உபகதைகளில் நான் எழுதும் மூன்றாவது கதை பூனையும்,எலியும். 1.
ஓகஸ்ட் 12, 2015 at 8:52 முப 8 பின்னூட்டங்கள்
இதுவும் நீதி ஸம்பந்தப்பட்டக் கதைதான். ஒரு தர்ம சாஸ்திரத்தை அனுஸரிக்கும் மன்னன் பகைவரால் சுற்றி வளைக்கப்படும்போது , அதுவும் பல பகைவர்கள் சேர்ந்துத் தாக்கும் போது அவன் எத்தகைய முடிவை எடுக்க வேண்டும்? இக் கேள்வியை தாத்தா பீஷ்மரிடம் பேரன் தர்மர் கேட்க பீஷ்மரால் சொல்லப்பட்ட கதை. அவரும் சொல்கிறார் இதற்கு உதாரணமாகப் பெரியவர்களால் சொல்லப்பட்ட ஒரு நீண்ட பூனை, எலியின் சம்பாஷணைபோன்ற ஒரு கதை உண்டு.. அதைச் சொல்கிறேன் கேட்டுக்கொள் என்று ஆரம்பித்துச் சொல்கிறார்.
நண்பர்களே பகைவராவதும், பகைவரே நண்பர்களாவதும் சாத்தியம்தான் சில ஸமயங்களில். இது எப்போதும் ஒரே மாதிரி நிகழ்வதில்லை. ஆபத்துக்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது ரகஸியமான விஷயம். ஸமயத்திற்குத் தக்கவாறு மாற்றம் ஏற்படும். முட்டாள் மனிதன் பகைவரோடு ஒரு போதும் ஸமாதானம் செய்து கொள்வதில்லை. அவன் தன் எந்த கருத்திலும் வெற்றியடைய முடியாது. அவசியமானால் வெற்றிக்காக பகைவனிடம் ஸமாதானமும், நண்பனிடம் கூட விரோதம் செய்யும்படி இருக்கும். ஒரு அடர்த்தியான காட்டிலுள்ள ஒரு மிகப்பரந்த ஆலமரம்தான் இந்தக் கதையின் நிலைக்களம். அடர்ந்த கொடிகளால் மூடப்பட்டும், பலத்த விழுதுகளினால் அழகியதுமான அந்த மரம். நிறைய பொந்துகளும், அடர்ந்த கிளைகளும்,நிரம்பி பார்ப்போருக்கு ரம்யமூட்டுவதாகவும் இருந்தது. நல்ல நிழலுள்ளது. அந்த ஆலமரத்தின் நெருங்கிய கிளைகனூடே ஒரு லோமேஷ் என்ற பூனை வசித்து வந்தது.
அந்த மரத்தினடியில் நூறு வளைகளிருந்தது. யாவும் பக்காவானவை. அதில் பலிதன் என்ற ஒரு மிக்க அறிவாளியான புத்தி கூர்மையான எலியும் கூட்டத்தாருடன் வசித்து வந்தது. அந்தக் காட்டையொட்டின இடத்தில் ஒரு வேட்டையிற்சிறந்த ராக்ஷஸன் போன்ற ஒரு மனிதனும் யாவற்றையும் வேட்டையாடி கொன்று கொண்டிருந்தான். அவனுடைய வேலை அந்தி நேரம் பார்த்து ஆலமரத்தடியில் அவனுடைய பலமான கயிறுகளைக் கொண்டவலையை விரித்து நாலா பக்கமும் அசையாமற் கட்டி விடுவது. இரவு நேரங்களில் பறவைகளும்,மிருகங்களும் சிக்கிக் கொள்ளும். வேடன் நிம்மதியாகத் தூங்கி விட்டுக் காலையில் வந்து அவைகளைக் கொன்று எடுத்துக்கொண்டு சாப்பிடவும் விற்கவும் போவான். அவனுடைய இந்தத் துஷ்டச் செயலில் வனத்தில் வாழும் உயிரினங்கள் மிகவும் கொல்லப்பட்டன. ஒரு நாள் அந்த லோமேஷ் என்ற பூனையும் வலையில் சிக்கிக் கொண்டது.
இரவில் வெளியில் வர எட்டிப்பார்த்த எலிக்கு இந்த விஷயம் தெரிந்தது. அது பயமின்றி எல்லாப் பக்கமும் ஓடியாடித் திரிந்து பார்த்து ரஸிக்கத் துவங்கியது. வலையின் மீது சிந்தியிருந்த மாமிஸத் துண்டுகளைப் பார்த்தது. மிகவு ஸந்தோஷமாக வலையின் மீதேறி மாமிஸத்தைச் சாப்பிடத் தொடங்கியது. சாப்பிட்டுக் கொண்டே தன்னுடைய பகைவன் லோமேஷைப் பற்றிச் சிந்திக்கத் துவங்கியது. அப்படியே பலிதனின் பார்வை வேறு திக்குகளிலும் சென்றது. பார்வையில் பயம் கவ்வியது. இப்படி ஒன்றை அது எதிர்பார்க்கவே இல்லை. சாம்பல் வண்ண ஹரிண் என்ற கீரிப்பிள்ளை வந்து கொண்டிருந்தது. பாம்புகளின் எதிரிஅல்லவா ? எலியின் வாஸனையைப்பிடித்து மகிழ்ச்சியாக வந்து, எலி வலைமீதிருந்து கீழே வரும்போது பிடிக்க நாக்கைக் கொட்டியபடி உட்கார்ந்து விட்டது. ஓ. இதோ ஒரு பகைவன் சாப்பிடக் காத்திருக்கிறான். மரணம் அருகில் வந்து விட்டது.
நாம் எப்படி நம்மைக் காப்பாற்றிக் கொள்வது? மின்னல் வேகத்தில் எண்ணங்கள் வந்தது. உயரே மரத்தின் மீது ஒரு ஆந்தையும், கண்ணை உருட்டிப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தகாட்சியையும் கண்டது. இன்னொரு பகைவனும் காத்துக் கொண்டிருக்கிறது. ஆலமரத்தின் பொந்தில் வசிக்கும் சந்திரகன் என்ற பிரசித்தமான ஆந்தையது. அதன் இறகும் மிக்கக் கூர்மையாயிற்றே! இப்படி ஆபத்தாகவே எங்கும் காட்சியளிக்கும் போது அந்த அறிவுள்ள எலி ஏதாவது உபாயத்தால்தான் நாம் தப்பவேண்டும் என்று அதன், சிறந்த புத்தியை உபயோகித்து யோசிக்கத் துவங்கியது. எதிரே கீரி,உயரே ஆந்தை,உள்ளே பூனை,காலையில் வேடன் என்ன செய்யலாம்? இச்சமயம் பகைவர்களுக்கு ஒத்தாசை செய்து நம் உயிரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். எப்படி முடிவு இருக்குமோ? ஒருவர்க்கொருவர் ஒத்தாசை செய்தும்,கேட்டும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் . பூனைக்கு இத உபதேசம் செய்து அதன் மனதை மாற்றி எனக்கும் நன்மையைச் செய்து கொள்ள வேண்டும். அறிவாளி,நீதி சாஸ்திர வல்லவன்,வித்வான் இவர்கள் ஆபத்தைக் கண்டு பயப்படுவதில்லை. இப்படி எண்ணி எலி பூனையிடம் சொல்லலாயிற்று.
நண்பனே பூனையே நான் உன்னிடம் சினேகமாகப் பேசுகிறேன். நீ உயிரோடு இருக்கிறாய். உன்னுடைய உயிர் காப்பாற்றப் பட வேண்டும் என்று நினைக்கிறேன். காலையில் வேடன் வந்து விட்டால் உன்னை உயிரோடு அடித்துக் கொன்று விடுவான். நம்மிரண்டு பேரின் உயிரும் காப்பாற்றப் பட வேண்டும். நீ பயப்படக் கூடாது. நீ என்னைப் பிடித்துக் கொல்லும் எண்ணத்தைத் தியாகம் செய். நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். நான் ஒரு உபாயத்தைத் தேடியுள்ளேன். நீ ஸரி என்றால் செய்யலாம் என்றது.
ஆந்தை கூகூ என்று காத்திருக்கு. கீரி தின்னத் துடிக்கிறது. வேடன் வந்தால் நாம் இருவரும் காலி.நீ வலையினுள் நான் வலையின் மீது. ஏழடி தூரம் இருவர் ஒன்றாக நடந்தால் அவர்கள் சிநேகிதர்கள். நாம் இருவரும் வெகு காலமாக இவ்விடம் வாழ்கிறோம். நீ மரத்தின் மீது. நான் மரத்தின் கீழ். நாமிருவரும் சிநேகிதர்களே. நீ என்னைக் காப்பாற்று. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். ஆற்றைக் கடக்க கட்டை உதவும் மாதிரி நாம் உதவிக் கொள்வோம் என்றது. இன்னும் பல நன்மையான வார்த்தைகளைக்கூறி,உபாயங்களைக்கூறி பலிதனாகிய எலி, பூனையாகிய லோமேஷின் பதிலை எதிர்பார்த்தது. தொடருவோம்.
Entry filed under: பாரதக்கதைகளில் சில. Tags: ஆந்தை, கீரிப்பிள்ளை, பக்ஷிகள், பொந்து, மிருகங்கள்.
8 பின்னூட்டங்கள் Add your own
chitrasundar க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 1:54 பிப இல் ஓகஸ்ட் 12, 2015
சுவாரஸ்யம்… தொடர்கிறேன்…
2.
chollukireen | 12:41 பிப இல் ஓகஸ்ட் 14, 2015
ஒரு பின்னூட்டம் லக்ஷம் பின்னூட்டங்களுக்குச் சமம். நன்றி அன்புடன்
3.
chitrasundar | 8:12 பிப இல் ஓகஸ்ட் 12, 2015
காமாஷிமா,
கதை சொல்லும் விதம் அந்த மரத்தினடியில் நின்று நாமும் நேரில் பார்ப்பதுபோலவே உள்ளது.
எலியுடன் பூனை ஒத்துப் போனதா? சேர்ந்தே இருவரும் தப்பித்தார்களா? எனும் ஆவல் அதிகமாகிவிட்டது. அடுத்த பதிவில் பார்க்கலாம் என்ன நடக்கிறதென !! அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 12:43 பிப இல் ஓகஸ்ட் 14, 2015
அடுத்த பதிவு போட்டுவிட்டேன். கதை கேட்டதற்கு மிகவும் நன்றி அன்புடன்
5.
ஸ்ரீராம் | 1:09 முப இல் ஓகஸ்ட் 13, 2015
தொடரக் காத்திருக்கிறேன் அம்மா.
6.
chollukireen | 12:45 பிப இல் ஓகஸ்ட் 14, 2015
தொடர்ந்ததற்கு ஸந்தோஷம். முடித்து விட்டேன் பாருங்கள். நன்றி அன்புடன்
7.
marubadiyumpookkum | 10:46 முப இல் ஓகஸ்ட் 14, 2015
mmm nallathan irukku innum sollunga…
8.
chollukireen | 12:48 பிப இல் ஓகஸ்ட் 14, 2015
பாருங்க நல்லாத்தான் இருக்கா?மிகவும் குறைந்த பின்னூட்டங்கள்தான். ஆனால் மனம்நிறைந்த ஒரு வார்த்தை. அதுவே எனக்குப் போதும். நன்றி. அன்புடன்