உங்களிடம் சில வார்த்தைகள்—கேட்டால் கேளுங்கள்.
ஜனவரி 17, 2018 at 9:16 முப 56 பின்னூட்டங்கள்
இந்தத் தொடர் பதிவு அவர்கள் உண்மைகள் தளத்தின் மதுரைத்தமிழன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்கள் என்னையும் எழுத அழைக்க , ,நான் இங்கே—- வயதானவர்களின் நினைவலைகள்தான். இது.
ஏன் இதிலும் ஏதாவது நல்லது இருக்கக் கூடும் அல்லவா என்று தோன்றியது. ஏதோ ஒரு சில வார்த்தைகள்தான் இது என்றும் தோன்றியது.
இவ்வளவு பெரிய முதியவள் என்ன ஆசீர்வாதம் செய்வாள் வேறு என்ன வார்த்தைகள் சொல்லப்போகிறாள் என்றுதானே நினைக்கத் தோன்றும்?
எங்கள் காலத்தில் எப்படியெல்லாம் புத்தி சொல்லப்பட்டது என்றும் அதைக் கடைபிடிக்க முடிந்ததா என்றும் பாருங்கள். எங்கள் காலத்திலேயே நாங்கள் ஒரு ஐம்பது வயது உள்ளவரின் மூன்றாம் மனைவியின் வாரிசுகள். எங்கள் பெரியம்மாக்கள் போனபின்தான் எங்கள் அம்மா.குறைவாக மதிப்பிடாதீர்கள். அந்தக் காலத்தில்
அடி அமக்களமெல்லாம் மார்க் குறைவாக வாங்கி விட்டால் பிள்ளைகளுக்குக் கிடைக்கும். நாங்களெல்லாம் பெண்கள். நன்றாக மார்க் வாங்கி விடுவோம்.
பெண்களெல்லாம் உயர்வு. அவர்களை ஒன்றுமே சொல்ல மாட்டார்கள். நாங்கதான்பலி. எங்களைக் கண்டாலே மார்க் கம்மியானவர்கள் கரித்துக் கொட்டுவார்கள். அவங்களைத் தாஜாசெய்ய நமக்குக் கிடைக்கும் எதிலும் போனா போகிறது என்று பங்கு கொடுக்கவேண்டும். அவன் கிட்டிப்புள் விளையாடினாலும் இல்லையே அவன் படித்தானே என்று சொல்ல வேண்டும். இது பெண்களின் பொதுவான நிலை.
அப்பா நன்றாகப் படித்தவர். பழைய காலத்தவர்.பழமை விரும்பிதான். அவர் செய்பவற்றைக் குறைகூற முடியாது. அந்தநாட்களில் மனைவிக்குச் சுதந்திரம் பேச்சில் கூட கொடுக்காதவர்களின் குரூப்பைச் சேர்ந்தவர். மற்றவர்கள் சொல்வார்கள்.
உங்கம்மாவைப் படுத்துகிறார் என்று. எங்களுக்குக் குறைகூற ஒன்றும் தெரியாது. இந்த அம்மாதான் அப்பாவைப் பற்றி வெளியில் ஏதேதோ சொல்கிரார்கள். இதெல்லாம்தான் தப்பு. என்று தோன்றும்.
அம்மாவுக்கு முன்னரும் அம்மாவின்உறவினர் பெண்தான் அப்பாவிற்கு வாழ்க்கைப் பட்டவர். அது தெரிந்தபின் அவர்களை நான் கேட்பேன். ஏன் முன்னாடியே தெரியும்தானே! பின்னே ஏன் அம்மாவைக் கொடுத்திங்கோ. நீங்களெல்லாம் ரொம்ப மோசம் என்பேன் இது எதற்குச் சொல்கிறேனென்றால் மனைவிகள் ஸாதாரணமாக ஏதாவது சொல்லி இருந்தால் கூட அதை வம்பாக்கிப்பார்க்கும் மனிதர்கள் உண்டு. எதையும் யோசிக்காமல் வெளியில் சொல்வது ஸரியில்லை என்று சின்ன வயதிலேயே தெரிந்து போனது.
நிறைய இதிஹாஸக் கதைகளெல்லாம் சொல்லுவார். புத்தகங்கள் படிக்க ஆர்வமூட்டுவார். விகடன் குமுதம் போன்ற பத்திரிகைகள் கண்ணால் கூடப் பார்க்க முடியாது. சினிமா போகக் கூடாது. ஊரிலுள்ளவர்களையும் கூப்பிட்டு புத்தி சொல்லுவார்.
தினமும் தினஸரிப் பேப்பர்கள் வரும். படித்தால் மட்டும் போதாது. அதைப்பற்றி எழுதியிருந்ததே! என்ன படித்தாய். சின்னதாக நம்மாத்து பூவரச மரத்தைப் பத்தி எழுதினா நீ என்ன எழுதுவாய் என்று கேட்ப்பார்.
இப்படியாக பேச்சுகளின் மூலமே விஷயங்களை உணர்த்துவார். பத்திரிகைகளுக்கு எழுத ஆசையூட்டியவர் அவரே!
காசுபணம் சேர்க்க, ஸொத்து சேர்க்க என்ற ஆசைகளிருந்ததில்லை. உறவினர்கள்,மற்றவர்களுக்கு என நன்றாகச் சிலவு செய்தே பழக்கம். வாழ்க்கையில் நிறைய சோதனைகள்,புத்ரசோகம், நம்பிக்கைமோசம் என பல விதங்களில் அவருக்குக் கஷ்டம் வந்தது. அவர் வேலை செய்தது பென்ஷன் கிடைக்கும்படியான நிறுவனமில்லை.
ஆசார சீலம். பெண்கள் விவாகத்திற்காக பிதுர் ராஜ்ஜியமாக இருந்த நிலங்களையே விற்று பெண்களின் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தார். அப்போதும் அவர் விசாரப்படவில்லை.
ஆனால் சொல்லுவார். பிறர்க்கு உதவ வேண்டும். அதனால் எதுவும் குறைந்து விடாது. உங்களுக்கெல்லாம் ஸரியாகத் தோன்றவில்லை என்றால் நீங்கள் உங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ளலாமே தவிர உதவுவது தவறல்ல என்பார். ராமன் உதவுவார், என்பார். உதவி என்பதை எல்லா விதங்களிலும் நம்மால் செய்ய முடிந்த வகையில் செய்யவேண்டும் என்பார்.
எல்லாப் பெண்களாலும் பெற்றவர்களுக்குச் செய்ய முடிகிறதா? இருந்தும் செய்யமுடியாது தவிப்பவர்கள் அக்காலத்தில்அநேகம்பேர். இக்காலத்தில் பெண்கள் யாவருமே உத்தியோகத்திலிருப்பதால் சற்று முன்னேற்றம் என்று சொல்லலாம். இருந்தாலும் வாழ்க்கையில் சேமிப்பு இல்லாதவர்களின் நிலையை நன்கு உணர முடிந்தது. கஷ்டம் என்ற ஒன்றைப் பார்த்ததால்தானே இதை எல்லாம் உணரவும் இப்பொழுது எழுதவும் முடிகிறது.
பெண்கள் கலியாணத்திற்கு இருந்த நிலங்களை அவர் விற்றதைப் பார்த்ததாலோ என்னவோ அப்படி ஒரு கஷ்டங்களை நாம் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று மனதில் நினைத்ததுண்டு. நான் எதிர்பாராத விதமாக எங்கள் பிள்ளைகளின் விவாகம் அப்படி நடந்தது. எல்லாம் காதல் கல்யாணம். பெண் வீட்டுக்கார்களுக்கு ஒரு நயாபைஸாகூட சிலவில்லாமல் நம்வீட்டில் ஏற்பாடுசெய்து நாமாக நடத்த வேண்டும்.
இப்படியெல்லாம் நடக்குமா? பிள்ளைகள் அம்மாதிரிக் கொள்கையுடன் இருந்தார்கள். எளியமுறையில் என்பார்கள். அதற்காக பருப்பு தேங்காயும்,பக்ஷணமுமில்லாமலா? அவர்களில்லாத வேளையில் செய்துக் குவித்திருப்பேன்!!!!!!!!!!
நம்பமாட்டீர்கள். ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாக கலப்பு,சுயவகுப்புத் திருமணங்கள். வைதீகமுறையில் ,ஒரு வேளைத் திருமணங்கள்!!முக்கியமாக வேண்டியவர்களைக் கூப்பிட்டு, ஸம்பிரமமான விருந்துடன். பிள்ளைகளின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ததால்தான் இந்த முதுமைக் காலத்திலும் கூடிவாழ முடிகிறது. குறைகள் கூறுவது குடும்ப ஒற்றுமைக்கு உகந்ததல்ல என்னும் தாரக மந்திரம் உதவுகிறதோ என்னவோ? நேஷனல் இன்டிகிரேஷன் என்று சொல்வார்களே அது இப்படிதான் இருக்குமோ என்னவோ?
இவைகளைப்பற்றி எழுத எங்கள் வீட்டு விசேஷத் திருமணங்கள் என்று ஒரு ஆர்ட்டிகலே தனியாக எழுத வேண்டும். இப்போது இது புதியதல்ல! அப்போது அது புதிர்.காமாக்ஷிமாதிரி,காமாக்ஷிமாதிரி என்று உவமை சொல்லும்படி. உன்னை மாதிரி முடியாது. வெளியிலும் ஒன்றும் சொல்வதில்லை. எப்படிதான்மனதை ஸமாளிக்கிறாளோ? என்ன அர்த்தமோ? புரியலே!!!!!
எதற்குச் சொல்லுகிறேனென்றால் அந்தக்காலத்தில் அவர்கள் சொல்லாமலே நம் மக்களைப் பார்த்து சில நடைமுறைகள் நமக்குத் தானாகவே வந்து விடுகிறது.
எங்கள் அம்மா ஒரு உதவும் குணமுள்ள பெண்மணி. யாருக்கு எந்த ஸமயம் என்ன உதவி வேண்டுமோ அதைச் செய்வார். எந்தப்பிரதி பலனும் எதிர்பார்க்கமாட்டார். நாங்கள் வளர்ந்த ஊர் கட்டுப்பாடும்,கண்ணியமும், நற்குணமுள்ளவர்களும் நிறைந்த ஊராக இருந்தது. அதனால் ஊரோடு ஒத்து வாழ் என இப்போதும் எங்கிருந்தாலும் அவ்விட மக்களுடன் அனுஸரித்துப் போக மனம் பக்குவப்படுகிறது.
இன்னும் நிறையபேர் நிறைய சொல்லுவார்கள். நான் சொல்லுவது–
சேமிப்பு,குறைசொல்லாதிருத்தல்,ஒற்றுமை, காலத்திற்கேற்ப மனமாறுதல்கள், இவைகளெல்லாம் அவசியம். இதென்ன பிரமாதமா?
உங்களிடம் சிலவார்த்தைகள் என்பதால் சில வார்த்தைகள்தான் சொல்லி இருக்கிறேன். உங்கள் காலத்திற்கு முன் வாழ்ந்தவர்களுக்கும் இப்பொழுது வரை இருப்பவர்களுக்கு மனதுள் பல வார்த்தைகள் இருக்கும். அதெல்லாம் அப்புறம் பேசலாம், இது போதும் என்று நினைக்கிறீர்கள் அல்லவா? அன்புடன்
தொடர் பதிவிட வாருங்கள். குறிப்பிட்டுச் சொல்லத் தெரியவில்லை. இதே தலைப்பில்.
வலைப்பூ வைத்திருப்பவர்கள் எழுத ஆரம்பித்து விட்டீர்கள் அல்லவா? முக நூலிலும் எழுதலாம். எனக்கு வாய்ப்பளித்த ஸ்ரீராம் அவர்களுக்கும், மதுரைத் தமிழன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
Entry filed under: வகைப்படுத்தப்படாதது.
56 பின்னூட்டங்கள் Add your own
இளமதி க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
நெல்லைத்தமிழன் | 12:26 பிப இல் ஜனவரி 17, 2018
ஒருவேளை யார் யாருக்கெல்லாம் மனது பக்குவப்படுகிறதோ, அவர்களுக்குத்தான் இந்தமாதிரி சூழல் அமைகிறதோ காமாட்சியம்மா? அப்படியே வளவனூர் அக்ரஹாரச் சூழலிலிருந்து அதீத மாடர்ன் காலத்துக்குக் கொண்டுசென்றுவிட்டீர்கள்.
சேமிப்பு,- ஓகே
குறைசொல்லாதிருத்தல்,-கஷ்டம், ஓரளவு மேனேஜ் பண்ணிடலாம்
ஒற்றுமை, – இன்னும் கஷ்டம்
காலத்திற்கேற்ப மனமாறுதல்கள்,- கஷ்டமோ கஷ்டம். இது எனக்கு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
இவைகளெல்லாம் அவசியம்னு சொல்லிட்டீங்க. என்னாகப்போறதோ.
2.
chollukireen | 6:42 முப இல் ஜனவரி 18, 2018
பக்குவம் என்று முதலில் எதுவும் ஏற்படுவதில்லை. சூழல் அமைந்து விட்டால் நம்மைப் பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. பக்ஷணம் நாம் எதிர்பார்த்த முறையில் அமையாவிட்டால் , ஏதாவது கூட சேர்த்து அதையும் ருசியாக்க முயலுகிறோம் அல்லவா? அது போல இதுவும் ஒன்று. என்னுடைய உபமானமும் பக்ஷணம்தான்.
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் என்று, என் வாரிசுகள் மாடர்ன் காலத்தை அறிமுகப்படுத்தி விட்டார்கள். வளர்ந்த இடம் அப்படி.
என்னாகப்போறதோ என்று யோசிக்க ஒன்றுமில்லை. காலம்,தேசம் அவைகளை நிர்ணயிக்கிறது. அன்புடன்
3.
Revathi Narasimhan | 12:46 பிப இல் ஜனவரி 17, 2018
அருமை காமாக்ஷி மா. உங்களை அணைத்துக் கொள்ள ஆசையாக இருக்கிறது. எத்தனை அருமையான வார்த்தைகள். நான் இது போலப் பக்குவப் பட இன்னும் நாட்களாகும்.
அருமையான அறிவுரைகள். கடைபிடித்தால் நல்லது
4.
chollukireen | 6:51 முப இல் ஜனவரி 18, 2018
வல்லிம்மா அன்பிற்கு நன்றிம்மா. எல்லோரும் ஒரேமாதிரி இல்லையம்மா. குடும்பச் சூழ்நிலைக்குத் தக்கவாறு பக்குவம் அமையும். எதுவும் டைம் எடுக்கும். முநூலிலும் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். அனுபவம் ஏற்பட்டால் வார்த்தைகள் தானாக வந்து விழும். ஸமயத்தில் பிறருக்கும் சொல்லுகிறோம். அவ்வளவுதான். எதுவும் பதமானபின்தான் ருசி.நன்றிம்மா. அன்புடன்
5.
பார்வதி இராமச்சந்திரன் | 1:55 பிப இல் ஜனவரி 17, 2018
நமஸ்காரம் அம்மா!..அக்ஷர லக்ஷம் பெறும். ஒவ்வொரு கருத்தும் மணியானவை..நம் வீட்டிலும் நான் ஒருத்தியே உறவு முறை சம்பந்தம். மற்றவரெல்லா வெவ்வேறு இடத்திலிருந்து வந்தவர்கள். நிறைய அனுசரிக்க வேண்டியிருந்தாலும் இன்னமும் பக்குவப்பட வேண்டியிருக்கிறது.. தங்கள் அறிவுரைகளை மனதில் நிறுத்திக் கொள்கிறேன்!..ரொம்ப நன்றிம்மா!.t
6.
chollukireen | 7:11 முப இல் ஜனவரி 18, 2018
ஆசிகள் பார்வதி. விஷயம் புரிகிறது. பழகும்போதும் நம்மைச் சரியான விதத்தில் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமே என்று ஸர்வ ஜாக்கிரதையும் அவசியமாகிறது. என்னுடயது அறிவுரை என்று கொள்ளாவிட்டாலும் , அவசியம் எப்படி எல்லாம் இருக்கிறது என்று தெரியவரும். பல விதங்களில் நாம் மாறவேண்டி இருக்கிறது. எல்லோருக்கும் நல்ல முறையில் எல்லாம் உதவிகரமாக இருந்தால்ஸரி.
நான் வராவிட்டாலும் நீ வந்து நன்றியுடன் முடித்திருக்கிராய். அன்பு,அன்புடன்
7.
ஸ்ரீராம் | 3:04 பிப இல் ஜனவரி 17, 2018
எதிரே உட்கார்ந்து பேசுவது போல படபடவென அனுபவத் தூறல்களை பூவாளியாய்த் தூவி விட்டீர்கள். எவ்வளவு அனுபவம்? அந்தக் காலத்து மனிதரான அப்பாவின் பெருமையையும் சொல்லி, பலவீனத்தையும் சொல்லி.. அருமை அம்மா.
8.
chollukireen | 7:20 முப இல் ஜனவரி 18, 2018
மனதைத் திறக்க இந்த வழிதான் சிறந்ததோ என்னவோ?
நானும் இருக்கிறேன் நண்டு வளையில் என்று எதை எழுதுவது என்று நினைத்தேன். எழுதியும் போஸ்ட் செய்யாது இருந்தேன். நீங்கள் எனக்குக் கொடுத்த கௌரவம்தான் எழுதக் காரணம். இதில் புனைவு கிடையாது. பொதுவாக உடல்நிலை ஸரியில்லை. ஸரி . அப்பா,அம்மா எல்லோரையும் லைவ்வாகத்தானே பார்க்க வேண்டும். பார்த்தேன் சிறிதளவு. அன்புடன்
9.
ஸ்ரீராம் | 3:04 பிப இல் ஜனவரி 17, 2018
// பிள்ளைகளின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ததால்தான் இந்த முதுமைக் காலத்திலும் கூடிவாழ முடிகிறது.//
இதுதான் அம்மா அனுபவம். சிலவற்றைத்தான் சொல்ல முடிந்திருக்கிறது என்று வருத்தப் பட்டிருக்கிறீர்களா. ஆமாம். எவ்வளவு அனுபவங்கள் இருக்கும் உங்களிடம்? அனைத்தையும் சொல்ல ஒரு பதிவு போதாது.
10.
chollukireen | 7:28 முப இல் ஜனவரி 18, 2018
எப்படியும் நாம் இவர்களுடன்தான். மாறுபட்ட கருத்துடன் எதிர்த்தவர்கள் கூட கஷ்டம்தான் படுவார்களே தவிர சொல்பவர்கள் யாரும் உதவப் போவதில்லை. ஸம காலத்தில் மாறுபட்ட காலத்தால் எதிரியாக இருந்த சில குடும்பங்கள் கூட இப்போதும் அதன் தன்மையை உணருகிரார்கள். எப்படியானாலும் வயோதிகம் சிரமம்தான். அன்புடன்
11.
ஸ்ரீராம் | 3:07 பிப இல் ஜனவரி 17, 2018
//இந்த அம்மாதான் அப்பாவைப் பற்றி வெளியில் ஏதேதோ சொல்கிரார்கள். இதெல்லாம்தான் தப்பு. என்று தோன்றும்.//
//காமாக்ஷிமாதிரி,காமாக்ஷிமாதிரி என்று உவமை சொல்லும்படி. உன்னை மாதிரி முடியாது. வெளியிலும் ஒன்றும் சொல்வதில்லை. எப்படிதான்மனதை ஸமாளிக்கிறாளோ? என்ன அர்த்தமோ? புரியலே!!!!!//
அம்மாவிடமிருந்து நீங்கள் கற்ற பாடம் அது என்று சொல்லலாமா?
12.
chollukireen | 7:34 முப இல் ஜனவரி 18, 2018
தாராளமாகச் சொல்லலாம். வயது வித்தியாஸம். யாரிடமாவது சொன்னால் அவர்களுக்கு ஒரு திருப்தியாக இருந்திருக்கும். எனக்கு எங்கப்பா உயர்வாகத் தெரிந்திருக்கும். கஷ்டமோ ஸுகமோ ஜீரணம் பண்ணணும். மிக்க நன்றி. அன்புடன்
13.
ranjani135 | 4:37 பிப இல் ஜனவரி 17, 2018
காலையிலேயே உங்கள் சில வார்த்தைகளை போனில் படித்துவிட்டேன். பார்வதி சொல்லியிருப்பது போல ஒவ்வொரு வார்த்தையும் பொன்னால் பொறிக்கப்பட வேண்டியவை. அதுவும் //எதையும் யோசிக்காமல் வெளியில் சொல்வது ஸரியில்லை // என்ற வார்த்தைகள் எல்லோருக்கும் – பக்குவப்பட்டவர்கள், படாதவர்கள், சிறியவர்,பெரியவர் என்று – பொருந்தும். காலையில் படித்ததிலிருந்து மனதில் சுற்றித்சுற்றி வந்து கொண்டிருக்கும் வரிகள் இவை.
உங்கள் கையை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. இதை எழுதுவதற்கு முன் இரண்டு முறை படித்தேன். என்ன சொல்வது என்று தெரியவில்லை. கண்களில் கண்ணீர் மறைக்கிறது. மேலே எழுத முடியவில்லை.
14.
chollukireen | 8:18 முப இல் ஜனவரி 18, 2018
நான் இந்தக்கட்டுரையை எழுதிவிட்டு அனுப்பலாமா,வேண்டாமா என்றே இரண்டுநாள் யோசித்தேன். இதுவும் ஸொந்த விஷயம்தானே. எந்தக் கையை எடுத்துக் கண்களில் ஒத்திக் கொள்வது?
தொண்ணூறு வயதை எட்டும் உயல்நலமில்லாத புருஷர், நானும் அப்படியே! இப்பவும் எதையும் சொல்லாமல் பிறருக்கு கஷ்டமாச்சே என்ற எண்ணத்தில்! என்ன செய்வது? இதுஸகஜம். அன்புடன்
15.
ranjani135 | 4:44 பிப இல் ஜனவரி 17, 2018
நிறைய நிறைய கற்க வேண்டியிருக்கிறது என்று மட்டும் புரிகிறது. இந்தப் பக்குவம் என்றைக்கு வருமோ என்று மனது அடித்துக் கொள்ளுகிறது. வேறு சொல்லத் தெரியவில்லை.
16.
chollukireen | 8:23 முப இல் ஜனவரி 18, 2018
கற்க வேண்டி இருக்கிறது. தேவை புரிந்து விட்டது. நல்லது. மிக்க நன்றி. உங்கள் கணவர் ஸௌக்கியமா? ஆசிகள் அன்புடன்
17.
athiramiya | 6:51 பிப இல் ஜனவரி 17, 2018
ஆஹா காமாட்ஷி அம்மா, சுடச்சுட எழுதிவிட்டீங்களே. அதுக்கே பெரிய வாழ்த்து..
குட்டிக் குட்டிச் சம்பவமாக நிறையக் கதைகள் சொல்லிட்டீங்க.. அத்தனையும் கேட்க இனிமையாகவும் நன்றாகவும் இருக்கு.. நம்மை அக்கால வாழ்க்கைக்குள் நுழைய வைக்கிறது உங்கள் எழுத்தின் அழகு.
அப்படி ஒரு கட்டுப்பாடான , வித்தியாசமான சூழலில் வளர்க்கப்பட்டாலும், நீங்கள் இப்போதைய தலைமுறையினரோடு நன்கு ஒத்துப் போகும் + புரிந்து கொள்ளும் ஒருவராகவே வளர்க்கப் பட்டிருக்கிறீங்க.
18.
chollukireen | 8:33 முப இல் ஜனவரி 18, 2018
சுடச்சுட யாராவது கீழே போட்டு விடுவார்களோ என்று இரண்டு நாள் ஆறப்போட்டு விட்டேன். ஆறின கஞ்ஜி பழங்கஞ்ஜி என்பார்கள். யாராவது குடிக்கட்டும் என்று போட்டேன். பரவாயில்லை. ருசி பார்த்திருக்கிறாய்.
உப்பும் ஸரி நன்றாக இருக்கிறதென்றும் அழகு சொல்லி விட்டாய்.
நாம்பெற்ற செல்வங்களும், வாழ்ந்த இடமும், ஸம்பவங்களும் நம்மைப் பக்குவமாக்குகிறது. அதுதான் உண்மை. அன்புடன்
19.
athiramiya | 6:54 பிப இல் ஜனவரி 17, 2018
///ஊரிலுள்ளவர்களையும் கூப்பிட்டு புத்தி சொல்லுவார்.///
ஹா ஹா ஹா இதுதான் அவர்களுக்கு ரொம்பப் பிடிச்ச விசயமாச்சே… ஆனா இப்போது புத்திமதி கூறுவோர்… கதைகள் சொல்வோர் எல்லாம் மிகக் குறைவு… நமக்கெதுக்கு வம்பு என ஒதுங்கி விடுகின்றனர்.. அதனால்கூட இப்போ நாடு சீரழ்வது அதிகமாகி இருக்கலாம்.
நீங்கள் வேர்ட் பிரெஸ் என்பதால், மொபைலில் பாஸ்வேர்ட் சேஃப் பண்ணி வைக்கவில்லை.. அதனை மறந்தும் விட்டேன், பல நேரங்களில் கொம்பியூட்டர் ஓன் பண்ணாமலே மொபைலில் பதில்கள் போட்டு விடுவேன்…
இது உங்களுக்கு அப்படிப் போட முடியாமையால்.. கொம் ஓபின் பண்ணி வர லேட்டாகி விட்டது.
20.
chollukireen | 8:45 முப இல் ஜனவரி 18, 2018
நீ செய்வது தப்பு. நாளை உன் பசங்கள் சினிமாவே கதி என்பார்கள். என்று எதிராகவே சொல்லுவார். பயப்படற ஆசாமி இல்லை. சினிமா விரோதி.
வேர்ட் பிரஸ்ஸே ஸரிஇல்லை என்று சொல்பவர்கள் அதிகம். லேட்டானால் என்ன ? வருகிறீர்களே. அதற்கே நன்றி சொல்ல வேண்டும். அன்புடன்
21.
மதுரைத்தமிழன் | 7:27 பிப இல் ஜனவரி 17, 2018
இந்த பதிவிற்க்காக முதலில் ஸ்ரீராமிற்காக நன்றி சொல்லுகிறேன். காரணம் மிக சிறந்த அனுபவஸ்தரை எழுத அழைப்பு விடுவித்தற்காக.. அடுதது உங்களுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும் காமாட்சி அம்மா. உங்கள் பதிவை படித்தேன் மிக தெளிவாக எழுதி சென்று இருக்கிறீர்கள்.. இப்போது வேலையில் இருக்கிறேன் வீட்டிற்கு வந்ததும் உங்கள் பதிவைகளை எல்லாம் படிக்கிறேன் வாழ்க வளமுடன்
22.
chollukireen | 6:58 முப இல் ஜனவரி 19, 2018
மிக்கநன்றி. முதலில் இந்தப்பின்னூட்டம் பிளாகில் பதிவாகவில்லை. எனக்கு அதிகம் பிளாகிற்குபோய்படித்து பின்னூட்டமிட முடிவதில்லை. எனக்கும் பின்னூட்டங்கள் அதிகம் வராது. எனக்கும் வாய்ப்பு கொடுத்த,கொடுக்கக் காரணமான உங்கள் இருவருக்குமே மிக்க நன்றி. முடிந்தபோது படியுங்கள். அன்புடன்
23.
angelin | 9:20 பிப இல் ஜனவரி 17, 2018
காமாட்சியம்மாவை எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்க காரணமே உங்கள் அன்பான அனுசரணையான குணமும் அழகா பக்கத்தில் உக்கார்ந்து குறும்பு பிள்ளைங்களுக்கு பொறுப்பை சொல்லித்தந்த உணர்வு வருது உங்கள் வார்த்தைகளை வாசித்தபோது .
24.
chollukireen | 8:56 முப இல் ஜனவரி 18, 2018
பொறுப்பான என்பெண் அஞ்சுவிற்கு என் வார்த்தைவேறு பொறுப்பைத் தருகிறதா. நன்றி பெண்ணே. அன்புடன்
25.
angelin | 9:27 பிப இல் ஜனவரி 17, 2018
எதையும் யோசிக்காமல் வெளியில் சொல்வது ஸரியில்லை என்று சின்ன வயதிலேயே தெரிந்து போனது.//
எத்தனை அற்புதமான விஷயத்தை அந்த சின்ன வயதிலேயே அறிந்து கொண்டீர்கள்மா .
//காலத்திற்கேற்ப மனமாறுதல்கள்//
இந்த ஒரு விஷயத்தில் நான் பக்குவப்பட்டு இருக்கிறேன் என்ற நம்பிக்கை இருக்கு அதன் காரணம் மணமானதும் வேரோடு பிடுங்கி முழுதாக வேறு தேசத்தில் நடப்பட்ட வெளிநாட்டு வாழ்க்கை மற்றும் மகளுடன் நிறைய கூடி கலந்தாலோசிப்பது .
26.
chollukireen | 9:03 முப இல் ஜனவரி 18, 2018
அப்பாமேலே அவ்வளவு அன்பு. அம்மாமேலே கோபம். அதான் காரணம்.
பக்குவப்பட்ட விஷயம் நல்லது. மகள் புத்திசாலி. ஆதரவான பாசமுள்ள அம்மாபெண் உறவு. ஆசிகள் அன்புடன்
27.
angelin | 9:31 பிப இல் ஜனவரி 17, 2018
/சேமிப்பு,குறைசொல்லாதிருத்தல்,ஒற்றுமை, //
அனைத்தையும் மனதில் சேமித்தாயிற்று அம்மா .அழகான பதிவு
28.
chollukireen | 9:11 முப இல் ஜனவரி 18, 2018
வெளிநாட்டில் வசிப்பதே ஏதோ சிறிது சேமிப்புக்குதான் என்று எல்லோரும் சொல்வது. ஸரி உன்னைக் குறை கூறமாட்டேன். ஸ்விஸ் அக்கவுண்டா. சேமிப்புக்குக்கூட அதிக பணம் செலுத்தணும். இல்லையா? இந்தியா என்ற மனத்திலே சேமிக்கலாம் இல்லையா? வாழ்த்துகள். அன்புடன்
29.
மதுரைத்தமிழன் | 4:44 முப இல் ஜனவரி 18, 2018
///இது போதும் என்று நினைக்கிறீர்கள் அல்லவா? ///
நிச்சயம் இல்லை இன்னும் நீங்கள் நிறைய எழுதுங்கள் யார் கேட்கிறார்களோ இல்லையோ நான் கேட்கிறேன்
30.
chollukireen | 9:14 முப இல் ஜனவரி 18, 2018
அப்படியா? ஊக்கமளிக்கும் வார்த்தைகள். நன்றியும்,ஸந்தோஷமும். அன்புடன்
31.
மதுரைத்தமிழன் | 4:44 முப இல் ஜனவரி 18, 2018
//உதவி என்பதை எல்லா விதங்களிலும் நம்மால் செய்ய முடிந்த வகையில் செய்யவேண்டும் என்பார். //
மிக சரியாத்தான் சொல்லி இருக்கிறார்
32.
chollukireen | 6:09 முப இல் ஜனவரி 18, 2018
நமக்கு முடிந்த வகையில் செய்வதென்றால் அதிகம் செய்யமுடியும் என்று நானும் நினைக்கிறேன். அன்பான பதிலுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
33.
நெல்லைத்தமிழன் | 7:41 முப இல் ஜனவரி 18, 2018
உங்கள் இடுகை எத்தனைதூரம் மனதினைத் தொட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. உங்கள் அறிவுரைகள் மிக மிக முக்கியமானவை. என் ‘ஹஸ்பண்டையும் நான் படிக்கச் சொன்னேன்.
“மாறுபட்ட கருத்துடன் எதிர்த்தவர்கள் கூட கஷ்டம்தான் படுவார்களே தவிர சொல்பவர்கள் யாரும் உதவப் போவதில்லை.” – ஆயிரத்தில் ஒரு வார்த்தை. நன்றி.
34.
chollukireen | 9:21 முப இல் ஜனவரி 18, 2018
இந்தக்காலம். நாம் வளர்ப்பதைவிட அவர்கள், நம் இளைய தலைமுறைகள் தானாக வளர்கிரார்கள். எல்லோருக்கும் இதே அனுபவம் தேவை இல்லை. உலகம் பலவிதம். படித்து கருத்து சொல்லியதற்கு மிகவும் நன்றி. உங்கள் ஹஸ்பெண்டிற்கும். அன்புடன்
35.
Bhanumathy Venkateswaran | 9:28 முப இல் ஜனவரி 18, 2018
//நான் சொல்லுவது சேமிப்பு,குறைசொல்லாதிருத்தல்,ஒற்றுமை, காலத்திற்கேற்ப மனமாறுதல்கள், இவைகளெல்லாம் அவசியம். இதென்ன பிரமாதமா?//
அழகாகவும், எளிமையாகவும் உங்க அனுபவங்களை எழுதி இருக்கிறீர்கள். மிக நல்ல அறிவுரை! நன்றி!
36.
chollukireen | 8:32 முப இல் ஜனவரி 19, 2018
உங்கள் மறு மொழிக்கும், நல்ல அறிவுரை என்று குறிப்பிட்டு எழுதியதற்கும் மிகவும் நன்றி. அன்புடன்
37.
இளமதி | 8:57 பிப இல் ஜனவரி 18, 2018
வணக்கம் அம்மா!
சொல்லத்தான் நினைக்கிறேன்!
உள்ளத்தால் துடிக்கிறேன் என்ற சினிமாப் பாடல் வரிகள் இப்போது மனதில் ஓடுகிறது.
அனுபவங்கள் என்றாலும் அத்தனையையும் சொல்லவும் முடிவதில்லை.
நீங்கள் ஓரளவுக்கேனும் உங்களின் அனுபவங்களைச் சொல்லிவிட்டீர்களா?
மிக்க மகிழ்ச்சிதான் அம்மா!
எத்தனை எத்தனைஅனுபவங்கள்! என்ன ஒரு இயல்பான உரைநடையாக எழுதிய பாங்கு! பக்கத்திலிருந்து நீங்கள் சொல்ல நான் கேட்பதுபோல உணர்கின்றேன்!..
உங்கள் அனுபவங்களில் நானும் கற்றுக்கொள்ளச் சிலவற்றை பெற்றுக்கொண்டுள்ளேன் மா!
சகோதரர் ஸ்ரீராமுக்கு இட்ட பதிலிலிருந்து..
// எப்படியும் நாம் இவர்களுடன்தான். மாறுபட்ட கருத்துடன் எதிர்த்தவர்கள் கூட கஷ்டம்தான் படுவார்களே தவிர சொல்பவர்கள் யாரும் உதவப் போவதில்லை…….. எப்படியானாலும் வயோதிகம் சிரமம்தான்…//
பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இடமிது!
38.
chollukireen | 7:20 முப இல் ஜனவரி 19, 2018
இளமதி உன்பதில்கள். நன்றி. சொல்வது, எழுதுவது எல்லாம் சுலபம். அந்தந்த வேளை அவரவர்கள் மன நிலையைப் பொறுத்து முடிவுகள். செயல்கள் அமையும். நான் வயதானவள் ஆதலால் எல்லாவற்றையும் கோடிகாட்டி எழுதினேன். இக்காலத்துக்கு அந்த அவசியமே இல்லை. எல்லாம் ஓபன் புக்காக இருக்கிறது. அடிக்கடி வா என்பேன். எழுதுவதே இல்லை. மற்றவர்களுக்கிடும் பின்னூட்டம் உன்னுடையது பார்த்தும் மகிழ்ச்சியே. இளமதி எழுதுகிறாள் என்பதே மகிழ்ச்சி. அன்புடன்
39.
இளமதி | 9:05 பிப இல் ஜனவரி 18, 2018
அம்மா! உங்கள் பதிவிலிருந்தும் வந்த பின்னூட்டங்களுக்கு நீங்கள் இட்ட பதில் கருத்துரைகளிலிருந்தும் நான் நிறையவே பாடங்களாக என்மனத்தில் எழுதிக் கொண்டு போகிறேன்.
நீங்கள் சொல்லியது போல சேமிப்பு, குறைசொல்லாதிருத்தல், ஒற்றுமை இவற்றை நான் என் பிள்ளைகளுக்குச் சொல்லிவருகிறேன். கடைசியாகச் சொன்ன காலத்திற்கேற்ப மனமாறுதல்கள் இதனை நான் கடைப்பிடிக்கிறேன். என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டுமே! என் துயரத்திலிருந்து நான் வெளியே வந்தாற்தான் சுற்றியுள்ள பிள்ளைகளின் வாழ்வும் சிறக்கும்! மாற்றி வருகிறேன்!
அதிரா மேலே சொன்னது போலவேதான் நானும் ..
//நீங்கள் வேர்ட் பிரெஸ் என்பதால், பாஸ்வேர்ட் அதனை மறந்து விட்டேன்,// இன்று அதைத்தேடி இப்போது மீண்டும் வேறு பாஸ்வேர்ட் எடுத்து வந்து கருத்தெழுதுகிறேன். ரொம்பத் தாமதமாக வந்துள்ளேன்னு மனசு சங்கடப் படுகிறேன் மா!…
இதமான இனிய பகிர்வு! மிக்க நன்றி மா!
40.
chollukireen | 7:34 முப இல் ஜனவரி 19, 2018
தாமதமாக வந்தாலும் பதிவை ரஸித்து, உள்வாங்கி எழுதியிருக்கிராய். மனத்துயரங்களையும் பிள்ளைகளின் நல் வாழ்வில் மறக்க முயலவேண்டும். சொல்வது எளிது. எல்லாம் காலப்போக்கில் ஸரியாகும். நீ,அதிரா இருவரும் கருத்தெழுதவும் வேர்ட் பிரஸ் ஆதலால் சிரமப் பட்டுள்ளீர்கள். அப்படியும் வந்து எழுதினதற்கு ஸந்தோஷம். அனாவசியமாகச் சங்கடப்படுவதைத் தவிர். சிலபேரின் பின்னூட்டம் மனதை வருடிக் கொடுத்தாற்போல அமையும். நீயும் அப்படி. நன்றி. அன்புடன்
41.
chollukireen | 9:38 முப இல் ஜனவரி 19, 2018
இந்த இடுகைக்கு விருப்பம் தெரிவித்த கார்டனர்அட் 60 அவர்களுக்கும்,ரஞ்ஜனி 35 அவர்களுக்கும், மற்றும் யாவருக்கும் என் விசேஷ நன்றிகள். அன்புடன்
42.
துளசிதரன், கீதா | 2:58 முப இல் பிப்ரவரி 1, 2018
காமாட்சிமா முதலில் தாமதத்திற்கு வருந்துகிறோம்.
அட்டகாசமான மனப்பக்குவப்பட்ட பதிவு! ஆம்! நம் அனுபவங்கள் தான் நம்மைப் பக்குவப்படுத்துகின்றன.
//எதையும் யோசிக்காமல் வெளியில் சொல்லுவது நல்லதல்ல..
ரொம்பச் சரி காமாட்சி அம்மா.
அது போல காலத்திற்கேற்ப நம் மனமும் மாறி வளர வேண்டும் என்பதையும் சேமிப்பு, ஒற்றுமை குறை சொல்லாதிருத்தால் என்பனவும் அருமையான கருத்துகள்.
பிள்ளைகளுக்கும் அதைச் சொல்லி வருகிறோம்…
நீங்கள் சொல்லியிருப்பது போல் இக்காலப் பிள்ளைகள் தாங்களாகவே கற்றுக் கொளிக்றார்கள். நாம் ஜஸ்ட் அவர்கள் தவறாமல் இருப்பதைப் பார்த்துக் கொண்டாலெ போதும்..என்றே தோன்றுகிறது…
நல்ல பதிவு நிறைய கற்றோம் காமாட்சிம்மா மிக்க நன்றி
துளசிதரன், கீதா
43.
chollukireen | 1:22 பிப இல் பிப்ரவரி 1, 2018
வருகைக்கு மிகவும் நன்றி. எப்பொழுது வந்தால் என்ன? எனக்குப் பின்னூட்டமே குறைவுதானே? ஆனால் நீங்கள் வருவீர்களென்று தெரியும்.
ஆரம்பத்தில் மனப்பக்குவப்பட அவ்வளவு சுலபகாரியமாக இல்லை. ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் போதுமே!!!!!!!!!அதே போல மாமியார் மருமகள் விஷயமும் கொடுமைகள் இருந்தாலும் மாமியார் வெளியில் சொல்வதும் ஸரியில்லை. வார்த்தைக் கொடுமைகளைத்தான் சொல்லுகிறேன். மரியாதையாக உறவுகளைத் தக்கவைப்பதுதான் இக்கால பெற்றோர்களுக்கு நல்லது. நான் வயதானவள். அப்படியே ஓரளவு எழுத முடிந்தது.
பிள்ளைகள் நம்முடன் இருப்பதைவிட, நேரம் சினேகிதர்களுடன் பள்ளியில் இருப்பதுதான் அதிகம். நல்ல சூழல் அமைய வேண்டும்.
காமாட்சி அம்மாவின் பக்குவத்திற்கு ஓரளவு முன்னோட்டம்தான் பதிவு. மனதிற்கு திருப்தியான பின்னோட்டம்உங்கள் இருவருடயதும். அன்புதான் காரணம். உங்களிருவருக்கும் என் அன்பு. அன்புடன்
44.
thulasithillaiakathu | 3:00 முப இல் பிப்ரவரி 1, 2018
காமாட்சி அம்மா உங்கள் அன்பான வார்த்தைகளும் அதைச் சொல்லும் விதமுமே எங்களை எல்லாம் ஈர்க்கிறது. தாய்மை உணர்வு!! தருகிறது! மிக்க நன்றி அம்மா
கீதா
45.
chollukireen | 1:24 பிப இல் பிப்ரவரி 1, 2018
நானும் அம்மாதானே பெண்ணே! நன்றி. அன்புடன்
46.
கோமதி அரசு | 5:36 முப இல் பிப்ரவரி 1, 2018
அன்பான அக்கா இந்த பதிவை இப்போதுதான் படித்தேன்.
எவ்வளவு தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். இந்த காலத்து குழந்தைகள் அவர்களேதான் வளர்கிறார்கள்.
அவர்களுடன் நாம் பலவிஷ்யங்களை விட்டுக் கொடுத்து தான் போக வேண்டி உள்ளது.
//எதையும் யோசிக்காமல் வெளியில் சொல்வது ஸரியில்லை என்று சின்ன வயதிலேயே தெரிந்து போனது.//
சின்ன வயதிலேயே அருமையாக வாழ்க்கை கலையை அறிந்து இருந்தது உங்களை உயர்த்தி உள்ளது.
வாழுகின்றவர்களுக்கு உங்களின் வார்த்தைகள் அனுபவ பாடம்.
//மாறுபட்ட கருத்துடன் எதிர்த்தவர்கள் கூட கஷ்டம்தான் படுவார்களே தவிர சொல்பவர்கள் யாரும் உதவப் போவதில்லை//.
உண்மை என் அனுபவத்தில் கண்ட உண்மை.
ஒவ்வொரு வார்த்தைகளையும் நிதானமாய் அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்..
//தொண்ணூறு வயதை எட்டும் உயல்நலமில்லாத புருஷர், நானும் அப்படியே//
அப்படி இருந்தும் உதவிக்கு ஊர்களுக்கு போகிறீர்கள் ?ஐயா அவர்களை பார்த்துக் கொள்ளுவது யார்? அல்லது அவர்களும் உங்களுடன் வருவார்களா?
47.
chollukireen | 1:46 பிப இல் பிப்ரவரி 1, 2018
கடவுளருளால் நல்ல பிள்ளைகள், நல்ல நிலையில் இருக்கிரார்கள். கணவருக்கு ஞாபக மறதிநோய். அதிகம் நடமாட்டமில்லை. இரவு,பகல் கூடவே இருந்து கவனிக்க ஆள் போட்டு இருக்கிரார்கள். நான் இரண்டு மூன்று வருடங்களாகத்தான் சுகமில்லாது இருக்கிறேன். முதுமை ஸம்பந்தப்பட்ட நோய்களுக்குத் தாற்காலீக நிவாரணம்தான் கிடைக்கும்.
டில்லி,காட்மாண்டு,மும்பை,ஜெநிவா என்று பிள்ளைகள். பெண் ,மாப்பிள்ளை பேரனுடன் நியூ ஜெர்ஸி. வேலையிலுள்ள மருமகள்கள்.
எழுதுவதில், வலையுலக நண்பர்கள். ஸந்தோஷத்தைத் தருபவர்கள். எங்கும் உதவிக்குப் போகும்படியான உடல்நிலை இல்லை. என்னுடைய நிலை இது.
உங்கள் பாராட்டுதல்களுக்கு மிகவும் நன்றி.
அதிகம் எழுத முடிவதில்லை. மனதைக் கொட்டி எழுதியிருக்கிறேன். கடவுள் நல்ல வழி விடவேண்டும்.
அன்புடன்
48.
முத்துசாமி இரா | 12:57 பிப இல் ஏப்ரல் 15, 2018
அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பது நல்ல இலக்கியத்திற்குச் சமம். இதுவும் இலக்கியமே.
49.
chollukireen | 5:44 முப இல் ஏப்ரல் 16, 2018
ஊக்கமளிக்கும் பின்னூட்டம். மிக்க நன்றி. அன்புடன்
50.
chollukireen | 11:27 முப இல் ஜூலை 25, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இந்தப்பதிவு அவர்கள் உண்மைகள் என்றமதுரைத் தமிழன் அவர்களின் வலைப்பதிவிற்காக நான் எழுதிய தொடர்க்கட்டுரையின்மீள்பதிவு. திரும்பவும்தான் வாசியுங்களேன். மிக்க நன்றி. அன்புடன்
51.
ஸ்ரீராம் | 12:01 முப இல் ஜூலை 26, 2022
ஒரு சுவாரஸ்யமான, சிறந்த பதிவை மீள்பதிவு செய்திருக்கிறீர்கள். இந்த பதிவு பற்றி எனக்கு நினைவே இல்லை. மறுபடி முழுவதும் வாசித்தேன். என் பின்னூட்டங்களும் இருந்தாலும், அதே கருத்துகள்தான் இப்போதும். அனுபவப்பகிர்வுதான் ஆகச்சிறந்த ஆதாயம்.
52.
chollukireen | 11:33 முப இல் ஜூலை 27, 2022
மிக்க நன்றி. நானும் பார்த்த போதுதான் ஞாபகம் வந்தது. அனுபவம்தான் . அன்புடன்
53.
Geetha Sambasivam | 1:26 முப இல் ஜூலை 26, 2022
இந்தப் பதிவையே இப்போத் தான் படிக்கிறேன் அம்மா. உங்கள் அனுபவங்கள் மூலம் நாங்கள் அனைவருமே அருமையான பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம். அனுசரித்துப் போவது என்பதன் உண்மையான அர்த்தம் நீங்கள் தான். இத்தனை பக்குவம் எங்களுக்கெல்லாம் வருமா என்பதே சந்தேகம் தான். மறுபடி மறுபடி 2,3 தரம் படித்துக் கொண்டேன். நமஸ்காரங்கள் அம்மா.
54.
chollukireen | 11:40 முப இல் ஜூலை 27, 2022
புதியதாகப் படித்துக் கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி. எல்லோருக்கும் அவசியம் நேரும்போதுஎல்லாம் தானாகவே அமையும்.வயது ஆகஆக இன்னும் எவ்வளவோ அனுபவங்கள்கூடிக்கொண்டே போகிறதுதான் உண்மை. உங்கள் பன்முகத்திறமை என்னை வியக்க வைக்கிறது. ஆசீர்வாதங்கள் அன்புடன்
55.
Geetha Sambasivam | 1:27 முப இல் ஜூலை 26, 2022
2018 ஏப்ரலில் இந்தப் பதிவு வந்த சமயம் நான் குழந்தை முதல் முதலாக வந்திருந்தாள் என அவங்களோடு குலதெய்வம் கோயில் மற்ற இடங்களுக்குச் சுற்றிக் கொண்டிருந்தேன். வந்து பார்த்திருக்கவில்லை. அதான் தெரியாமல் போயிருக்கு. 🙂
56.
chollukireen | 11:46 முப இல் ஜூலை 27, 2022
அதனால் என்ன ? இப்போதுஇரண்டு மூன்று முறை படித்து விட்டீர்கள்.குஞ்ஜுலுவிற்கு த் தமிழ் பேச வருகிறதா? எனக்கும் பார்க்க ஆவலாக உள்ளது.அன்புடன்