தனி வெங்காயச் சட்னி.
ஜூன் 17, 2021 at 11:48 முப 7 பின்னூட்டங்கள்
மீள் பதிவிற்கு தனிவெங்காய சட்னி வருகிறது. சின்ன வெங்காயத்திலேயே செய்தால் ருசி மிகவும் கூடுதலாக இருக்கும். ருசியுங்கள். அன்புடன்
துவையல், சட்னி முதலானது வகைவகையாக அரைக்கும் போது
உடன் ஏதாவது பருப்புகளையும் வறுத்துச் சேர்த்து அரைக்கிறோம்.
ஆனால் இது தனி வெங்காய சட்னி என்ற பெயர் பெற்றது.
இதுவும் காரக்குழம்பு செய்யக் குறிப்பு கொடுத்தத் தெரிந்தவர்களின்
குறிப்புதான் . நான் இரண்டு வெங்காயத்தில்தான் செய்தேன்.
மிக்ஸி ஒத்துழைக்கவில்லை. ஆனாலும் சட்னி தரமாகத்தானிருந்தது.
இன்னும் சற்று அரைபட வேண்டும்.
வேண்டியவைகள்.
பெரிய வெங்காயம்—5
மிளகாய் வற்றல்—–5
புளி—–ஒரு சின்ன எலுமிச்சையளவு.
தேங்காய்த் துருவல்—கால்கப்
எண்ணெய்—-ஒரு டேபிள்ஸ்பூன்.
ருசிக்கு உப்பு.
கடுகு—சிறிது.
செய்முறை—-
இது நிறைய என்று தோன்றினால் ஸராஸரியாக யாவற்றையும்
சிறிய அளவில் எடுத்துச் செய்யவும்.
வெங்காயத்தை சுத்தம் செய்து தோல் நீக்கி சிறியதாக நறுக்கிக்
கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி,கடுகைத் தாளித்து,மிளகாயை
,வறுக்கவும். பின் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
தேங்காயும் சேர்த்து அரைக்கவும்.
அதிகம் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
நல்ல கரகரஎன்று தோசையுடன் பல சட்னிகளில் இதுவும் ஒரு
சட்னியாக விருந்தினருக்குக் கொடுத்து உபசரிக்கவும்.
பச்சை,வெளுப்பு சட்னிகளுடன் இதுவும் ஒரு கலரான கார சட்னி.
சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம்.
நல்லெண்ணெயுடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்
இரண்டொருநாள் ஃபரிஜ்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.
தேங்காய் கட்டாயமில்லை. செய்து பார்த்து ருசியுங்கள்.
அதிகம் செய்வதானால் , நல்லெண்ணெயில் தொக்குமாதிரிக்
கிளறி வைத்தால் நாள்ப்பட உபயோகிக்கலாம்.
சின்ன வெங்காயம் சேர்த்தால் ருசி…
View original post 1 more word
Entry filed under: Uncategorized.
7 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 11:55 பிப இல் ஜூன் 17, 2021
இது மாதிரி ஓரிருமுறை செய்திருக்கிறேன். நான் சட்னி என்றால் கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்துக் போட்டு அரைப்பேன்! சமயங்களில் இதனுடன் மிளகையும் சேர்ப்பேன்!
2.
chollukireen | 11:25 முப இல் ஜூன் 18, 2021
பருப்புத் துவையல் மாதிரி மிளகு. அதுவும் தனி ருசி.நன்றி அன்புடன்
3.
Geetha Sambasivam | 7:23 முப இல் ஜூன் 18, 2021
தனி வெங்காயச் சட்னி என்றாம் அம்மா சின்ன வெங்காயத்தைத் தோலுரித்துக்கொண்டு மிளகாய் வற்றல், உப்பு, புளியோடு (பெருங்காயம் சேர்க்க மாட்டார்) சேர்த்து நன்கு அரைத்துப் பின்னர் இரும்புச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு அரைத்த சட்னி விழுதைக் கரைத்துக் கொண்டு கொட்டிக் கிளறிக் கெட்டியாக ஆகும்வரை கிளறிவிட்டு எடுத்து வைப்பார். நானும் இம்மாதிரி எனக்கு மட்டும் அரைத்துக் கொள்வேன். (அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது.) தேங்காய் வைத்து அரைத்தது இல்லை. வெங்காயம், தக்காளி, மி.வத்தல் வதக்கிக் கொண்டு இவற்றோடு கொஞ்சம் புளியையும் வைத்துக் கொத்துமல்லித்தழை, புதினாத்தழை சேர்த்து அரைத்தது உண்டு. இது அடிக்கடி பண்ணி வைச்சுப்பேன். இப்படியும் ஒரு தரம் செய்து பார்க்கிறேன். ஆனால் நான் மட்டும் தான் போட்டுக்கணும். :))))
4.
chollukireen | 11:21 முப இல் ஜூன் 18, 2021
சிலஸமயம் நமக்கென்றே செய்து கொள்வது எப்போதாவதுதான். முன்பெல்லாம் வீட்டில் வெங்காயமென்பது அபூர்வம். முக்கால்வாசி வெந்தயக்குழம்பும்,துகையலும்தான் வெங்காயத்தில். சட்னி என்று வரும்போது நம் இஷ்டத்தையும் சேர்த்துச் செய்யும்போது அடாடா ருசிதான்.கடைசி அடுப்பின் சூட்டில் வெங்காயத்தை சுட்டுத்தோல் உரித்தும் செய்வதுண்டு. அது விறகடுப்பில். உங்களம்மா செய்வதும் தொக்குமாதிரி. நன்றி அன்புடன்
5.
thulasithillaiakathu - கீதா | 12:26 முப இல் ஜூன் 21, 2021
இந்தச் சட்னி செய்வதுண்டு காமாட்சி அம்மா.
இதே போல சின்ன வெங்காயத்திலும் செய்வதுண்டு. அதுவும் சுவையாக இருக்கும். என் அத்தை செய்வார்.
வெங்காயம் சுட்டும் செய்வதுண்டு
கீதா
6.
chollukireen | 3:33 முப இல் ஜூன் 21, 2021
தலைப்பு அம்மாதிரி இருக்கிறது அல்லவா ரோஜா மலரே ராஜகுமாரி மிக்க நன்றி அன்புடன்
7.
chollukireen | 3:42 முப இல் ஜூன் 21, 2021
சுட்ட சட்னி மிகவும் சுவை இல்லையா வீட்டு விலக்கு நாட்களில் அதுதான் கிடைக்கும் இப இப் போது சுடுவதற்கு அடுப்பு இல்லை அந்த முறை இல்லை அன்புடன்