மூலிகைப்பொடி.
ஏப்ரல் 15, 2015 at 8:49 முப 11 பின்னூட்டங்கள்
பச்சென்று பார்க்க அழகாகவும், வாய்க்கு ருசியாகவும் அமைந்த பொடி
இது. செய்வதும் ஸுலபம்தான். மனம் விரும்பிச் செய்தால் ஒரு
நிமிஷத்தில் செய்து விடலாம்.
கறிவேப்பிலை, புதினா, சில எலுமிச்சை இலைகள் நல்ல வாஸனை
ஆன ஸாமான்களாதலால் இன்னும் ஸாமான்களுடன் மிக்க நன்றாக
அமைந்தது.
மோர்க்குழம்பு, பச்சடி,வற்றக்குழம்பு என சற்றுப் புளிப்பு ருசியுடன் கூடிய
வகைகளைத் தொட்டுக்கொண்டு சாப்பிட கூடுதல் ருசி வரும்.
சாப்பிட நேர்த்தியாக உள்ளது.
சென்னையில் கறிவேப்பிலை ஒருநாள் அதிகம் கிடைத்தது.
புதினாவும் அதிகப்படி இருந்ததைக் காயவைத்திருந்தேன் முதல் நாள்.
இந்த மூலிகைப்பொடியைச் செய்தேன். ருசியும் பார்த்தேன்
நீங்களும் செய்து பார்க்கலாமே என போட்டோவும் எடுத்தேன்.
எதைச் செய்யலாம்,எதை எழுதலாம் என்ற எண்ணம் ஸொந்த வலைப்பூ
வைத்திருப்பதால் அதிகம் தோன்றுகிறது.
ஸமயத்தில் இது ஒரு தொத்து வியாதி போலக்கூடத் தோன்றுகிறது.
பார்ப்போம். இதுவும் எவ்வளவு தூரம் போகிறதென்று.
ஸரி ஸாமான்களைப் பாருங்கள்.
வேண்டியவைகள்.
பச்சை கறிவேப்பிலை—இரண்டுகப்.
புதினா இலை காயவைத்தது—அரைகப்,அல்லது இருப்பதைப் போடவும்.
எலுமிச்சை,அல்லது நாரத்தை இலை—5 அல்லது 6. இல்லாமலும்
செய்யலாம்.
கடலைப் பருப்பு—இரண்டு டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு—இரண்டு டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு—இரண்டு டேபிள்ஸ்பூன்
எள்–ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு,சீரகம் வகைக்கு அரை டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் குண்டுவகை—-4
புளி—சிறிது
உப்பு,பெருங்காயம்—-ருசிக்கு
செய்முறை.
கறிவேப்பிலையை அலம்பி ஈரமில்லாமல் துண்டில் பரப்பி ஈரம்
உலரவிடவும்.
அடுப்பில் வாணலியைக் காயவைத்து, பருப்புக்களைத் தனித்தனியாக
வெரும் வாணலியில் சிவக்க வறுத்தெடுக்கவும்.
மிளகு எள்ளையும், தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.
இந்தக் குண்டு மிளகாய்களைப் பருப்புடன் சேர்த்தே வறுக்கலாம்.
உப்பையும் லேசாக வறுக்கவும்.
புளியையும் பிய்த்துப்போட்டு சூடாக்கவும்.
எல்லாவற்றையும் வறுத்த வாணலி நல்ல சூட்டுடன் இருக்கும்.
ஒரு கால் ஸ்பூன் எண்ணெயை விட்டு, கறிவேப்பிலையை வறுக்கவும்.
எலுமிச்சை இலையையும்,நரம்புகள் நீக்கி வறுக்கவும்.
இறக்கி அப்படியே வாணலியில் வைக்கவும்.
இலைகள் நமுக்காமல் இருக்கும்.
மிக்ஸியில் பருப்புகளை மிளகாய்,மிளகு சேர்த்துப் பொடிக்கவும்.
ரவை பதமாக இருக்கும்போது,எள் சீரகம்,புளியைச் சேர்த்து, மேலும்
சற்று பொடிக்கவும்.
உப்பு,வறுத்த இலைகள்,புதினா இவைகளைச் சேர்த்து மேலும் சற்று
அரைத்து பெருங்காயப் பொடி சேர்த்துப் பத்திரப் படுத்தவும்.
மிக்க நைஸாக அரைக்க வேண்டாம்.
உதிராக வடித்த சாதத்துடன் சிறிது இக்கலவை சேர்த்து,எண்ணெயும்
நெய்யுமாகக் கலந்து தாளித்துக் கொட்டி சித்ரான்னம் மாதிரியும்
செய்யலாம்.
வீட்டில் செய்யும் சேவையிலும் இதை ஒருக்கலவையாகச் செய்ய
முடியும். செய்து பாருங்கள்.
காற்று புகாத பாட்டிலில் எடுத்து வைத்து வேண்டும்போது உபயோகிக்கலாம்.
Entry filed under: பொடிவகைகள்.
11 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 9:38 முப இல் ஏப்ரல் 15, 2015
அருமையான ருசியான மூலிகைப்பொடி. நார்த்த இலை நல்ல மணமாக இருக்கும். இதை வேப்பிலைக்கட்டி என்று சொல்லுவோம். ஆஹா, அது எவ்வளவு ஜோராக இருக்கும். அதுபோலவே தாங்கள் சொல்லியுள்ள இதுவும் இருக்கும் என நினைக்கிறேன். பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 5:15 முப இல் ஏப்ரல் 16, 2015
நாரத்த இலையோ,எலுமிச்சை இலையோ சேர்த்துச் செய்யும் வேப்பிலைக்கட்டி முன்பு எழுதியிருக்கிறேன்.
இது வீட்டில் அதிகமாக இருந்தவைகளைச் சேர்த்துச்செய்தது. எலுமிச்சை இலையும் சேர்த்திருந்தால் இன்னும் மணமாக இருக்கும் என்று தோன்றியது. இது என்ன கறிவேப்பிலையும்,புதினாவும்
சேர்த்துச் செய்தது என்றுதான் தோன்றும்.
இருப்பினும் பருப்புப் பொடிபோல செய்யவேண்டுமென்ற எண்ணம் தோன்றியது.
காமா சோமா என்று இல்லை. அக்கரையாகச் செய்தேன். நன்றாக அமைந்தது. உங்கள் பின்னூட்டம்
இன்னும் இதைப் பற்றி வர்ணிக்கத் தோன்றியது.
நன்றி. அன்புடன்
3.
Kumar | 9:47 முப இல் ஏப்ரல் 15, 2015
Neengal cheythatai ruchithu parthom
Migavum nanraga irunthathu
4.
chollukireen | 5:18 முப இல் ஏப்ரல் 16, 2015
ருசித்து நன்றாக உள்ளது என்று எழுதியது மற்றவர்களுக்கு நாமும் செய்யலாம் என்ற எண்ணத்தை உண்டாக்கும். மிகவும் நன்றி. அன்புடன்
5.
yarlpavanan | 5:00 பிப இல் ஏப்ரல் 15, 2015
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
6.
chollukireen | 5:19 முப இல் ஏப்ரல் 16, 2015
சாப்பிடுவதற்கு வயணமாக இருக்க வேண்டுமே. மிக்க நன்றி. அன்புடன்
7.
திண்டுக்கல் தனபாலன் | 2:35 முப இல் ஏப்ரல் 16, 2015
இன்றே செய்து பார்க்கிறோம்… நன்றி அம்மா…
8.
chollukireen | 5:20 முப இல் ஏப்ரல் 16, 2015
இன்றே செய்தல். நன்றாய் அமையும். நன்றி. அன்புடன்
9.
Jayanthi Sridharan | 2:22 பிப இல் ஏப்ரல் 16, 2015
Nice innovative recipe mami. Thanks for sharing.
shall try at the earliest opportunity.
10.
adhi venkat | 7:03 முப இல் ஏப்ரல் 17, 2015
படங்களும், தாங்கள் சொல்லிய விதமும் ஜோரா இருக்கும்மா. கட்டாயம் செய்து பார்க்கிறேன்.
11.
chollukireen | 7:12 முப இல் ஓகஸ்ட் 8, 2015
மிக்க நன்றி. அன்புடன்