை என்று ஸரியாகப் புரியும்படி எழுதியிருக்க வேண்டும். கரெக்ட் ரஞ்ஜனி மூலம் இன்னும் யாராவது படித்தவர்களிருந்தால் அவர்களுக்கும் புரிந்திருக்கும். நான் இருந்த நேபால் அப்படிதான் இருந்தது. பெண்கள் பரவாயில்லை.
ஆண் குழந்தைகள் அக்கரை இல்லாது போய்விட்டால்!
என்ற பயம் இருந்தது.
அம்மா இருந்த இடத்தில் எங்கள் ஊரில் அப்போது
காலேஜ் கிடையாது.
நம்மைப்போல் பார்ப்பதற்கு தாத்தா,பாட்டிகளாலேயே
முடியும்.
அவர்களுக்கும் நம்மிடம் பாசமுண்டு. ஏதோ பழயகதை
தொடர்ந்து வருவதற்கு மிக்க நன்றி. அன்புடன்
7.
adhi venkat | 7:32 முப இல் திசெம்பர் 26, 2014
நானும் தொடர்ந்து வருகிறேன் அம்மா தங்களின் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள…
8.
chollukireen | 9:14 முப இல் திசெம்பர் 29, 2014
அப்படியா. மிக்க மகிழ்ச்சியும்,நன்றியும். அன்புடன்
9.
PRABUWIN | 4:57 முப இல் திசெம்பர் 30, 2014
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் உவகை அடைகின்றேன் அம்மா.
10.
chollukireen | 8:05 முப இல் திசெம்பர் 30, 2014
நானும் வாழ்த்துக்களை உவகையுடன் தெரிவித்து,நன்றியும் சொல்கிறேன். அன்புடன்
11.
பார்வதி இராமச்சந்திரன். | 11:04 முப இல் திசெம்பர் 31, 2014
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா!. ஆர்வமுடன் தொடர்கிறேன் தங்கள் பதிவுகளை!. வரும் ஆண்டு, எல்லா விதத்திலும் தங்களுக்கு சிறப்பானதாக அமைய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!..
12.
chollukireen | 12:34 பிப இல் ஜனவரி 1, 2015
அதே வாழ்த்துகளைத் திரும்பவும் உனக்குக் கூறுகிறேன்.
உன் ப்ளாகில் நான் கருத்திடுவது ஏன் பதிவாவதில்லை?
‘டிஸம்பர் 15 ற்கு மேல் பதிவுகள் இடவில்லையா? உன்அன்பு பதிலிற்கு மிகவும் மகிழ்ச்சி. அன்புடனும்,வாழ்த்துகளுடனும்
13.
chollukireen | 11:10 முப இல் மே 24, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
பதிவு 19. அம்மாவின் வாழ்க்கையில் கிராமத்தில் ஒரு கால கட்டம் இது. விருந்தோம்பல்,ஸம்பிரதாயம், பங்கிடுதல், பேரன்,பேத்திகளுக்காக உபகாரங்கள் இப்படிச் சில நிகழ்வுகளுடன் வந்திருக்கிறேன். படியுங்கள். அன்புடன்
14.
ஸ்ரீராம் | 11:43 முப இல் மே 24, 2021
சுவாரஸ்யமான விவரங்கள்.
15.
chollukireen | 12:15 பிப இல் மே 24, 2021
நம்முடைய வழக்கமானவர்களிடம் போணியாகுமா ஆகாதா என்று நினைத்தேன். எதுவும்படிக்க, பதிலெழுதக்கூடாத மன இருக்கம். போணியாகிவிட்டது. நன்றி. அன்புடன்
16.
நெல்லைத்தமிழன் | 12:23 பிப இல் மே 24, 2021
நிறைய விஷயங்கள் ஆச்சர்யமாகவும் புதிதாகவும் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்க.
சொந்தக்காரர்கள் வீட்டில் குழந்தையை படிப்பதற்காக விட்டுவிடுவது நானும் அனுபவித்ததுதான். இருந்தாலும் அப்பா அம்மாவிடம் இருப்பதுதான் சரியானது என்பது என் எண்ணம்.
வெண்பூசனி – நான் வாரம் ஒரு தடவையாவது உபயோகிப்பது வழக்கம். விரைவில் எபிக்காக, ஆக்ரா பேத்தா பண்ணிப்பார்க்கணும்னு ஆசை.
17.
chollukireen | 12:34 பிப இல் மே 24, 2021
ஏற்கெனவே எழுதியதுதானிவைகள். எவ்வளவோ எழுதாதும் விட்டிருக்கிறேன். மீள்பதிவில் உங்களில் சிலபேர்களை ஸந்திக்கிறேன் என்பது ஸந்தோஷம்.வயது வந்த பிள்ளை அனுஸரித்தும் காலம் தள்ளி இருக்கிரார்கள். அந்தக் காலம். பூசணிக்காய் ருசியானதுதானே. பண்ணுங்கள் பேடா ஆக்ரா விசேஷம் ஞாபகம் வருகிறது. நன்றி. அன்புடன்
18.
Revathi Narasimhan | 9:10 பிப இல் மே 24, 2021
அன்பின் காமாட்சிமா,
எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள்!!
நானும் பாட்டி அகத்தில் ஒரு வருடம் இருந்து படித்தேன்’
எத்தனை பிரியமான நாட்கள் அவை!!
நீங்கள் அம்மா என்று சொல்வது என் பாட்டியைச் சொலது போல அவ்வளவு ஒற்றுமை.
பாட்டி வீட்டில் பொரி வடாம், ஆவக்காய்
எல்லாம் கூட்டு முயற்சிதான். ராஜம் மாமி, பட்டம்மா மாமி,
பாட்டியின் அண்ணா மனைவி, அத்தங்கா பாட்டி,
நாத்தனார் எல்லோரும் புரசவாக்கத்தில் கூடுவார்கள்.
மார்கழிக் கோலமும் பூசணிப்பூவும் எத்தனை அருமை.
நினைக்க நினைக்க ஆனந்தம். மிக மிக நன்றி மா.
19.
chollukireen | 11:26 முப இல் மே 25, 2021
எங்கள் ஊரில் காலேஜ் அந்த நாட்களில் கிடையாது. உங்கள் பாட்டியின் காலம் என் அம்மாவின் காலத்திற்கு ஸமீபமாகவே இருக்கும். மனிதர்களும் அம்மாதிரி ஒத்த ஸுபாவமுள்ளவர்களாகவே இருந்திருக்கிறார்கள். எவ்வளவு ஸந்தோஷமாக இருக்கிறது உங்கள் பாட்டியின் ஞாபகமும் வர. அங்கும் உறவுக்கார கூட்டம் இருந்தது. கூட்டு முயற்சி. ஸரியான வார்த்தை. எண்ண் எண்ணிப்பார்க்க மனம் இன்பம்தான். அன்புடன்
20.
Geetha Sambasivam | 12:49 முப இல் மே 25, 2021
தாத்தா/பாட்டி வீட்டில் குழந்தைகள் தங்கிப் படிப்பது புதிதல்ல என்றாலும் அந்தக் குழந்தைக்கும் மனோநிலை ஒத்துப் போகணுமே! முடிந்தவரை அப்பா/அம்மா வைச்சுக்கறதே நல்லது என்பது என் கருத்தும். ஆனால் அந்தக் கால நிலைமை எப்படி இருந்ததோ! தொடர்ந்து வருகிறேன்.
21.
chollukireen | 11:32 முப இல் மே 25, 2021
எங்கள் ஊரில் காலேஜ் வசதி எல்லாம் இப்போது இருக்கிறது. அப்போது இல்லை. அம்மா எல்லா விதத்திலும் உதவியாகவே இருந்தார்கள். இன்னும் பாக்கி உள்ளதே. தொடர்ந்து வருவதற்கு மிகவும் ஸந்தோஷம்.உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். அன்புடன்