அன்னையர் தினப்பதிவு. 22.
ஜனவரி 29, 2015 at 10:06 முப 8 பின்னூட்டங்கள்
இவ்வளவு சொல்லிக் கொண்டு வருகிறேனே, ஆனால் நிச்சயம்
செய்யும் போது வந்த சென்னை அக்கா விவாகத்திற்கு வரவில்லை.
அவளுடைய இரண்டு பிள்ளைகள் சற்று வயதிற்கு வந்தவர்கள்
மாத்திரம் பிடிவாதம் பிடித்தோ என்னவோ வந்து விட்டனர்.
அம்மாவிற்கு உடல் நலம் ஸரியில்லை என்று சொன்னார்கள்.
கலியாணம் கழித்து இரண்டு நாட்களாகின்றது.
பெண்ணும் ,மாப்பிள்ளையும், நாளை,மறுநாள் வருவார்கள்.
தம்பதிகளாகப் பிறந்த வீடு வரும் பழக்கம் இருக்கிறதல்லவா?
எஙகள் ஊரில் காலை நேர வேலை பால் வாங்குவதுதான்.
விடியற்காலை. அவரவர்கள் ஸ்டோருக்குப் போய் பால் வாங்கி
வருவார்கள்.அப்படி
கதவைத் திறந்ததும் அம்மா பெயர் சொல்லி தந்திச் சேவகர் வந்து
நீங்கள்தானே அம்மா என்று கேட்கிறார்.
என்னவோ தந்தியாம் நீ வந்து பாரு. அம்மா பதைபதைக்கிராள்.
கையெழுத்துப் போட்டு வாங்கினாலும், யாருக்கு என்னவோ என்ற
பதைபதைப்பைத் , தந்தி எல்லோருக்கும் கொடுக்கும்தானே?
அம்மாவுடைய சென்னை மாப்பிள்ளையின் தந்தி.
உடனே புறப்படவும். ஆபத்து.
ஸரி அக்காவிற்குதான் ஏதோ,என்னவோ என்று தீர்மானித்து அடுத்த
இரண்டு மணி நேரத்தில் பஸ் பிடித்து விழுப்புரம் வந்து
அவ்விடமிருந்து சென்னை பஸ் பிடிக்க வேண்’டும்.
எல்லோரும் நல்லபடி இருக்கணும்,ஸாமி,பகவானே அம்மாவின்
புலம்பலும்,வேண்டுதல்களும்.
நீங்களெல்லாம் வேண்டாம். நான் போகிறேன். பஸ் ஏத்திட்டா போரும்.
எனக்கு வழியெல்லாம் நன்னா தெரியும். அம்மா.
இல்லை நாங்களும் வரோம். ஆச்சு விழுப்புரம் வந்து பஸ்ஸும்
பிடிச்சாச்சு.
அவளுக்குதான் உடம்பு ஸரியில்லையென்று பேரன் சொன்னான்.
பகவான் என்ன நினைச்சுண்டிருக்காரோ?
பிரமை பிடித்தமாதிரி கண்ணுலே தண்ணி வடிஞ்சிண்டே இருக்கு.
நீ தைரியமா இரு. நாங்கதான் கூட வரோம் இல்லையா?
அங்கே எது எப்படி இருக்கோ? நீங்க ஏதாவது வழியிலே சாப்பிடுங்கோ?
எது எப்படி இருந்தாலும் நீ அங்கே ஒண்ணும் பேசாதே, ஒண்ணும்
சொல்லாதே, பசங்க இருக்காள். பின்னே ஒருநாள்
அவர்களுக்காகவாவது நுழையும்படி இருக்கும். நேக்கு வேறெ
ஒண்ணும் சொல்லத் தெரியாது. நீ ஜாக்கிரதையாயிரு.
முன்கூட்டியே மனதைத் திடப்படுத்திக் கொள்வது புரிந்தது.
சென்னையும் போய் வீடு நெருங்கி வரது.
நான் இங்கேயே இருக்கேன். வீட்டு வாசலில் கூட்டமா,கோலம்
போட்டிருக்கா? எல்லாம் தூர இருந்து பாத்துட்டுவா. துக்கத்தை
அடக்கிக் கொண்டு வேண்டுகோளிற்கு மேல் வேண்டுகோள்
கலியாணம் செய்து கொடுத்து நாளாகவில்லை உங்களுக்கு
. நீங்கள் வரவேண்டாம்.
எனக்கும் ஓரளவு வீடு ஞாபகமிருப்பதால் ஒன்றும் பதில் பேச
முடியாமல் துப்பறியப் போனேன்.
சின்னதாக வேலைக்காரி போட்ட கோலம் கண்ணில் பட்டது.
ஆள் அரவம், ஒன்றும் தெரியலே!
வீடு உள்ளடங்கியது. முன் புரம் நிறைய மரங்கள்.
எதிராத்து மாமி வாசல்லே வரா.. மாமிக்கு என்னைத் தெரியாது.
மாமி இவாத்துலே எல்லாரும் ஸௌக்கியமா?
ஏன் அப்படி கேக்கறிங்கோ,நேத்தி கூட எல்லாரையும் பாத்தேனே?
~ஒரு விசாரம் குறைந்தது. இல்லை சும்மா அப்படி கேட்டேன்.
புரிஞ்சுடுத்து மாமிக்கு..
திரும்ப வேகமா போய் அம்மாவிடம் சொல்லுகிறேன்
. ஸாமி இருக்கார். நான் அவாத்திற்குப் போகிறேன். நீங்கள்
ஊருக்குப் போங்கோ.
இல்லை. எல்லோருமாகப் போனோம். நீங்களெல்லாம் எதற்கு
வந்தீர்கள்.
என்னவோ ஏதோ என்று ஓடி வருகிறோம்.
பிள்ளைகள் அம்மாவை அழைத்துக் கொண்டு வேறு வீட்டிற்குப்
போய் விட்டார்கள். நீங்கள் புத்தி சொல்லுங்கள்.
இவள் எப்படிப் போகலாம்?
உள்ளே ஒருவர் சாப்பிட சாதம் இருக்கு. அட்ரஸ் தரேன்
முன்னாடி அதைச் செய்யுங்கள். நீங்கள் இருந்தால் போதும்.
ஏதோ ஒரு விலாஸம் ஊரின் கடை கோடியில். இன்னும் ஏதேதோ
சொன்னார். மரியாதை தெரிந்தவர்கள்.
அம்மா பதிலேதும் சொல்லவில்லை.
விலாஸத்தை வாங்கிக்கொண்டு நான் போய் பார்க்கிறேன்.
அம்மா கிளம்பி விட்டாள்.
நான்தான் எதுவும் சொல்லாதே என்ற வாக்குறுதியை ஸரி
என்று ஒத்துக் கொண்டு கூட வந்தவள் இல்லையா?
நடக்கட்டும் நாராயணன் செயல் என்று அம்மாவுடன் கிளம்பினோம்.
வழியிலேயே மற்றும் உறவுக்காரர் வீடு இருந்தது.
அவர்கள் வீட்டில் ஒரு வாய் சாப்பிட்டு விட்டு, விலாஸத்தைத்
தேடிக் கிளம்பினோம்.
யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. இவ்வளவு வருஷங்கள் கழித்து
எதற்கு வீட்டை விட்டுப் போறது.? இதெல்லாம் கொஞ்ஜம் கூட
நன்னாயில்லை.
பார்க்கறவா என்ன யோசிப்பா. அம்மா பொருமிக் கொண்டே வந்தாள்.
போனால் எல்லாம் தெரியும்.
வந்தது வந்தோம். அவளைப்பார்த்து விட்டு ஊருக்கு கிளம்ப நிச்சயித்தோம்.
வீட்டைக் கண்டு பிடித்தோம்.
ஒருரூம் ஸெட் அபார்ட்மென்ட்.
முதல்தரமா வா என்று கூப்பிடுகிறேன், வா என்றாள்.
பிள்ளை எடுத்த முடிவு இது. என் கஷ்டம் ஸகிக்கலை.
வீட்டில் இருக்கக் கூடாது என்றவரை போய்விட்டது.
நானும் ஸரி என்று விட்டேன். எதற்கு அந்தக் கதை எல்லாம்.
நான் எப்போதுமே எதையும் உங்களிடம் சொன்னதில்லை.
இதுவும் அப்படியே. போ என்ற வார்த்தை வந்து விட்டது. வந்தாச்சு.
பார்க்கலாம் எப்படி ஆகிரதென்று. மனக் கஷ்டத்தை மறைத்து
வார்த்தைகள். அக்காவினுடயது. நாங்கள் வந்த கதை சொல்லி விட்டு
அம்மாவை மறுநாள் வரச்சொல்லி நாங்கள் ஊருக்குக்
கிளம்பிப் போனோம்.
அடுத்துத் தொடருவோம்.
Entry filed under: அன்னையர் தினம். Tags: 22 ஆம் பதிவு.
8 பின்னூட்டங்கள் Add your own
chitrasundar க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 1:07 பிப இல் ஜனவரி 29, 2015
எங்களுக்கும் மனசு பதைத்துதான் விட்டது. இந்த முடிவுக்கு வர அக்கா எத்தனை யோசித்திருப்பாரோ? என்னென்ன பேச்செல்லாம் கேட்டிருப்பாரோ? இன்றைக்குக் கூட சிலபெண்கள் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாயை மூடிக்கொண்டு சகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். அந்தக்காலத்தை நினைத்துப் பார்க்கையில் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. மேலே படிக்கிறோம்.
2.
chollukireen | 8:00 முப இல் பிப்ரவரி 2, 2015
நடந்து முடிந்த கதையாக இருந்தாலும் படிப்பவர்கள் கூட யோசிக்கிரார்கள் இப்படிப்பட்ட நிகழ்வுகளை. உங்கள் மறுமொழிக்கு மிகவும் நன்றி. மேலே படிக்கிறோம் என்ற வார்த்தை ஸந்தோஷத்தைக் கொடுக்கிறது. அன்புடன்
3.
chitrasundar | 4:42 பிப இல் ஜனவரி 29, 2015
காமாக்ஷிமா,
அம்மாவைப் பார்க்க தந்தததில் மகிழ்ச்சிம்மா.
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என பிள்ளைகள் துணிந்துவிட்டனர் போலும். இனியாவது அக்கா நிம்மதியாக இருந்திருப்பார் என நம்பலாமா ? நீங்கள் மேற்கொண்டு எழுதுவதைப் பொறுத்துத்தான் உள்ளது. அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 8:04 முப இல் பிப்ரவரி 2, 2015
அம்மாவின் படம் என்னிடம் இல்லாததால் தாமதம்.
நல்ல ஸுமங்கலியாக படம் தேடினேன். கிடைக்கவில்லை. நிம்மதி என்பது வந்து போகும் ஸமாசாரம்தான். அன்புடன்
5.
chollukireen | 8:05 முப இல் பிப்ரவரி 2, 2015
மிக்க நன்றி சித்ரா அன்புடன்
6.
பார்வதி இராமச்சந்திரன். | 1:35 பிப இல் பிப்ரவரி 3, 2015
கடவுளே!.. படிக்கும் போது, கண்களில் நீர் மல்குவதைத் தவிர்க்க முடியவில்லை.. அம்மா, எவ்வளவு கஷ்டங்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டு பயணித்திருப்பார் என்று உணர முடிகிறது.. அக்கா, எத்தனை தூரம் பொறுமைசாலியாய் இருந்தும், இந்த முடிவு எடுக்கும் முன்னர், என்ன மனவேதனையடைந்திருப்பார் என்றும் ஊகிக்க முடிகிறது.. வாழ்க்கையின் தோட்டத்தில் முட்களும் மலர்களும் பாதிப் பாதி!.. தொடருகின்றேன் அம்மா!..அம்மாவின் படம் பார்க்கத் தந்ததற்கு நன்றி!.
7.
chollukireen | 10:39 முப இல் பிப்ரவரி 4, 2015
நீ மிகவும் ஈடுபாட்டுடன் படித்திருக்கிராய். இது போன்ற பரிவுதான் அம்மாவிற்கு எப்போதும் கிடைத்துக் கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். அம்மா நல்ல வியக்தி. மகத்தான சாதனை என்று இல்லாவிட்டாலும் , வாழ்க்கை எம்மாதிரி இருந்தது? பொறுமை எப்படிப்பட்டது என்பதின் கோர்வைதானிது. தொடருவதாகச் சொல்லியுள்ளாய். நன்றி. உன் பின்னூட்டம் மேலும் எழுதி முடிக்க உதவும். அன்புடன்
8.
VAI. GOPALAKRISHNAN | 9:45 முப இல் மார்ச் 2, 2015
படிக்கவே மனதுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது. அந்தக்காலத்தில் பெண்களுக்கு எவ்வளவு சங்கடங்கள், சோதனைகள், கஷ்டங்கள், வேதனைகள் ???? 😦