தொட்டில்-5
மே 27, 2016 at 10:31 முப 13 பின்னூட்டங்கள்
ஸந்தோஷமாகவே வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. ஈரல் குலைக்கட்டி. இப்போது இம்மாதிரி பெயரே கேள்விப்படவில்லை. ஒன்று இரண்டு குழந்தைகளில்லை. எங்கு பார்த்தாலும் இதே வியாதி. சோகமே சோகம் பேரன் போய்விட்டான். பட்ட காலிலே படும் என்பர். வாஸ்தவமாக ஏழை பணக்காரன் யாவரையும் எந்த நோயும் விட்டு வைக்கவில்லை. நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய அழகான, ஆதரவான பெரியவர் மாப்பிள்ளையும் ஃப்ளூவின் கைப்பிடியில் மீளவில்லை. என்ன இப்படி சோகமாகவே எழுதுகிறீர்கள் என்று நினைப்பது புரிகிறது. எங்கள் அப்பாவின் குடும்பத்திலும் எங்கள் பெரியம்மா வேறு ஊரிலும்,எங்கள் சித்தப்பா எங்கள் ஊரிலும் ஒரு வாரத்தில் போய்விட்டார்கள். ஊரில் இதற்கு குடும்பத்தில் ஒருவராவது இரையானார்கள். ஊர் எப்படி இருந்திருக்கும். வைத்தியமே கண்டு பிடிக்காத ஃப்ளூவின் காலம்.எப்போதோ நடந்த விஷயங்கள் ஆனாலும் படிக்கும்போது மனது நெகிழ்கிறது
யாருக்கு யார் ஆறுதல் சொல்வது. இதைப் படிப்பவர்கள்கூட ஸாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இதுவும் ஒரு சுனாமி மாதிரிதான். காலம் போகப்போக எல்லாவற்றிற்கும் மாற்று தேடிக்கொண்டும், விடிவுகள் அமைந்து கொண்டும் வாழ்க்கை ஓடிக் கொண்டும்தானிருக்கிறது. எதிர்பார்க்க முடியாத கஷ்டங்கள் வந்த பின் ஏற்றுக்கொண்டு ஓரளவு மாற்று கண்டுகொண்டிருப்பதுதான் வாழ்க்கை.
பெரியவருக்கு வயதாகிக்கொண்டு வருகிறது. பால்ய விதவைபெண். ஓரிரண்டு வயது பெரியவளாக இருக்கக் கூடிய மனைவி. யாருக்காக விசாரப்படுவது. பெண்ணைக் கண்ணின் இமைபோலக் காத்தும்.அன்பு காட்டியும் வருகிறார். தனக்குப்பின் இவர்களுக்கு ஆதரவு யார் கொடுப்பார்கள்? அதுவும் தன் பெண்ணிற்கு. தன்னைப்போல யார் அன்பு கொடுக்க முடியும். மனைவிக்காகிலும் அவர்கள் மனிதர்கள் உண்டு. மனதைப் போட்டுக்குடைந்து கொண்டே காலம்ஓடியது. மாப்பிள்ளை வகையில் வந்திருக்கும் ஸொத்துக்களை விற்று உள்ளூரிலேலேயே வீடு,நிலம் வாங்கி பெண்ணுக்குவைத்துள்ளார். தனக்கிருப்பது மனைவிக்கும் போதும். அதிலும் பெண்ணிற்கும் கொடுக்கலாம் தனக்குப்பின்?
இவை யாவையும் மனைவியின் உறவினர்கள் கையில் நிர்வாகம் போய்விட்டால் பெண்ணின் கதி என்ன? மனைவிக்கும் அவர்கள் வழியில் எதுவும் செய்து கொள்ள இஷ்டமில்லை. நான் எப்போதும்மாறமாட்டேன்.வயதுஅதிகவித்தியாஸமில்லையே தவிர அவள் என் பெண்தான். என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். யார் மனது எப்போது மாறும்? ஊரில் பெரியவர்கள், இல்லை, ஏதாவது நீங்கள் வழி செய்தே வைக்க வேண்டுமென்று வற்புறுத்தினர்.
அந்த நாட்களில் வழி என்றால் சொத்திற்கு வாரிசாக தத்து எடுத்து, அவர்கள் குடும்பத்தில் யாவற்றையும் ஒப்புவிப்பதுதான். அவருள்ளபோதே தத்தெடுத்தால் பெண்ணிற்கும் ஒரு ஸகோதரன் என்ற உறவும், கடமையும் ஏற்பட வாய்ப்புண்டு. அவருக்குப் பின் என்றால் தத்தும்,உறவும் வெவ்வேறாகிவிடும். இப்படி பலவித யோசனைகளை ஊரார் முன் வைத்தனர். நல்லது கெட்டது கிராமங்களில் சொல்வதை ஏற்கும்படியாகத்தானிருக்கும். பொது நலம் பாதுகாக்கப் பட்டது.
வழிவழியாக வேதாப்பியாஸம் செய்து வேத ஸம்ரக்ஷகர்களாக விளங்கிய குலத்திற்கு, அதைக் காப்பாற்ற வேதம் படிக்க விருப்பமுள்ள நல்ல குல,பங்காளிகளில் தேடல் ஆரம்பமாகியது. அதுவும் உற்றார் உறவினர்களாலேயே!தேடல் என்றால் விளம்பரமா என்ன.? அனுதாபத்தில் ஆரம்பித்து, நல்ல குணங்களைப் பட்டியலிட்டு, வசதிகளைக் கூறி, நம்மை விட்டால் அவர்களுக்கு யாரிருக்கிரார்கள் என்ற கட்டாயம் செய்யவேண்டும் என்ற உரிமைக் குரலை எழுப்பி ஒரு நல்ல முடிவிற்கு ஏற்பாடு செய்து விடுவார்கள். நீயா,நானா என்பது இல்லை.
தேடலில் மனத்தேடல்தான். தேர்ந்தெடுத்துவிட்டனர் உற்றார் உறவினர். அவர்களே பிரஸ்தாபமும் செய்தனர். பிள்ளையின் அம்மாவிற்கு இவ்வளவு துக்கங்கள் ஒருகாலத்தில் அவர்களுக்கு நிகழ்ந்துள்ளது. அவரும் வயதானவர். மீண்டும் அக்குடும்பத்தில் பெரியவருக்கு ஏதாவது நிகழ்ந்து விட்டால், நம் கண் முன்னே நம் குழந்தை கர்மம் செய்வதைப் பார்க்க நேரிடும். வேண்டாம் என்னால் அதைப் பார்க்க முடியாது. என்றாலும், அந்தக் குடும்பம் வேதக்குடும்பம். அவர்களுக்குச் செய்வது பாக்கியம், இப்படி,அப்படி பல விதங்களில் எடுத்துச் சொல்லி ஸம்மதிக்க வைத்து விட்டனர். ஸ்வீகாரம் கொடுப்பதோடு அல்லாமல் அவர்கள் குடும்பத்தையே, பெற்றவர்கள் தத்தெடுத்த மாதிரிதான்.
பையனை தத்தெடுத்து ஒருநாள். அதன்பின்னர் உபநயனமும்,ப்ரம்மோபதேசமும் தொடர்ந்து நான்கு நாட்கள் அதையொட்டிய ஹோமம் வகையராக்கள். நான்கு நாட்களுக்குப் பிறகு பாலிகையை குளத்தில் கரைப்பதற்கு ஒரு ஊர்கோலம். அவர்களுக்கு மட்டுமா ஸந்தோஷம். ஊரே மகிழ்வில் திளைத்தது. வேதம் கற்கும் பிள்ளை. தலைநிறைய கட்டுக் குடுமி. மருதாணி இடுதல் வேறு. குடுமியைச் சுற்றி பூவைச் சுற்றி அலங்காரங்கள். பட்டு வேஷ்டி. பூணலுடன் வெள்ளி,பவுனில் செய்த பூணூல். கழுத்துக் கொள்ளாமற் பவுன் சங்கிலிகள் விதவிதமாய். நெற்றியில் விபூதி சந்தனகுங்குமம். மலர்மாலை கையில் பலாச தண்டம் இப்படி பாலிகைகளை குளத்தில் விட ஊர்வலமாக அவர்களுடன் சென்றது ஞாபகம் வருகிறது. நீங்களும் கற்பனை செய்து பாருங்கள். அதன் பிறகு அவ்வளவு விதரணையாக பழங்கால முறையில் பையனையோ, பூணூலையோ பார்க்கவில்லை. அது அந்தக்கால அழகு. எல்லாம் நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தது. சில வருஷங்களில், பெரியவர் காலமானார்.
கான்ஸர் என்ற பெயரே தெரியாத காலத்து கேன்ஸர். எதற்கு வர்ணனை? கரண்ட் வைப்பதும்,டெட்டாலும்,ஸிபஸால் பவுடரும்தான் வைத்தியமாகி இருந்தது. இரண்டு குடும்பமும் ஒன்றாகியது.
வேத வித்தாக இருந்தவருக்கு பிரம்மவேத ஸம்ஸ்காரம் நடந்தது. காலங்கள் நிற்பதில்லை. தகுந்தகாலத்தில் பிள்ளைக்குக் கல்யாணமும் நடந்து வம்ச விருத்தி ஆயிற்று. நல்ல மருமகள் வந்தாள். கதை நீள்கிறது. சுருக்கமாகச் சொன்னால் ஸ்வீகார தாயாருக்கும் காலத்தில் அந்திமக் கிரியைகள் ஆயிற்று.
எந்த பெண்ணிற்காக தத்து எடுத்தாரோ அந்தப் பெண் நீண்ட வயது இருந்தாள்.அவள் பேரன் பேத்திகளுக்கும் மருமகளுக்கும் மிக்க அநுஸரணையாக இருந்தவள், தம்பியின் பிள்ளையின்கையால்தான் அந்திமக் கிரியைகள் செய்து கொள்ளும்படி ஆயிற்று.தம்பி மனைவியும் அதான் மருமகள், மகளாக ஆதரித்தாள்.அவர்கள் குடும்பம் அமோகமாக இருக்கிறது.
தனக்காகவும்,,மகளுக்காகவும் ஏற்படுத்திக் கொண்ட தொட்டில் உறவு, இரண்டு தலை முறைகள் தாண்டியும் எ்வ்வளவோ நல்லது கெட்டதுகள் இருந்தாலும், தன் பெண்ணிற்காக செய்த ஏற்பாடுகள் இன்றளவும் பேசப்படுகிறது. நீண்டு விட்ட ஸம்பவங்கள் உங்கள் மனக்கோர்வையில் தொடுத்துக் கொள்ளுங்கள். காரணகாரியங்களுடன் தொட்டிலுறவு. இல்லையா?
Entry filed under: கதைகள். Tags: ஈரல் குலைக்கட்டி, ப்ளூ.
13 பின்னூட்டங்கள் Add your own
ஸ்ரீராம் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 12:53 முப இல் மே 28, 2016
.தொடர்கிறேன் அம்மா. இன்பமும் துன்பமும் இணைந்ததுதான் வாழ்க்கை என்று சொன்னாலும், துன்பம் வரும்போது இடிந்துதான் போகிறது மனம்.
2.
chollukireen | 9:08 முப இல் ஜூன் 2, 2016
இன்பம் கற்பனைகளில் கூட அனுபவிக்க முடியும். துன்பம் மனதை விட்டு அகலுவது கஷ்டம். எல்லோரும் இன்புற்றிருப்பதே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே. நல்லதே யாவருக்கும் நடக்கட்டும். தொடர்கிறேன் என்ற வார்த்தை மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள்.நன்றி அன்புடன்
3.
chitrasundar5 | 1:00 முப இல் மே 29, 2016
காமாக்ஷிமா,
மருத்துவம் & போக்குவரத்து இரண்டும் முன்னேறாத அந்த நாட்கள் சோகம் நிறைந்ததாகத்தானே இருந்திருக்கும்.
எங்க பாட்டியும், அம்மாவும்கூட சொல்லுவாங்க, வயிற்றுப்போக்கு வந்தால் ஊரே காலியாயிடும்னு. அதுமாதிரி சமயங்களில் பயந்துபோய் உடல்நிலை சரியில்லாதவர்களை விட்டுவிட்டு, மீதமுள்ள எல்லோரும் நடந்தே வெளியூர்களுக்கு போயிடுவாங்களாம். இந்த நோய்களினால் பத்து பிள்ளைகளுக்குமேல் இருக்கும் ஒரு வீட்டில் மீதம் ஒன்றிரண்டுதான் தங்கும் என சொல்லக் கேட்டிருக்கேன்.
மறுமணம் இல்லாத காலம் !
பூணூல் திருமணத்தில் நாங்களும் காமாக்ஷிம்மாவுடன் கை கோர்த்துக்கொண்டு செல்வதுபோல் இருக்கிறது எழுத்து நடை. கஷ்டங்கள் தொலைந்து கடைசியில் சுபமாக முடிந்ததில் மகிழ்ச்சிமா, அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 9:00 முப இல் ஜூன் 2, 2016
நீ சொல்லும்வியாதி வயிற்றுப்போக்கும்,வாந்தியுமாக இருப்பதற்குக் காலரா என்று பெயர். தொத்து வியாதி. பின்நாட்களில் மருந்து கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. வியாதி ஊரையே காலி செய்து விடுமென்பர். அதனால்,கால் நடையாகவோ, வண்டிகளின் மூலமோ வேறு இடத்திற்குப் போய்விடுவார்கள். ஸுகாதாரக்குறைவு இடங்களில் ஆரம்பித்து, எல்லா இடங்களுக்கும் பரவி விடும். ஓயாது ஸெலைன் ஏற்றுவார்கள். குடிக்க ஒரு சொட்டு நீர் கூடக் கொடுக்கமாட்டார்கள். தடுப்பூசிகள் யாவருக்கும் போடுவார்கள். இப்போதும் திடீரென சில இடங்களில் ஏற்பட்டு உஷார் நிலையில் சிகிச்சை நடை பெறுவதை செய்தித்தாள் மூலம் அறிய முடிகிறது.
பூணூலில் நீயும் வந்திருந்து பங்கு பெற்றது மகிழ்ச்சி. நன்றி. அன்புடன்
5.
Geetha Sambasivam | 2:56 பிப இல் மே 29, 2016
ஈரல், குலைக்கட்டி என்று பெரியவங்க சொல்லிக் கேட்டிருக்கேன். அதுக்குத் தான் ஜம்மியின் லிவர்க்யூர் கொடுப்பாங்களோ? அதுவும் பிரபலமாக இருந்தது.
போகட்டும், எப்படியோ பெரியவரின் பெண் சௌக்கியமாக இருந்தாளே! அதுவே நிம்மதியாக இருக்கிறது.
6.
chollukireen | 8:46 முப இல் ஜூன் 2, 2016
வாஸ்தவமாகவே பேரன்,பேத்திகள்,நாட்டுப்பெண் என்ற ஸகல ஸந்தோஷங்களையும், நேர்மையாக அனுபவிக்கக் கொடுத்து வைத்திருந்தாள். அந்த நாளைய வெள்ளைப் புடவை கோலம்தான் மாற்றமுடியாததாக யிருந்தது.
ஜம்மி,லிவர்க்யூர் ஒன்று,பாப்பையா பத்து ரூபாய் மருந்து என குலைக்கட்டிகளுக்கு நிவாரணி. நீங்கள் பெரியவர்கள் சொல்லக் கேட்டது அதுவே. நன்றி அன்புடன்
7.
கோமதி அரசு | 1:29 பிப இல் செப்ரெம்பர் 3, 2016
காரண காரியத்திற்காக தொட்டில் ஆடினாலும் எல்லோரும் நலமாக இருந்தது மகிழ்ச்சி தான்.
8.
chollukireen | 3:30 பிப இல் செப்ரெம்பர் 3, 2016
பாருங்கள்! எத்தனை தலைமுறைகள். உறவுஒன்றுதான் மனிதர்களுக்கு ஆதரவு தரும் என்ற நம்பிக்கை. எடுத்துக்காட்டான குடும்பம். மகிழ்ச்சிக்கு நன்றி. அன்புடன்
9.
chollukireen | 11:12 முப இல் ஒக்ரோபர் 20, 2020
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இந்த ஐந்தாவது பகுதி வேறு விதமாக முடிகிறது. சில விஷயங்கள் முன்னேற்பாடாக செய்ததும் ஸரியாகவேப் படுகிறது. இன்னும் பதிவுகள் இருக்கிறதே! னான் என்ன சொல்லுகிறேன்? என் பதிவு பார்த்தவர்கள் பதில் எனக்கு ஸந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பதைத்தான்.அன்புடன்
10.
Geetha Sambasivam | 7:22 முப இல் ஒக்ரோபர் 21, 2020
மீண்டும் படிக்கப் படிக்கச் சுகம், சந்தோஷம் அம்மா. பூணூல் கல்யாண ஊர்வலம் மனக்கண்களில் தோன்றுகிறது.
11.
chollukireen | 11:16 முப இல் ஒக்ரோபர் 21, 2020
இன்னும் கூட பூணூல் கல்யாண விவரங்கள் விரிவாக மனதில்த் தோன்றுகிறது. நன்றி. அன்புடன்
12.
ஸ்ரீராம் | 12:21 முப இல் ஒக்ரோபர் 25, 2020
மீண்டும் வந்து படித்தேன்.
13.
chollukireen | 12:06 பிப இல் ஒக்ரோபர் 25, 2020
மிக்க ஸந்தோஷம். அன்புடன்