Posts filed under ‘அரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்’
உப்புச் சீடை
வேண்டியவைகள்
பச்சரிசியை லேசாக வறுத்தரைத்து சலித்த மாவு -2கப்
சிவக்க வறுத்தரைத்த உளுத்த மாவு. சலித்தது—கால்கப்
மெல்லியதாகத் துருவிய தேங்காய்த் துருவல்–1 கப்
ருசிக்கு உப்பு
ஊற வைத்து வடிக்கட்டிய கடலைப் பருப்பு—1டேபிள்ஸ்பூன்
வெண்ணெய்–3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி—அரை டீஸ்பூன்
சுத்தப் படுத்திய வெள்ளை எள்—1 டீஸ்பூன்
கறிவேப்பிலை இலைகள்—–10
வேண்டிய அளவு எண்ணெய் —-சீடை வறுத்தெடுக்க
செய்முறை——-உப்பு பெருங்காயத்தைச் சிறிது ஜலத்தில்
கரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.
அரிசி, உளுத்தமாவைக் கலந்து தேங்காய்த் துருவல் சேர்த்து
அழுத்திப் பிசறவும்.கறி வேப்பிலையைச் சேர்க்கவும்.
வெண்ணெய்.கடலைப் பருப்பு எள் சேர்த்துக் கலக்கவும்.
உப்பு ஜலம் சேர்த்து சிறிது, சிறிதாக ஜலம் தெளித்து
கெட்டியான, பூரி மாவைப்போல மொத்தையாகக் கலந்து
பிசையவும்.
மாவு கையில் ஒட்டாத பதத்தில் பிசைந்து ஒரே சீராக
,சிறிய கோலிகளாக மேலோடு உருட்டி, ஒரு துணியில்
பரவலாகப் போடவும்.[வழவழ என்றிராமல் சொரசொரப்பாக]
10 நிமிஷங்கள் கழித்து , வாணலியில் எணெணெயைக் காய
வைத்து சீடைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு
கரகரப்பாக வேகவைத்து சட்டுவத்தால் வடிக்கட்டி எடுக்கவும
டிஷ்யூ பேப்பரில் பரப்பி வைத்து ஆறினவுடன எடுத்து
டப்பாக்களில் வைத்து உபயோகிக்கவும்.
முள்ளுத் தேன் குழல்
வேண்டியவை—–வறுத்துப் பொடிக்க——-பயத்தம்பருப்பு——1கப்
கடலைப் பருப்பு கால்கப்,———-உளுத்தமபருப்பு 1டேபிள்ஸ்பூன் இவைகளை
வாணலியிலிட்டு லேசாக வறுத்துக் கொண்டு மிக்ஸியில் இட்டு பொடித்து சலித்துக் கொள்ளவும். அதிகம் செய்வதானால் மிஷினில் அரைத்துக் கொள்ளலாம்.
இம்மாவை அளந்து இதைப்போல் 2பங்கு அரிசி மாவைக்கலந்து கொள்ளவும்.
மாவுடன் கலக்க——ருசிக்கு உப்பு,—— வெண்ணெய்இரண்டு டேபிள் ஸ்பூன்
ஜீரகம் 1டீஸ்பூன்,—-வெள்ளைஎள் 1டீஸ்பூன், பெருங்காயப் பொடி சிறிது.
செய்முறை——– மாவுடன் உப்பைத் தவிர எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலக்கவும். மாவை இரண்டு பாகமாகப் பிரித்துக் கொள்ளவும்.ஒவ்வொரு பாகமாக உப்பு ஜலம்சேர்த்துப் பிசையலாம். முருக்கு சிவக்காமல் இருக்கும். வேண்டிய எண்ணெய் தயார் செய்து கொள்ளவும்.
மாவை கெட்டியாகவும், சற்றுத் தளர்வாக முறுக்கு பிழியும் பக்குவத்திர்குப்பிசைந்து கொள்ளவும்.
அதிகப் பருமனில்லாத முள்ளுத் தேன் குழல் அச்சில் உட் புறம் எண்ணெய் தடவி மாவை இட்டு , எண்ணெயைக் காய வைத்து முறுக்குகளைப் பிழிந்துஎடுக்கவும்.
இம்முறுக்கு கலர் நன்றாக இருக்கும். வாய்க்கும் ருசியாக இருக்கும்.

முள்ளுத் தேன்குழல்
கோல வடை—-kola vadai
வேண்டியவைகள்——அரிசி மாவு ஒருகப்
மைதா—-நான்கு டீஸ்பூன்.——–மெல்லியரவை—-நானகுடீஸ்பூன்
காரப்பொடி–அரைடீஸ்பூன்.——-வெள்ளைஎள்–ஒரு டீஸ்பூன்.
தேங்காய்த்துருவல்—-கால்கப்.—–வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
7அல்லது8 கறிவோப்பிலை இலைகள்.
ருசிக்கு உப்பும், துளி பெருங்காயப்பொடியும்.
பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை—– உப்பு,காயத்தை சிறிது நீரில் கரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.
தாம்பாளத்தில் எண்ணெய் தவிர எல்லா சாமான்களையும் கொட்டி நன்றாகக் கலக்கவும்.
உப்பு ஜலத்துடன் வேண்டிய அளவு நீரைக் கொஞசம் கொஞ்சமாகச் சேர்த்து மாவைக் கெட்டியான கலவையாகத் தயாரித்துக் கொள்ளவும்.
மாவை நன்றாகப் பிசைந்து ஒரே சீரான உருண்டைகளாக[சிறிய எலுமிச்சை அளவு] தயாரித்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு உருண்டையையும் எண்ணெய தொட்டுக் கொண்டு கையில் வைத்து பேனா அளவிற்கு மாவை நீட்டி உருட்டித்திரிக்கவும்..
திரித்ததைச் சுற்றி வட்டமாக ,இரண்டு முனைகளையும் அழுத்தி, சேர்த்து விடவும்.
இப்படியே, எல்லா மாவையும் தயாரித்து சுத்தமான துணியில் போட்டுக் கொள்ளவும்.
சற்து ஈரம் உலர்ந்தவுடன், வாணலியில் எண்ணெயைக் காய வைத்து
5,6, ஆகபோட்டுத் திருப்பி கரகர பக்குவத்தில் எடுக்கவும்.
வட்டமான கோலவடைகள். மாவு பிசையும் போது கெட்டியாகப் பிசையவும்.
அரிசிமாவு ரிப்பன் பகோடா
தேன் குழல் மாவு——-இரண்டுகப்,
வெண்ணெய்—–இரண்டு டேபிள் ஸ்பூன்,-சுவைக்கு உப்பு.
கசகசா-இரண்டு டேபிள் ஸ்பூன்,-காரப்பொடி–ஒருடீஸ்பூன்
சிறிது பெருங்காயப்பொடி,
பொரிப்பதற்கு எண்ணெய்.
செய் முறை——–உப்பு பெருங்காயத்தைத் சிறிது, தண்ணீரில், கரைத்துக் கொள்ளவும்.
மாவுடன் வெண்ணெய், காரம், கசகசாவைக் கலந்து உப்பு தண்ணீர் சேர்த்துப் பிசையவும். அச்சில் போட்டு பிழியும் அளவிற்கு திட்டமாகப் பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து ரிப்பன் பகோடா அச்சில் சிறிது சிறிதாக மாவை இட்டு பிழிந்தெடுக்கவும்.
கரகரப்பாக இருக்கும். அரிசி மாவில் செய்வதால் அதிகம் எண்ணெய் குடிப்பதில்லை.
சற்று நிறம் வித்தியாஸமாக இருக்கும்.
கோவில் வடை.——–kovil vadai
தேன் குழலுக்கு அரைத்த மாவிலேயே இதையும் செய்யலாம். எங்களூர் வளவனூரில் ஆஞ்சநேயருக்கு இம்மாதிரி வடைகளாலேயே மாலை சாற்றுவது வழக்கம்.
வேண்டியவைகள்———-குறிப்பிட்ட மாவு–இரண்டு கப்.
வெண்ணெய் இரண்டு டேபிள்ஸ்பூன்—-ருசிககு உப்பு
மிளகுநானகுடீஸ்பூன்[பொடித்தது]-பெருங்காயப்பொடி சிறிது
வடையைப் பொரித்தெடுக்க எண்ணெய்.
செய் முறை—————உப்பு, பெருங்காயத்தை சிறிது நீரில் கரைத்துக் கொள்ளவும். மாவில் மிளகுப்பொடி வெண்ணெய்சேர்த்து உப்பையும் சேர்த்து ,கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கெட்டியாகவும், நன்றாகவும்,பிசைந்து கொள்ளவும். இரண்டுஸ்பூன் காய்ச்சிய எண்ணெயும்,விட்டுப் பிசையவும்.
மாவைச் சிறிய எலுமிச்சைசைசில் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
கெட்டியான பாலிதீன் பேப்பர் மேல் ஒரு உருண்டையை, கையில் எண்ணெயைத் தொட்டுத் தடவி வைத்து வட்டமாகவும், மெல்லியதாகவும் தட்டவும். நடுவில் மோதிர விரலால் பெரிய பொட்டு அளவிற்கு பொத்தல்போட மாவை ஒதுக்கவும் எண்ணெயைத் தொட்டு தொட்டுச செய்தால் கையில் ஒட்டாது. வாழை இலைத் துண்டில் எண்ணெய் தடவியும் தயாரிக்கலாம். வடைகள் தயரித்துக் கொண்டு காயும் எண்ணெயில் நானகு, ஐந்தாகப் போட்டு வேக வைத்துத் திருப்பி ப் பொனநிரமாக, கரகரப்பாக ஆனவுடன் எடுக்கவும். எத்தனை நாட்கள் இருந்தாலும் கெடாது.
கோவில் பிரசாதமாக நிநைப்பதால்
இது கோவில் வடை.
மாவைத் தட்டும் போது உள்ளங் கையின் கட்டை விரலின் கீழ் உள்ள மேட்டு பாகத்தினால் தட்டினால் வடை சமனாகத் தட்ட வரும். சற்று தடியான அப்பளாம் அளவு பருமன் போதுமானது. பொத்தலும் அவசியம்.
அரிசிமாவில் செய்யும் சில கரகரப்புகள் — Rice Flour Snacks
பச்சரிசி ஆறு பங்கும் வெள்ளை உளுத்தம் பருப்பு ஒரு பங்கும் சேர்த்துக் கலந்து மெஷினில் கொடுத்து மெல்லிய மாவாக அரைத்து சலித்து வைத்துக் கொள்ளவும். இந்த மாவில் தயார் செய்யும் சிலவகைகளைப் பார்க்கலாம்.
தேன் குழல்———-வேண்டியவைகள்
தயார் செயதிருக்கும் மாவு இரண்டுகப்,–ஒரு டீஸ்பூன் சீரகம்
ஒருடேபிள் ஸபூன் வெண்ணெய்,—-ஒரு டீஸ்பூன்— வெள்ளை எள், திட்டமாக உப்புப் பொடி , சிறிது பெருங்காயப்பொடி–
பொரித்தெடுக்க எண்ணெய்—–முள்ளில்லாத தேன்குழல் அச்சு
செய்முறை——–உப்பு பெருங்காயம் இரண்டையும் சிறிது நீரில் கரைத்துக் கொள்ளவும். மாவுடன் சுத்தம் செய்த எள்,சீரகம், சற்று தளர்வு செயத வெண்ணெய்,இவைகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
வடிக்கட்டிய உப்பு பெருங்காய நீரைச் சேர்த்து மேலும் வேண்டிய தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து மாவைக் கெட்டியான பதத்தில் பீசையவும். குழலில் போட்டு பிழிய எவ்வளவு தளர வேண்டுமோ அந்த அளவிற்கு ஜலம்தெளித்து தயாரிக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து அச்சினுள்ளும் சிறிது எண்ணெய்தடவி மாவைஇட்டு காயும் எண்ணெயில் தேன் குழல்களைப் பிழிந்து திருப்பி விட்டு பொன்நிறமாக எடுத்து வைக்கவும். மேலும் இப்படியே தயாரிக்கவும். வடிக்கட்டியில் எண்ணெய் உறிஞ்சும் டிஷ்யூ பேப்பரை உபயோகிக்கவும். கரகரப்பாக இருக்கும். அடுத்து வேறு ஒன்றைப் பார்க்கலாம். இப்போதைக்கு தேன்குழல் ரெடி.

தேன் குழல்