தொட்டில் 11
ஓகஸ்ட் 16, 2016 at 10:23 முப 14 பின்னூட்டங்கள்
பொழுது புலர ஆரம்பித்து விட்டது. இப்பொழுதே போனால் நிதானமாக குளித்து விட்டு, ஆரஅமர துணிகளைப் புழிந்து கொண்டு கரையிலுள்ள மாமரப் பிஞ்சுகள் உதிர்ந்துள்ளதைப் பொறுக்கிக் கொண்டு நிதானமாகக் கதைபேசிக்கொண்டு வரலாம்.முதல்நாள் இரவே யார் யார் வருகிரார்கள் என்று கேட்டுக் கொண்டாயிற்று.
குளத்தில் இறங்கி அமிழ்ந்து உட்கார்ந்து விட்டால் கரை ஏறவே மனம் வராது.
புருஷர்களுக்கு ஒரு பக்கம். பெண்களுக்கு ஒரு பக்கம் படிக்கட்டுகள். புருஷாள் வருவதற்கு முன்னால்ப்போனால் யோசனை இல்லாமல் குளிக்கலாம். இரங்கி விட்டால் முதலில்
துருதுருவென்றுமீன் குஞ்சுகள் காலை கிசுகிசு மூட்டுவதுபோல நெளிந்து,நெளிந்து தொட்டுவிட்டுத் தண்ணீரில் மறையும். கல் படிக்கட்டுகளில் துணியைத் துவைத்துக் கசக்கிக் கசக்கி தண்ணீரில் இரண்டு முறை அலசி விட்டால் பளிச்சென்று எந்தப் புடவை,வேஷ்டி துணிகளானாலும் புதுத்துணியை முதல் முறை தண்ணீரில் நினைத்தது போலத் தோன்றும். ஸோப்பாவது,மண்ணாவது எதுவும் அவர்களுக்குத் தெரியாது.
தனி நபரானாலும் அக்கம்,பக்கம் உள்ள உறவினர்கள்,வயதானவர்களின் துணிகளையும் கேட்டு வாங்கிக் கொண்டு வந்து துவைத்துக் கொண்டு கொடுப்பது வழக்கம்.
ஓர்ப்படி குளத்துக்குப் போறேன். புடவை இருந்தா குடு. நான் கிளம்பிவிட்டேன். நீ வரியா? நான் போயிண்டே இருக்கேன். மீனா, பட்டு எல்லாரும் வந்துட்டா.
நீங்க போயிண்டே இருங்க. ஒரு எட்டுலே உங்களைப் பிடிச்சூடுவேன். கரையில் விபூதி ஸம்படம்,குங்குமச் சிமிழ் மரத்தில்,தேய்த்துக் குளிக்க நல்லதாக குண்டு மஞ்சள்.
யராவது ஒத்தர் எடுத்துண்டா போதும்.
அவரவர்கள் முடிந்த அளவு துணியுடன் பேசிக்கொண்டே குளத்தை அடைவார்கள்.
படமுதவி—-கூகல் மிக்க நன்றி
குளத்தில் பல் தேய்த்துத் துப்பக்கூடாது. ஸோப்பெல்லாம் போடவே கூடாது. மாகஸ்னானம்,துலாஸ்னானம் என்றால் தினம் வெற்றிலை,பாக்கு,பழங்கள் என அது ஒரு மூட்டை கூடவரும். விதரணையாக குளித்து நிவேதனம்செய்து வேண்டியவர்களைத் தேடிப் பிடித்து, மஞ்சள் குங்கும வினியோகம். துணி அலசும்போது யாருக்காகிலும் அதிகம் துணி இருந்தால்,எங்கிட்ட இரண்டு புடவையைக்கொடு . நான் அலசித் தரேன். வேளையோடு கிளம்பினாத்தான் மீதி காரியம் ஓடும்.
துணி விலகாமல் தேய்த்துக் குளித்து , பிழிந்த புடவையை லாவகமாக இடுப்பைச் சுற்றி அரை வட்டமாக பின்னும் இரண்டு சுற்று சுற்றி மேலாக்கையும் ஸரிவர கழுத்தைச் சுற்றவைத்து,பிழிந்த புடவை,பாவாடை என எல்லாவற்றையும், ஸரிவர இரண்டு தோளிலுமாகப் போட்டுக்கொண்டு, ஜலக்கிரீடை முடிந்து, கும்பலாக கிளம்பி பேசிக்கொண்டே அன்றைய நிகழ்ச்சி நிரல்களைப் பறிமாறிக் கொண்டு வந்தால்தான் மற்ற காரியங்களே ஓடும். அன்றைய கிராமங்களில் சற்று முன்னேறிய பின்னும் இந்த வழக்கம் இருந்தது.
ஒரு வயதானவள் பேச ஆரம்பித்தாள். என்னவோ போ. சின்ன வயஸிலே கல்யாணமே தேவலைபோல இருக்கு.
எங்க ஓர்ப்படியைத்தான் சொல்கிறேன். எனக்குத்தான் எதுவுமே இல்லை. ஏதோ கிருஷ்ணாராமான்னு காலம் போறது. கால் நடக்க முடியாத ஓர்படி. மாப்பிள்ளைதான் ஸரியில்லை. பேத்திக்கு கல்யாணம் பண்ணணும்னு விசாரம். நிலம்,நீர்,வீடு வாசல் எல்லாம் இருக்கு. எதையும் எதுவும் செய்ய முடியாது.
ஏன் என்ன அப்படி. எதையாவது வைத்து வாங்கி ஸமாளிக்கலாமே. அதுதானே இல்லை. அண்ணா அப்படி எல்லாம் செய்ய முடியாதபடின்னா எழுதி வைத்து விட்டார். என்னிதும் அப்படிதான். விக்க வாங்க முடிந்தா யாராவது ஏமாத்தி விடுவா. ஆயுஸு வரைக்கும் இருக்கிறதை வைச்சிண்டு அரை வயிறு கஞ்சியாவது குடிக்கட்டும்னு ஸ்வாதீனம் கொடுக்க மாட்டா.
அண்ணாவுக்கோ மாப்பிள்ளை பேரிலேயே நம்பிக்கை இல்லை. அதனாலே பெண்டாட்டி,பெண் அவளின் பிற்காலத்திற்குப் பின்னாலே வாரிசுகளாமே. அவர்கள்தான் எது வேண்டுமானாலும் செய்யலாமாம். பத்திரம் பதிஞ்சுட்டுப் போயிட்டாராம்!
மாப்பிள்ளைஸரியில்லே. பொண்ணு என்ன பண்ணுவா? ஏதோ ஸுமாரான இடமாவது வேண்டும். நாளைக்கே எல்லாம் அவளுக்கும்தானே.
ஏதோ உறவில் பார்க்றதாகச் சொல்லலே. ஆமாம். அது ஒன்று விட்ட உறவு. பையன் ராஜா மாதிரி இருக்கான்.. வயஸுப் பிள்ளைகள். இப்படி அப்படி ஏறத்தாழ இருக்குமோன்னோ. எங்கோயோ ஹோட்டல்லே வேலை செய்யறான் போல இருக்கு.. பேத்திக்கு துளிகூட இஷ்டமில்லே. பேச்செடுத்தாலே அழுகையும் அமக்களமாகவும் ஆயிடறது. உனக்குத் தெரிந்தவா உறவுலே யாராவது இருந்தா விசாரி.
நம்ம ஊரிலேயும் யாராவது அந்தத் தெருவில் இருக்காளா விசாரி. ஓர்ப்படிதான் விசாரிச்சு சொல்லுன்னா. அதான் சொல்றேன்.
நாளைக்கு வரச்சே பேசலாம். அவரவர்கள் வீட்டு விசாரப்பட ஆத்தை நெருங்கியாச்சு. ஏழெட்டுநாள் இந்தப் பேச்சே எடுக்காமல் குளித்துக் கரை ஏறியாகி விட்டது.
ஏண்டீ உன்னிடம் சொன்னேனே. ஏதானும் விஜாரிச்சயா? பாவம் எங்க ஓர்ப்படி. பொண்ணு ஊரிலே இருக்கா. பேத்திதான் கூட இருக்கா. யாரானும் விஜாரிச்சுச் சொன்னாதானே உண்டு. உங்கிட்டே சொன்னேன்னேன்.
ஏதாவது சொன்னாளா என்று கேட்டுக் கொண்டே இருக்கா.
நானும் விஜாரித்தேன். அசலூரா இருந்தாகூட பரவாயில்லை என்று.
இங்கேயே இருக்கிறவாளோட உறவுகூட புதுசா மனது மாறி இருக்காளாம்.
கல்யாணமே வேண்டாம் நாலு பசங்களாயிடுத்துன்னு சொன்னவாளும் புதுசா ஹூம் கொட்ட ஆரம்பிச்சிருக்காளாம். இன்னொண்ணு பிக்கல் பிடுங்கல் இல்லே. ஒரு பொண்ணுதான். அதுவும் குழந்தை இல்லை. பெரியபொண்ணாயிடுத்து. வெளியூரில் இருந்தாளே பானு அவபுருஷன்.
இதெல்லாம் நாம் சொன்னால் நன்னாயிருக்காது. காசு பணம் அதிகம் செலவாகாது.
நானும் கேள்விப்பட்டேன். எதுக்கும் அப்பன்காரன் ஸரி சொல்லணும். கல்யாணம் ஆகாம எத்தனை வருஷம் வீட்டில் அடைந்து கிடக்கணும் இந்தப் பொங்க.
அதனால்தான் அந்தப் பெண்ணும் யோசித்துக் கொண்டு இருக்கு. இந்த அப்பா, இந்தப் பணம் காசு எதுவும் மாறப்போவதில்லை.
வரவனாவது கண்ணியமானவனாக இருக்கணும். அந்த உறவுக்காரப்பிள்ளை வேண்டவே வேண்டாம். அதிலே மன உறுதியாக இருக்கு.
நானும் இன்னிக்குப் போய்ச் சொல்லுகிறேன். நல்லதா ஏதாவது முடிவு எடுக்கட்டும். இன்னும் இரண்டுநாள் நான் குளத்துக்கு வரலே. எங்க அக்காவாத்துக்குப் போறேன். இதெல்லாம் விசாரிக்கச் சொல்லுகிறேன்.
ஸரியா.
பானுவின் புருஷன் வீட்டு ஸமாசாரங்கள் மனதில் அசைபோட ஆரம்பித்து விட்டது. தொடருவோம்.
Entry filed under: கதைகள்.
14 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Geetha Sambasivam | 4:33 முப இல் ஓகஸ்ட் 17, 2016
நானும் தொடர்கிறேன். நேரில் பேசுகிறாப்போல் எழுதி இருக்கீங்க! 🙂
2.
chollukireen | 11:26 முப இல் ஓகஸ்ட் 17, 2016
மிக்க ஸந்தோஷம். தொடர்கிறேன் என்பது மகிழ்ச்சியான விஷயம். நன்றி. அன்புடன்
3.
chitrasundar5 | 3:31 முப இல் ஓகஸ்ட் 20, 2016
காமாக்ஷிமா,
குளத்தங்கரையில் ஆரம்பிச்சு, திருமணப்பேச்சுவரை பதிவினூடே நாங்களும் வருவது போலவே இருக்கும்மா ! அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 3:26 பிப இல் ஓகஸ்ட் 31, 2016
நீங்கள் எல்லாம் கூட வருவதாலேதான் தொட்டில் ஆடிக்கொண்டு இருக்கிறது. வா,வா கூடவேவா. அன்புடன்
5.
கோமதி அரசு | 1:48 பிப இல் ஓகஸ்ட் 31, 2016
அந்தக் காலத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் எவ்வளவு உதவியாக இருந்து இருக்கிறார்கள்!
(குளத்துக்கு போகும் போது முடியாதவர்கள் துணியை துவைத்துக் கொடுப்பது, பிறருக்கு உதவுவது என்று)
நேரில் பேச்சை கேட்பது போல் இருக்கிறது. அருமை.
6.
chollukireen | 3:23 பிப இல் ஓகஸ்ட் 31, 2016
உங்கள் வரவிற்கும்,கருத்துக்கும் மிகவும் நன்றி.அந்த மாமி மட்டும் இல்லே. குளத்திற்குப் போகும் ஒவ்வொருவரும் எந்த விதத்திலாவது அக்கம் பக்கம் உள்ள உறவினர்களுக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்போது குளமெல்லாம் குப்பைக் கிடங்குகளாக மாறி இருக்கிறது. நான் ஜெனிவா வந்துள்ளேன். தொடர்ந்து பின்னூட்டம் கொடுங்கள். அருமை என்ற வார்த்தையும் அருமையாக யிருக்கிறது எனக்கு. அன்புடன்
7.
chollukireen | 3:20 முப இல் திசெம்பர் 1, 2020
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இந்தப் பதினோராவதுப் பதிவு தொட்டில் வேறு விதமாக ஆரம்பமாகிறது. நீங்கள் அல்லவா இதைச் சொல்ல வேண்டும். அனுபவித்துப் படியுங்கள். அன்புடன்
8.
Geetha Sambasivam | 7:30 முப இல் திசெம்பர் 1, 2020
மறுபடியும் படிச்சேன் அம்மா. நன்றாக விறுவிறுப்பாக உள்ளது. என்ன இருந்தாலும் உண்மைச் சம்பவங்கள் ஆச்சே! ருசி குறையுமா? நேரில் பார்க்கிறாப்போல் இருக்கு!
9.
chollukireen | 12:01 பிப இல் திசெம்பர் 1, 2020
நான் கூட இம்மாதிரி குளங்களுக்குப் போனதினால் விஷயங்கள் புரிந்தது. ஒருஸமயம் நிலங்களிலுள்ள கிணறுகளில் பம்ப் ஸெட்டின் மூலம் தண்ணீர் போய்ச்சுவார்கள். தண்ணீர்ப் பஞ்சம். அப்போது இம்மாதிரி இடங்களுக்கும் போய் துணி துவைத்ததுண்டு.
எல்லா இடத்திலும் ஏதாவது பேசுவார்கள். உங்கள் வரவிற்கு நன்றி. உங்களுக்கு அனுப்பிய பின்னூட்டங்கள் போவதில்லை. சில ஸமயம் என்ன காரணம் என்றுபுரிவதில்லை. தடுமாற்றம். அன்புடன்
10.
Geetha Sambasivam | 1:22 முப இல் திசெம்பர் 2, 2020
அப்படியா? என்ன காரணம்னு புரியலையே? எனக்கும் சில வலைப்பக்கங்கள் திறப்பதில் பிரச்னைகள் இருக்கு.
11.
chollukireen | 11:37 முப இல் திசெம்பர் 2, 2020
இது ஸகஜமான ஒன்றா?அன்புடன்
12.
chollukireen | 12:02 பிப இல் திசெம்பர் 1, 2020
பாய்ச்சுவார்கள்.
13.
சஹானா கோவிந்த் | 4:00 பிப இல் திசெம்பர் 1, 2020
தொடருங்கள் அம்மா…பொண்ணுக்கு வரன் அமஞ்சதா? பாப்போம்
14.
chollukireen | 11:34 முப இல் திசெம்பர் 2, 2020
பாரு. இவவளவு தூரம் முயற்சி எடுக்கிரார்களே!அமையும் அன்புடன்