மயிலத்திலிருந்து திருவருணை–5
ஜூன் 23, 2016 at 1:42 பிப 4 பின்னூட்டங்கள்
கோபுரதரிசனம் கோடி புண்ணியம். பார்க்கலாம் கோபுரத்தை.
இரவு ஒன்பது மணிக்குமேல் திருவண்ணாமலை வந்து சேர்ந்தோம். அங்கு எங்கள் மருமகன் இருக்கிரார். இரவு தங்குவதற்கு வேறு எங்காவது வசதி கேட்டிருந்தோம்.
கிரிவலப் பாதையில் காஞ்சி காமகோடிபீடம் காமாக்ஷியம்மனை ஸ்தாபித்து மடம் ஒன்று இயங்குகிறது. வேத பாடசாலையும் இருக்கிறது. வைதீக ஸம்பந்தப்பட்ட நல்ல காரியங்கள் நடக்கின்றது. அதில் நான்கு அறைகள் இருக்கின்றது. அவர் அவ்விடம் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். ஆதலால் இரண்டு அறைகள் வாடகைக்குப் ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருந்தபடியால், நேராக அவ்விடம் போய்ச் சேர்ந்தோம். தாசீல்தாரராக இருந்து ரிடயரான கேசவ பாரதி என்ற அவர் மிகுந்த அக்கரையுடன் நிர்வகிப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
மடத்திலுள்ளவர்கள் தங்கும் இடத்தையும் கொடுத்து , அருமையான கல் தோசையை உண்ணவும் கொடுத்தனர். கார் தங்க வசதியும் இருந்தது. காலையில் அவர் வந்து பார்ப்பதாகவும், பெங்களூர் பக்தர்கள் இருவர் அடி அண்ணாமலையிலுள்ள ஆதி அருணாசலேசுவரருக்கு ஏகாதச மஹா ருத்ரம் செய்வதாகவும் , அங்கு எங்களையும் வரும்படியும்,கோவிலில் அதிகக் கூட்டமிருப்பதால் எங்களுக்கு உதவியாக ஒருவரை அனுப்புவதாகவும் ஃபோன் செய்தார்.
அதி காலையிலேயே கண் விழிப்பு வந்து, குளித்து விட்டு வெளியே வந்து பார்த்தால், மடத்திற்கு பக்கத்து இடத்தில் அதுவும் மடம் போலவே இருந்தது. ஸ்ரீலிதா ஸஹஸ்ர நாமம் போல இருந்ததால் மாப்பிள்ளை உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தார்.
அழகான விக்கிரஹம். அருமையான பூஜா அலங்காரங்களுடன் ஒரு பெண்மணி அர்ச்சனை செய்து கொண்டிருக்கிரார். மற்றவர்களும் கூடவே சொல்கின்றனர். கட்டிடத்தின் சுற்றுச் சூழல் நந்தவனம்போன்ற பூச்செடிகள், நடுவே ஸன்னதி. நானும் உடன் சொல்லிவிட்டு வந்தேன். விக்கிரஹம் ஸ்ரீலலிதாம்பாள் என்று சொன்னார்கள். ஆந்திர அன்பர்களின் கைங்கரியம் என்று தோன்றியது.
இவ்விடமிருந்து முகில் சூழ்ந்த மலை.
மடத்தினுள் காமாக்ஷி அம்மன், மஹாபெரியவாள் உருவப்படம்.பூஜை. மிகுந்த பயபக்தியுடன் தரிசித்துவிட்டு காலை ஆஹாரம் முடித்துக் கொண்டு, வேத பாடசாலை மாணாக்கர் ஒருவருடன் அண்ணாமலையார் ஆலயம் வந்து சேர்ந்தோம்.
24 ஏக்கர் பரப்பளவில் அமைந்த கோவில். திருநாவுக்கரசர்,திருஞான ஸம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம். கிழக்கு வாயில் வழியே நுழைந்தால் ஆயிரக்கால் மண்டபத்தைப் பார்க்கலாம்.
சிவகங்கைக்கு இறங்கும் வாசலில் கம்பத்து இளையனார் கோயில் உள்ளது.
வினாயகர் கோயிலின் வாசலில் ஒரு கிணறு உண்டு. நாங்கள் கோயிலின் அருகிலேயே இருந்தபடியால் சிறுவயதில் குடிப்பதற்கு இக்கிணற்றின் நீரையே எடுத்துப் போவோம். எலுமிச்சை இலை வீழ்ந்து வாஸனையாக இருக்கும். இப்போதும் கிணறு இருக்கிறது. போர்போட்டு இருக்கிரார்கள். இராட்டினமும் இருக்கிறது. இப்படி பல ஞாபகங்கள். கிணற்றின் அருகே முன்பொருமுறை படம் எடுத்துக் கொண்டேன். பாருங்கள்.
ஸ்தல விருக்ஷம் வன்னிமரம்.
கோயிலினுள் சிவகங்கை,பிரும்ம தீர்த்தம் என்ற இரண்டு குளங்கள் உள்ளது.
பிரம்மாவும்,விஷ்ணுவும்,யார் உயர்ந்தவர் என்று வாக்கு வாதம் செய்தனர். இதை முடிவுக்குக் கொண்டுவர சிவபெருமான் இருவரையும் அழைத்துத், தனது அடியையோ, முடியையோ பார்ப்பவரே உயர்ந்தவர் எனச் சொல்லி, ஜோதியாகி ஓங்கி உயர்ந்து நின்றார்.
விஷ்ணு வராகாவதாரம் எடுத்துக் கொண்டு பூமியைக் குடைந்து கொண்டு, அடியைக் கண்டுபிடிக்கப் போனார்.
பிரம்மா அன்னப் பறவையாக மாறி,முயற்சி செய்து முடியைக் காண மேலே பறந்தார்.
வழியில் தாழம்பூவைப் பார்த்து அழைத்து ,தான் முடியைப் பார்த்து விட்டதாகப் பொய் சொல்லச் சொன்னார்.
அதுவும் அப்படியே சொல்லியது. பொய் சொன்னதைக் கேட்ட சிவபிரான், பிரம்மாவிற்குத் தனியாக உலகத்தில் கோயிலே இருக்காது என்றும்,பொய் சொன்ன தாழம்பூ பூஜைக்கு உதவாது என்றும் சாபம் கொடுத்து விட்டார்.
இப்படி பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் ஜோதியாக காட்சி அளித்த இடமே திருவண்ணாமலை. இந்த இடத்தில்தான் கோயில் உள்ளது. நெருங்கமுடியாத அடிமுடியை உள்ள நெருப்பு மலைதான் அண்ணாமலை.
இம்முறை செந்தூர வினாயகரை வணங்கி விட்டு, கட்டண தரிசனவழியே அண்ணாமலையாரை தரிசித்தோம். கூட வந்த வித்யார்த்திக்குத் தெரிந்த குருக்கள் ஒருவரை அங்கு பார்த்ததில் கூடிய வரையில் உட்புறமாகச்சென்று அண்ணாமலையாரையும், அடுத்து உண்ணாமுலை அம்மனையும் கண் குளிரப் பார்க்க முடிந்தது.
ஓடிப்பிடித்து பிரகாரங்களில் விளையாடிய கோயில், உன்னைப் பார்த்து விட்டேன்.
ஸ்மரணாத் அருணாசலம்.
ராஜகோபுரப் பக்கத்தில் திட்டு வாசல். இந்த வழியில்தான் முன்பு கோவிலுக்குள் நுழைவோம்.
எவ்வளவு வித்தியாஸம் முன்னாளின் பெயரில்.
அண்ணாமலைக்கு அரோஹரா என்று சொல்லிவிட்டு இன்னும் சிலவற்றிற்கு நாளைக்குப் போகலாம். வாருங்கள்.
Entry filed under: நான் விரும்பிய தரிசனங்கள்.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 1:19 முப இல் ஜூன் 24, 2016
மலரும் நினைவுகளுடன் பக்திக் சுற்றுலா. அழகிய படங்கள்.
2.
chollukireen | 6:45 முப இல் ஜூன் 25, 2016
ஆமாம். உண்மைதான். நன்றி உங்களுக்கு.அன்புடன்
3.
chitrasundar5 | 2:38 முப இல் ஜூன் 24, 2016
மார்ச் 23
காமாக்ஷிமா,
படங்கள் & விளக்கம் அருமை அம்மா. கிணற்றுக்குப் பக்கத்தில் மலரும் நினைவுகளுடன் ….. பார்க்கவே சந்தோஷமா இருக்கு. ஹ்ம்ம்ம்ம் !! நாளை எங்கு கூட்டிட்டு போவாங்க ! எனும் ஆவலுடன் சித்ரா.
நானும் மார்ச் 22 அன்று மாலை(கார்) கிரிவலம் வந்து வழியில் அடிஅண்ணாமலையாரையும் தரிசித்துவிட்டு, இடுக்கு பிள்ளையாரையும் பார்த்துவிட்டு(இந்தமுறை என்னால் உள் நுழைந்து வர முடியவில்லை, சுந்தர் மட்டுமே வந்தார்), பௌர்ணமி கூட்டம் இருக்கும் என்பதால் வீட்டுக்கு வந்தாச்சு. அடுத்த நாள் காலையிலேயே கோயிலுக்கு போய் ஆசைதீர மதியம்வரை இருந்துவிட்டுத்தான் வந்தேன்மா. ஹி ஹி எனக்கும் மலரும் நினைவுகள் :))
4.
chollukireen | 7:07 முப இல் ஜூன் 25, 2016
நான் 25 மார்ச் இரவு திருவண்ணாமலைபோய் 26 கோயிலுக்குப் போயிருக்கிறேன். தெரி யாமற் போய்விட்டதே. உங்கள் ஊருக்குக் கூட வந்து பார்த்திருப்பேன். . கல்யாணம் கார்த்தி என்றால் சொல்ல முடியும். சென்னையிலிருக்கும் போது கூட சில பதிவர்களையாவது பார்க்க வேண்டும் என்ற அவாவும் இருந்தது. பெயர்போன பதிப்பாளராக நான் இருக்க வேண்டாமா என்ற எண்ணம் கூடவே மனதில் வந்தது. இன்னொரு முறை சென்னை சென்றால் இந்த எண்ணத்தையும் நிறைவேற்றி விடவேண்டும்.. உன்னுடைய மலரும் நினைவுகள் ஆசை தீர நிறைவேறியதில் ,மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன். பாரு முடித்து விட்டேன். அன்புடன்