தொட்டில்–7
ஜூன் 11, 2016 at 12:56 பிப 21 பின்னூட்டங்கள்
ஒரு குடும்பம் வறுமை. ஸரியானபடி நிரந்தர வேலை இல்லை. பாட்டி மாப்பிள்ளை தாசில்தார். இவர் நல்லபடி வேலை செய்து குடும்பம் நடத்தவில்லை என்று தம்பியைக் கோபிப்பார். ஒத்தாசைகள் எவ்வளவு செய்தாலும், யாரும் கோபிப்பதை ஏற்றுக் கொள்வது கஷ்டம். உறவு முறைகள் ஸரியானபடி இல்லை. இந்த வேளையில் தம்பி பிள்ளையை எங்கள் ஊரில் படிக்க அழைத்து வந்திருந்தார்.
இதனால்மனத்தாங்கல்கள்வரும்.ஸம்ஸாரி.தாய்மார்களுக்குத்தான் கஷ்டம் புரியும். ஆண்களுக்கு சற்று வீராப்புதான் ஏற்படும். சம்பாதிக்கும் கர்வம் நம்மைச் சொல்கிரார்கள் என்ற எண்ணம் மேலோங்கும். அப்படியும், இப்படியுமாக காலம் தன்போக்கில்ச் சென்று கொண்டிருந்தது.
பாட்டி ஒவ்வொரு முறை பெண்ணிற்குச் சாப்பாடு போடும் போதும் , அம்மா அந்தக் கோடியில் ஊறுகாய் போட்டிருக்கிறேன், பொரித்த அப்பளாம் சின்னத் தட்டில் பக்கத்தில் வைத்திருக்கிறேன். நெய்யும் குத்தியாச்சு சாதம் திட்டமாகப் போட்டிருக்கேன். கலந்து கொள். பிடிச்சா இன்னு கொஞ்ஜம் சாதம் போட்டு குழம்பு விடறேன்.
அம்மா நீ சாப்டியா? நான் என்னை கவனிச்சுப்பேன். உனக்கு ஒண்ணும் என்னால் செய்ய முடியலேன்னு கஷ்டமா இருக்கு. நான் என்ன பாவம் பண்ணியிருப்பேன்?
நீ ஒண்ணும் பண்ணலே. உன்னை இப்படி பார்க்கும் நான்தான் என்ன பண்ணினேனோ?சாப்பிடம்மா. இப்போ இன்ன மாதிரி பேசறதே தப்பு. பார்.இன்னும் கொஞ்ஜம் குழம்பு விடட்டா?
போரும்மா. அம்ருதமா இருக்கு உன் சாப்பாடு.கண்ணில் ஜலம் வந்துடறது. கொஞ்சம் காரம். அதான் கண்ணுலே தண்ணி.ஒருவருக்கொருவர் ஸமாளிப்பு.
நான் இருக்கேன் பரவாயில்லை.எனக்கப்புறம் இவள் தட்டை கவனித்து யார்சாப்பாடு போடப்போறா? மாப்பிள்ளைக்கும் ஒண்ணு தெரியாது. என்ன அம்மாவோ நான் .பாட்டி மிக்க வேண்டியவர்களிடம் குறை பட்டுக் கொள்ளுவாள். இப்படி எவ்வளவோ மனதை உருக்கும் சம்பாஷணைகள்.
வெளியில் பெண் ஸந்தோஷமாகக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் மனக்கஷ்டம் தாய்க்கெதிரே காட்டவும் கூடாது என்ற மன உறுதி. பாட்டிக்கு ஒத்தாசை மனதிற்கு வேண்டிய உறவுக்காரப் பெண்மணி. வீட்டின் நிலை வெளியில் போகாது. மாப்பிள்ளையும் ரிடயராகி வந்து விட்டார். வெளிமனிதர் வரத்து அடியோடு குறைந்தாயிற்று.
நாளுக்கு நாள் பெண் தெம்பில்லாது போவது தெரிந்தது. டாக்டர்களிடம் காண்பித்தால் எல்லாம் ஸரியாக இருக்கிறது. மனது ஸந்தோஷமாக இருக்க வேண்டுமென்றனர். அப்போதெல்லாம் ரேடியோ,அது,இது என்ற என்த மண்ணாங்கட்டியும் கிடையாது.கோயிலுக்குப் போவோமென்றால் கண்ணும் ஸரியில்லை ஏதோ,சாந்தி,பூஜை இப்படி செய்து வந்தனர்,
திடீரென்று படுத்த படுக்கை, எழுந்திருக்க முடியலே. பேசவும் முடியலே. வீட்டில் நல்லது செய்விக்கும் வாத்தியார் குரு உண்டல்லவா? அவருக்குப் பார்த்ததும் என்ன தோன்றியதோ? நிலைமை ஸரியில்லையப்பா. உன் மனைவி ஸரியாகி விடுவாள் ஆனாலும் இது ஒரு அறிவிப்பு. நாளைக்கு அந்தக் கிழவிக்கு போகும் வழிக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும். உனக்கு,உன் மனைவிக்கு நாளை ஏதாவதொன்று என்றால் உன் தம்பி,பிள்ளைகள் என்று வாரிசு இருக்கிரார்கள். அந்தக் கிழவிக்கு யார் பெண்ணைத் தவிர வாரிசு. பெண்ணிற்கு ஸந்ததி இருந்தால் பேரன் நேர் வாரிசாகி விடுவான். அதற்கும் உன் மனைவி இருக்கும் போதே வகை செய்ய வேண்டும். சட்டப்படி எதுவும் இருந்தால்தான் நல்லது. தப்பாக நினைக்காதே என்று இரண்டொரு பெரியவர்களை வைத்துக் கொண்டு அவருக்கு நல்லபடி எடுத்துச் சொன்னதுடன், பாட்டிக்கும் சூசகமாக பட்டும்,படாமலும் சொல்லினர்.
பாட்டியா புரிந்து கொள்ள முடியாதவள். விவேகி.எது ஸரியோ செய்யுங்கள். அவளின் ஆசை அவள் வம்சம் விளங்கணும். அதுதான் எனக்கு முக்கியம். பாட்டிக்கும் தன தான்ய ஸம்பத்தும் பெண்வழி பேரனுக்குப் போகுமே!!!!!!!!!!
மனக்கஷ்டம் வேறு. நடைமுறை சட்டங்கள் வேறு. மன உறுதி செய்து கொண்டிருப்பார்கள். பாட்டியின் பெண் உடம்பு கவலைக்கிடம். அதிகம் மனுஷாளும் அவரிருந்தால் போகமாட்டார்கள். டாக்டர் வந்து போகிறார். உடம்பு தேவலை என்று சொல்லி விடுவார்.
தினமும் விடியற்காலை 5 மணிக்குமேல் பாண்டி போகும் ரயில் வரும். ரயிலிலிருந்து இறங்கினவர்கள் தட்டான் தெரு வழியே மற்ற இடங்களுக்குப் போய்விடுவார்கள். எங்கள் வீட்டுத் தோட்டத்தின் வழியேதான் ரயில்ப்பாதை.
அக்கிரஹாரம் வருபவர்கள் அதிகாலையில் வாசல் தெளித்துக் கோலம் போடுபவர்கள் பார்வையில் ஊரிலிருந்து வருபவர்கள் தப்ப முடியாது. நாலைந்து நாள் இருப்பிங்கோ இல்லையா என்று குசலமும் விசாரித்து விடுவார்கள்.
பாட்டியின் பெண்ணின் மைத்துனரும், அவருடைய பையனும் இரயிலில் இறங்கி வருகிரார்கள். உடம்பு ஸரியில்லாதவர்களைப் பார்க்க வருகிரார்கள் என்ற நினைப்பு எல்லோருக்கும். காலை ஏழு ஏட்டு மணி சுமாருக்கு ஊரின் பெரியவர்கள் நான்கைந்து பேருடன் வாத்தியாரும் அவர்கள் வீட்டிற்குப் போகிரார்கள். சிறிது நேரம் கழித்து எதிர் வீட்டு வயதான ஸுமங்கலி ஆரத்தி எடுத்து விட்டு வாசற் கோலத்தில் அதை திருஷ்டிப் பரிஹாரமாகக் கொட்டி விட்டுப் போகிரார்.
என்ன யோசிக்கிறீர்கள்.? பாட்டியின் பெண்ணிற்கும்,மாப்பிள்ளைக்கும் வம்சம் விளங்க ஸ்வீகாரம் செய்து கொண்டாகி விட்டது. மந்திரஸ்வீகாரம். பிள்ளையைப்பெற்ற தாய்க்கும் தெரியாது. முதல்நாள் தந்தி கொடுத்து பிள்ளையை அழைத்துவா என்றனர். வறுமை, வாரிசானால் விளையும் நன்மை.
தகப்பனார் அழைத்து வந்தார். நிலைமை அறிந்து பையனுக்கும் தெரியுமோ தெரியாதோ அண்ணாவிற்கு புத்திரனாக தன் மூத்த பிள்ளையை தத்து கொடுத்து விட்டார் . ஊரில் எல்லோருக்கும் அதிசயம். தாயின் உத்திரவு கூட இல்லாமல் ஒரு அதிசயமாகவே நடந்தது. அகிலாண்டம் பாட்டிக்கு பேரன். நாளை அவரின் பெண் வழி வாரிசு. வம்சம் விளங்கியது. ஊரில் இதே பேச்சு.
ஸந்நியாஸம் வாங்குபவர்களுக்கு அந்த நாளில் ஒரு பாட்டு. ஆபத்தினாலும் ஸன்னியாஸம், மனஸ்தாபத்தினாலேயும் ஸன்னியாஸம். ஆனால்
இது ஆபத்துக்கால ஸ்வீகாரம்.
வம்சம் விளங்க,இக்கட்டான ஸமயத்தில் எண்ணம் நிறைவேற ஒரு தாயின் வயிற்றில் பிறந்து, இன்னொரு தாயிற்கு ஈமக்கடன் செய்ய ப்ராப்தம் இருந்தது வியப்புக்குறியதாக இருந்தது. பெண் போய்விட்டாள். பாட்டிஅழுது கொண்டே சொல்லி விடை கொடுக்கிறாள்.
அம்மா உன் வம்சம் விளங்குகிறது. நல்லபடி நீ போய் விட்டாய். உன் வம்சம் விளங்க ஆசீர்வாதம் செய்து கொண்டிரு. இட்டுக் கட்டிய வார்த்தையில்லை. அப்போதும் பெண்ணின் ஆசை நிறைவேறிய நல்ல எண்ணம். எல்லோர் கண்ணிலும் நீர்.
பிறகு பையனின் அம்மா அப்பா குடும்பத்துடன் வந்து ஸெட்டிலானார்கள் வயதான காலத்தில் அம்மா,அம்மா என்ற பாசத்துடன் பாட்டிக்கு சிசுருஷைகள் செய்து ,மைத்துனருக்கும், கடைசிவரை நல்லபடி கவனித்து வந்தவர் பையனைப் பெற்ற மாதரசி.
பிள்ளையைப்பொறியியல் படிக்க வைத்து,அவன் வாங்கும் நல்ல மார்க்குகளைப் பார்த்து பூரித்தவர் பெரியப்பா. பாட்டி பத்து வருஷத்திற்கு அதிகமாகவே இருந்தாள். ஸ்வீகாரப்பிள்ளை, தன் குடும்பத்திற்கு ஆணி வேராக இருந்தது ஸ்வீகாரம் தான். தாய்க்கு ஆதரவாக தம்பிகளை முன்னுக்குக் கொண்டு வந்து, தங்கைக்குக் கல்யாணம் செய்வித்து ,தானும் எல்லோரும் முன்னுக்கு வரக் காரணமாக இருந்து யாவரும் பேரப் பிள்ளைகளுடன் நன்கு வாழ வழி வகுத்ததும் ஸ்வீகாரமும்,ஸ்வீகாரப் பிள்ளையும், அவர்களின் தாயும். கல்யாணமும் கார்த்தியுமாக இப்படிதான் இருந்திருப்பார்கள்.
படமுதவி கூகலுக்கு நன்றி.
நீண்டு விட்டதா? பரவாயில்லை. தொட்டிலுறவும் எத்தனை விதங்கள்? படிக்கமட்டும்தானே?
Entry filed under: கதைகள்.
21 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 3:24 பிப இல் ஜூன் 11, 2016
பொதுவாக பேச்சு வழக்கில் சொல்வதால் சில இடங்கள் புரியவில்லை. ஆயினும் ஒரு குடும்பத்தின் பொதுக் கஷ்டங்கள், மன நிலைகள் புரிந்தது. எங்கள் வீட்டிலும் இப்படி ஒரு ஸ்வீகாரம் உண்டு. அனுபவங்கள். அதைப் படிக்கும்போது படிப்பவர்களுக்குப் பாடம். சொல்பவர்களுக்குக் குறையும் பாரம்!
2.
chollukireen | 7:27 முப இல் ஜூன் 12, 2016
ஸ்வீகாரம் எடுக்காவிட்டால் கூட அண்ணன் தம்பி பிள்ளைகள் அபிமானமாக கர்மா செய்யலாம்.பாட்டிக்கு பெண்இருக்கும் போது ஸ்வீகாரம் எடுத்தால்தான் சட்டப்படி பேரனாகி யாவற்றிற்கும் தகுதி பெற முடியும். ஃபோன் வசதிகள் கிடையாத காலம். தந்தி ஒன்றுதான் வழி. சற்று வயது பெரியவனாக பிள்ள இருக்க ஆசை. உடல் நலம் குன்றி இறுதிக்காலம் எதிர்பாராத திருப்பம்.
ஸம்ஸாரிகள் தகவல் கொடுத்து தாய் வர அவகாசம் இல்லை. இதனால் பெரிய இழப்பு ஒன்றும் இல்லை. குடும்பத்திற்கு நன்மையே உண்டாகும் என்ற நம்பிக்கை.
புருஷன் சொல்லுக்கு மறுப்பு பேச முடியாத காலம். எல்லாவற்றையும் விட பெண் ஸ்தானத்தில் பையனின் தாய் செயல் பட்டது அருமை. இப்போது ஓரளவு யாவருக்கும் இதன் மூலம் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். நன்றி. அன்புடன்
3.
ஸ்ரீராம் | 8:01 முப இல் ஜூன் 12, 2016
புரிகிறது.
4.
chollukireen | 8:42 முப இல் ஜூன் 12, 2016
மிக்க நன்றி. அன்புடன்
5.
chitrasundar5 | 1:08 முப இல் ஜூன் 12, 2016
பெற்ற தாயாக இருந்தாலும் அவள் ஒரு பெண் என்பதால் அவளைப் பொருட்படுத்தாமலே சுவீகாரம் நடந்துவிட்டதே ! என்ன இருந்தாலும் மகனாச்சே, குடும்பத்தினரை வரவைத்து வேண்டியவைகளைச் செய்து ….. உயர்ந்துவிட்டார், அதுதான் பாசம் !
கல்யாணப் படம் நிறைவாய் இருக்கிறதுமா, அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 7:36 முப இல் ஜூன் 12, 2016
இக்கட்டான சூழ் நிலை. தகவல் தொடர்பு வசதி குறைவு. ஸ்வீகாரம் என்ற ஒரு பதம் தான் குறுக்கே. தவிர மற்றவைகள் அவர் மேற்பார்வையில்தானே. அடங்கியிருக்கும் பெண் ஸமுதாயம் தானே. ஆபத்துக்கால நிர்ணயம். யாருக்குத் தெரிய வேண்டும்.
நல்ல நிகழ்வுகளாகவே யாவும் முடிந்தது பெற்றவருக்கும் நிம்மதிதான். இப்படி எடுத்துக் கொள்.
உயர்ந்து விட்டார் என்று எழுதினாயே. உயரமாக இவ்வளவு மன விசாலம் வேண்டும். நன்றி. அன்புடன்
7.
Geetha Sambasivam | 3:33 முப இல் ஜூன் 12, 2016
இம்மாதிரி ஸ்வீகாரங்களை நிறையப் பார்த்திருக்கேன். ஆனால் எல்லோருக்கும் நன்மை விளைந்ததில்லை. இந்தக் குடும்பம் புண்ணியம் பண்ணிய குடும்பமாக இருந்தால் நன்மையே விளைந்திருக்கிறது. அருமையான எழுத்து நடை. நேரில் பேசுவது போல்!
8.
chollukireen | 8:27 முப இல் ஜூன் 12, 2016
சிலஸமயம் ஸ்வீகாரங்கள் கொடுத்தவர்களின் ஆதிக்கம் கைஓங்கியும், பல ஸமயங்கள் ஸ்வீகாரம் எடுத்தவர்களின் ஆதிக்கமும் அதிகமாகி விடுகிறது. இரண்டு தரப்பிலும் உயர்வாக உறவு முறைகள் பார்க்க அழகாகவும் இருக்கிற வகைகளும் உண்டு. சின்னஞ்சிறிய வித்தியாஸங்களில் வாழ்க்கையின் கதைகளே மாறிக்கொண்டு இருந்தது. அவ்வளவுதான். நன்றி
9.
Geetha Sambasivam | 7:32 முப இல் ஜூன் 12, 2016
//பாட்டிக்கு பெண்இருக்கும் போது ஸ்வீகாரம் எடுத்தால்தான் சட்டப்படி பேரனாகி யாவற்றிற்கும் தகுதி பெற முடியும். //
இதுவே பாட்டியின் பெண் வயிற்றில் பிறந்த பிள்ளைனா தௌஹித்திரனுக்கு முழு உரிமையும் உண்டு! மாமா சந்ததி இல்லாமல் இருந்தால் அவருக்குக் கூட மருமான் செய்யலாம். ஒரு குழந்தை பிறக்காத காரணத்தினால் இத்தனை பாடு! 😦 இங்கேயும் தவம் கிடக்கோம்! 😦
10.
chollukireen | 8:39 முப இல் ஜூன் 12, 2016
என்னுடைய அப்பா ,அம்மாவிற்கு என்னுடைய இரண்டாவது பிள்ளையைக் கொண்டுதான் காரியங்கள் நடத்தியது. என் அப்பா போகும்போது அவனுக்கு வயது நான்கு. கை பில் வாங்கி செய்தது. ஒன்றுமே இல்லா விட்டாலும் நெருங்கிய பங்காளிகளைக் கொண்டும் இவை எல்லாம் நடக்க வாய்ப்பு உண்டு. தௌஹித்ராம்சத்தை ஸ்வீகரிக்க வேண்டிய நிர்பந்தம். நல்ல பண்புள்ள பாட்டி. எல்லாம் குறைவற நடந்ததுதான் விசேஷம். குழந்தை பிறக்காததால் எத்தனை அலசல்கள். தவங்கள் இருப்பவர்களுக்குத் தவம் பலிக்கட்டும். நன்றி. அன்புடன்
11.
Revathi Narasimhan | 4:28 முப இல் ஜூன் 13, 2016
அன்பு காமாட்சி மா.கதை வரிகள் அப்படியே எங்கள் பாட்டியை நினைவுக்குக் கொண்டு வந்தன. வெகு அருமை.நல்லதே நடந்தது.
12.
chollukireen | 1:38 பிப இல் ஜூன் 13, 2016
உங்களுடைய அன்புப் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. ஒரு காலத்தில் வயதானவர்கள் எல்லோரும் நல்ல சிந்தனையுடையவர்களாகத்தான் இருந்தார்கள். காலப்போக்கில் அவர்களும் மாறுதல்களுக்கு உட்படவேண்டிய அவசியத்திற்கு ஆளாகிப் போகிறார்கள். மிக்க நன்றி. தொடர்ந்து கருத்துக்களைச் சொல்லுங்கள். அன்புடன்
13.
ranjani135 | 11:53 முப இல் ஜூன் 14, 2016
ஆபத் கால சந்நியாசம் மாதிரி, ஆபத் கால ஸ்வீகாரம்! தொட்டிலுறவில் மனதிற்கு இதமாக அமைந்திருக்கிறது இந்த ஸ்வீகாரம். குடும்பத்தில் உள்ள எல்லோருமே மனமொத்து செய்ததால் இருக்குமோ? பிள்ளையை ஸ்வீகாரம் கொடுத்துவிட்டு அந்தக் குடும்பத்துக்கே உழைத்த பிள்ளையின் அம்மாவை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.
14.
chollukireen | 5:24 முப இல் ஜூன் 15, 2016
குடும்பமே அவர்களுடையதாக ஆகி விட்டது. இதில் வயதான பாட்டி ஒன்றுதானே அசல். குடும்ப முன்னேற்றமும் பாட்டியின் ஈகைதானே. நல்ல பெண்மணி பாட்டி மட்டும் இல்லை,பிள்ளையைக் கொடுத்தத் தாயும்தான். பார்க்க,கேட்க,படிக்க எவவ்வளவு உயர்வாக இருக்கிறது.? அபூர்வமாக சில குடும்ப ங்களிலேயே இம்மாதிரி நிகழ்வுகள் அமைகிறது.. ஸரியா? நன்றி . அன்புடன்
15.
yarlpavanan | 6:26 பிப இல் ஜூன் 18, 2016
அருமையான பதிவு
http://ypvn.myartsonline.com/
16.
chollukireen | 8:27 முப இல் ஜூன் 20, 2016
மறுமொழிக்கு மிக்க நன்றி. வெகுநாட்களுக்குப்பின் உங்கள் பின்னூட்டம். மிகவும் ஸந்தோஷம். நன்றி. அன்புடன்
17.
chollukireen | 3:18 முப இல் நவம்பர் 3, 2020
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
தொட்டில் ஏழு பாட்டியின் குணமும், அதன் மணமுமாக இருக்கும். ஆழ்ந்து பார்ப்போமாகில் எவ்வளவோ விஷயங்கள் மனதில்த் தோன்றும். முதியோர் இல்லங்கள் இல்லாதக் காலமது. வாங்கோ! பின்னூட்டத்தில்ப் பேசலாம். அன்புடன்
18.
Geetha Sambasivam | 7:27 முப இல் நவம்பர் 3, 2020
இவை எல்லாம் எத்தனை முறை படித்தாலும் பரவசம். அந்தக் கால வாழ்க்கையையே படம்பிடித்துக் காட்டி விட்டீர்கள். அருமை அம்மா. நமஸ்காரங்கள்.
19.
chollukireen | 11:07 முப இல் நவம்பர் 3, 2020
எந்த முதியோர் இல்லம் போய்ச் சேரலாம் என்ற யோசனைக்கே இடமளிக்க முடியாத காலமது. ஒரு ஸ்வீகாரத்தின் மூலம் சில பிரசினைகளும் தீர்க்க முடிந்ததுவும் ஒரு விசேஷம். இப்போது அப்படி நினைக்கிறேன். மிகவும் நன்றி உங்கள் மறு மொழிக்கு.
ஆசீர்வாதங்கள். அன்புடன். உங்கள் பதிவுகளுக்கெல்லாம் லிங்க் வேண்டும்.
20.
Banumathy | 2:06 முப இல் நவம்பர் 8, 2020
மிக அருமையாக உள்ளது. படிக்கும்போது ஏதோ நிகழ்வு ஒன்றாகவே தோன்றுகிறது. அந்தக்காலத்தில் ஸ்வீ கார மெடுத்துக்கொள்ளுவது என்பது வாரிசு இல்லாத குடும்பத்தில் நடக்கும் ஒரு அசாதாரண நிகழ்வு. சிலர் அபிமான புத்திரனாக வளர்ப்பார்கள்.இந்த வார்த்தைகள் எல்லாம் இப்போதைய தலைமுறைக்கு தெரியாத விஷயங்கள்.தொட்டில் ஆட்டம் தொடரட்டும்.
21.
chollukireen | 11:33 முப இல் நவம்பர் 8, 2020
இப்போது தக்க ஸமயத்திலேயே சிகிச்சைகள் மேற்கொண்டு குழந்தை பாக்கியம் பெறுவது அதிகரித்து இருக்கிறது. காலமும் முன்னேறி விட்டது. தத்தெடுபபு மையங்கள் மூலம் இன்றும் குழந்தைகள் ஸ்வீகரிக்கப் படுகிறது. எளிதான விஷயமில்லை.பாதுகாப்போடு விஷயங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. உஙகள் கருத்தும் ஸரிதான். உங்களைக் காணோமே என்று நினைத்தேன். அன்புடன்