அன்னையர் தினப்பதிவு—-28
மே 2, 2015 at 11:36 முப 13 பின்னூட்டங்கள்
காட்மாண்டுவிலிருந்து கடைசிப் பிள்ளையும் சென்னைக்குப் போகிறான். அவனும் அண்ணாக்களுடன் தங்க டில்லி போய்,அங்கிருந்து சென்னை போவதாகக் கிளம்பிப் போனான். வீட்டில் இரண்டேபேர். காரியமே இல்லை போலத் தோன்றியது. காலை ஆறு மணி. ஏர்போர்ட் போக வீட்டுக்காரரின் ஆபீஸ் கார்வந்து நிற்கிறது.வேலைக்குப்போகத் தயாரானவர் ஒரே தலைவலி. நெருப்பைக் கொட்டினாற்போல ஒரு உணர்ச்சி என்கிரார்.
சாதாரணமாக பெங்காலிகள் தலைவலி,அதிக ஜுரமென்றால், குழாயில்ப் பெருகும் தண்ணீரில், தலையை நன்றாக அலசித் துடைத்து விடுவார்கள். ஜுரமும்இறங்கி வலியும்குறையுமென்பார்கள்.எனக்கும் பத்து வருஷ பெங்கால் வாஸமாதலால், அப்படியே செய்து, ஆபீஸ் போக வேண்டாமென்று சொல்லி ஓய்வு எடுங்கள் என்றேன். எப்படி இருக்கிறது என்று கேட்கிறேன் . பதிலில்லை வாயில்.நுரை தள்ளுவதுபோல ஒரு தோற்றம். ஏதோ ஸரியில்லை.பயம் கவ்விக் கொள்கிறது. வீட்டை ஒட்டினாற்போலுள்ள டெரஸில் ஓடிப்போய் உதவிக்கு அழைக்கிறேன். ஐந்து நிமிஷத்திற்குள் ஜேஜே என்று அக்கம்பக்கத்தினர்,கீழ் வீட்டினர். நாங்கள் இருப்பது இரண்டாவது மாடி.
மளமளவென்று ஒரு நாற்காலியில், உட்காரவைத்தமாதிரி நான்கைந்து பேர்களாக கீழே இறக்கியாயிற்று. டாக்ஸியிலேற்றி பறக்காத குறையாகஆஸ்ப்பத்திரி.உடன்மனிதர்கள். என்ன செய்கிறோம்,ஏது செய்கிறோம் என்று கூடத் தோன்றாத ஒரு மன நிலை.
டாக்டர்கள் பரிசோதனை செய்து,ஆஸ்ப்பத்திரியில் சேர்த்து,பெரிய பிள்ளைக்குதகவல்கொடுத்து, அவன் வரும்வரை கூட இருந்து எவ்வளவு ஒத்தாசை. ஹைப்ளட் ப்ரஷர். இன்னும் ஏதேதோ டெஸ்டுகள் செய்து மைல்ட் ப்ரெயின் ஹெமரேஜ். பூரண ஓய்வுதான் தேவை. ஒரு மாதம் டாக்டர்கள் கண்காணிப்பில் ஆஸ்ப்பத்திரியில் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டனர்.
கூடவே வந்த அக்கம்பக்கத்தினர் டாக்டரிடம் பேசி , மற்றும் யாவையும் தெரிந்து கொண்டுதான் வீட்டுக்குப் போனார்கள். கூடவே இருந்து ஒத்தாசை செய்தவள் மிஸஸ் கார்க்கி. பிள்ளைகளின் தோழனுக்கு அம்மா. அவளும் ஒரு ஹிந்தி ஆசிரியை.
சினிமா இயக்குனரின் மனைவி. பையா,பாபி என்று உரிமையுடன் பழகுபவள். சின்ன வயதிலிருந்து ஆத்மஞானத்தில் நாட்டமுள்ளவள். எனக்குப் பெண்போன்ற வயது அவளுக்கு. இருப்பினும் ஒரு ஆத்மார்த்த சினேகிதி. வெளி உலகத்திலே மதேசி என்று இந்தியர்களை நேபாலிகள்சொல்லுமிடத்தே ஒரு நேபால மங்கை சினேகிதியாகக் கிடைத்தது பாக்கியம்தான்.
பாபி சாதமும் தயிரும் உனக்கு போதும். அதை நான் கொடுக்கிறேன். மற்றதை நான் பார்த்துக் கொள்வேன். நீ ஆஸ்ப்பத்திரிலேயே இரு. என்று சொன்னவள்.நான் காலையில் ஒரு முறை வந்து ஏதோ செய்து விட்டு ,பேஷண்டுக்காக ஏதாகிலும் செய்து கொண்டு, இரவா,பகலா என்று பார்க்காமல், வேறு எதையும் நினைக்காமலேயே நாட்கள் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. போல தோன்றியது. போஸ்ட்டாபீஸ் போய், நம் நம்பர் போஸ்ட் பாக்ஸைப்பார்த்து,தபால்கள் எடுத்துவர கூட ஞாபகமில்லை. இன்று போய்ப் பார்த்துவிட்டுவா என்று பிள்ளையிடம் சொன்னேன்.
பெங்களூரிலிருந்து, தபால்ப் பெட்டி எண்ணிற்கு தந்தி வந்துள்ளது பெரிய அக்காவின் கணவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி. டெலிகிராம்மூன்றுநாட்களாகிறதுயாருக்காகவும் வருத்தப்படவும்,துக்கம் கொண்டாடவும் நேரமில்லை. பரபர வென்று தலைக்கு ஸ்னானம் செய்ததுடன் ஸரி.
இவருக்கும் எதுவும் சொல்லக் கூடாது. பாவம்,அக்காவிற்கும், அம்மாவிற்கும் மனக்கஷ்’ட’ம் அதிகமிருக்கும். சென்னையிலும் வீட்டுவேலை நடந்து கொண்டு இருக்கிறது. சுகம்,துக்கம் எதிலும் பங்கு பெறாமல் நான் ஒரு தொலைதூர வாசி. அம்மாவாகிலும் போய் செய்யவேண்டியதைச் செய்தால்தான் நன்றாக இருக்கும்.
ஸரி ஒரு பிக்ஸட் டிபாஸிட்டின் வித்ட்ரா ஸ்லிப், சென்னையினுடயது இருந்தது ஞாபகம் வந்தது. அதை பக்கத்து வீட்டவர்களிடம் கொடுத்து ரிஜிஸ்டர் தபாலில் சென்னைக்கு அம்மாவின் பெயருக்கு அனுப்பச் சொன்னேன். சூசகமாக இவருக்கும உடம்பு ஸரியில்லை, அதனால் நான் வரமுடியவில்லை என்று எழுதி வைத்தேன்.மற்றும், அக்கா,அவர்கள் வீட்டுப் பெரியவர்கள் என்று யாவருக்கும் உபசாரக் கடிதங்கள் எழுதினேன்.
ஸரியான நேரத்தில் பெங்களூர் விஷயம் அம்மாவிற்குத் தெரிந்திருக்கிறது. வாய் ஓயாமல் அம்மா அவரைப்பற்றியேபேசிக்கொண்டும், அக்காவை நினைத்து வருத்தப் பட்டுக்கொண்டும் இருக்கிறாாள். அழைத்துப் போனால் இன்னமும் பாட்டிக்கு மன வருத்தம் அதிகமாகும். அதனால்என் பெண்ணும் ,மாப்பிள்ளையும் போய் ஆறுதல் சொல்வதாக எழுதிய கடிதம் ஒழுங்காக வந்தது. போனவர்களைவிட இருப்பவர்களைக் குறித்தே துக்கம் அதிகம் பாதிப்பது வழக்கம்தானே?
ரசீது சேர்ந்து பணம் உபயோகமாகட்டும் என்று நான் நினைத்தேன்.
அதற்குள்ளாகவே தன்னிடம் உள்ள பணத்தைத் திரட்டி, நல்லதாக புடவை வாங்கு என்றிருக்கிராள் அம்மா.
நான் வாங்குகிறேன்என்ற பேத்தியிடம் இல்லே, சின்னக் குழந்தையாக இருந்தபோது எடுத்து வளர்த்து பிரதி ஒன்றும் என் கையாலேயே செய்திருக்கிறேன். இதுவும் அப்படிதான் இருக்க வேண்டும் என்று சொல்வதாகவும்,அவ்விடம் போய் அக்காவின் மைத்துனரிடம் கொடுத்துஸமயத்தில் அவரைக் கொடுத்து விடும்படி சொல் என்றும் சொல்லி பணமும் கொடுத்துவிட்டாள். நாங்கள் போய்வந்து கடிதம் போடுகிறோம் என்றும் கடிதம் வந்தது. தொடருவோம். கைத்தவறுதல் பிரசுரி கிளிக் ஆகிவிட்டது அதுவும்ஸரி. பார்ப்போம்.
Entry filed under: அன்னையர்தினம். Tags: ஏர்போர்ட், காட்மாண்டு, டாக்டர்.
13 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar | 3:20 பிப இல் மே 2, 2015
காமாக்ஷிமா,
கலகலவென இருந்த வீடு வெறிச்சோடி போனதில் ஐயாவுக்கு மனதில் இனம்புரியாத ஒரு வேதனை வந்திருக்கலாம். பென்ஷன் கிடைக்க ஏற்பாடாகியிருக்கும் என்று நினைத்த நேரத்தில் இப்படியொரு பிரச்சினையா !
எழுத்துக்களின் வேகம் உங்களுடன் சேர்ந்து நாங்களும் ஓடியதுபோல் இருந்தது. அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 6:36 முப இல் மே 5, 2015
உடன் நீங்கள் சிலர் ஓடிவருவதால்தான் வேகம் கூடிவிட்டது. பிரசினைகளுக்கு எப்போதும் எல்லை கிடையாதே. நிதானித்துக் கொள்ளுங்கள். மீண்டும் வருகிறேன். அன்புடன்
3.
ranjani135 | 7:31 முப இல் மே 3, 2015
யாருமே இல்லாமல் எப்படித் தவித்திருப்பீர்கள். ஆனால் உதவி செய்யும் நல்ல மனம் கொண்ட உங்கள் சினேகிதி உங்களை நல்லவிதமாகப் பார்த்துக் கொண்டிருப்பாள். அந்த நேரத்தில் இன்னொரு துக்கச் செய்தி. ஒரே சமயத்தில் எத்தனை விஷயங்களை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருக்கிறது!
4.
chollukireen | 8:07 முப இல் மே 5, 2015
சில விஷயங்கள் என்ன ,பல விஷயங்கள் இப்போது யோசித்தால் எப்படி என்று தோன்றுகிறது. அவ்வப்போது கடவுள் சில வழிகளைக் காட்டுவார் என்பதுதான் உண்மை. நிகழ்வுகள் பழயதாக இருப்பினும் கேட்கும்போது அனுதாபம்தான் உண்டாகிறதல்லவா? அன்புடன்
5.
yarlpavanan | 4:33 பிப இல் மே 4, 2015
இலக்கியச் சுவை சொட்டும்
இனிய பதிவு இது!
தொடருங்கள்
6.
chollukireen | 8:10 முப இல் மே 5, 2015
நடந்தவைகள் யாவும் சரித்திரமாகிவிடுகிறது. உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்
7.
பிரபுவின் | 7:53 முப இல் மே 6, 2015
“வெளி உலகத்திலே மதேசி என்று இந்தியர்களை நேபாலிகள்சொல்லுமிடத்தே ஒரு நேபால மங்கை சினேகிதியாகக் கிடைத்தது பாக்கியம்தான்”
“மதேசி” என்றால் என்ன?
விறுவிறுப்பான பதிவு இது.
அன்புடன் பிரபு.
8.
chollukireen | 8:17 முப இல் மே 6, 2015
நேபாலிகள் அல்லாதவர்கள் மதேசி,விதேசி. நாங்கள் அங்கு போன புதிது. இந்த வார்த்தைகள். இப்போது என் மகனொருவனே நேபால் ஸிடிஜன். இதற்கென்ன சொல்லுவீர்கள்? அன்பு கமென்டிற்கு நன்றிகள். அன்புடன்
9.
chollukireen | 11:55 முப இல் ஜூலை 26, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இன்றையப்பதிவு 28 வேறு கோணத்தில் வருகிறது. மிகச்சிறிய பதிவு. பாருங்கள். படியுங்கள். அன்புடன்
10.
ஸ்ரீராம் | 1:19 முப இல் ஜூலை 27, 2021
பரபரப்பான சம்பவங்கள். சிரமமான நாட்கள். எதிலும் மனம் சென்றிருக்காது. மரணச்செய்தி மூன்று நாட்கள் கழித்துப் பார்த்தது துயரம். அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்கிற எண்ணமும் வந்திருக்கும். அக்கம்பக்கத்தவர் அழகாய் உதவி செய்ததை படிக்கும்போது மகிழ்ச்சி.
11.
chollukireen | 11:46 முப இல் ஜூலை 27, 2021
எப்படி ஸமாளித்தேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. அந்தந்த ஸமயங்களில் பகவான் ஏதோ தன்மையைக் கொடுத்து விடுகிரார். நன்றி. அன்புடன்
12.
Geetha Sambasivam | 10:15 முப இல் ஜூலை 27, 2021
ரொம்பக்கவலைதரும் பதிவு அம்மா! பின்னால் பெரியவர் உடல் நலம் தேறி சௌகரியமாய் இருந்தார் அல்லவா? தனியாக எல்லாவற்றையும் எப்படியோ சமாளித்திருக்கிறீர்கள். அதோடு இல்லாமல் ஊரிலிருந்தும் கவலை தரும் விஷயம்! வந்தால் எல்லாம் சேர்ந்து வரும் போல! குழந்தைகள் நம்மோடு இருந்து விட்டுப் பின்னர் அவரவர் பாதையில் போன பின்னால் கிடைக்கும் தனிமை கொடூரமானது. என்ன செய்வது?
13.
chollukireen | 11:57 முப இல் ஜூலை 27, 2021
பெரியவர் உடல்நலம் தேறி யிருந்து ஜெனிவா வாஸமெல்லாம் செய்து இப்போது ஆறு வருஷங்களாக அல்ஜிமர்ஸ் நோய்.மும்பை வாஸம். சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. நோயில்லாமலிருக்க முடியவில்லை. இதற்கு என்ன செய்வது. முதுமையே கொடுமைதான்.ஏதோ ஸம்பந்தமில்லாத பதிலாக நினைக்க வேண்டாம்.எல்லோரும் நன்றாக இருக்க கடவுளை வேண்டுவோம். நன்றி. அன்புடன்