தொட்டில்—13
ஓகஸ்ட் 24, 2016 at 8:52 முப 9 பின்னூட்டங்கள்
முகூர்த்தம் பாத்தாச்சு. வெளியில் சொல்லவில்லை. ராஜுவின் சித்திதானே ஸூத்ரதாரி.
முகூர்த்தம் பார்த்த தினத்தில்தான் குளத்தங்கரையிலுள்ள வேம்பிற்கும்,அரசிற்கும் கல்யாணம். மரங்கள்தான் அவைகள். வனபோஜனம். ஊரே கோலாகலமாக இருக்கும். குளக்கரையில் விவாகம் முடிந்த பின்னர் ஊரில் பெரிய வீட்டில் சாப்பாடு. வைதீகர்கள் அந்த வரும்படியில் இருப்பார்களே!
இம்மாதிரி நல்ல காரியங்கள் பார்த்துப் பார்த்துச் செய்யும் பாட்டி ஒருவர் இருந்தார்.
அவரிடமே விஷயங்கள் சொன்ன போது, இதுக்கென்ன விசாரம்? முதல் முகூர்த்தம் இதைப் பண்ணிவிட்டு மாலையும் கழுத்துமா அவர்களையும் அழைத்துக் கொண்டு போனால் போயிற்று. மீதி நாள் பூரா இருக்கே. எனக்கும் கொஞ்சம் நல்ல காரியம் செஞ்சோம் என்ற திருப்தியும் கிடைக்கும்.
எல்லா விஷயங்களும்தான் நீ சொல்லி விட்டாய். கார்த்தாலே ஏதாவது காபிடிபன் போரும். சாப்பாடெல்லாம் நான்தான் செய்யறேனே. அப்புறம்அவாளுக்கு என்ன செய்ய இஷ்டமோ தாராளமாக செய்து கொள்ளுங்கோ. மறுநாள்வரை ஜமாய்க்கலாமே.
செலவு செய்ய முடியாத கஷ்டமெல்லாம் இல்லை அவாளுக்கு.
ஸரி எங்காத்திலேயே பந்தல்போட்டு நான் எல்லாம் செய்யறேன்.
மாப்பிள்ளை ராஜு போய் அவன் அண்ணாவிடம் சொன்னான். ஆகாசத்திற்கும்,பூமிக்குமாக குதிக்காத குறைதான்.
பெண் ஒண்ணு இருக்கு, இதெல்லாம் அவசியமா? என்ன இருக்கோ எல்லாவற்றையும் அந்தப் பெண்மேலே எழுதி வைச்சுட்டு அப்புறம் எக்கேடு வேண்டுமானாலும் கெட்டுப்போ. இவ்விடம் வராதே. என்றனராம்.
எழுதி வைத்திருப்பதும்,இதுவரை நான் கொடுத்திருப்பதும் உங்களிடம் இருப்பதை எண்ணிப் பாருங்கள்.இப்போதும் என்னால் முடிந்ததை நான் கொடுப்பேன்.
வருவதும்,வராததும் உங்கள் இஷ்டம் என்று சொல்லி வந்து விட்டான். ஒரே சாபம்தான். கூடவும் நான்கு வேண்டிய மனிதர்களை அழைத்துப் போயிருந்தான். சித்திக்கும் சேர்ந்து அர்ச்சனை. காச்சு மூச்சு கத்தல்தானாம்.
இங்கே பெண் வீட்டிலும் அவளுடைய அப்பாவிற்கு பாட்டிக்கிழவி எவ்வளவு காலம் இருந்து விடப் போகிறாள்? கிழவி போன பிறகு ஸொத்தில் உன் பெண்ணையும் கையெழுத்துப் போடச் சொல்லி உனக்கு ஆதாயமாகவே உன் பெண் இருப்பாள் என்ற உறுதி மொழியும் கொடுத்து, வாயடைத்து வைத்தனர்
. குடிப்பான் போல இருக்கு. அதான் அவனுக்கு நியாய அநியாயம் எதுவும் தெரியலே. பிசாசு புளிய மரத்திலே ஏறாது இருக்கணும். பாட்டிக்கு பிற்காலம் ஸொத்து நம்முது என்ற என்ற அளவில் ஓய்ந்தது .
அப்பாவிற்கு உறுதி மொழி கொடுக்கும்படியான நிலை
பரோபகாரப் பாட்டியும், சித்தியும் ஏர்பாடுகளைச் செய்தனர். ஊர் பூராவிற்குமே அழைப்புதானே. முக்கியமான உறவுக்காரர்கள் மட்டிலும் கல்யாணத்திற்கு வந்தனர். கல்யாணம் நன்கு முடிந்தது.,
அரசு வேம்பு கல்யாணத்தில் சாவகாசமாக அவர்களிடம் எல்லாம் பார்த்துக் கொள்ளலாம்.என்று யாவரும் அலங்காரங்களுடன் சீர் சுமந்துகொண்டு போக பாட்டி வீட்டில் கூடி விட்டனர். வைதீகர்கள்,லௌகீகர்கள் உட்பட.
கல்யாணிக்கும் அவள் பாட்டி எதுவும் குறை வைக்கவில்லை. கொட்டுமேளம் கொட்ட ராஜு,கல்யாணி தம்பதிகளின் ஊர்வலம்போல சீர்வரிசைகளுடனும், பூஜா திரவியங்களுடனும் எல்லோரும் குளக்கரை நோக்கிப்போனது அவ்வளவு கண்கொள்ளாக் காட்சிதான் என்று தெரிந்தவர்கள் சொல்வார்கள்.
ஸம்ரதாய பூஜைகள் நடந்து கல்யாணம் வேம்பு,அரசுக்கு முடிந்து ,யாவரும் வீடு திரும்பும்போது யாவர் வீட்டிலும் ஆரத்திசுற்றி திருஷ்டி கழித்து, சாப்பாடுதான் எப்படிப்பட்டது, வேதியர்கள் திண்ணையில் உட்கார்ந்து பஞ்ஜாதி ஓத, சந்தனப்பூச்சும்,பனை விசிறியும் யாவரின் கையில், ஸம்பாவனைகளும், யாவருக்கும் தாம்பூலமுமாக ஒரு கோலாகலத் திருமணமுமாக முடிந்தது.
பின்னிப் பிணைந்ததாக அரசங்கன்றையும் வேப்பங்கன்றையும் வளர்த்து ஏதோ அரச இலை இவ்வளவு என்று தோராயமாக ஒரு காலம் கணக்கிட்டு, அவை இரண்டிற்கும் முறையே பூணூல் கல்யாணம் என்று செய்வார்கள். பிறகுதான் அந்த மரம் பூஜைக்குரியதாகக் கணக்கிடப்பட்டு,அரசப் பிரதக்ஷிணம் முதலானது செய்யவும், நாகப் பிரதிஷ்டை முதலானது செய்து வழிபடவும் உகந்ததாகக் கருதப்படும். எனக்கு ஞாபகத்தில் இவ்வளவுதான் இருக்கிறது.
கல்யாணி சில மாதங்கள் சித்தியுடன் இருக்கட்டும். பிறகு மாப்பிள்ளையும் இதே ஊரில் வேலை கிடைத்து வந்து விட்டால், என்னுடனே வந்து தங்கட்டும். அவளுக்கில்லாதது என்ன? நான் ஒருவள் இவ்வளவு பெரிய வீட்டில் என்ன செய்வது?
இப்படி,அப்படி அண்டர் கிரவுண்ட் ஏற்பாடுகளுடன் கல்யாணி புக்ககம் போனாள். அடுத்த இரண்டொரு மாதத்தில் ஜெயாவின் கல்யாணம் என்று தெரிந்து, ராஜு மட்டும் தானாகவே சென்று, முடிந்த அளவு பணம் கொடுத்து விட்டு ஏச்சு பேச்சுகளைக் கேட்டுக்கொண்டு வந்து சேர்ந்தான்.
நல்ல வேளை ராஜுவிற்கும் ஊரிலேயே வேலை கிடைத்து விட்டது. மாதங்கள் ஓடியது. கல்யாணியை மசக்கைக்காக பாட்டி வீட்டிற்கு வந்தாள். சித்தி இங்கும்,அங்குமாக இருக்கட்டும். பிரஸவத்திற்குப் பின் தனிக் குடித்தனம் வைக்கலாம் என்று பேசிக் கொண்டனர். கொள்ளுப்பேரன் என்றால் மகிழ்ச்சி
நடைமுறைகளெல்லாம் அவ்வப்போது குளக்கரையில் வேண்டியவர்களால் அலசப்படுவது கிராம வழக்கம்.. வம்பென்று நினைப்பதில்லை. அன்றும் அப்படியே. கல்யாணிக்கு எல்லாம் நன்றாக ஆகிவிட்டது. அவ அம்மாவுக்குதான் பிடுங்கல் ஜாஸ்தியாப் போச்சு. ராஜு அப்படித் தாங்குகிறான்.பாவம் அவம்மா
எவ்வளவு காலம் உங்கம்மா இருப்பாள்? எவ்வளவு காலம் இருந்தா என்ன நாம்தானே வரும்படியை அனுபவிக்கிறோம் என்று சொல்லப்போக, அதிலிருந்து சண்டையும் சாடியும் பதில் சொன்னால் அமக்களம். அவளுக்கு உடம்பு நன்னா இல்லே. அடிக்கடி தலை வலிவந்து துடித்துப் போகிறாள். படபடப்பு. ஊரிலேந்து வந்திருக்காள். நிலபுலன்களை விற்க ஏற்பாடு செய் என்று சொல்கிறானாம்.
யார் வாங்குவா இந்த ஸொத்தை? பாவம் மில்லையா மாமி.இந்த பிளட் பிரஷர் எல்லாம் யாருக்கும் தெரியாது. டாக்டரிடம் போனால்தானே. அவரும் பெயர் சொல்லி விளக்கும் காலமில்லை அது. ரொம்பப் படுத்தரான். கலங்கிப் போயிருக்கா. கல்யாணிக்கு பிரஸவம் பார்க்க வந்திருக்காள்.
பேரன் பிறந்து ஸந்தோஷத்தைக் கொஞ்ஜம் அனுபவித்ததுடன்ஸரி. அன்னிக்கும் ஏதோ வாக்குவாதம். அப்படியே கீழே உட்கார்ந்ததுடன் ஸரி. மகராஜி என்ற பட்டத்துடன் போய்ட்டா. என்ன பண்றது.? மன்னிதான் உடைஞ்சு போயிட்டா. இதெல்லாம் முடிந்து அவனுக்கு இங்கே ஒண்ணும் இல்லே என்று ஆகிவிட்டது.
இப்போ புது விஷயம் பொண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளைதானே. அவனும் கல்யாணம் பண்ணிண்டு ஒரு பிள்ளையும் பிறந்தாச்சு. அந்த குழந்தைதான் வாரிசு என்று சொல்லி வந்திருக்கிறானாம்.
ஊரில் எல்லோருமாக எடுத்துச்சொல்லி அவனுக்கு எந்த பாத்யதையும் இல்லை என்று சொல்லி ,கையில் சிறிது கணிசமாகப் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்களாம் இப்படி கதை மாறியது.
காலஓட்டத்தில் பாட்டிக்காக விரத ஸுகங்களும் நடந்தது.பாட்டியும் நல்ல கதி அடைந்தாள். கல்யாணிக்கு எல்லாம் ஆண் குழந்தைகள். பெண்ணும் வரபோக இருக்கிராள். தொட்டில்கள் அழகாக ஆடுகின்றன. குடும்பத்தை கௌரவமாக வகிக்கும் கல்யாணி, மூத்தாள்பெண், சித்தி என எல்லா குடும்பங்களிலும் விதவிதமான தொட்டில்கள் ஆடிக் கொண்டிருக்கின்றன. வாரிசு என்னவோ கல்யாணிதான். இப்படியும் தொட்டில்கள்.
படம் உதவி கூகல்
Entry filed under: கதைகள்.
9 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Geetha Sambasivam | 10:53 முப இல் ஓகஸ்ட் 24, 2016
எங்க வீட்டுத் தொட்டிலைப் போல் இருக்கு! நல்ல கதை! இல்லை இல்லை, சம்பவம்! 🙂
2.
chollukireen | 9:12 முப இல் ஓகஸ்ட் 27, 2016
கதைகள்தான் சம்பவமாகவும்,சம்பவங்களே சிறிது மாற்றங்களுடன் கதைகளாகவும் மாறுகிறது. மரத்தொட்டில் எல்லார் வீட்டிலும் இம்மாதிரிதான் இருந்தது. உங்கள் மறு மொழிக்கு மிகவும் நன்றி. அன்புடன்
3.
கோமதி அரசு | 12:49 பிப இல் ஓகஸ்ட் 31, 2016
இரட்டை விளிப்பு தோசையை படிக்க வந்து தொட்டில் கதையில் ஆழ்ந்து போனேன். மொத்தமாய் படிக்க வேண்டும்.
4.
chollukireen | 3:37 பிப இல் ஓகஸ்ட் 31, 2016
தோசையின் ருசி தொட்டிலிலும் ஒரு விளிம்பில் இருந்தாலும் நல்லதுதானே. முடிந்தபோது படித்து அபிப்ராயம் கொடுங்கள். மிக் ,,,,,,க மன நிறைவாக இருக்கும். நன்றி. அன்புடன்
5.
chitrasundar5 | 6:07 பிப இல் செப்ரெம்பர் 3, 2016
நேரில் உட்கார்ந்து கதை கேட்டது போலவே இருக்கும்மா !
எல்லோரது வீட்டிலும் தொட்டில்கள் ஆடி, சுபமாக முடிந்ததில் மிகுந்த சந்தோஷம்மா, அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 6:21 முப இல் செப்ரெம்பர் 4, 2016
ஆடிய தொட்டில்கள். அன்புடன்
7.
chollukireen | 3:40 முப இல் திசெம்பர் 15, 2020
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
தொட்டில் 13 முததாய்ப்பு வைத்தமாதிரி நிகழ்ச்சிகள். அரசுக்கல்யாணம்,தொட்டில்கள் என பல நிகழ்ச்சிகள். அழகுதான். பாருங்கள். வாருங்கள். அன்புடன்
8.
Geetha Sambasivam | 7:12 முப இல் திசெம்பர் 15, 2020
தொட்டில் சுபமாக முடிந்து விட்டது. நல்ல அருமையான தொகுப்பு! அந்தக் கால விபரங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. முக்கியமாய் அரச மரத்துக்குப் பூணூல் போடும் விஷயம் இப்போத் தான் புரிந்தது. முன்னே படிக்கையில் சரியாய்க் கவனிக்காமல் இருந்திருக்கேன். 🙂
9.
chollukireen | 11:13 முப இல் திசெம்பர் 16, 2020
கிராம வாழ்க்கை இது. இபப இதெல்லாம் பார்க்கவும் முடியாது. நன்றி. அன்புடன்