தட்டை பீன்ஸ் கறி.
செப்ரெம்பர் 21, 2016 at 2:50 பிப 19 பின்னூட்டங்கள்
நான் முன்பு ஜெநிவாவில் இருக்கும்போது இந்தக்காயை கட்டாயம் பார்த்தால் வாங்காது விடமாட்டேன். ஃப்ரெஞ்சுப்பெயர் HARICOTS COCO. நான் என்னவோ பெரிய அவரைக்காய் என்பேன். ஆங்கிலத்தில் FLATE BEANS என்பார்கள் போல இருக்கிறது.
ஒரு கப்பீன்ஸ் கறிசாப்பிட்டால் 110 கலோரிகள் அதில் இருக்கிறது. நார்ச் சத்து அதிகம் இருக்கும் காய். நம் ஊரில் எத்தனையோவித அவரைக்காய்கள்,கலர்க் கலரில் காய்த்தும் ,வாங்கியும் சாப்பிட்டிருக்கிறோம். அவைகளின் ருசி அலாதி. இக்காயில் ப்ரோடின்,கார்போஹைட்ரேட் முதலானது அதிகம் இருக்கிறது.
இதுவும் அவரைக்காய் வகைதான். காயின் மேல்ப்பாகம் சற்று தடிமனாக இருக்கிறது. ஸரி இதையும் சமைத்து ஒரு பதிவு போடுவோமென்று தோன்றியது.
நான் செய்தது என்னவோ ஸாதாரண கறிதான்.
செய்முறை.
காய் ஒரு கால்கிலோ அளவு.
இஷ்டப்பட்ட அளவு தேங்காய்த் துருவல். இஞ்சி நசுக்கியது சிறிதளவு.
கறிப்பொடி—இரண்டு டீஸ்பூன். வேண்டிய அளவு உப்பு. மஞ்சட்பொடி அரை டீஸ்பூன் எண்ணெய்—ஒரு டேபிள்ஸ்பூன். கடுகு,உளுத்தம் பருப்பு தாளிக்க சிறிது.
செய்முறை. காயை நன்றாகத் தண்ணீர் விட்டு அலம்பி வடிக்கட்டவும்.
பின்னர் காம்பு நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காயின்மேல் நசுக்கிய இஞ்சியைப்போட்டு ,ஒரு அரைஸ்பூன் எண்ணெய் விட்டுப் பிசறி மைக்ரோவேவில் உயர்ந்த மின் அழுத்தத்தில் 10 நிமிஷங்கள் வேக வைத்து எடுக்கவும். அல்லது குக்கரில் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு விஸில் வருமளவிற்கு விட்டு வேக வைத்ததை வடிக்கட்டவும்..
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு உளுத்தம் பருப்பைச்சேர்த்து சிவந்ததும் வெந்த காயைக் கொட்டி,உப்பு,மஞ்சள் சேர்த்து வதக்கவும். கடைசியில் கறிப்பொடியைத் தூவி வதக்கி தேங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கி இறக்கவும். பொடிபோட்ட கறியாதலால் நான் தேங்காய் சேர்க்கவில்லை.
கூட்டு,ஸாம்பார்,அவியல்,வெந்தயக்குழம்பு என எதிலும் சேர்க்கலாம். அவரைக்காய் கறிமாதிரிதானே என்கிறீர்களா? ஜெனிவா பதிப்பில்லையா? அதுதான் விசேஷம்.பச்சைக் கொத்தமல்லியையும் தூவிக்கொண்டு இருக்கிறது. என் மும்பை மருமகள் அப்படியே எண்ணெயில் நேராக வதக்கித்தான் செய்வாள். வேக வைக்க மாட்டாள். இது சற்று தோல் பருமனாக இருப்பதால் வேக வைக்கிறேன். இரண்டு விதங்களும் நன்றாகவே இருக்கும்.
வெங்காயம்,பூண்டு வேண்டுமென்பவர்கள் தாளிதத்திலேயே அதைச் சேர்க்கவும்.
Entry filed under: கறி வகைகள்.
19 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Geetha Sambasivam | 3:44 முப இல் செப்ரெம்பர் 22, 2016
பலரும் பச்சைக்காய்கறிகளை நேரடியாகக் கொஞ்சம் போல் எண்ணெய் விட்டு வதக்கிக் கொண்டு மூடி வைத்து வேகவிட்டே செய்கிறார்கள். இதனால் சத்துக் குறையாது என்கின்றனர். நான் கொஞ்சம் வேக வைத்தே செய்கிறேன். அது தான் பிடிக்கிறது. மனசு தான் காரணம்! 🙂
2.
chollukireen | 7:33 முப இல் செப்ரெம்பர் 22, 2016
நமக்கென்று ஒரு சமையல் நடைமுறை வந்து விடுகிறது. மற்றவைகளைப் படித்தாலும் ஏதோ ஒருஸமயம் மாற்றுவோமே தவிர நமது பாணி பூரவும் மாறாது.மனதுதான் காரணம். உங்கள் கருத்தை மிகவும் விரும்புகிறேன். அன்புடன்
3.
கோமதி அரசு | 5:35 முப இல் செப்ரெம்பர் 22, 2016
நல்ல பீன்ஸ் கறி. செய்முறையும் நல்லா இருக்கிறது.
4.
chollukireen | 7:34 முப இல் செப்ரெம்பர் 22, 2016
மிகவும் ஸிம்பிள் இல்லையா? நன்றி. அன்புடன்
5.
JAYANTHI RAMANI | 1:30 பிப இல் செப்ரெம்பர் 22, 2016
காமாட்சி அம்மா
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க வலை வீட்டுக்கு வரேன். மன்னிச்சுக்கோங்கோ. ரெண்டு பேத்திகளை சமாளிக்கறதுலயே நேரம் போயிடறது.
முக்கியமா ஒண்ணு சொல்லணும்.
நீங்க முதல்ல எழுதினதுக்கும் இப்ப எழுதறதுக்கும் நல்ல வித்தியாசம். அப்ப எல்லாம் உங்க எழுத்துக்கள படிக்கும் போது ஒரு சின்ன குட்டிப் பெண் எழுதறமாதிரி தோணும். இப்ப தமிழ்ல M.Phil வாங்கின மாதிரி இருக்கு உங்க எழுத்துக்கள். அதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். சில பேரை பார்த்தா ஏதோ ரொம்ப நன்னா தெரிஞ்ச மாதிரி ஒரு உணர்வு. அதுதான் உங்கள பார்த்த போது (புகைப் படத்திலதான்) தோணித்து.
இன்னும் நிறைய எழுதுங்கள்.
பெயரைப் பார்த்ததும் வாளவரங்காயோ என்று நினைத்தேன்.
சிம்பிளா இருந்தாலும் பார்க்க நன்னா இருக்கு.
6.
chollukireen | 5:03 பிப இல் செப்ரெம்பர் 25, 2016
வாருங்கள்,வாருங்கள். மிக்க ஸந்தோஷம். பேத்திகளுலகத்தில் இருக்கிறீர்கள். மிக்க ஸந்தோஷம். இது மூன்றாவது முறை. பதில்கள் ஓடிப்போய்விடுகிறது. தொடர்கிறேன்
7.
chollukireen | 5:16 பிப இல் செப்ரெம்பர் 25, 2016
குட்டிப்பெண் எழுதுவதுபோல இருந்தது இப்போது நல்ல வித்தியாஸமிருக்கிறது என்று எழுதியுள்ளீர்கள். எனது சிநேகிதி இந்த வலைப்பூதான். பாடப்பாட ராகம் என்பார்களே அதுமாதிரி இதுவும் என்னவோ. பாராட்டுதல்களுக்கு நன்றி. எனக்கும் உங்கள் உணர்வேதான். நடுவில் பின்னூட்டங்கள் குறைந்து விட்டது. அவ்வளவே தவிர நட்பு மறக்கவில்லை.. இப்போது முக நூலில் லைக்கிங்கில் எல்லாமே முடிந்து விடுகிறதே.!
வாளவரங்காயில்லை. இது ஒருவித பீன்ஸ். எல்லாம் செய்ய முடிகிறது. உங்கள் நட்புறவான பதிலுக்கு மிக நன்றி. அன்புடன் பேத்திகளுக்கு அதிக அன்புடன்
8.
ஸ்ரீராம் | 1:56 பிப இல் செப்ரெம்பர் 22, 2016
எனக்குப் பிடிக்காத காயில் ஒன்று பீன்ஸ்! ஆனாலும் நீங்கள் வெளியிட்டிருக்கும் படங்களைப் பார்க்கும்போது சுவைக்க ஆசை வருகிறது!
9.
'நெல்லைத் தமிழன் | 1:59 பிப இல் செப்ரெம்பர் 25, 2016
இந்தத் தட்டை பீன்ஸ் கறி நன்றாக இருக்கும்போல் இருக்கிறது (பொடிக்குப் பதிலா தேங்காய் தூவினால் இன்னும் நன்றாக இருக்கும்போல் இருக்கிறது). பருப்பு உசிலிக்கும் ஏற்ற காய் இது. வேகவைத்தால் வேலை மிச்சம். கடாயில் வதக்கினால் வேலை ஜாஸ்தி.
10.
chollukireen | 4:40 பிப இல் செப்ரெம்பர் 25, 2016
நான் ஜெனிவா வந்துள்ளேன். வீட்டில் தேங்காய் இருப்பு தீர்ந்து விட்டது. ஸமயத்துக்கு கறிப்பொடி கைகொடுத்தது. அவ்வளவுதான். பீன்ஸ் வகைகளெல்லாமே பருப்புசிலிக்கு ஏற்றதுதான். உங்கள் முதல் வருகையை வருகவருக என்று வரவேற்கிறேன். சமையலில் உங்கள் அனுபவங்கள் மிகவும் அனுபவ பூர்ணமாக இருக்கிறது. நன்றி. ஸந்தோஷம். அன்புடன்
11.
Mrs.Mano Saminathan | 4:36 பிப இல் செப்ரெம்பர் 26, 2016
இதைப்பார்த்திருக்கிறேன். பொரியல் செய்து பார்த்ததில்லை. சுவை பீன்ஸ் போல இருக்குமா அம்மா?
இன்று தோழியில் உங்கள் புகைப்படத்துடன் உங்களைப்பற்றிய செய்திகளைப்படித்து மகிழ்ந்தேன்! இனிய வாழ்த்துக்கள்!
12.
chollukireen | 7:42 பிப இல் செப்ரெம்பர் 26, 2016
பீன்ஸ்போன்ற சுவை இல்லை. ஆனால் ருசியாக இருக்கிறது. எல்லாவற்றிலும் ஒத்துப் போகிறது. பச்சைக் காய்கறிகள் நம் சமையலில் அதிகம் சேர்க்கிறோம். அந்த வகையில் இது மிகவும் பிடித்தது எனக்கு.தோழியில் என்னைப் பார்த்து ,என்னைப்பற்றி படித்து மகிழ்ந்தது பற்றி மிக்க ஸந்தோஷம். வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
13.
chitrasundar | 2:28 முப இல் செப்ரெம்பர் 28, 2016
காமாட்சிமா,
பச்சைப் பசேலென சூப்பர் பொரியல் !
இங்கும் இந்தக்காய் கிடைக்கிறது. அவரை, பீன்ஸ் மாதிரி எல்லாமும் செய்கிறேன். நானும் வேக வைக்காமல் அப்படியேதான் சேர்ப்பேன். அன்புடன் சித்ரா.
14.
chollukireen | 12:34 பிப இல் செப்ரெம்பர் 28, 2016
வெகுநாட்களாகக் காணோம் உன்னை. பார்த்ததில் ஸந்தோஷம். அவரவர்கள் ருசிக்குத் தகுந்தாற்போல் செய்ய வேண்டியதுதான். இதுவும் ஒரு கலைதானே!!!!!!!!!!
15.
chollukireen | 11:27 முப இல் ஓகஸ்ட் 29, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இன்று மீள் பதிவிற்கு அகப்பட்டுக் கொண்டது தட்டைபீன்ஸ் கறி. எனக்கு பிடித்த ஒருவகை இவ்விடத்தில். பாருங்கள். சுவையுங்கள். எழுத்தில்தான். அன்புடன்
16.
Geetha Sambasivam | 11:48 முப இல் ஓகஸ்ட் 29, 2022
Super amma. I used to cook beetroot.in this method only. Used to crush green chilly, ginger, and coconut. No curry powder. Will try once with curry powder also. It looks yummy. Wrote something different previously.
17.
chollukireen | 11:14 முப இல் ஓகஸ்ட் 30, 2022
உங்களுக்குத் தெரியாததா? கறிப்பொடியும் ருசியாகத்தான் இருக்கும். தேங்காய் வீட்டில் இல்லாதபோது. அன்புடன்
18.
ஸ்ரீராம் | 12:54 பிப இல் ஓகஸ்ட் 29, 2022
இதற்கு வெங்காயம், பூண்டு அவ்வளவாக சேராது என்று நினைக்கிறேன். தட்டை பீன்ஸ் பார்த்ததில்லை.
19.
chollukireen | 11:09 முப இல் ஓகஸ்ட் 30, 2022
இது ஜெனிவாவினின்றும் போட்ட பதிவு. அங்கு கிடைத்ததைப் மபோட்டிருப்பேன். நம் அவரைக்காய் செய்யும்போது நாம் எங்கு பூண்டு வெங்காயம் சேர்க்கிறோம். பொதுவாக சேர்ப்பதே கிடையாது. மேச்சாவதில்லை.கரெக்ட்டாகச் சொன்னீர்கள். அன்புடன்