மஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA
மார்ச் 17, 2018 at 3:07 பிப 25 பின்னூட்டங்கள்
எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேறாக இருந்தாலும், கொண்டாடும் ஸமயம் வேறாக இருந்தாலும் கதை, புராணங்கள் ஒத்துப் போகும்.
வருஷப்பிறப்பைக் கொண்டாடுவதில், ஆந்திர கர்னாடக மானிலங்கள் கொண்டாடும் யுகாதி என்ற அதே தினத்தில்தான் மராட்டியரும் GUDI PADWA குடி பட்வா என்று வருஷப்பிறப்பைக் கொண்டாடுகிறார்கள்
குதி என்ற பதத்திற்கு மராட்டியில் வெற்றிக் கம்பம் என்ற பொருளாம். ராவண வதத்திற்குப்பின், வனவாஸம் முடிந்து ஸீதையுடன் ராமர் அயோத்தி திரும்பிய அந்த நாளை, மக்கள் வெற்றிக்கம்பம் நாட்டிக் கொண்டாடியதாகவும், அதன் ஞாபகார்த்தமாகவே மராட்டிய மக்களும், தங்கள் இல்லந்தோறும் வெற்றிக் கம்பங்களை நட்டு, இவ்வருஷப்பிறப்பைக் கொண்டாடுவதாகவும் சொல்கிரார்கள். இந்நாள் மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் ஒரு நன்னாள்.
சத்ரபதி சிவாஜி மஹாராஷ்டிரத்தை ஜெயித்த நன்னாளாகவும் இதைக்கொண்டாடுகிரார்கள்.
ரங்கோலி அலங்கார மத்தியில்
வீட்டின் முன்பாக ஒரு மூங்கிலில் மாவிலை,புஷ்ப அலங்காரங்கள் செய்து, உச்சியில் செப்புக் கலசத்தைக் கவிழ்த்து ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டிருக்கும்.
அதனடியில் வெற்றியின் ஞாபகார்த்தமாக காவிநிறத்துணி கட்டப்பட்டிருக்கும். மற்றும் அலங்காரங்களுடன் இருக்கும் அந்தக் கம்பமே வெற்றிக் கம்பம்.
அதற்கு வீட்டிலுள்ளவர்கள் பூஜை செய்கிறார்கள்.
வருஷப்பிறப்பன்று அதிகாலையிலேயே பெண்கள் நீராடி, அவர்கள் வழக்கப்படி ஒன்பது கெஜ சேலைகளை பின்கச்சம்போட்டு முறைப்படி அணிந்து மூக்கில் நத்து என்ற அணிகலனையும்,மற்றும் கழுத்து,கை என்று எல்லா அணிகலன்களையும் அணிகின்றனர்.
ஆண்கள் குர்தா,பைஜாமா ,தலைக்குக் குல்லா
போன்ற உடைகளையும் அணிகின்றனர். சிறுவர்,சிறுமிகளைப்பற்றி கேட்கவே வேண்டாம். வண்ணவண்ண உடைகள்தான்.
விசேஷ உணவுகள் தயாரிக்கப்படுகிறது யாவர் வீட்டிலும்.
ஸ்ரீகண்ட்,பூரண்போளி, மாங்காயில்தயாராகும் பன்னா இவைகள் முக்கியமானவை. விதவிதமான இனிப்புகள். வெற்றிக்கம்பத்திற்குப் பூஜை செய்கிரார்கள்.சிறுவர்,சிறுமிகள்,படிக்கும் வித்யார்த்திகள் ஸரஸ்வதி பூஜையும் இன்றே செய்கிரார்கள்.
உற்றார்,உறவினர்,நண்பர்கள் என யாவரும் கூடிக்களிக்கிரார்கள்.
புதிய வீட்டு கிரஹப்ரவேசம்,வாகனங்கள் புதியதாக வாங்குதல், ஆபரணங்கள் வாங்குதல் என இதைப்போன்ற முக்கிய பொருட்கள் வாங்கஉத்தமமான தினம்.
அன்று கசப்பான வேப்பிலையும் துவையல்போன்று சிறிது உண்பார்கள் என சொல்வது ஸுக துக்கங்களைக் கலந்து அங்கீகரிக்க வேண்டும் என்று சொல்வதுபோல இருக்கிறது. யுகாதி,குடி பட்வாவை 18–3–2018 அன்று நாமும் கொண்டாடுவோம்.
படங்கள் உதவி இணையத்திற்கு நன்றி.
Entry filed under: Uncategorized.
25 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன். | 4:41 பிப இல் மார்ச் 17, 2018
ஸ்ரீகண்ட் + பூரண்போளி படங்கள் நாக்கினில் நீரை வரவழைக்கின்றன.
மஹாராஷ்டிரா மாநில மக்களுக்கு குடி-பட்வா நல் வாழ்த்துகள்.
என் மூத்த பிள்ளை பிறந்த மார்ச்-18 அன்று இதனைக் கொண்டாடுவது கேட்க மேலும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. 🙂
பல்வேறு புதிய செய்திகளுடன் கூடிய தங்களின் இந்தப் பதிவுக்கும் பகிர்வுக்கும் என் பாராட்டுகள் + வாழ்த்துகள் + நன்றிகள்.
2.
chollukireen | 11:44 முப இல் மார்ச் 18, 2018
பாராட்டுகள்,வாழ்த்துகள்,நன்றிகள் எல்லாமாக வந்திருக்கும் உங்களுக்கு மிகவும் நல்வரவு. உங்கள் மூத்த பிள்ளைக்கு இனிய பிறந்ததின வாழ்த்துகள். உங்களைப் பின்னூட்டத்தில் திரும்பப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆசிகள் யாவருக்கும். அன்புடன்
3.
நெல்லைத்தமிழன் | 4:53 பிப இல் மார்ச் 17, 2018
‘குடி பட்வா’ – கேள்விப்படாத செய்தி. முதலில் படிக்கும்போது, ‘குடி படவா’ (ராஸ்கல்) என்று சொல்வதுபோல் தோன்றியது.
புரான்போளி, ஸ்ரீகண்ட் – இரண்டும் ரொம்பப் பிடித்தவை. மாங்காயில்தயாராகும் பன்னா – இது என்ன? கேள்விப்பட்டதேயில்லையே.
போளியை ஆசையோடு எடுத்துச் சாப்பிட்டேன்.
நீண்ட இடுகையா எழுதியிருக்கீங்களே. பாராட்டுகள் மற்றும் மகிழ்ச்சி (உடல் நலம் நல்லா இருக்குன்னு தெரிந்து).
நீங்க பல இடங்களில் வசித்திருப்பதால், பல இடத்து பண்டிகைகளும், சிறப்புகளும், ஸ்பெஷல் உணவுகளும் தெரிந்திருக்கும்.
4.
chollukireen | 12:00 பிப இல் மார்ச் 18, 2018
வாஸ்தவம்தான். நான் முதலிலேயே ஒருவரி இடையில் விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். போளி சொல்லுகிறேனின் போளிதான். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். நன்றி. ஓரளவு விஷயங்கள் எழுதாவிட்டால் பிரயோஜனமே இராது. எழுதணும் என்ற உந்துதல்தான் காரணம். நீண்ட இடுகை என்று நீங்கள் சொல்வது. குடி பட்வா என்ற பெயரில் எழுதணும் என்ற எண்ணம், மும்பையில் அந்தப் பண்டிகை அமக்களப் படுவதால் எழுதத் தோன்றியது. வலையுலக உறவுகளைத் தக்க வைக்க ஏதாவது எழுதினால்தான் உண்டு என்ற எண்ணம் அடிக்கடி தோன்றுகிறது. மிக்க நன்றி உங்களுக்கு. அன்புடன்
5.
நெல்லைத்தமிழன் | 2:18 பிப இல் மார்ச் 18, 2018
‘உறவுகளைத் தக்கவைக்க’ என்று சொல்லாதீர்கள். ஓரிரு வாரங்கள் ஆகிவிட்டால், என்ன இன்னும் எழுதலை என்று எனக்குத் தோன்றுகிறது. உட்கார்ந்து நீள இடுகையாக எழுதியிருப்பது சந்தோஷம்தான்.
6.
chollukireen | 12:52 பிப இல் மார்ச் 19, 2018
உங்கள் அன்பிற்கு நன்றி. அன்புடன்
7.
ஸ்ரீராம் | 1:39 முப இல் மார்ச் 18, 2018
யுகாதிக் கொண்டாட்டங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கின்றன. நெல்லை சொல்லி இருப்பது போல அந்தப் பண்டங்கள் எனக்கும் பிடிக்கும். பாரம்பரிய முறைப்படி சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள் என்று தெரிகிறது.
நலம்தானே அம்மா.. யுகாதி வாழ்த்துகள்.
8.
chollukireen | 12:12 பிப இல் மார்ச் 18, 2018
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. ஆமாம்.பாரம்பரிய வழக்கங்கள் விடுபடவில்லை. நலந்தானா? நலந்தானா? உள்ளம் நலந்தான். போளியில் கடலைப்பருப்புடன் ,பாதாம்பருப்பையும் சேர்த்து அரைத்துக் கிளறி பூரணமாக வைத்துச் செய்யச் சொன்னேன். சக்கரைப்போளி. மிகவும் நன்றாக வருகிறது. உங்கள் பாஸைச் செய்யச் சொல்லுங்கள்.
யுகாதி வாழ்த்துகள் உங்கள் யாவருக்கும். நன்றி. அன்புடன்
9.
athiramiya | 9:04 முப இல் மார்ச் 18, 2018
ஓ குடி பட்வா என்றால் இதுதானா? எனக்கும் ஆந்திரா நண்பி ஒருவரிடமிருந்து ஹப்பி குடி பட்வா என மெசேஜ் வந்திருந்துது.. தலையும் புரியல்ல வாலும் புரியல்ல… இப்போதான் புரிஞ்சுது.. அருமை…
10.
chollukireen | 12:20 பிப இல் மார்ச் 18, 2018
உன்னுடைய நண்பி மஹாராஷ்டிரமாக இருக்கும். ஆந்திராவில் வாஸமாக இருக்கும். இப்போ தலை,வால் எல்லாம் சேர்ந்து முழுமையாகப் புரிந்திருக்கும். இல்லையா அதிரா? உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்
11.
துரை செல்வராஜூ | 3:50 பிப இல் மார்ச் 18, 2018
குடி பட்வா.. என்ற வார்த்தை தெரியும்..
இத்தனை விவரங்கள் புதியவை…
பெரியோர்களின் வாழ்த்துகள் அனைவருக்கும் நலம் சேர்க்கட்டும்…
வாழ்க நலம்…
12.
chollukireen | 12:50 பிப இல் மார்ச் 19, 2018
பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. உ ங்களை வரவேற்கிறேன்.வாழ்த்துகள். அன்புடன்
13.
கோமதி அரசு | 12:52 பிப இல் மார்ச் 19, 2018
யுகாதி,குடி பட்வாப்பற்றி தெரிந்து கொண்டேன்.
படங்கள் எல்லாம் அழகு.
போளி பார்க்க அழகு.
ருசியும் அருமையாக இருக்கும்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
14.
chollukireen | 12:55 பிப இல் மார்ச் 19, 2018
மிக்க ஸந்தோஷமம்மா. வாழ்த்துகளுக்கும்,பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்
15.
chitrasundar5 | 3:46 முப இல் மார்ச் 21, 2018
காமாக்ஷிமா,
போளி கண்ணைப் பறிக்குது.
‘குடி பட்வா ‘ …… இப்போதான் கேள்விப்படுறேன். இப்படியான கொண்டாட்டங்கள் இருந்தால்தானே உறவுகளும், மனதும் பலப்படும். உங்களுக்கும் வாழ்த்துக்கள் அம்மா, அன்புடன் சித்ரா.
16.
chollukireen | 6:07 முப இல் மார்ச் 21, 2018
வாவா வா சித்ரா. உன் வரவு மிக்க ஸந்தோஷமாக இருக்கிறது. ஆசிகளும் அன்பும். அன்புடன்
17.
Geetha Sambasivam | 1:04 முப இல் மார்ச் 24, 2018
ம்ம்ம்ம் வடக்கே இருந்தப்போ குடி பட்வா பத்தி அறி ஞ்சிருக்கேன். ஆனால் என் பிறந்த வீட்டில் யுகாதி கொண்டாடுவது உண்டு. இப்போவும் போன வாரம் யுகாதி அன்னிக்கு அம்பத்தூரில் அண்ணா வீட்டுக்குப் போனப்போ யுகாதி சிறப்பு உணவு கிடைச்சது! 🙂 இங்கே நானும் பாயசம் மட்டுமானும் வைப்பேன். தமிழ் வருஷப் பிறப்பும் விஷுவும் கூடத் தனித்தனியாக வரும்போது என் அப்பா வீட்டில் தனித்தனியாகக் கொண்டாடுவோம். 🙂 விஷுக்கனி மட்டும் வைச்சுப் பார்க்கலை. போளி சுவையாக இருக்கிறது. இந்த வருஷம் வருஷப் பிறப்புக்கு போளி செய்தால் நீங்க சொல்லி இருக்கிறாப்போல் பாதாம்பருப்பும் ஊற வைச்சு அரைச்சுச் செய்ய முயற்சிக்கிறேன். நாம வேப்பம்பூவைச் சேர்க்கிறாப்போல் அவங்க இலையில் துவையல் செய்யறாங்க! :))))
18.
chollukireen | 12:42 பிப இல் மார்ச் 27, 2018
நீங்கள் யாவற்றையுமே ஸம்பிரமமாக,ஸம்பிதாயம் வழுவாமல் செய்பவர். அதை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. உங்களை ஆசீர்வதிக்கிறேன். நீண்ட உங்கள் மறுமொழிக்கு மிகவும் நன்றி. அன்புடன்
19.
Geetha Sambasivam | 1:05 முப இல் மார்ச் 24, 2018
Face Book வழியாக் கொடுத்தால் பின்னூட்டங்கள் போகின்றன. இப்போத் தான் அதைக் கண்டு பிடிச்சுப் பத்து நாட்களாக வேர்ட் ப்ரஸ் பதிவுகளில் அதை முயற்சித்துக் கொடுத்து வருகிறேன். நமஸ்காரங்கள் அம்மா.
20.
chollukireen | 12:44 பிப இல் மார்ச் 27, 2018
மிக்க நன்றி. நான் பாருங்கோ பின்னூட்டம் கூட குறுக்கிட்டேன். முடியலே என்ற வார்த்தைதான் இப்போது என்னிடம். ஆசிகள் அன்புடன்
21.
முத்துசாமி இரா | 12:51 பிப இல் ஏப்ரல் 15, 2018
குடி படவா மராட்டியப் புத்தாண்டு பற்றிய சிறப்பான தகவல் அளித்தமைக்கு நன்றி.
22.
chollukireen | 1:17 பிப இல் ஏப்ரல் 15, 2018
வாருங்கள் முத்துசாமி அவர்களே. நல்வரவு. பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்
23.
நெல்லைத்தமிழன் | 11:00 முப இல் ஜூலை 11, 2018
அம்மா… நீங்கள் இடுகையும் போடலை. பின்னூட்டங்களிலும் உங்களைக் காணவில்லையே… ஒரு வரியாவது எழுதியிருக்கலாமே.
24.
chollukireen | 1:41 பிப இல் ஜூலை 11, 2018
உங்களுக்கு எழுதிய இப்போதைய பின்னூட்டம் கண் முன்னே ஓடிப்போய் விட்டது. உடல் நலம் ஸரியில்லை. பரவாயில்லை. நன்றி. அன்புடன்
25.
chollukireen | 9:08 முப இல் ஜூலை 12, 2018
நெல்லைத் தமிழன் உங்களின் ஸரியான மெயில் அட்ரஸை அனுப்பவும். அன்புடன்