தொட்டில்-3
மே 12, 2016 at 6:31 முப 12 பின்னூட்டங்கள்
படஉதவி –கூகலுக்கு நன்றி
ஒவ்வொருகதையாக நான் முன்னே நீ முன்னே என்று மனதில் போட்டிபோட ஆரம்பித்து விட்டது. ஏதோ ஒன்றுக்கொன்று ஸம்பந்தமிருப்பதுபோலத் தோன்றினாலும் இம்மாதிரி எல்லாம் இப்போது சொல்லிக் கேட்க கூட முடியாது.அவ்வளவு உஷாரான காலமிது. இப்போது நடப்பவைகள் இன்னும் புதியமாதிரி உள்ளது. முன்பு ஸ்வீகாரம் அதாவது தத்தெடுப்பது என்பது சுலப காரியமில்லை. பணம்,காசு,ஸொத்து,ஸுதந்திரம்,வீடுவாசல் எல்லாமிருந்து ,அதிலும்நல்லகுடும்பமாக,நெருங்கியஉறவினர்கள்தான்,பங்காளிகளாக இருந்தால்தான்தத்து எடுக்கவோ, கொடுக்கவோ விரும்புவார்கள். நல்லது கெட்டது
நம் கையிலா இருக்கிறது குடும்பத்தில் உள்ள. எல்லோருக்கும் கஷ்டப்படாத வகையில் சொத்துக்களை எழுதி ரிஜிஸ்டர் செய்து விட்டு , ஆசார அனுஷ்டானத்துடன் உறவினர்முன், விதி பூர்வமாக தத்தெடுப்பது என்பது விருந்துகளுடன் முடியும். பிறகு நல்ல நாளில் தத்தெடுத்தவர்கள் ஸ்வீகாரப் பிள்ளைக்கு உபநயனம்,பிரமோபதேசம் செய்வார்கள். தத்துக்கொடுத்த பெற்றோர்களுக்கு அதிலும் தாய்க்கு கனமான பவுனிலான சங்கிலி கட்டாயம் போடுவார்கள்
. மற்றவர்கள் பேசிக் கொள்வார்கள்.நல்ல கனமாகத்தான் சங்கிலி இருந்தது. வம்பில்லை இது. வழக்கமான டயலாக். ஸொத்தே அவர்கள் வசம் வருகிறது. ஒற்றுமையும்,நேசமும் வளர்க்கத்தான் பாடு படுவார்கள். எங்கோ ஒன்று ஆக்கிரமிப்புபோல அமைந்து விடுவதும் உண்டு.ஏதோ எனக்கு ஞாபகம் வந்த சிறிதளவு ஸமாசாரமிது. வேண்டாம் வேண்டாம் என்று சொல்பவர்களைக்கூட சில ஸமயம் ஸ்வீகாரம் விடாது. அந்த ஒற்றைத்தெரு கோகிலா பாட்டி,தாத்தா எதுவும் வேண்டாம். எல்லாம் கோவிலுக்குக் கொடுத்து விடலாம்,குழந்தை இல்லா விட்டால் என்ன என்று சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென்று போய்விட்டார். குழந்தை வளர்ப்பதிலும் கஷ்டங்கள் எவ்வளவோ உள்ளது. தானமாக எழுதி வைத்து விடலாம் என்றவர்தான்அவ்வளவாகவயதுமுதிர்ந்தவரும்இல்லை.காயோ,கறியோ,பழங்களோ, எல்லாம் ஏழைகளுக்கு வாரிவாரி வழங்கியவர். சற்று வயதான பாட்டி. என்ன செய்ய முடியும். அவ்வளவாக விவகாரம் போதாது. ஊர்க்காரர்கள் சேர்ந்து பாட்டியின் தம்பியின் பேரனை ஸ்வீகாரம் செய்து வைத்தனர்.
தம்பி யாவற்றையும் பார்த்துக் கொண்டார். அதிக வருஷம் பாட்டி உயிருடனில்லை. கோவில் முதலானவற்றிற்கும் ஏராளமாக கொடுத்தார்கள். காலம் சென்று கொண்டே இருந்தது. பாட்டியின் மகனும் அழகிய வாலிபனாகி,படித்து,முடித்து தில்லியில் வேலைக்குப் போனான். என்ன நீங்களே சொல்வீர்கள் காதலா? என்று. ஆமாம் அதுவேதான். கூட வேலை செய்யும் அழகியபெண். மிக்க சினேகம்தான். இவன் மனதில் ஒருதலைக்காதல்போல. அது தெரியாத அந்தப்பெண் வேறு நண்பருடன் திடீர் பதிவுத் திருமணம் செய்து கொண்டு பார்டிக்கு அழைக்க பையன் விட்டு விட்டான் மனதை.
பயித்தியம் பிடித்தவன்போல் பிதற்ற ஆரம்பித்து விட்டான்.
கலங்கிவிட்டது மனம். கூட இருந்தவர்கள் பெற்றோர்களுக்குத் தகவல் கொடுக்க, ஓடினார்கள் பெற்றவர்கள்.எதுவும் தெரியாதவர்கள். மனதை விட்டுவிட்ட பிள்ளையைப் பார்த்து, காரணம் மற்றவர்கள் சொல்லக் கேட்டு பதறி ஊருக்கு அழைத்து வந்தார்கள். அவ்வளவுதான் எதிரில் யாரைப் பார்த்தாலும் உன்னை நான் எவ்வளவு காதலித்தேன். உன்னிடம் சொல்வதற்குள், என்னை நீ புரிந்து கொள்ளவில்லையே! இப்படி செய்து விட்டாயே, இது ஸரியில்லை, நான் உன்னை விரும்புகிறேன் என்று திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்து விட்டான். ஊரில் வீட்டுக்கு வீடு அறியாத பெண்கள். வாசலில் தலைகாட்டவே பயம்.தப்பித் தவறி பெண்கள் எதிர்ப்பட்டால் மிகவும் கஷ்டமாகிவிடும்.வயித்தியம் அவர்கள் செய்தாலும் , வீட்டில் அவனைத் தக்க வைக்க முடியவில்லை.
அந்தகாலத்துவயித்தியங்கள்மந்திரம்,தந்தரம்,ரக்ஷை,திருஷ்டி என்று பலவகைகள் செய்து அவன் ஸாதாரணநிலைக்குத் திரும்பவே கஷ்டமாக இருந்தது. பெண்கள் உள்ள வீட்டின் வாசலில்ப் போய் உட்கார்ந்து விடுவான். இதனால் எவ்வளவு புரிந்து கொண்ட குடும்பங்களாக இருந்தாலும் மனஸ்தாபங்கள் உண்டாக ஆரம்பித்தது. ஏச்சு பேச்சு சண்டை,சச்சரவு அளவிற்கு உயர்ந்தது. ஏதோ நல்ல காலம். இதெல்லாம் பாட்டிக்கு இல்லை. சென்னையில் நல்ல டாக்டர் ஒருவர் இருப்பதாகத் தெரிந்து, அவ்விடம் அழைத்துப்போனதில், யார் செய்த புண்ணியமோ, படிப்படியாக உடல்நிலை முன்னேறியது. திரும்ப அதே வேலையிலும் சேர அனுமதி வந்தது.சுபாவத்தில் மிகவும் ஒழுங்கான பையன்.
டாக்டரின் ஆலோசனை பையனுக்கு நல்லதொரு விவரங்கள், உண்மை அறிந்த பெண்ணாய்ப் பார்த்து விவாகம் செய்வித்து, தாய்தந்தையர்களான நீங்களும் உடன் போய் இருங்கள். எல்லாம் ஸரியாகிவிடும் என்று மருந்துகள் ஏதோ சிறிது நாட்களுக்கும் கொடுத்தார். எல்லாம்ஸரி. பெண் யார் கொடுப்பார்கள். பிள்ளைக்கு வசதிகளுக்குக் குறை ஒன்றுமே இல்லை. ஊரே அவனால் சினேகமிழந்தது. இதற்கு வழி யார் வகுப்பது? பெரிய கேள்விக் குறி யாவர் மனதிலும். விடை எப்படிக் கிடைக்கும். வேலைக்குப் போயாக வேண்டும். ஊர் மட்டிலும் மாற்றிக் கிடைத்தது.அம்மா மிகவும் நல்ல பெயரெடுத்தவள். அவள் பெண்ணையே , உன் பெண்ணைக்கொடு. நான் யாரிடம் கேட்பேன்? இந்த உபகாரம் செய். வேறு வழி இல்லை. ஸ்வீகாரத்தில் புத்ரான் தேஹி என்று பிள்ளையை யாசகமாகக் கேட்பார்களாம்
. நான் உன்னுடன் பிறந்தவனுக்காக மருமகளாகத் தானம் கொடு என்று கேட்கிறேன் என்று அறற்றி இருக்கிரார்கள்.பின்னிப் பிணைந்த குடும்பமது. எவ்வளவோ யோசித்திருப்பார்கள். பல டாக்டர்களைக் கலந்து ஆலோசித்திருப்பார்கள். ஆடம்பரமில்லாது திருப்பதியில்ப் போய்த் தன் பெண்ணை, விவாகம் செய்து கொடுத்துவிட்டனர் அந்த பாசமுள்ள தம்பதியினர். குடும்பம் தொடங்கியது.அந்தப்பெண்ணும் எவ்வளவு பயந்திருப்பாள்? வேளை நன்றாக இருந்தது.
யாவும் நல்ல படியே சென்று ஒரு குழந்தையும் பிறந்தது. நேசம் மிகுந்தது. குழந்தைதான் சற்று மூளை வளர்ச்சி குன்றியதாக இருந்தது. திரும்பவும்கவலைகளா? அதிக மாதங்கள் அது ஜீவித்திருக்கவில்லை
நெருங்கிய உறவில் ஸம்பந்தம் செய்வதால் இம்மாதிரி குறைகள் உண்டாகிறதென்று அறிந்த காலமது.அவளுக்கு அடுத்து கர்பகாலத்திலேயே தக்க மருந்துகள் சாப்பிட்டுத் ,தற்காப்பு முறையில் இரண்டு குழந்தைகள் பிறந்து வாழ்க்கை எந்த சிக்கலுமின்றி வளமாக ஓடி பாட்டி தாத்தாவின் வம்சம் விளங்கியது
. ஊர் ஜனங்களுக்கு ஓரளவு நெருங்கிய உறவில் ஸம்பந்தம் எந்தளவிற்குப் பாதிக்கிறதென்ற நீதி போதனையும் கிடைத்தது. எவ்வளவு சிக்கல். வேண்டாமென்றாலும் விடாத தொட்டில் ஸம்பந்தம். நினைவுகள் இன்னும் கரை புரள்கிறது. இன்றும் உறவில் ஸம்பந்தம் என்பது அறவே ஒழிக்கப்படவில்லை. நல்ல காலம் இருந்தால் இராகுகாலம் ஒன்றும் செய்யாது என்பது இதுதான் போலும்.
Entry filed under: கதைகள்.
12 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 9:37 முப இல் மே 12, 2016
அருகில் அமர்ந்து பேசுவது போல இருக்கிறது. சிரமங்கள். கஷ்டங்கள்.. மனதுக்கு வேதனை தருவன. ஒரு கட்டத்தில் துன்பங்கள் நின்று இன்பங்கள் தொடங்கினால் நன்றாயிருக்கும். கடவுள் கண்திறக்க வேண்டும்.
அம்மா.. கொஞ்சம் பத்தி பிரித்து வெளியிடுங்கள். படிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
2.
chollukireen | 11:45 முப இல் மே 12, 2016
பாட்டியும்,தாத்தாவும் சிரமங்களை அனுபவிக்கவில்லை. பாட்டியின் வம்சம் விளங்க, ஆதரிக்க என்று எல்லோரும் செய்த ஏற்பாடுகளில், பாட்டிக்கு எந்த தொந்திரவுகளும் ஏற்படுவதற்கு முன்னே போய் விட்டார். ஸ்வீகாரம் கொடுத்தாலும் கஷ்ட நஷ்டங்கள் பெற்றவர்களே அநுபவித்தார்கள். முடிவு நல்லபடி குணமாகி வம்சம் விளங்கியது தொட்டிலின் மகிமை. சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றி. ஓரளவு பத்தி பிரித்து விட்டேன். படித்து மறுமொழி எழுதியதற்கு மிகவும் மகிழ்ச்சி. அன்புடன்
3.
chitrasundar5 | 4:05 முப இல் மே 17, 2016
காமாக்ஷிமா,
தத்து, சுவீகாரம் எல்லாம் கதைகளில் படித்ததோடு சரி. இப்போ உங்கள் மன ஊஞ்சல் மூலமாக எல்லாம் தெரிய வருகிறது.
ஒருமுறை தத்துக் கொடுக்கப்பட்டவர் ஒருவரைத் தெரிய வந்தபோது ஆச்சரியமாகி(எனக்கு ஆச்சரியம், ஆனால் அவருக்கு கடுப்பு) கேள்விமேல் கேள்வி கேட்டு அவரை உண்டுஇல்லை என பண்ணிவிட்டேன்.
கதையுடன் பழமொழியும் சூப்பர். அடுத்த கதைக்கும் தயாராயிட்டேன், அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 2:48 பிப இல் மே 18, 2016
தத்து போனதினால் அவர்களுக்கு மனக்கஷ்டம்,பணக்கஷ்டம் இருக்காது. ஸ்வீகாரப்பிள்ளை என்று பிறர் சொல்லும்போது சற்று ஒரு மாதிரியாகத் தோன்றும். குடும்பங்களெல்லாம் ஒன்றாக இருந்தவர்களுக்கு கஷ்டமில்லை. நல்ல இரண்டுபக்க அன்பும் கிடைக்கும். விவரம் அறிந்த வயதான பின் ஆனால் ஏற்றுக் கொள்வது சிரமம். நான் என் மனதில் தோன்றியதைத்தான் சொல்லுகிறேன். நடை முறையில் அவரவர்கள் அனுபவம் வேறுபட்டிருக்கும்.. உன்னைத்தான் காணவில்லையே என்று நினைத்தேன். மனது நிறைந்து விட்டது. நன்றி சித்ரா. அன்புடன்
5.
Geetha Sambasivam | 11:17 முப இல் மே 18, 2016
இம்மாதிரி தத்துக் கொடுத்த கதைகள் எங்க வீடுகளிலும் உண்டு. சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வது என்பது என் புக்ககத்தில் நிறையவே. அங்கே புதுமுகம் என்றால் அது நான் மட்டுமே! மற்றவங்க எல்லாம் ஒருவருக்கொருவர் எப்படியோ எவ்வகையிலோ உறவு தான். ஆனாலும் குழந்தைகள் அளவில் அதிகம் பாதிப்பில்லைனே சொல்லணும். என் பெரிய நாத்தனார் அத்தை பிள்ளையைத் தான் திருமணம் செய்து கொண்டார். ஒன்றும் பிரச்னை இல்லை. நான்கு குழந்தைகள். சுகப் பிரசவங்கள்.
ஆனால் சொந்தமே இல்லாத நான் இரண்டு பிரசவத்தின்போதும் ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆர் எச் ஃபாக்டரினால் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வந்து தினம் தினம் குழந்தைகளைக் காலை வெயிலில் போட்டு வறுத்து எடுத்து தினம் இருவேளை ஊசிகள், மருந்துகள்னு கொடுத்துக் கஷ்டப்பட்டுப் பிழைக்க வைத்தோம். இப்போ நினைச்சாலும் எப்படிச் செய்தோம்னு ஆச்சரியமாத் தான் இருக்கு! 🙂 எனக்கு இப்படி ஆனதும் தான் எங்க வீட்டில் எல்லோருக்குமே ஆர் எச் நெகடிவா, பாசிடிவானு பார்க்கவே ஆரம்பிச்சாங்க! மொத்தத்தில் இதெல்லாம் நம் தலையில் எப்படி எழுதி இருக்கோ அப்படியே நடக்கும் என்பது என் முடிவு! 🙂
6.
chollukireen | 1:58 பிப இல் மே 18, 2016
உங்கள் அனுபவம் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். எங்கள் அக்கா,என் மாமாவின் குடும்பங்களில் இம்மாதிரி சேவை சிக்கலில் அதாவது இடியாப்பம் மாதிரி பிசிறல் அதிகம். விளைவுகளும் இரண்டொன்று ஸரியில்லை. கற்பனை அதிகம் சேராத உண்மைக் கதைகள்தானிவை. காலம் மாறிவிட்டது. பிக்கல் பிடுங்கல் இல்லாத கதைகள் நிறைய உள்ளது. காலமாற்றமானாலும் சொந்தம்,இரவல் இரண்டுவகை ஸந்தானங்கள் மூலமும் எங்காகிலும் ஏதாவது நல்லது கெட்டது நடந்து கொண்டுதானுள்ளது. பழைய காலத்தியது சற்று வித்தியாஸமாக உங்களுக்குத் தோன்றவில்லையா? வெயிலில் காலையில் குழந்தையைப் படுக்க வைத்து எடுப்பது நேபாளத்தில் எல்லா ஆஸ்ப்பத்திரிகளுலுமே கட்டாயமானதொன்று. கடுகு எண்ணெயைத் தடவி போடுவார்கள். என்னுடைய பேரன் காட்மாண்டுவில் பிறந்தான்.நானும் அப்படிதான் செய்தேன்.பழைய நாரத்தங்கா ஊறுகாய் கணக்கில் கருப்பாகப் போய்விட்டது உடம்பு. நல
7.
chollukireen | 2:19 பிப இல் மே 18, 2016
ஸரியாக நல்ல நிறம் வர சென்னை போன பிறகுதான் ஸரியாயிற்று. அதிகநேரம் வெயிலில் விட்டு விட்டோமோ என்று பிறகு தோன்றியது. வைட்டமி்ன் சூரிய ஒளியில் கிடைக்றதினால் இப்படி. மற்றும் எவ்வளவோ பழக்க வழக்கங்கள் சீதோஷ்ண நிலைக்காகவும் மாறு படுகிறது. பாருங்கள் ஆர்ஹெச் நெகடிவா,பாஸிடிவான்னும் பார்க்க ஆரம்பித்தது உங்கள் உபயத்தில்தானே. எது எப்படி நடக்கணுமோ அது அப்படிநடக்கும் என்பது தைரியத்திற்காக ஏற்பட்ட சொல். உங்களின் கருத்தான பதிலுக்கு மிக்க ஸந்தோஷம். அன்புடன்
8.
ranjani135 | 12:15 பிப இல் மே 29, 2016
இப்போதுதான் தொட்டிலின் மூன்றாவது பகுதியைப் படிக்க முடிந்தது. எங்கள் வீட்டில் – உறவில் திருமணம் இல்லாத போதும் ஆர்எச் பிரச்னை வந்து நிறைய பட்டோம். இது ஒன்றுமட்டுமே இல்லை; இதய நோய் என்பதை மறைத்து திருமணம் செய்து கொடுத்து அவள் எங்களையெல்லாம் ஆட்டிப்படைத்து, சுமங்கலி என்ற பெயருடன் முன்னால் போய்ச் சேர்ந்தும் விட்டாள்!
தொட்டில் கதை பின்னூட்டத்தில் ஆர்எச் நெகடிவ் பாசிடிவ் – இல் வந்து நிற்கிறது!
எனக்குத் தெரிந்து நண்பர் ஒருவர் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்துக் கொண்ட சிலவருடங்களில் அந்தக் குழந்தைக்கு தாலசீமியா என்கிற நோய் இருப்பது தெரிந்தது. பாவம் இன்னும் வைத்தியம் தொடருகிறது. பெற்றோர்கள் தான் பரிதாபத்திற்கு உரியவர்கள்.
9.
V Gurumurthy | 7:26 முப இல் ஒக்ரோபர் 6, 2020
நல்ல காலம் இருந்தால், ராகு காலம் ஒன்றும் செய்யாது. இதுவும் ஒரு நம்பிக்கைதானோ ?
10.
chollukireen | 11:21 முப இல் ஒக்ரோபர் 6, 2020
நிஜமாகவே என்னுடையபெரிய அக்காவின் குடும்பத்தில் இம்மாதிரி ஸம்பந்தங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நம்பிக்கைதான். எத்தனையோ தலைமுறைகளாக வழக்கம்.
11.
Geetha Sambasivam | 12:57 முப இல் ஒக்ரோபர் 7, 2020
மறுபடியும் படிச்சேன் அம்மா. சொந்தமோ அந்நியமோ குழந்தைகள் நன்றாய்ப் பிறப்பது என்பது அப்போதும்/இப்போதும்/எப்போதும் நம் கைகளில் இல்லை. ஆனால் இந்தக் காலத்தில் சொந்தத்தில் அதிகம் திருமணங்கள் நடப்பதாய்த் தெரியவில்லை. நல்ல பகிர்வுக்கு நன்றி. தொட்டில் தொடரட்டும்.
12.
chollukireen | 11:25 முப இல் ஒக்ரோபர் 7, 2020
அந்த காலகட்டத்தில் அப்படி யொரு கருத்து பரவ ஆரம்பித்து இருந்தது. எதுவும் நம் கையில் இல்லை. உண்மைதான். ஸொந்தங்களைச் சுலபமாகத் தட்டிக் கழிக்க இது ஒரு காரணமாகவும் அமைந்தது. பரவலாகத் தானாகவே குறைந்தும் விட்டது என்று நினைக்கிறேன்.
உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. தொட்டில் தொடரும். அன்புடன்