அன்னையர் தினப்பதிவு 25
மார்ச் 15, 2015 at 10:58 முப 19 பின்னூட்டங்கள்
அப்பா இறந்த போது காரியங்களில் ஒன்றான சர்மஸ்லோகம்
வாசித்தளித்த பேப்பர் என்னிடம் உள்ளதா?
அதைஆதாரமாகக் காட்டமுடியுமா என்ற ஒரு யோசனை.
என்னிடம் உள்ளதா எனக்கேட்டு ஒருகடிதம்.
கடிதம் கைக்குவரவே மூன்று வாரமாகி விட்டது.
பாரக்பூர்,காட்மாண்டு என எத்தனை குடிப்பெயற்சிகள்.
அதுவும் எங்கு ஒளிந்து கொண்டதோ கிடைக்கவில்லை.
அப்பா காலமான விஷயம், நமது விசேஷ நிருபர் என்ற
தலைப்பில் சுதேசமித்திரன் பாரத தேவியில் வந்தது, என எந்த பேப்பர்
கட்டிங்கும் கிடைக்கவில்லை.
நீ சிரமப்படாதே பென்ஷனுக்காக அலையவும் வேண்டாம்,நிம்மதியாய்
இரு. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என்றுதான் சொல்ல முடிந்ததே
தவிர எந்த முயற்சியும் செய்ய யாருக்கும் நேரம்,காலம்,இல்லை
என்றுதான் சொல்ல முடிந்தது.
அயலூர் மாற்றலாகிச் சென்ற பேரன்,பெண் அவர்கள் குடும்பத்துடன்
வரபோக இருக்கிரார்கள் என்ற செய்தியும் இடையே கிடைத்தது.
இதில் அம்மாவிற்கு மகிழ்ச்சி.
நம்முடன் வரபோக இல்லாவிட்டாலும் அவர்கள் குடும்பம்
ஒற்றுமையுடன் இருந்தால் ஸரி என்ற எண்ணம் ஒரு மகிழ்ச்சியைத்
தந்தது. இப்படிச் சில காலம் கடந்தது. ஒருநாள்
பாட்டி உங்கள் பேரனுடன் ஜோடியாக ஸ்கூட்டரில் ஒரு பெண்ணும்
போவதைப் பார்த்தேன் என மாப்பிள்ளை சொல்ல
நீயாரைப் பார்த்தாயோ? நல்ல பிள்ளை அவன். நீ வேறு யாரையாவது
பார்த்திருப்பாய்.
அம்மாவின் மனதில் எண்ணங்கள் ஓடியிருக்கும். இது என்ன புது
ஸமாசாரம் என்று.
ஒரு பத்துப் பதினைந்து நாட் கழித்து, பேரன்,அவன் மனைவி,மாமியார்,
அம்மா என எல்லோரும் விஜயம்.
வாங்கோ என்று கூப்பிட்டதற்கு மேல் அம்மாவால் பேசமுடியவில்லை.
புது தம்பதிகள் நமஸ்காரம் செய்தார்கள்.
மாமி நீங்கள் இவ்வளவு பெரியவர்கள் இருக்கிங்கோ என்று யாரும்
சொல்ல வில்லை.
நானும் நமஸ்காரம் செய்கிறேன் என்று சம்மந்தியம்மா நமஸ்காரம்
செய்ய அம்மாவிற்கு ஏக ஸந்தோஷமாம்.
நீங்களெல்லாம் நன்றாயிருங்கோ. உங்களையெல்லாம் பார்க்க ரொம்ப
ஸந்தோஷமாயிருக்கு.
கல்யாணமாகி மூன்று வாரங்களாகிறது.
அம்மாவிற்குஒரே ஸந்தோஷம்தானாம்.
எங்காத்தில் என்னவோ உனக்கு யார் அவசியமோ கூப்பிடு
என்றார்கள்.
வீணாக வந்துவிட்டு அவர்கள் ஏடா கூடமாகப் பேசி விடுவார்கள்.
அதனால் நான் நேரில் பார்த்து விட்டு நமஸ்காரம் செய்ய வந்தேன்.
அதுகூட இப்போதும் சம்பந்தியாத்தில் சொல்லிவிட்டுப் போக வந்ததாகச்
சொல்லி வந்தேன்.
உன்னைப் பார்த்துப்பேசி ஆசி வாங்க வந்தேன்.
அக்காவின் ஸ்டேட்மென்ட் இது.
அம்மா ஒரு நிமிஷம் யோசித்தாள். எனக்குக் குறை ஏதும் இல்லை.
நீ ஸரியாகத்தான் செய்தாய்.
சம்மந்தி அம்மாவின் ஒன்பது கெஜம் கொசாக்கட்டும், மங்களகரமான நெற்றிப்
பொட்டும்,, கண்யமான பேச்சு வார்த்தைகளும்,அம்மாவிற்கு மிகவும்
மனதிற்குப் பிடித்துப் போய் விட்டது.
பங்கரைகளாக இல்லாமல், ஒரு ஸம்ஸாரியின் நல்ல ஸம்பந்தம்.
பேச்சும் வார்த்தையும், மட்டும் மரியாதையும், வேறு என்ன வேண்டும்?
உங்க ஸம்பந்தம் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கு.
என்பெண்ணிற்கு ஒரு கண்யமான சம்பந்தி. இப்படியே உங்கள் உறவு
ஸந்தோஷமாக இருக்க வேண்டும்.
பத்துபேருடன் பிறந்த என் பேரன் மனைவியும் நல்ல மாதிரி இருப்பாள்
.உங்கள் எல்லோருக்கும் என் ஆசிகள் எப்போதும்.
இப்படி ஆசீர்வதித்ததாகச் அம்மா என்னிடம் பார்க்கும் போது சொல்லி
இருக்கிராள்.
இது இடையே நிகழ்ந்த ஸம்பவம்.
எல்லாவற்றையும் நல்ல கோணத்தில் ஏற்கும் ஒரு ஸுபாவத்தின்
ஒரு முகம்.
அம்மாவைப் பற்றி எழுத வந்து விட்டு, பக்கக் கதைகளா?
யோசிக்கிறீர்களா?
இரண்டு ஒன்று சம்பந்தப்பட்டவைகள் எழுதினாற்தானே விவரங்கள்
தெரியவரும்?
கோர்ட் மூலம் அப்பாவின் மரணச்சான்றிதழ் வாங்குவதைத் தவிர
வேறு வழியில்லை
.பேத்தி குடும்பத்துடனிருந்து பழக்கம் ஆகிவிட்டது.
பேரன்களும் வேண்டியதைச் செய்கிரோம். நீ அலையாதே என்று வரபோக
பாட்டியை கவனித்துக் கொண்டனர். பேத்தியும்,மாப்பிள்ளையும்
சொல்லவே வேண்டாம். அக்கரையுடனிருந்தனர்.
ஓஹோ என்றில்லாவிட்டாலும் எதற்கும் பிரச்சினை இல்லை.
அம்மாவிற்கும் ஸொந்தமாக என்ன பிரமாத சிலவு?
அமாவாஸை என்றால் தன் கைப்பட அதற்கேற்ற காய்கள்,
துவாதசி என்றால் ஆத்திக்கீரை,சுண்டைக்காய் முதலானது
வாசலில் வரும் கூடைக்காரியிடம் குசலப்ரசினம் செய்து அவளிடம்
வாங்க வேண்டும், தலை பண்ணிக்கொள்ள தன் கையால் பணம் கொடுக்க
என இப்படிப்பட்டவைகள்தான்.
மாம்பல காய்கறிகள் மாப்பிள்ளை வாங்கிப் போட்டாலும்,தானாக சில
வாங்குவதில் அபாரத் திருப்தி.
மாப்பிள்ளையைத் தவராது மாகாளிக்கிழங்கு வாங்கி வரவேண்டும்.
பல்க்காக நான்கு ஐந்து கிலோ.
ஊறவைத்துத் தேய்த்து அலம்பித் தோல் சீவி,நரம்பெடுத்துப்
,பொடிப்பொடியாக நறுக்கி, அது அமிழ எலுமிச்சை சாறு பிழிந்து, கடுகு,மிளகாய்
,உப்பு மஞ்சள்பொடி சேர்த்து ஊற வைத்து எடுத்து வைத்து விட்டால்
,அந்த ஊறுகாய் இரண்டு வருஷமானாலும் கெடாது.
திருவண்ணாமலை பிரசித்தமான கிழங்கைப் போட்டு வழக்கம்.
வேண்டும்போது சிறிதெடுத்து தயிர் கலந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசி.
அரிசி உப்புமா,அடை, சாப்பாட்டுடன் என அவ்வளவு ருசி.
ஜாடராக்கினியைக் கிளப்பி விட்டு பசி அப்படி எடுக்கும் என்ற
வர்ணனையுடன் அம்மா பிறருக்கும் கொடுப்பது வழக்கம்.
மடி. தட்டில் டிபன் கொடுக்க மாட்டாள்
வாழைப்பூ மடலில் சுடச்சுடஅரிசி உப்புமா,தொட்டுக்கொள்ள
மாகாளித்தயிர் கலந்த ஊறுகாய். நினைத்தாலே நா ருசிக்கிரது.
அம்மா யாரைக்கொண்டோ கோர்ட் வரைக்கும் போய்
மழித்த தலையும்,நார் மடிப் புடவையுடன்
ஆமாம் அவர் இறந்தது உண்மைதான் பதியவேண்டும் என்ற அவசியமே
எனக்குத் தெரியாது. இப்போதும் ஏதோ பென்ஷன் கிடைக்கலாம்
என்ற அவசியத்திற்காகவே கோர்ட் படி ஏறினேன்.
இல்லையம்மா. நான் கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்டே
ஆக வேண்டும்.
உங்களைப் பார்த்தும் இப்படிக் கேட்கிறோமே என்ற எண்ணத்துடன்தான்
கேட்கிறேன். ஜட்ஜ்
கவலைப்படாமற் போங்கள் என்று சொன்னதைச் சொல்லி மாய்ந்து போவாள்.
கோர்ட் படி ஏறி சான்றிதழ் வாங்கியாகி விட்டது. கவலை விட்டதா?
பாருங்கள் தொடர்ந்து…
Entry filed under: அன்னையர் தினம். Tags: சர்மஸ்லோகம், விசேஷநிருபர்.
19 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 11:12 முப இல் மார்ச் 15, 2015
//பல்க்காக நான்கு ஐந்து கிலோ. ஊறவைத்துத் தேய்த்து அலம்பித் தோல் சீவி, நரம்பெடுத்துப் பொடிப்பொடியாக நறுக்கி, அது அமிழ எலுமிச்சை சாறு பிழிந்து, கடுகு, மிளகாய், உப்பு மஞ்சள்பொடி சேர்த்து ஊற வைத்து எடுத்து வைத்து விட்டால், அந்த ஊறுகாய் இரண்டு வருஷமானாலும் கெடாது. திருவண்ணாமலை பிரசித்தமான கிழங்கைப் போட்டு வழக்கம்.
வேண்டும்போது சிறிதெடுத்து தயிர் கலந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசி.//
தங்களின் இந்தப் பதிவினிலும் அத்தனை ருசியும் காண முடிகிறது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள் … அனுபவங்கள் தொடரட்டும்.
2.
chollukireen | 11:16 முப இல் மார்ச் 15, 2015
இவ்வளவு சீக்கிரம்,படித்து,பாராட்டும் கொடுத்து மகிழ்ச்சியை வாரி வழங்கி விட்டீர்கள். மிகவும் நன்றி.
மாகாளிக்கிழங்கு மனதுநிறைந்து விட்டது. நன்றி. அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 11:59 முப இல் மார்ச் 15, 2015
மாகாளிக்கிழங்கு என்பது இப்போது தான் தெரியும்….
4.
chollukireen | 12:00 பிப இல் மார்ச் 17, 2015
அப்படியா? இதுவும் பார்ப்பதற்கு மரவள்ளிக்கிழங்கு போன்று இன்னும் காய்ந்து அழுத்தமாக இருக்கும் கிழங்குதான்.
மலையில் கற்களுக்கு அடியில் விளையும் கிழங்கிது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
திருவண்ணாமலையில் ஏராளமாகக் கிடைக்கும்.
நாட்டில் இதுபோன்று விளையும் வேருக்கு நன்னாரி என்று சொல்வார்களாம்.
மலையில் விளைந்தால் மாகாளி. நாட்டில் விளைந்தால் நன்னாரி என்று பழமொழியும் உண்டு.
ஸர்பத்துகளில் நன்னாரி வேர் உபயோகப்படும்.
எனக்குப் பிறர் சொல்லக்கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயம். நன்றி. அன்புடன்
5.
பிரபுவின் | 6:41 முப இல் மார்ச் 16, 2015
“வாழைப்பூ மடலில் சுடச்சுடஅரிசி உப்புமா,தொட்டுக்கொள்ள
மாகாளித்தயிர் கலந்த ஊறுகாய். நினைத்தாலே நா ருசிக்கிரது.”
எனக்கும் நா ருசிக்கிறது.மாங்காயை பார்க்கும் போது நா என்ன உணருமோ அவ்வாறான உணர்வு.
6.
chollukireen | 12:07 பிப இல் மார்ச் 17, 2015
ஆமாம்.. வர்ணணைகளாலேயே சிலவற்றை ரு சிக்க முடிகிறது.அந்த வகையில் நீங்கள் ருசித்து எழுதிய பின்னூட்டமும் நன்றாக ருசியாக உள்ளது.நன்றி அன்புடன்
7.
chitrasundar | 7:50 பிப இல் மார்ச் 16, 2015
காமாக்ஷிமா,
நீங்க எந்தக் கதை சொன்னாலும் கேட்க ஆட்கள் இருக்கிறோம். பக்கக் கதைகள்தானே மூலக் கதைக்கு வலு சேர்க்கும்.
‘மாகாளிக் கிழங்கு’ _ நான் கேள்விப்பட்டதில்லை. ஒருவேளை நாங்கள் அதை வேறு பெயரில் சொல்கிறோமா ? இதற்கு வேறு ஏதும் பெயர்கள் இருந்தால் சொல்லுங்கம்மா. நீங்கள் விவரித்ததனால் ஏற்பட்ட சுவை அந்தளவிற்கு ஈர்த்துவிட்டது.
‘கவலை விட்டதா !’ என்பதைக் காணும் ஆவலில் நானும் …. அன்புடன் சித்ரா.
8.
chollukireen | 12:16 பிப இல் மார்ச் 17, 2015
உன்னைப்போன்ற சிலரின் பங்கீட்டிலேயே ஒடிக்கொண்டிருக்கிறது இந்த நினைவுகள்.
மாகாளிக்கிழங்கும் ஒருவகைக் கிழங்கு வேருடன்
கூடியது. இது பற்றி எழுதியிருக்கிறேன். இதற்கென
ஒரு தனி வாஸனையும் உண்டு. சிலபேருக்கு பிடிக்காது,பிடிக்கும் எனச் சொல்பவர்களும் உண்டு.
பிராண்டு ஞாபகமில்லை. ஊறுகாயும் கிடைக்கிறது.
சென்னையில் கிடைக்காததே இல்லை.
உன்னுடைய அன்பான ஆதரவான பதிலுக்கு மிகவும் நன்றி. அன்புடன்.
9.
பார்வதி இராமச்சந்திரன் | 9:39 முப இல் மார்ச் 19, 2015
/////பங்கரைகளாக இல்லாமல், ஒரு ஸம்ஸாரியின் நல்ல ஸம்பந்தம்.
பேச்சும் வார்த்தையும், மட்டும் மரியாதையும், வேறு என்ன வேண்டும்?
உங்க ஸம்பந்தம் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கு.
என்பெண்ணிற்கு ஒரு கண்யமான சம்பந்தி. இப்படியே உங்கள் உறவு
ஸந்தோஷமாக இருக்க வேண்டும்.
பத்துபேருடன் பிறந்த என் பேரன் மனைவியும் நல்ல மாதிரி இருப்பாள்/////
அந்தக் காலத்திய மனிதர்களின் எதிர்ப்பார்ப்பு எப்பேர்ப்பட்டதாய் இருந்தது!.. மனிதர்கள் வேண்டும்.. அவர்களோடு அனுசரித்து பழக வேண்டும் என்பதான பெரும்போக்கும், அரவணைக்கும் மனதும் இப்போது பார்க்கக் கிடைப்பதே அரிதாகி வருகின்றது!.. மாகாளி ஊறுகாயும் அரிசி உப்புமாவும் பாட்டியின் கைமணத்தை நினைவுக்கு கொண்டு வந்து விட்டன… இங்கு மாகாளி கிடைக்கிறது.. பார்க்கிறேன்!… எது செய்தாலும், நாலு பேருக்கு கொடுத்து, சாப்பிடும் உயரிய பண்பும் பாட்டியின் மனோபாவமும் கண்கலங்க வைக்கிறது!..
10.
chollukireen | 10:32 முப இல் மார்ச் 20, 2015
முதலில் உன் ப்ளாக் பக்கமே நான் வரவில்லை. ஆழ்ந்து படித்து பின்னூட்டம் எழுதவேண்டிய பதிவுகள். அதற்கு மன்னிப்பு வேண்டும். நான் சென்னை வந்துள்ளேன். ஏப்ரல்
12 ற்கு மும்பை போகிறேன். உன்னுடையது பின்னூட்டமென்பதைவிட ஆழ்ந்துபடித்து உணர்ச்சி பூர்வமாக எழுதிய விமரிசனம் என்றே கொள்ளலாம்.
அதிக பின்னூட்டங்கள் இல்லாவிடினும், இப்பதிவுக்கு பின்னூட்டம் கொடுப்பவர்கள் எல்லோரும் மனதினால் உணர்ந்து, அநுபவித்துக் கொடுப்பவர்கள்தான்.
அதுவே அம்மாவிற்குக் கொடுக்கும் கௌரவம் என்று
என் மனம் சொல்கின்றது. அந்த முறையில் யாவருக்கும் நன்றி. அம்மாவின் அந்தச் சென்னைப் பேரனின் பெண்ணிற்கு ஏப்ரல் 10 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது. பார் என்ன ஒற்றுமை?
பாட்டிகளுடன் இருந்து பழகியிருக்கிராய். அதனால் உன் பின்னூட்டம் பாட்டிகளுக்குப் பாராட்டாய் அமைந்துள்ளது. மிக்க நன்றி. அன்புடன்
11.
பார்வதி இராமச்சந்திரன் | 3:51 பிப இல் மார்ச் 20, 2015
மன்னிப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தையம்மா!.. தங்களால் இயன்ற போது வாருங்கள்!.. தங்கள் ஆசிகளுக்கு உளப்பூர்வமான நன்றி!..தாங்கள் சொல்வது சரிதான் அம்மா!..சிறு வயதிலிருந்தே பாட்டி, சித்திப் பாட்டி, அத்தைப் பாட்டிகளுடன் தான் வளர்ந்தேன்!.. அனுபவப்பட்டவர்களுக்கு , அது எவ்வளவு பெரிய ஆசி என்பது புரியும்..நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் பெண்ணிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!…
12.
chollukireen | 5:59 முப இல் மார்ச் 21, 2015
ஸந்தோஷம் பார்வதி.. அன்புடன்
13.
chollukireen | 11:32 முப இல் ஜூலை 5, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
பதிவு 25 உங்கள் பார்வைக்கு வருகிறது. அம்மா கோர்ட்படி ஏறியது, இன்னும் சில ஸம்பவங்கள் இதில். இன்னும் ஐந்து வாரங்கள்தான் பாக்கி. படியுங்கள். அன்புடன்
14.
Revathi Narasimhan | 3:09 பிப இல் ஜூலை 5, 2021
அன்பின் காமாட்சிமா,
உங்கள் அம்மாவை நினைக்கையில் என் பாட்டி தான் வந்து போகிறார்.
எத்தனை பொறுமை . எத்தனை அன்பு.
எல்லோரையும் அங்கீகரிக்கும் சுபாவம்.
மனம் கோணா கடின உழைப்பு. இவை எல்லாம் எங்கே பார்ப்பது இனிமேல்.
மாகளிக் கிழங்கு ஒன்று போதுமே.
அதுபாட்டுக்கு கிடக்கும் என்பதே உண்மை.
இதே போல சுருள் நார்த்தங்காய், கிச்சிலிக்காய்,
கடாரங்காய் எல்லாமே வந்து விடும்.
உங்கள் அம்மாவுக்குப்
பென்ஷன் கிடைத்திருக்கும். மனம்
அந்த நார்மடிக் கோலத்தை நினைத்துக் கலங்குகிறது.
மா மனுஷிகள்.மிக நன்றி காமாட்சிமா.
நலமுடன் இருங்கள்.
15.
chollukireen | 12:11 பிப இல் ஜூலை 6, 2021
மாகாளிக் கிழங்கு திருவண்ணாமலை என்று மனம் பயணிக்கிறது.கௌரவமான மனுஷியாக இருந்தவள்.உங்கள் பாட்டியும் மனதில் வருகிரார். நினைவில் நிற்பவர்கள். நன்றி. அன்புடன்
16.
ஸ்ரீராம் | 12:22 முப இல் ஜூலை 6, 2021
வாழைப்பூ மடலில் உப்புமா… அபப்டிக் சுவைத்ததில்லை. அம்மாவின் தேவைகள் சொற்பமாயினும் முயற்சியை விடாது கோர்ட் படியேறியது சிறப்பு. இனிமையான நினைவுகள்.
17.
chollukireen | 11:50 முப இல் ஜூலை 6, 2021
மடி ஆசாரம் உள்ளவர்கள் தட்டுகள் உபயோகிக்க மாட்டார்கள். இலைதான் வேண்டும். அப்படி வாழைப்பூ மடல் படகுமாதிரி பசங்களுக்குச் சாப்பிட உபயோகம். பென்ஷனுக்காக எல்லா முயற்சியும். அன்புடன்
18.
Geetha Sambasivam | 1:07 முப இல் ஜூலை 6, 2021
ஆஹா, வாழைப்பூ மடலில் அரிசி உப்புமா! நாங்க மோர் சாதமெலலம் அதில் சாப்பிட்டிருக்கோம். பின்னாட்களில் அந்த நினைவுகளில் எங்க குழந்தைகளுக்குப் போட்டுச் சாப்பிடச் சொன்னப்போ அவங்களுக்குப் பிடிக்கலை. 🙂 அம்மா கோர்ட் படி ஏறி ஜட்ஜிடம் சொன்னவை எல்லாம் மனதில் வேதனையை ஏற்படுத்துகின்றன. ஒரு மனுஷி எவ்வளவு மனோதிடத்துடன் இருந்திருந்தால் இதை எல்லாம் செய்திருப்பார்! உண்மையில் அம்மாவின் மனோதிடம் பாராட்டத்தக்கது. அதே போல் புது சம்பந்தியை ஏற்றுக் கொண்ட விதமும் அழகு.
19.
chollukireen | 11:54 முப இல் ஜூலை 6, 2021
எல்லாம் வயதான காலத்தில். உங்களின் பாராட்டுதல்கள் நன்றி. நாங்களெல்லாம் மடலுக்கு போட்டி போடுவோம். அன்புடன்