வெஜிடபிள் மோமோவும் கோல் பேடாகோ அசாரும்.
ஜூன் 25, 2015 at 1:50 பிப 16 பின்னூட்டங்கள்
பெயரைப்பார்த்து மலைக்க வேண்டாம். இது ஒரு நேபாளத்துச் சிற்றுண்டிவகை. செய்வதுகூட சுலபம்தான். திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் இந்தச்சிற்றுண்டியை ரஸித்து எழுதியிருந்தார். அவர் ப்ளாகில் படித்த உடனே இதைப்பற்றி எழுத நினைத்தேன். ஆனால் எதையும் செய்து படம் பிடித்து எழுதுவதுதானே என்னுடைய அசல் பதிவு. உடல் நலமின்மையால் எல்லாம் எங்கேயோ விலகிப் போய்க் கொண்டே இருந்தது. வீட்டில் சமையலுக்கு ஒத்தாசைக்கு ஒரு நபரை ஏற்பாடு செய்திருப்பதாக மருமகள் சொன்னாள். எனக்கில்லை. எங்கள் குடும்பத்திற்கு., யாரோ இவர் யாரோ என்ற எண்ணம் மனதில ஓடியது. எங்கள் வீட்டுப் பெரியவருக்கு உதவிக்கு புதியதாக ஆள் வந்து மூன்று மாதமாகிறது.
மருமகள் டான்ஸ் ப்ரோக்கிராம் அஸ்ஸாமில் செய்யப் போகப்போவதால் எதற்கும்,யாவருக்கும் செய்ய ஒரு நபர் புதிய உதவி நபரே சிபாரிசு செய்யவே உதவி ஆளும் வந்து சேர்ந்தாகி விட்டது. இந்தக் கதையெல்லாம் எதற்கா?
உங்களுடனெல்லாம் வார்த்தைகள் பேசி நிறைய நாட்களாகி விட்டது. என்னுடைய ப்ளாகின் உலகமல்லவா நீங்கள். வந்து சேர்ந்தது யார் தெரியுமா?
நேபாலைச் சேர்ந்தவர்கள். எனக்கு டில்லியில் ஒரு பெயருண்டு. நேபால்மாமி. என்றுதான் என்னை அடையாளம் சொல்வார்கள் கனராபேங்க்மாமி,குவாலியர் மாமி, இல்லாவிட்டால் பத்தாம் நம்பர்மாமி,, இருபதாம் நம்பர்மாமி, கைதிகளின் நம்பர் மாதிரி வீட்டு நம்பருடன் மாமி சேர்ந்து விடும். இதெல்லாம் லலிதா ஸஹஸ்நாம க்ரூப். மிகவும் ஸந்தோஷமாக திருப்புகழ் முதலான வகுப்புகளுக்கும் போகும் க்ரூப். மிகவும் இனிமையான காலம் அது.
எங்கோ ஆரம்பித்து எங்கோ போகிறேனே! வட இந்திய சமையல் தெரியும் என்று சொன்னான். குக்.
நான்கு நாட்கள் நம் சமையலும் மருமகள் காண்பித்துத் ட்ரெயினிங் கொடுத்தாள். ஸரி நெருப்பு சுடும் என்ற அளவிற்காவது தெரிந்தவன்தான்.
கொட்டும் மழை. நேற்று மோமோ தெரியுமாஎன்றுபிள்ளைகேட்கஇடைவேளைச்சிற்றுண்டியாக அது தயாரானது. எனக்கும் ப்ளாகிற்கு படத்துடன் கிடைத்தது.
வேண்டியவைகளைப் பார்க்கலாமா?
இவைகள் பூரணத்திற்கு.
பொடிப்பொடியாக நறுக்கிய முட்டைகோஸ்– இரண்டுகப், காரட் அரைகப்,
இஞ்சி ஒரு சிறிய துண்டு. ப்ரகோலி-அரைகப்.
பொடியாகநறுக்கிய காய்களை நன்றாகத் தண்ணீரில் அலசி ஒட்ட வடிக்கட்டவும்.வாணலியில் சிறிது எண்ணெயைக் சூடாக்கிகக் காய்களை சிறிது உப்பு சேர்த்து மூடாமல் வதக்கவும். இஞ்சியைத் தட்டிப்போடவும். தண்ணீர்ப்பதம் இழுத்துக் கொண்டு காய் உதிராக ஆகும். பச்சைக் கொத்தமல்லி சேர்த்து ஆறவிடவும்.
கவரிங்செய்ய, மைதா–இரண்டுகப், துளி உப்பு,துளி பேக்கிங்பவுடர் அல்லது சோடா உப்பு.இரண்டு விரலிடுக்கில் எடுக்கும் அளவு ஒரு சிட்டிகை. அது போதும்.
தக்காளிப்பழ சாஸ்தான் கோல்பேடாகோ அசார். புத்தம்புதியது தக்காளிப்பழம்—இரண்டு, பெரிய வெங்காயம்–ஒன்று,பச்சைமிளகாய்-3 ,பூண்டு இதழ்கள்–5, ருசிக்கு உப்பு
அசார் செய்முறை—தோல்நீக்கிநறுக்கியவெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,
உரித்த பூண்டு இதழ்கள் யாவற்றையும் மிக்ஸியிலிட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி அரைத்த விழுதுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து, உப்பு போட்டுக் கொதிக்க விடவும். நன்றாக பச்சை வாஸனை போகும் அளவிற்குக் கிளறி, சாஸ் பதத்திற்குத் திக்கானவுடன் இறக்கி பச்சைக் கொத்தமல்லி நறுக்கிச் சேர்க்கவும். அசார் ரெடி.
இப்போது மோமோ தயாரிக்கலாம். செய்முறை.
மைதா மாவுடன் துளிஸோடாஉப்பையும்,உப்பையும் சேர்த்து சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும்.
ஒரு பாலிதீன் கவரிலோ,ஈரத்துணியிலோ மாவை வைத்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். மாவு உப்பிக்கொண்டு இருக்கும்.
ஒரு நெல்லிக்காயளவு உருண்டைகளாக மாவை திரட்டி உருட்டி சின்ன
வட்டங்களாக மாவு தோய்த்து இடவும்.
ஒவ்வொரு வட்டத்தையும், கையிலெடுத்துக் குழிவாக வைத்துக் கொண்டு,நடுவில் சிறிது காய்கறி பூரணத்தை வைத்து விளிம்பை ஈரவிரலினால் ஈரமாக்கி மடித்து ஒட்டவும்.
மூடியவகையில்
இவைகளை நீராவியில் கொழுக்கட்டை வேக வைப்பதுபோல ஆவியில் ஐந்து நிமிஷம் வைத்து எடுக்கவும். அதிகநேரம் வைக்க வேண்டாம். மூடியும்,மூடாமலும் இருந்தால் கூட வெந்து விடும்..
இப்படி எடுத்த மோமோவும் அசாரும்தானிது.
ஆவியில் வெந்த இந்த மோமோக்களை ஃப்ரை பேனில் சுற்றிலும் எண்ணெய் விட்டு சிவக்கத் திருப்பிவிட்டு தவலடைமாதிரி எடுத்தாலும் ருசியாக இருக்கும்.
ஆவியில் வேக வைக்காது ,வாணலியில் எண்ணெய் வைத்துப் பொரித்தால் அதுவும் ருசியாக இருக்கும்.எல்லா வகைகளுடனும் நேபாளிகள் இந்தக் காரசாரமான அசார்தான செய்வார்கள்.நமக்குப் பூண்டு பிடிக்காதென்றால் நம்முடைய ஏதாவது சட்னி செய்தால் போயிற்று. தேங்காய் பூரணமும் வைத்துச் செய்யலாம். அரிசிமாவில் பண்ணும் நமக்கு இப்படியுமா என்று தோன்றும் .உலகம் பலவித ருசிகளில் திளைக்கிறது. கொஸ்தோ ச ஹஜூர். எப்படி இருக்கிறது. குக் கேட்கிறான். மீடோ ச.. மிகவும் நன்றாக இருக்கிறது. பிள்ளை சொல்லவே மழைக்கு அச்சேறுகிறது. பாருங்கள். முதல்படம் பொரித்த மோமோக்கள்.
Entry filed under: நேபாளதேசத்துச் சிற்றுண்டி. Tags: கோல்பேடா, விஜிடபில்.
16 பின்னூட்டங்கள் Add your own
ranjani135 க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 12:10 பிப இல் ஜூன் 30, 2015
புதிதாக இருக்கிறது… உங்களைப் போல் அழகாக செய்து பார்க்க வேண்டும்… நன்றி…
2.
chollukireen | 8:01 முப இல் ஜூலை 3, 2015
நாம் செய்தால் காய்கறி கொழுக்கட்டை என்று சொல்லலாம். நான் எழுதியிருக்கிறேன் விரிவாய். பார்க்கப்போனால் மைதாவில்செய்யும் இது ஒருவித
கொழுக்கட்டைதான். மிக்க நன்றி. அன்புடன்
3.
chitrasundar | 9:41 பிப இல் ஜூலை 1, 2015
காமாஷிமா,
பேரச் சொல்லவே வாயில நுழைய மாட்டேன்றது. புது நபர் உதவியால் நாங்களும் மோமோ செய்முறையைப் பார்த்தாகிவிட்டது. நன்றிம்மா.
நீங்க சொல்லும் கதைக்கும் ஒரு ரசிகர் வட்டம் உண்டு. அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 8:16 முப இல் ஜூலை 3, 2015
மேமே இல்லை.மோமோ இரண்டுதரம் நினைத்தால் வந்து விடும். உனக்கெல்லாம் இது பிரமாதம் ஒன்றுமே இல்லை. மேல் ஷீட் அவ்விடம் ரெடிமேடாகவே கிடைக்கிறதே. கதை ரஸிப்பீர்களென்றே தானாகவந்து விடுகிறது. அதுவுமில்லாமல் எல்லாமே கதைகளாகத்தான் இருக்கிறது. ரஸிகையே மிக்க நன்றி. புனிதா லீவில் வந்திருப்பாள். நிறைய இடங்கள் சுற்றுலாவா? அன்புடன்
5.
ranjani135 | 2:48 பிப இல் ஜூலை 2, 2015
எங்கள் வீட்டில் உங்கள் பெயர் ப்ளாக் காமாட்சி மாமி! சிலசமயம் ‘சொல்லுகிறேன்’ மாமி என்றும் குறிப்பிடுவேன்.
மோமோ செய்யச் சொல்லி பெண்ணிடமும், மாட்டுப்பெண்ணிடமும் சொல்லுகிறேன்.
கோல்பேடாகோ அசார் ரொம்பவும் ஆவலைத் தூண்டுகிறது.
6.
chollukireen | 8:27 முப இல் ஜூலை 3, 2015
பாரக்பூர் ஸுதாகிமம்மியாகி, காட்மாண்டு முரளிகோ ஆமாவாகி, நேபால்மாமி போன்றவைகளாகி,பசங்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லோருக்கும் அம்மாவாகி,ப்ளாகிலும்,காமாட்சி அம்மாவாகி. வரவா,போறவா எல்லோருக்குமே அம்மாவாகி விட்டேன். ஜெயலலிதாமாதிரி பவர்ஃபுல் அம்மா இல்லை.. உங்கள் கமென்ட் ஸந்தோஷத்தை அளித்தது. ஐச்வர்யா,செய்கிறாளா,நளினி செய்கிராளா பார்ப்போம். புனா வந்தால் இவ்விடமும் வாங்கோ. அன்புடன்
7.
ranjani135 | 2:49 பிப இல் ஜூலை 2, 2015
வழக்கம்போல் உங்கள் முன்னுரை அசத்தல்! முதலில் சொல்ல மறந்து விட்டதால் இப்போது சொல்லுகிறேன்.
8.
chollukireen | 8:28 முப இல் ஜூலை 3, 2015
முன்னுரையாளியாகத்தான் இருக்கிறேன். ஸந்தேகமே இல்லை. நன்றி அன்புடன்
9.
Geetha Sambasivam | 2:45 முப இல் ஜூலை 8, 2015
இந்த மோமோ சாப்பிட்டதில்லை என்றாலும் கேள்விப் பட்டிருக்கேன். ஒரு முறை வீட்டில் செய்து பார்க்க வேண்டும். கொழுக்கட்டை செய்வது போல் அரிசி மாவிலேயே செய்தால் என்ன என்றும் தோன்றுகிறது. பார்க்கலாம். தக்காளி சாஸ் செய்முறையும் நன்றாகவே இருக்கிறது.
10.
chollukireen | 8:47 முப இல் ஜூலை 8, 2015
மைதாவில் செய்வது சுலபம். பெரிய அளவு சோமாசி மாதிரி பூர்ணம் வைத்துச் செய்து அசாருடன் சாப்பிட்டு விட்டால் டின்னரோ,லஞ்சோ முடிந்து விடும் அவர்களுக்கு. பால்கோவா வைத்தும் செய்யலாம். அரிசிமாவெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. நன்றாகத்தானிருக்கும்.. கஃப் கை மடிக்கிரமாதிரி மேல்மாவு மடக்கியிருப்பது கவனித்தீர்களா? மைதாவில் சுலபமாக இருக்கும்.. நன்றி அன்புடன்
11.
thulasithillaiakathu | 12:16 முப இல் ஜனவரி 4, 2017
மோமோஸை அவ்வப்போது செய்வதுண்டு. பூரணம் கூட வேறு காய்களும் வைத்துச் செய்ததுண்டு…இதே போன்றும்…இனிப்பு வைத்தும்…அப்படியே பேஸ் தெரிந்து கொண்டு கற்பனையில்….
மிக அழகாகச் சொல்லித் தந்திருக்கிறீர்கள்…காமாட்சியம்மா
கீதா,
12.
chollukireen | 11:56 முப இல் ஜூன் 27, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இன்று கிடைத்தது நேபாலதேசத்து மோமோ என்ற சிற்றுண்டி. கூடவே அசார் என்ற சாஸ் வகையும்.பாருங்கள். படியுங்கள். அன்புடன்.
13.
ஸ்ரீராம் | 12:17 முப இல் ஜூன் 28, 2022
பொதுவாக காய்கறிகளை நன்றாக தண்ணீரில் அலசி விட்டு நெருக்கவேண்டும் என்றும், நறுக்கியபிறகு தண்ணீரில் அலசக் கூடாது என்றும் சொல்வார்கள்!
மோமோஸ் அருமை. இப்போ அநேகமாக எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. நாங்களும் ஒரு மோமோஸ் பதிவு போட்டோம்!
14.
chollukireen | 11:28 முப இல் ஜூன் 29, 2022
முக்கால்மவாசி காய்கறிகளை நறுக்கி விட்டுதான் அலசுகிறோம். பழக்கம் மாற வேண்டும். அடிக்கடி செய்வதில்லை.மோமோஸ் சுடச்சுட சாப்பிட ருசிதான். உங்கள் பதிவையும் படித்திருப்பேன்.ஞாபகம் இல்லை.பார்க்கிறேன்.நன்றி அன்புடன்
15.
Geetha Sambasivam | 12:51 முப இல் ஜூன் 28, 2022
முன்னரே படித்துக் கருத்திட்டாலும் எங்க வீட்டு நிச்சயதார்த்தம் ஒன்றிலும் இந்த மோமோ காலை ஆகாரத்தில் இடம் பெற்றது என்பது தான் விசேஷம். எனக்கு என்னமோ அவ்வளவாப் பிடிக்கலை. :)))) அதனால் வீட்டில் முயர்சி பண்ணிப் பார்க்கலை. என்றாலும் இன்னொரு முறை சாப்பிட்டுப் பார்த்துவிட்டுச் செய்தும் பார்க்கலாமோ என்றும் தோன்றுகிறது.
16.
chollukireen | 11:31 முப இல் ஜூன் 29, 2022
பிடிக்காததை முயற்சி செய்வதும் கஷ்டம். இப்படி வேறு எங்காவது கிடைத்தால் ருசி பார்க்கவும். கட்டாயம் எதுவுமில்லை. நன்றி. அன்புடன்