மயிலத்திலிருந்து திருவருணை—4
ஜூன் 16, 2016 at 8:41 முப 6 பின்னூட்டங்கள்
பழைய வளவனூராக இல்லை. எவ்வளவோ மாற்றங்கள். முன்னேறியுள்ளது. இன்ஜினீயரிங் காலேஜ் முதலானது வந் துள்ளது. நல்லதும், அல்லாததும் சொல்லக் கேட்க முடிந்தது. குளங்களெல்லாம் தூர்ந்து போய்விட்டதாம். ஏரிக்கு வரும் ஆழங்கால் வாய்க்காலும் ஸரியில்லாமல் ஏரிக்குத் தண்ணீர் வருவதில்லையாம்.
நாம் வந்திருப்பது கோவில். கோவிலைச் சுற்றி இருந்த நஞ்சை வயல் வெளிகளும், பெரிய பாசனக்கிணறும்,நீர் இறைக்க பம்ப் ஸெட்டும்,பெரிய தொட்டியும், பாசன வாய்க்கால்களும், நான்கைந்து பேராக நிறைய துணி மணிகளைக் கொண்டு வந்து தோய்த்து குளித்து விட்டு ஸந்தோஷமாக பேசிக்கொண்டு வீடு திரும்புவதான அக்காலம் கண் முன் வந்ததா? அல்லது கற்பனையா? கிணற்றைக்கூடவா அடைத்து விடுவார்கள். சிறிய சிறிய மனைகளாகப் பிரித்து நிறைய வீடுகள் . ஒரு குடி இருப்பாக மாறி இருக்கிறது.
கோவில் மட்டும் இன்னும் பழமையடைந்து அப்படியே இருக்கிறது. நல்ல வெயில் எங்களுக்காகவே திறந்திருக்கிறது. ஒரு சுற்று சுற்றி வருவோம். முன்பெல்லாம் அடிப்பிரதக்ஷிணம் என்று அடிமேல் அடி வைத்து நடந்து பிரகாரத்தைச் சுற்றுவோம். இப்போது பார்க்கலாம் பிரகாரத்தை.
எங்கள் முந்தாதையர்கள் இக்கோவிலுக்காக ,உற்சவங்கள் நடப்பதற்காக ஏராளமான கைங்கர்யங்கள் செய்திருக்கிரார்கள் என்று சொல்லுவார்கள்.
அபிஷேகத்திற்கு பால்,தயிர்,இளநீர்,பஞ்சாமிருதம்,சந்தனம்,மஞ்சள்,குங்குமம், எல்லாம் தயார். மற்ற தெய்வங்கள் பிள்ளையார், காத்தவராயன் மற்றும் யாவரும் முதலிலேயே தரிசனம் ஆகிவிட்டது.
பூஜாரி தெரிந்த அளவில் பேர், கோத்ரம் விசாரித்தார்.
அம்மன் சிலைவடிவில் உட்கார்ந்த நிலையில் கம்பீரமாகக் காட்சி தருவார். நல்ல புடவை ரவிக்கையுடன் பார்க்க பக்தி ஏற்படும்.
அபிஷேகத்திற்கான சிறிய உருவச்சிலை. பாதத்தில் இருக்கும். வரிசையாக அபிஷேகங்களைப் பார்ப்போம். ஸரியான வெளிச்சமில்லை.
வரிசையாக அபிஷேகங்கள்.
பிறகு புடவைசாற்றி கற்பூர ஹாரதி எதுவும் படமெடுக்கவில்லை. பிரஸாதம் வாங்கிக்கொண்டு மீதியை வினியோகம் செய்யச் சொல்லி விட்டு நண்பர் வீட்டிற்கு வந்தோம்.
அக்கிரஹாரம் நுழைந்தவுடனே யார்யார் வீடுகள் என்ற எண்ணம் ஓடியது எங்களுடயதாக இருந்த வீட்டையும் பார்த்துக் கொண்டே எண்ண அலைகளுடன் சினேகிதர் வீடு வந்து சேர்ந்தோம். வரும் வழியிலேயே எங்கள்
பெருமாள் கோவில். கதவு திறக்க நேரம் இருப்பதால் அப்புறம் வரலாம் என்று பெருமாளை நினைத்தபடியே வந்தோம்.
சிநேகிதரின் மனைவி,மாமியார்,அவர்களின் முன்னோர்கள் என்று யாவரும் பரிச்சயமான ஊர் உறவுக்காரர்கள். அங்கு போன வுடன் அவரும் மாப்பிள்ளையின் தாய்வழி உறவுக்காரர்கள் என்று தெரிந்தது. போன உடனே மனதைக் கவர்ந்தது அங்கு போடப்பட்டிருந்த ஊஞ்ஜல்.
வாங்கோவாங்கோ என்ற வரவேற்பு. மாப்பிள்ளை,பெண் எல்லோரும்தான் போயிருக்கிறோம். போன உடனே ஊஞ்ஜலில் ஒரு ஓரம் உட்கார்ந்தேன். ஓ நீங்க காமாக்ஷி டீச்சரில்லையா?
எங்களுக்கு கும்மி,கோலாட்டமெல்லாம் சொல்லிக் கொடுத்தது ஞாபகம் உள்ளது என்ற பேச்சோடே வார்த்தைகள் ஆரம்பமாகின. ஒரு இரண்டு வருஷம் பதினைந்து வயதிற்குள் டீச்சராக இருந்தது, டீச்சர் என்ற அடை மொழி ஒட்டிக்கொண்டு விட்டது.
ஊரைச்சுற்றி யாவரின் குடும்ப ஸமாசாரங்கள்,இப்பொழுதையநிலை, எப்படி முன்பெல்லாம் இருந்தது,என்ன ஏது என்று ஐம்பது அறுபது வருஷ விவகாரங்கள் பேச்சின் முக்கிய அம்சங்கள். அம்மா, இருந்து வந்து போனதால் எனக்கு அடுத்தடுத்த ஜெனரேஷன் பற்றியும் ஞாபகம் இருந்தது.
தெரிந்த சிலரை வீட்டிற்கே கூப்பிட்டிருந்தனர். அன்று எங்கள் ஊர்க்காரர் வீட்டின் முக்கிய விவாகம் விழுப்புரத்தில். ஆதலால் யாவரும் அங்கு போயிருந்தனர். யாரையும் பார்க்க முடியவில்லை.பேச்சுபேச்சு எல்லாம் ஊஞ்ஜலிலேயே.
தோட்டப்பக்கம் நானும் என் பெண்ணும் போய் இது அவர்கள் வீட்டு தோட்டம், அது சீதா மாமியாம் . எல்லாம் கைமாறி விட்டாலும் ஞாபகங்கள் கைமாறவில்லை. சுடச்சுட அரிசி உப்புமாவும்,சட்னியும் எல்லோருக்கும் கொடுத்தனர். நம் ஊர் அரிசி,அன்புடன் கொடுக்கப்பட்டது. சுவையோசுவை. நண்பர் வீட்டிற்கு வந்து விட்டு நம்முடைய பேச்சும்,பிரதாபமும்தான். மற்றவர்களை மறந்தே விட்டோம்.
அவர் இம்மாதிரி குலதெய்வங்களுக்கு ஆராதிக்க வருபவர்களுக்கு முன் கூட்டி தெரிவித்தால் , பொது ஸேவையாக ஸம்பந்தப் பட்டவர்களுக்குச் சொல்லி ,ஸுலபமாக நேர்த்திக் கடன்கள் செய்ய உதவுகிரார். அவருக்கு மிக்க நன்றி.
கதைகள் முடிவுறாத நிலையிலேயே பெருமாளை தரிசிக்கப் போனோம்.
பெருமாள் சிலாரூபமாகசங்கு சக்கரம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில்தனது இடது தொடையில் மஹாலக்ஷ்மியுடன் சேவை சாதிக்கிரார். வேதவல்லித் தாயாருக்குத் தனி ஸன்னிதி. அனுமார் பாலாலயத்தில்
மராமத்துகள் முடிந்து கும்பாபிஷேகம் நடக்காமல் பெருமாள் மௌனம் ஸாதிக்கிரார். மற்றபடி எல்லோரும் பாலாலயத்தில் இருக்கிறார்கள். நந்தவனத்தில் ஒரு வேங்கடாசலபதி சிலை உருவம் நிறுவப்பட்டு ஸன்னிதி மூடிக் கிடக்கிறது. பெருமாளே சீக்கிரம் கும்பாபிஷேகம் செய்து கொண்டு, எப்போதும் போல் தரிசனம் கொடுங்கள் என்று வேண்டிக் கொண்டு, சினேகிதர் வீட்டிற்கு வந்து யாவரிடமும் பிரியா விடை பெற்றுக்கொண்டு, ரவிக்கைத்துண்டும்,தக்ஷிணையும்,தாம்பூலமும் பெற்றுக்கொண்டு அடுத்து இரண்டுமைல் தொலைவிலுள்ள கோலியனூர் நோக்கி விரைந்தோம். இதுவும் மாரிஅம்மன் கோவில்தான். ஐந்து ஆறு அடி உயரமுள்ள புற்றும், மாரியம்மனும் மூலஸ்தானம். புத்துவாயம்மன் என்ற பெயரில்தான் கோயில் அறியப்படுகிறது.
கோவிலில் அர்ச்சனைகளை முடித்துக்கொண்டோம்.மிகவும் பிரபலமான கோவில். எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் கூட்டம் உண்டு. மிகவும் பிரஸித்திபெற்ற கோவில்.
ஆடி வெள்ளிக் கிழமை என்ற பதிவில் இதைப்பற்றி எழுதியுள்ளேன்.
தவிரவும் கோலியனூரில் ராவணனை வதைக்க வாலி பூஜைசெய்த சிவலிங்கம் வாலீசுவரரென்ற பெயரில் மேற்கு முகம் நோக்கி அருள்புரியும் புராதன சிவன் கோவில் உள்ளது.
சனிபகவானின் பரிகாரஸ்தலமாக இருக்கிறது இது. இதை முன்பொருமுறை பார்த்துள்ளோம். இராவணனை அழிப்பதற்காக வாலி இந்த சனி பகவானையும் பிரதிஷ்டை செய்துள்ளான்.
வாலீசுவரரின் லிங்க வடிவையும் தரிசியுங்கள்.
இப்படி முன்பு தரிசித்தவைகளையும் மனக்கண் முன் நிறுத்தி குறைகளுள்ளவர்கள் யாவருக்கும் , குறைகளை நீக்கி அருள்புரியுமாறி வேண்டிக்கொண்டு கார் திருவண்ணாமலையை நோக்கிப் பயணித்தது. வாருங்கள். சும்மா படங்கள் நிறைய போட ஒரு பதினைந்து நாள் அவகாசமுள்ளது. முடிந்ததைப் போடுகிறேன். நீங்களும் உடன் பயணிப்பதாகவே எண்ணிக் கொள்கிறேன். தொடருவோம்.
Entry filed under: நான் விரும்பிய தரிசனங்கள்.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 12:44 முப இல் ஜூன் 17, 2016
மலரும் நினைவுகள்.
ஊஞ்சலில் அமர்ந்து ஆடினால் எனக்குத் தலை சுற்றும். அலர்ஜி. அப்படியே அமர்ந்தாலும் நடுவில்தான் உட்காருவேன். ஓரமாக உட்கார்ந்தால் எதிர்முனைத் தூக்கிக்கொண்டு சாய்ந்துவிடும் மனப்பிராந்தி உண்டு.
//எல்லாம் கைமாறி விட்டாலும் ஞாபகங்கள் கைமாறவில்லை.//
அருமை,அருமை.
2.
chollukireen | 6:33 முப இல் ஜூன் 23, 2016
எனக்கான வயதில் நானும் ஊஞ்சல் ஆடமுடியுமா? ஓரத்தில் உட்கார்ந்தால் பிடித்துக்கொள்ள சங்கிலி இருக்கும். தவிர பெரிய ஊஞ்சல் இல்லை. எங்கு உட்கார்ந்து கொண்டாலும் கை தானாகவே பக்கத்திலுள்ளதைப் பற்றிக்கொண்டு ஆதரவு தேடிக் கொள்கிறது.நிசமாகவே எனக்கிருக்கும் பற்றுதல் என்த விஷயத்திலும் மற்றவர்களுக்கு இல்லை என்று தோன்றுகிறது. இரண்டொரு பின்னூட்டங்களே மனதில் பதிந்து இன்பத்தைக் கொடுக்கிறது. மிகவும் நன்றி. அன்புடன்
3.
chitrasundar5 | 5:18 முப இல் ஜூன் 17, 2016
காமாக்ஷிமா,
பதிவைப் படிக்கும்போது கூடவே ஒரு அமைதி வருகிறது. சொந்த ஊரைப் பார்த்த நிம்மதி உங்கள் முகத்தில் தெரிகிறது. எனக்குமே சில நினைவுகள். பொறுமையாக இவ்வளவையும் கோர்த்து எடுத்துக்கொடுத்ததில் மகிழ்ச்சிம்மா.
இதுமாதிரி உதவி செய்யும் மனம் உள்ளவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஊஞ்சல் என்றால் கீழே இறங்கவேமாட்டேன். சாப்பாடு முதல் தூக்கம் வரை எல்லாமும் அதிலேதான் 🙂 அடுத்து அண்ணாமலையாரைப் பார்க்கவும் ரெடியாயிட்டேன், அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 6:44 முப இல் ஜூன் 23, 2016
வாவா. அருமையான கட்டுரை இல்லா விட்டாலும் நாம் பார்த்த, அனுபவித்த ஊர்கள் இல்லையா? அதுதான் விசேஷம். எங்கள் வீட்டில் பெரிய ஊஞ்சல் இருந்தது. பெரிய பீரோ நிறைய புத்தகங்கள் இருந்தது.
எல்லாம் யார் யாருக்கோ வேண்டியவர்களுக்குக் கொடுத்து விட்டார் என் அம்மா. என்கதை இது. உன்னுடயதும் அருமைதான். வாவா. அண்ணாமலைக்குப் போவோம். அன்புடன்
5.
RAMU | 3:21 முப இல் ஜூன் 22, 2016
Kolianur is the place I was born. So always special for me.My mother used to name the temple as Puthlayi Amman. Still one of my favourite temples. I still remember your parent`s house next to Perumal Koil. Youhave really kindled my child hood memories of Valavanur & Kolianur. THANKS A LOT.
6.
chollukireen | 6:52 முப இல் ஜூன் 23, 2016
உங்கள் பாட்டியின் குடும்பத்தை நினைக்காமல் கோலியனூர் போகிறவர்கள் கிடையாது ஒரு காலத்தில். இப்போதும் அவ்விடம் அதை ஞாபகப் படுத்திக் கொண்டோம். இந்த வழி போனால் பக்கத்தில் வீடு. வாசலில் பின்ன மரம், காய்த்திருக்கும். நீ அப்படியானால் கோலியனூர் ஸிடிஸன் என்று சொல்லலாம். உங்கள் குடும்பத்திற்கு புத்லாயியம்மனின் பூரண கருணை உண்டு. ஸந்தோஷம். அன்புடன்