வெந்தய பருப்புக் குழம்பு.
ஜூன் 16, 2017 at 5:50 முப 40 பின்னூட்டங்கள்
ஸாம்பார் என்றுச் சொல்லாமல் பருப்புக் குழம்பு இது. அரைத்து விட்டுச் செய்தால்தான் ஸாம்பார். இப்போது எல்லோருக்கும் எல்லாமே ஸாம்பார்தான். பருப்புப் போடாமல் செய்யும் வகைக்குத்தான் குழம்பு என்கிரார்கள். இது வெந்தயத்தை பருப்புடன் வேக வைத்துச் செய்வது. வாஸனையுடன் சற்று ருசியும் மாறுபட்டு இருந்தாலும் சாப்பிடப் பிடித்தமானதும்,ருசியானதும் கூட.
நான் அடிக்கடி முன்பெல்லாம் செய்வேன். குழம்பு வகையில் இது எழுதவில்லை நான். இன்று இந்தக் குழம்பு செய்ததால் உங்கள் பார்வைக்கும் இது வருகிறது.
காய்கறிகள் நமக்கு எது வேண்டுமோ அவைகளைப் போடலாம். நான் முருங்கை,காப்ஸிகம்,தக்காளி,முள்ளங்கி என யாவும் போட்டுக் கதம்பக் குழம்பு செய்தேன்.
.எங்கள் வீட்டில் குழம்பில் போட்ட காய்கள் சிலவாகும். ஆதலால் நான் தான் அதாவது காய்கள் சற்று அதிகமாகவே போடுவேன். குழம்பும் ருசி கூடும். ஸரி நாம் இந்த வந்த காரியத்தைப் பார்ப்போம்.
வேண்டியவைகள்.
துவரம்பருப்பு —- முக்கால்கப்-
வெந்தயம்— 3 டீஸ்பூன்
மஞ்சள்பொடி—ஒரு டீஸ்பூன்
புளி—ஒரு எலுமிச்சையளவு
ஸாம்பார்பொடி—-3 டீஸ்பூன்
தக்காளி–2
, சிகப்பு நிற கேப்ஸிகம் துண்டுகள் சிறிது,முள்ளங்கி, முருங்கைக்காய் விருப்பத்திற்கிணங்க.
பச்சைமிளகாய்–1
தாளித்துக் கொட்ட—2 வற்றல் மிளகாய், கடுகு அரை டீஸ்பூன்,பெருங்காயம், வெந்தயம் அரை டீஸ்பூன்.
நல்லெண்ணெய்— ஒரு டேபிள்ஸ்பூன். ருசிக்கு உப்பு.
செய்முறை.
பருப்பையும்.வெந்தயத்தையும் நன்றாகத் தண்ணீரில் அலம்பி திட்டமானத் தண்ணீரும், மஞ்சள்ப் பொடியும் சேர்த்து பிரஷர் குக்கரில் வேகவைத்து எடுத்துவைக்கவும். பருப்பு நன்றாக மசிய வேக வைக்கவும்.
புளியை ஊறவைத்துக் கரைத்து இரண்டு மூன்று கப் அளவிற்கு அதிகமாகவே எடுத்துக் கொள்ளவும்.
காய்களை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெயை விட்டுக் காயவைத்து கடுகு,மிளகாய்,வெந்தயம்,பெருங்காயத்தைத் தாளித்து நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும். பின் காய்களையும் போட்டு சிறிது வதக்கிச் சிறிது தண்ணீர் சேர்த்துகாய்களை வேக விடவும். புளி நீரைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.ஸாம்பார்ப்பொடி,உப்பு,பச்சை மிளகாய் சேர்க்கவும். புளி வாஸனை,பொடிவாஸனைபோகும் அளவிற்கு நன்றாகக் குழம்பு கொதிக்கட்டும்.காய்கள் அமிழும் அளவிற்கு கொதிக்கும் கலவை இருக்கட்டும். இப்போது நான் ஸ்டிக் பாத்திரம் என்றால் அதிலேயே வதக்கவும் ஸௌகரியம்
காய்களும் நன்றாக வெந்த பின்பு, வேக வைத்து இருக்கும், வெந்தயம் சேர்ந்த பருப்பை கரண்டியால் லேசாக மசித்துச் சேர்க்கவும். கலவைச் சேர்ந்து கொதிக்கட்டும்.
முள்ளங்கி போன்ற காய்கள் சேர்க்கும்போது குழம்பு அவ்வளவாகக் சேர்ந்து வராது. நீர்க்க இருப்பது போலத் தோன்றும்.
ஒரு ஸ்பூன் அரிசிமாவையோ, அல்லது கடலை மாவையோ ஒரு கரண்டி தண்ணீரில் கரைத்து விட்டு ஒரு கொதி விட்டு இறக்கினால் ஸரியாக இருக்கும்.
வெந்தயம் சேர்த்திருப்பதால் குழம்பு ருசியாக இருக்கும். கசப்பு எல்லாம் இருக்காது.வாஸனையாகவேஇருக்கும்.கறிவேப்பிலை,கொத்தமல்லி
சேர்க்கவும்.
வெங்காயம்,கீரைகள் சேர்த்துக்கூட செய்யலாம். காரம் வேண்டுபவர்கள் அதிகப்படுத்திக் கொள்ளவும். பழைய புளி சேர்த்திருப்பதால் நிறம் குறைவு.
குழம்பை இறக்கி வைத்த பிறகும் தாளித்துக் கொட்டலாம்.
Entry filed under: குழம்பு வகைகள்.
40 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 6:07 முப இல் ஜூன் 16, 2017
தாளிதத்தில் பருப்பு எதுவும் சேராதா? வெந்தய சாம்பார் புது முயற்சிதான். செய்து பார்க்கலாம். தண்ணீராக இருந்தாலும் மாவு அரைத்து விட்டால் ஒரிஜினல் ருசி குறையும் என்ற பிரமை எனக்கு. எனவே கரைத்து விட மாட்டேன். என் தோழி ஹேமா கொடைக்கானலிலிருந்து கொண்டுவரும் ஒருவகைப் பச்சை மிளகாய் தருவார். அதை சாம்பாரில் போட்டால் நெய் வாசனையுடன் சாம்பார் மணக்கும்.
2.
chollukireen | 6:19 முப இல் ஜூன் 16, 2017
பருப்புக்குழம்புதானே!.நிறைய பெருங்காயமும்,கடுகு மிளகாய்,வெந்தயம் போதுமானது. மாவு சேர்ப்பது மனதுதான் காரணம். பச்சைமிளகாயே நல்ல ருசியையும்,வாஸநையையும் கொடுக்கும். கொடைக்கானல் மிளகாய் விசேஷ வகையாக இருக்கும். ஸாதாரணமாக குளிர்ப்ரதேசங்களில் விளையும் காய்களுக்கு மணம் குறைவு என்று சொல்வார்கள். மிளகாய் மாதிரிக்குப் படம் போடுங்கள். நானும் வாங்கிவரச் சொல்கிறேன். தமிழ்க் கடையில் கிடைத்தால். நன்றி. அன்புடன்
3.
நெல்லைத்தமிழன் | 7:27 முப இல் ஜூன் 16, 2017
பசி நேரத்துல நல்ல பதிவு. இப்போதான் அவியல் பண்ணிண்டிருக்கேன்.
உங்க இடுகையைப் படித்தால் மனசில சாம்பார் வாசனை. ஹஸ்பண்ட இங்க இருந்தால், இந்த சாம்பாரைப் பண்ணு, அவியலோடு சாப்பிடலாம் என்று சொல்லலாம். செய்துபார்க்கிறேன்.
உங்க மொழியே நல்லாருக்கு.
4.
chollukireen | 5:40 பிப இல் ஜூன் 16, 2017
அவியல். இன்னும் இந்தக் குழம்பு வேறா? ~ ஒத்தருக்காக மெனக்கெடணும். வாஸனையை மனதில் வைத்துக் கொண்டே அவியலை ஒரு பிடி பிடியுங்கள்.
இது எங்கு ஓடிவிடப் போகிறது? என்ன ஒரு வெந்தயம் கூட வேக வைக்க வேண்டும். அவ்வளவுதானே? போனில் ஹஸ்பெண்டிடம் சொல்லி விட்டால்ப் போகிறது. இது என்ன பிரமாதம்? இதெல்லாம் ஒரு இடுகையா என்று பதில் வரும்.நன்றி அன்புடன்
5.
VAI. GOPALAKRISHNAN | 9:07 முப இல் ஜூன் 16, 2017
மிகவும் ருசியான பதிவு. படித்ததும் சாப்பிட்டது போல ஒரு திருப்தியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், மாமி.
6.
chollukireen | 5:44 பிப இல் ஜூன் 16, 2017
சாப்பிட்டாற்போல இருக்கிறதா? சிலவே இல்லை. வேலையும் கம்மி. உங்கள் பின்னூட்டம் கூடவே இனிப்பும் போட்ட மாதிரி இருக்கிறது. மிக்க நன்றி. அன்புடன்
7.
கோமதி அரசு | 7:09 முப இல் ஜூன் 17, 2017
எங்கள் வீட்டில் குழம்பில் போட்ட காய்கள் சிலவாகும். ஆதலால் நான் தான் அதாவது காய்கள் சற்று அதிகமாகவே போடுவேன். குழம்பும் ருசி கூடும்////
எங்கள் வீட்டிலும் அப்படித்தான் அக்கா குழம்பில் போட்ட காய் எல்லோருக்கும் பிடிக்கும்.
இன்று செய்து விடுகிறேன்.
எங்கள் வீடுகளில் சாம்பார் பொடியில் வெந்தயம் சேர்த்து திரித்து விடுவோம்.
நன்றி.
8.
chollukireen | 12:43 பிப இல் ஜூன் 17, 2017
ருசிகள் பலவிதம். சாம்பார் பொடி செய்யும் போது வெந்தயம் கொஞ்சமாகத்தான் சேர்ப்போம். அதிகமானால் கொழகொழப்பு வந்து விடும். பொடியில் அரிசி சேர்ப்பவர்களையும் பார்த்திருக்கிறேன். இன்று செய்து விடுகிறேன் என்ற. பதிலுக்கு மிகவும் மகிழ்ச்சி. அன்புடன்
9.
chollukireen | 1:04 பிப இல் ஜூன் 17, 2017
ருசிகள் பலவிதம். பரவாயில்லை. நம் இரண்டுபேர் வீட்டிலும் குழம்பில் போட்ட காய் பிடிக்கும்.
நாங்களும் பொடியில் வெந்யம் போடுகிறோம். ஆனால் குறைந்த அளவு. கட்டாயம் குழம்பிற்கு வெந்தயம்,கடுகு,மிளகாய்,பெருங்காயம் தாளிதம் உண்டு.
இன்று செய்து விடுகிறேன் என்ற வரி மனதைக் குளிர்விக்கிரது. நன்றி. . அக்கா என்று அன்புடன் அழைக்கிறீர்கள்.பெரியம்மா,பாட்டியாகக் கூட இருக்கலாம். வயதாகிறது எனக்கு. நன்றி அன்புடன்
10.
Geetha Sambasivam | 11:02 முப இல் ஜூன் 17, 2017
இங்கே குழம்பில் “தான்கள்” அதிகம் போடக் கூடாது! இதான் பெரிய பிரச்னை! முருங்கைக்காய்த் துண்டம் எண்ணி நாலு போடு என்பார்! 🙂 ஆனால் இந்தப் பருப்புக் குழம்பு நானும் அடிக்கடி செய்வேன். பருப்பு வேக வைக்கிறச்சே வெந்தயம் எப்போவானும் தான் சேர்ப்பேன். மற்றபடி அடியில் தாளித்துக் கொண்டு தான்களைப் போட்டு வதக்கிக் கொண்டு அதிலேயே மிவத்தல், ப.மி.கருகப்பிலை தாளித்துவிடுவேன். பின்னால் புளி ஜலம் ஊற்றிக் கொண்டு பொடி கொஞ்சமாய்ச் சேர்த்து உப்புச் சேர்த்துக் கொதி வந்ததும் பருப்புச் சேர்ப்பேன். பருப்பும் கொஞ்சமாகத் தான் இருக்கும்! நாங்களும் அரைத்து விட்டால் தான் சாம்பார் என்போம். கல்யாணம் ஆகி வந்த புதுசிலே சாம்பார் வை என்று மாமியார் வீட்டில் சொல்ல நான் அரைச்சு விட்டு சாம்பார் வைக்க, அவங்க இது எப்போவானும் பண்ணறது! இது பிட்லை என்று சொல்ல, நான் பிட்லை இப்படி இல்லைனு சொல்ல! ஒரு பட்டிமன்றமே நடந்தது! பிட்லை எங்க வீட்டில் வேறு விதமாகச் செய்வார்கள். இங்கே அரைச்சு விட்டாலே பிட்லை தான்! பொடியும் போடுவாங்க! இந்தப் பருப்புக் குழம்பு எங்க மாமியார் வீட்டில் அவ்வளவாத் தெரியாது! 🙂
11.
chollukireen | 1:34 பிப இல் ஜூன் 17, 2017
நீங்கள் சொல்வது சில குடும்பப் பழக்கம். வாஸனைக்கு முருங்கைக்காய் . நீச்சலடித்துப் பிடிக்கணும் தானை.
வெந்தயம் சேர்த்துச் செய்வது பல நாட்களில் ஒரு நாள்தான். அரைத்து விடுதல் என்றால் தேங்காய் வேண்டுமே. கேரளா ஸைடு என்றால் அரைக்காமல் எதுவுமே கிடையாது. முன்பெல்லாம் இளஇள வென்று காய்கள்புதியது. புளித் தண்ணீரில் கொதிக்கும்போது போட்டாலே வெந்து விடும். கடைசியில்தான் நிரைய பெருங்காயத்துடன் கமகமவென்று தாளித்துக் கொட்டுவார்கள். ஃபிரிஜ்ஜில் வைத்த காயும் இல்லை.
உங்கள் மாமியார் வீட்டு அனுபவம் எவ்வளவு வருஷங்களானாலும் நினைவுக்கு வருகிறது பாருங்கள்.. உங்கள் பின்னூட்ட மூலம் அனுபவங்கள் பளிச்சிடுகிறது. நம்முடைய குறிப்புகள் அடித்தளம் ஒன்றே. பழக்கத்தில் சில மாறுபடுமே தவிர வேறொன்றுமில்லை. மிக்க ஸந்தோஷம். அன்புடன்
12.
Geetha Sambasivam | 11:10 முப இல் ஜூன் 17, 2017
http://sivamgss.blogspot.in/2014/06/blog-post_16.html
http://sivamgss.blogspot.in/2014/06/blog-post_17.html
கிட்டத்தட்ட இதே மாதிரிக் குழம்பு பத்தி எழுதின பதிவுகள்! 🙂
13.
chollukireen | 1:36 பிப இல் ஜூன் 17, 2017
பார்க்கிறேன். படிக்கிறேன். நன்றி. அன்புடன்
14.
angelin | 9:50 பிப இல் ஜூன் 17, 2017
நான் இன்னிக்கு செய்தாச்சு ..காப்ஸிகம் ரெட் அப்புறம் கோவைக்காய் முள்ளங்கி சேர்த்து செய்தென் இந்த குழம்பை ..மிகவும் ருசியாக வந்தது ..நான் பருப்பையும் வெந்தையத்தையும் கொஞ்சநேரம் ஊறப்போட்டு வேகவைத்தேன் ..
15.
chollukireen | 1:42 பிப இல் ஜூன் 19, 2017
ஊறப்போட்டால் சீக்கிரமாகவே வெந்து விடும். செய்தும் ருசித்திருக்கிறாய். நன்றி. அன்புடன்
16.
துளசிதரன், கீதா | 10:39 முப இல் ஓகஸ்ட் 22, 2017
காமாட்சியம்மா இதனை நான் வெந்தய சாம்பார் என்று சொல்லுவதுண்டு. பருப்புடன் வெந்தயம் சேர்த்து வேக வைத்தால் அந்த வாசனையே தனிதான். நான் 18 வருடங்களுக்கு முன் கோயம்புத்தூரில் இருந்தப்ப ஒரு மாமியிடம் தெரிந்து கொண்டேன். உங்கள் குறிப்புகளையும் நோட் செய்து கொண்டேன் அம்மா…மிகவும் பிடித்திருக்கு…
கீதா
17.
chollukireen | 10:50 முப இல் செப்ரெம்பர் 11, 2017
கீதாவிற்கு தெரியாதது எதுவுமே இல்லை என்று நினைக்கிறேன். ஸந்தோஷம். அன்புடன்
18.
Venkat | 2:33 முப இல் பிப்ரவரி 22, 2018
இன்றைக்கு இங்கே இந்த குழம்பு தான் செய்தேன்மா… நல்லா வந்திருக்கு.
19.
chollukireen | 6:38 முப இல் பிப்ரவரி 22, 2018
ஒண்ணும் பிரமாதம் இல்லை அல்லவா? சிறிது வெந்தயத்தை பருப்புடன் வேகவைத்து , மாமூலாக அவரவர்கள் முறைப்படி குழம்பு செய்தால்கூட ஸ்பெஷல் ருசியுடன் அமையும். மிக்க நன்றி. சுவைத்து விட்டு ஆதிக்குப் போன் செய்யுங்கள். உங்கள் தளத்தின் கட்டுரைகளைப் படித்துக் கொண்டுதான் வருகிறேன். நான் நன்றாக ரஸிக்கிறேன். ஆதியுடையதற்கு முகநூலில் லைக் போட்டு விடுகிறேன். வரவிற்கு மிகவும் நன்றி. அன்புடன்
20.
நெல்லைத் தமிழன் | 3:30 பிப இல் ஜூன் 20, 2019
இதனை என் பையனுக்கு முதலில் செய்யப்போகிறேன். நான் இதுக்கு வெண்டை, பூசனி, சௌசௌ தக்காளி போடலாம்னு இருக்கேன்.
பண்ணினப்பறம் (எவ்வளவு நாள் கழித்து என்றாலும்) எப்படி இருந்ததுன்னு இங்க எழுதறேன் காமாட்சி அம்மா.
நேற்றைக்கு உங்க தளத்துல எழுதிட்டு இன்னைக்கு உங்க இடுகையைப் பார்த்தால்,
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
என்ற பாட்டு நினைவுக்கு வருது
21.
நெல்லைத்தமிழன் | 3:36 பிப இல் ஜூன் 20, 2019
எனக்கு குழம்புக்கு பாதிக்குமேல் தான்கள் போடப்பிடிக்கும். வீட்டில் மனைவி என்ன எப்போப் பாத்தாலும் கூட்டுக் குழம்பு மாதிரி என்பாள்.
எனக்கு இதைச் சாக்கிட்டாவது நிறைய காய் சேருதேன்னு. நான் உங்க கட்சி காமாட்சி அம்மா
22.
கோமதி அரசு | 2:10 முப இல் ஜூன் 21, 2019
நானும் சாம்பாரில் நிறைய காய்கள் போடுவேன். ஒரு காய் மட்டும் போட்டு சாம்பார் ஒரு போதும் வைத்தது இல்லை.
நான் நீங்கள் சொன்னது போல் பருப்புடன் வெந்தயம் சேர்த்து வேக வைத்து சாம்பார் செய்தேன். நன்றாக இருந்தது.
23.
கீதா | 1:44 பிப இல் ஜூன் 30, 2019
காமாட்சி அம்மா இந்த வெந்தயப் பருப்புக் குழம்பு எங்கள் வீட்டில் மிகவும் பிடிக்கும். நான் கற்றுக் கொண்டது கோயம்புத்தூரில் இருந்தப்ப எங்கள் குடும்ப நண்பர் மாமியிடம் இருந்து. பருப்போடு வெந்தயமும் சேர்த்து வேக வைத்துச் செய்திருந்தார் வெந்தய வாசனை சூப்பரா இருக்கும். அப்போது கற்றுக் கொண்டு நானும் வீட்டில் அடிக்கடிச் செய்கிறேன். உங்கள் குறிப்புகளையும் குறித்துக் கொண்டுவிட்டேன்…
எங்கள் வீட்டிலும் காய்கள் நிறைய போட்டால் சிலவாகும்.
மிக்க நன்றி அம்மா
கீதா
24.
thulasithillaiakathu | 1:47 பிப இல் ஜூன் 30, 2019
காமாட்சிம்மா நான் ஏற்கனவே கருத்து போட்டிருக்கேனா…ஆஹா!!! இப்போது மீண்டும் போட்டிருக்கேன்…
கீதா
25.
chollukireen | 2:49 பிப இல் ஜூன் 30, 2019
உடம்பு சரியில்லை என்று
26.
நெல்லைத்தமிழன் | 6:32 முப இல் ஜூலை 1, 2019
அதுனாலத்தான் தினமும் இந்தத் தளம் வந்து பார்க்கிறேன். மறுமொழி வந்திருக்கா என்று. தினமும் 22 பதில்கள்தான் என்று பார்த்து ஏமாற்றமடைவேன், கவலையும் அடைவேன். இன்று 25 என்று பார்த்து வந்தேன்.
விரைவில் நலம் பெறணும் காமாட்சி அம்மா. என் ப்ரார்த்தனைகள்.
27.
நெல்லைத்தமிழன் | 3:44 முப இல் ஜூலை 10, 2019
நல்லா இருக்கீங்களா காமாட்சி மஹாலிங்கம் ம்மா.
உடல் நலம் இப்போ எப்படி இருக்கு?
28.
நெல்லைத்தமிழன் | 6:30 முப இல் செப்ரெம்பர் 26, 2019
எப்பவும் என் மனசுல நீங்க இருக்கீங்க காமாட்சி அம்மா. உங்களுக்காக ப்ரார்த்திக்கறேன். விரைவில் நலமடையணும் நீங்க.
29.
chollukireen | 7:12 முப இல் செப்ரெம்பர் 26, 2019
யாரு நீங்க புரியலே.இயல். நீங்களா
30.
chollukireen | 7:13 முப இல் செப்ரெம்பர் 26, 2019
மன்னிக்கவும்
31.
chollukireen | 7:22 முப இல் செப்ரெம்பர் 26, 2019
Manasighamagha பேசிக்கொண்டு இருக்கிறேன் உங்கள் yaavarudhanum
32.
ஸ்ரீராம் | 7:39 முப இல் செப்ரெம்பர் 26, 2019
இந்த பதிலே உங்களைக் கண்ட மகிழ்ச்சி தருகிறது. விரைவில் நலம் பெற்று வாருங்கள் அம்மா.
33.
நெல்லைத்தமிழன் | 4:45 பிப இல் ஒக்ரோபர் 19, 2019
காமாட்சி அம்மா…விரைவில் நீங்க நலம் பெறணும். உங்கள் இணைய நண்பர்கள் அனைவரும் உங்களுக்காக ப்ரார்த்திக்கிறோம்.
நெல்லைத்தமிழன்
34.
chollukireen | 11:44 முப இல் ஒக்ரோபர் 23, 2019
மிக்க நன்றி உங்களுக்கும் இணையதள அன்பர்களுக்கும் மிக்க நன்றி அன்புடன் காமாட்சி
35.
நெல்லைத்தமிழன் | 5:31 முப இல் ஒக்ரோபர் 25, 2019
காமாட்சி அம்மா… நலமா?
உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்
36.
chollukireen | 2:53 முப இல் ஒக்ரோபர் 26, 2019
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆசிகளும்,வாழ்த்துகளும்.. மற்றும் உங்கள் மூலமே யாவருக்கும் வாழ்த்துகள். அன்புடன்
37.
நெல்லைத்தமிழன் | 1:48 பிப இல் திசெம்பர் 3, 2019
காமாட்சி அம்மா… நலமா? புத்தாண்டு உங்களுக்கு நல்லனவற்றைக் கொண்டுவரட்டும்.
38.
நெல்லைத்தமிழன் | 1:49 பிப இல் பிப்ரவரி 22, 2020
காமாட்சி அம்மா… நமஸ்காரம்.
நீங்கள் இணையம் வந்து வெகு நாட்களாகிவட்டதே.
நலமாக இருக்கிறீர்களா?
தமிழ் வருடப் பிறப்புக்காக இனிப்பான இடுகை எழுத ஆரம்பித்தாயிற்றா?
39.
chollukireen | 10:22 முப இல் ஏப்ரல் 17, 2020
ஆசீர்வாதங்கள் மிக்க சந்தோஷம் என்னால் எதுவும் எழுத முடியவில்லை கம்ப்யூட்டரிலும் தாறுமாறாக தெரியாமல் செய்கிறேன் அதனால் தொடுவதே இல்லை நான் இருக்கிறேன் என்ன செய்யலாம் உங்கள் யாவருக்கும் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் அன்புடன்
40.
chollukireen | 12:22 பிப இல் ஏப்ரல் 17, 2020
ஆசீர்வாதங்கள் மிக்க சந்தோஷம் என்னால் எதுவும் எழுத முடியவில்லை கம்ப்யூட்டரிலும் தாறுமாறாக தெரியாமல் செய்கிறேன் அதனால் தொடுவதே இல்லை நான் இருக்கிறேன் என்ன செய்யலாம் உங்கள் யாவருக்கும் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் அன்புடன்