Posts filed under ‘என்னைப்பற்றி’
ஸீனியர் ஸிடிஸனாக நான்குங்குமம் தோழியில்
ஸ்டார் தோழிக்காக கேள்விகளை எனக்கு அனுப்பியது வந்து சேர்ந்தது. கேள்விகளுக்குப் பதில் எழுதிய பிறகு ஸீனியர் ஸிடிஸனான என்னை ஸ்டார் தோழியாக ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி என் முன் வந்தது.
அதுவே ஸீனியர் ஸிடிஸனாக உங்கள் முன் வலம் வரக் காரணமாக அமைந்து விட்டது என்று நினைக்கிறேன்.
என்னுடைய சொல்லுகிறேன் ப்ளாகை விட இன்னும் அதிகம்பேர் என்னைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மிகவும் ஸந்தோஷம். பிரஸுரத்திற்குக் காரணமான அனைவருக்கும், திரு வள்ளிதாஶன் அவர்களுக்கும் மிகவும் நன்றி.
இதை எடிட் செய்வதற்கு முன்னர் நான் எழுதியதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முக நூலில் பார்க்காதவர்களும் பார்க்க ஒரு வாய்ப்பு அதில் எனக்கு ஸந்தோஷம் வருமே!
என்னைப் பற்றி—- 30 ஜூன் 2016 காமாட்சி மஹாலிங்கம். 85ஆவது வயதில்
நான் ஒரு மனுஷியாக—ஏனோ தெரியவில்லை ஏழு வயது முதல் நான் மிகவும் பொறுப்பறிந்த ஒரு பெண்ணாக இருக்கிறேன். எல்லோரிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் அவரவர்களால் செய்ய முடிந்ததைத்தானே பிறருக்குச் செய்ய முடியும்? பல ஊர் பல,பாஷை, பல கலாசாரம், பல சுபாவமுள்ள மனிதர்கள், யாவரும் நல்லபடி கொண்டாடும் ஒரு மனுஷியாகவே நடந்து கொண்டு இருந்திருக்கிறேன். அனுஸரித்தே போகும் தன்மை
தாயாக மனைவியாக— குடும்பப் பொருப்புகளே தெரியாத ஒரு அப்பாவி மனிதரைக் கைப்பிடித்து குறைந்த வருமானத்தில் வருமானத்திற்குத் தக்க குடும்பம் நடத்தி இன்று வரை பலனே கண்டுள்ள ஒரு மனைவிநான்.
தாயாக—-கிராமத்தில் வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு இங்லீஷ் மீடியமானாலும், ஹிந்தி,நேபாலி என்றவைகளை நானும் உடன் நின்றது.தெரிந்து கொண்டு அவர்களுக்கு உதவினதுதான் பெரிய விஷயம். அன்பைக்காட்டுவதைவிட, அடக்கு முறைகளும், கண்டிப்புமாகத்தான் வளர்த்தேன் பிள்ளைகளை. நால்வர் ஆண் பிள்ளைகள்.நேபாளத்தில் இருந்த நாங்கள் அவ்விட படிப்பு கலாசாரம் மனதிற்கு ஒவ்வாததால் இந்தியாவில்
மேற்படிப்புக்கு அனுப்பினேன்.யாவரும் டிகிரி முடித்து விட்டு
M.B.A படிக்க ஒருவர் ஸம்பாதிக்க,ஒருவர் படிக்க, ஸம்பாதித்தவர் படிக்க, படித்தவர்ஸம்பாதித்து. அவரும் படிக்க அவர்களும் முன்னுக்கு வந்து இன்று நல்ல வியக்தியாக இருப்பது பசுபதி நாதர் கொடுத்த அருள்.. பெண் என் பெற்றோரிடம் வளர்ந்து அவளும் படித்தாள்.
ஏரோநாடிக் ஸீனியர் மெகானிக்கான தகப்பனாரின் உழைப்பும், தாயின் திட்டமிட்ட படிப்புத் திட்டங்களும் அவர்கள் முன்னுக்கு வர காரணமானதை என்றும் நினைவு கூறும் பிள்ளைகள். சரிவர முடிந்த கடமை. விரும்பிய பெண்களை, எதுவும் அவர்களிடம் எதுவும் வாங்கக்கூடாது என்ற கோட்பாட்டுடன் பிள்ளைகளின் மனதிற்கிணங்க , எளிமையான நட்பு உறவுகள் சூழ வைதீக முறையில் நாங்களே மணமுடித்துவைத்தோம். இதுவும் ஒரு தாயின் கடமைதானே.
படிப்பு
என்னைப் பொருத்தவரையில் அந்த நாளில் பெண்களுக்கு அதிகம் படிப்பைக் கொடுக்க வசதியில்லை. வயதான உடல்நலமில்லாத தகப்பனார். சுதேசமித்திரன்,தின வாரப் பதிப்புகள்,பாரததேவி முதலானது தபாலில் வரும். போட்டி போட்டுக் கொண்டு பேப்பர் படிக்கும் வழக்கம் அன்று முதல் இன்றுவரை உள்ளது. என் தகப்பனார் ஒரு தமிழ்ப் பண்டிதர்.. அப்பாதான் எழுதுவதற்கு ஆசான்.உடம்பில் ஓடும் குருதி அவருடையது.
ஒரு பக்கத்தில் விஷயங்கள் எழுதி ஒருபக்கம் காலியாக விட்டு குண்டூசியால் பின் செய்து , விஷயதானம் செய்பவர்,பெறுபவர் என்றெல்லாம் குறிப்பிட்டு, புக் போஸ்ட் செய்தது ஞாபகம் வருகிறது. சிறுகதைகள்,கட்டுரைகள், சமையல் விஷயங்கள், என எழுதியனுப்பியது பிரசுரமானது, பரிசு பெற்றது என யாவும் மறக்க முடியாதவை. திருவண்ணாமலையில் நான்குவகுப்புகளும்,வளவனூரில் எட்டு வகுப்பு முடிய படித்தாலும்,பாட்டு,நடிப்பு,மேடைப் பேச்சுகள், ஸ்கவுட்,படிப்பு கைவேலை,தோட்டவேலைஎதிலும் முன்னணியில், போதித்த ஆசிரியர்கள் மறக்க முடியாதவர்கள்.
அப்போதெல்லாம் மனக்கணக்கு ஒரு நிமிஷத்தில் பதில் சொல்ல வேண்டும். லைப்ரரி ஸைலண்ட் ரீடிங். படித்த உடனே மற்றவர்களுக்குப் பார்க்காமல் விஷயத்தை யாவருக்கும் கேட்கும்படி சொல்ல வேண்டும்.. பெங்களூர்,பாரக்பூர்.காட்மாண்டு என்று எங்கள் பணிநிமித்த வாஸமும்,ரிடயரானபிறகு தில்லி,கௌஹாட்டி,மும்பை ,எர்ணாகுளம்,கல்கத்தா எனவும், கடைசி மகனுடன் ஜெநிவா எனவும் பலதரப்பட்ட அனுபவங்கள்,சினேகங்கள். பலதரப்பட்டவைகளை நேரில் பார்க்கும் ஸுகம்.
பிள்ளைகள்.
பர்த் கண்ட்ரோல் பிரசாரம் ஆரம்பித்த காலம். ஒருவித பயம் எல்லோருக்கும். இந்தியா அளவு நேபாளத்தில் பிரசாரம் இல்லை. முதலில் பெண். அடுத்து நால்வர் ஆண் குழந்தைகள். யாவரும் நன்றாகப் படித்து வேலையில் இருக்கிரார்கள். பெண் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவள். எனக்கு ஐவர் மக்கள். பேரன்2, பேத்திகள்3 என மொத்தம் அவர்களும் ஐவர்தான். கொள்ளு பேத்தி ஒன்று.
பொழுதுபோக்கு.
புதிய தேசம் நேபாளம். வேலைக்கு ஆள் கிடையாது. யாவும் செய்ய, நிர்வாகம்,குழந்தைகளுடன் படிப்பிக்க உட்காருவது, யந்திரமயமில்லாத வேலைகள்…..பொழுது போதாது. இன்னும் வேண்டும். தபால் வசதி கிடையாது. சந்தா கட்டின புத்தகங்களும் கைக்கு கிடைக்கும் வரை உறுதியில்லை. பிள்ளைகளின் முன்னேற்ற சிந்தனைகள். பிறற்கு உதவும் தன்மை. நல்ல முறையிலேயே இருந்த்து.
இயற்கை உங்கள் பார்வையில்.
ஆஹா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! விலை மதிப்பற்ற இயற்கைக் காட்சிகள்,ஹிமாலயம் என்ன ஆல்ப்ஸ் என்ன நம் தமிழ் நாட்டு இயற்கை காட்சிகள் என்ன? பார்த்தும், அநுபவித்தும் சிராபுஞ்சி அதிக மழை பொழியும் இடம் பார்ப்போமா என்ற எண்ணம் படிக்கும்போது இருந்தது. ஆப்பிரிக்கா என்ன அமெரிக்கா,நயகரா நீர் வீழ்ச்சி என்ன , ஸ்விஸிலேயே பத்து வருஷங்கள் இருந்ததென்ன இயற்கை என் பார்வையில் கிடைத்தது அபூர்வம். டில்லி,கல்கத்தா,சென்னை,மும்பை யாவும் எல்லா வகையிலும்.
சமுகம் உங்கள் பார்வையில்.
மிகவும் முன்னேறி விட்டது.தட்டிக்கேட்க பயப்படும் ஸமுதாயமாக மாறிவிட்டது. தடி பிடித்த யாவரும் தண்டல்காரர்கள்தான். யாரும் யாருடைய உபதேசத்தையும் விரும்பாத சமூகம்.
மனிதர்கள்.
இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் நான் இருக்கிறேன். காரியம் ஆகவேண்டுமென்றால் மனிதர்கள் வேண்டும். மனித நேயம் குறைந்து போய்விட்டது. உறவுகள் வேண்டாம். சினேகிதம் ஓரளவிற்குப் போதுமானது என்றே எல்லோரும் நினைக்கிரார்கள்.
பிறந்த ஊர் ஸொந்தங்கள்.
ஒரு அழகிய ஊராக இருந்த கிராமம் வேறுவிதமாக மாறி விட்டது. யாவருக்கும் குலதெய்வத்தை ஆராதிக்கும் ஒரு புண்ணிய பூமியாக உள்ளது.
முன்பெல்லாம் சென்னையில் ஊரார்களைப் பார்க்க முடிந்தது. இப்போது வெளி நாட்டில் பார்க்க முடிகிறது. ஒரு கல்யாணம் கார்த்தி சொந்த பந்தங்களோடு கூடும்போது எங்கு உள்ளோம் என்றே தெரியாத ஒரு உற்சாகம். ஊரைப் பார்த்தாலே ஒரு உற்சாகம்.
நேர நிர்வாகம்.
இருபத்தெட்டு வருடங்களாக எங்கு உதவி தேவையோ அங்கு ஆஜர்.இருவரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய அவசியமும் பார்ப்பதில்லை. ஓடிப்போன காலங்கள். அயல்நாட்டு வாஸம். எதுவும் கரெக்ட் டைமிற்கு தயாராகும் எல்லா விஷயங்களும். பேப்பர் படிப்பதற்காக கம்யுட்டரில் சிறிது பரிச்சயம். புத்தகங்கள்.பேப்பர் படிக்கவே நேரம் தேவை.ஸொந்தங்களை விட பந்தங்களும் என்னை அவர்களாகவே நினைத்தது.அவர்களுக்குதவுவது பிடித்தமான காரியம்.
சமையல்
பிடித்தமானது. சின்னவயதில் குறிப்புகள் பார்த்து நாலும் கிடக்க நடுவில் எதையாவது செய்வேன். அம்மா ஒன்றும்சொல்லமாட்டார்கள்.சொல்லுகிறேன் என்ற பிளாகை ஆரம்பித்து ஆறு ஏழு வருடமாக எழுதிக் கொண்டே இருந்தேன். இப்போதும் அதுதான் என் உற்ற தோழி.சமையல்தான் அதில் பெரும் பாலும். எவ்வளவு பேருக்கானாலும் தைரியமாக சமைத்த நாட்கள் அதிகம். கதைகள் எழுதுவதுண்டு போஸ்டல் வசதி மிகவு மோசமாக இருந்ததில் எழுதுவதே நின்று போனது.
பிற கலைகள்.க்ரோஷா,எம்ராய்டரி,க்ராஸ்டிச், நிட்டிங் பெரிய கோலங்கள், கைவேலைகள் எல்லாம் தெரியும் ஒரு காலத்தில்.
ஆபீஸ் ஒர்க்.
பதிமூன்று வய.தில் கம்பல்ஸரி எஜுகேஷனில் டீச்சராக வேலைக்குப் போய்விட்டு நோட்ஸ்ஆஃப் லெஸன் எழுதவும், தோராயமாக பசங்களுக்கு டேட் ஆஃப் பர்த் போடவும், ரெகார்ட் ஷீட் எழுதவும் பழகிக் கொண்டேன். புடவை கட்டிக்கொண்டு, தலைப் பின்னலை தூக்கிக் கட்டிக் கொள்வது. இரண்டு வருஷகாலம் டீச்சர் என்று யாராவது சொல்லும்போது வெட்கமாக இருக்கும்.பேப்பரில் எழுதும் பழக்கம் உண்டுய
இசை
வளவனூரில் படிக்கும்போது பாட்டு கிளாஸ் உண்டு. வீட்டில் மிகவும் பாட்டுகள் கற்றுக்கொண்ட அம்மிணி மாமி என்பவர் ராமநாடகக் கீர்த்தனைகள் மற்றும் கீர்த்தனைகள் சொல்லிக் கொடுத்தார். பிரியமானது இசை. மனது ஸரியில்லாது எப்போதாவது இருந்தால் ஸர்வஸமய ஸமரஸக்கீர்த்தனங்களைப் பாடினால் மனது அமைதியாகிவிடும்.
உதாரணம் எக்காலமும் உந்தன்,.இந்தவரம் தருவாய், கருணாகர பரம் பொருளே உன்னை, தயைபுரிய தாமதமேன், உன்னை மறவாமல் எனக்கருள் வரமே இப்படிப்பல.
கடந்து வந்த பாதை
அயல்நாடு. குறைந்த வருவாய் இப்படி எவ்வளவோ, குளிர் தேசம் போனது,கடினங்களைக் கடந்தது, பார்த்தவர்கள் பாராட்டியது, இன்று நினைத்தாலும் தக்க ஸமயத்தில் யாவருக்கும் கடவுள் மார்க்க ஸஹாயராக இருப்பார் என்ற எண்ணம் தோன்றுகிறது.
சினிமா
அப்பா சினிமா பார்த்த்தில்லை. குழந்தைகளை நன்றதினின்றும் கெடுத்திடும் சாதனம் என்று எண்ணும் தீவிரவாதி. எட்டாவது படிக்கும்போது ஸ்கூல் தலைமை ஆசிரியருடன் வகுப்புத் தோழிகளுடன் பார்த்த படம் காரைக்கால்அம்மையார். அக்கம் பக்கத்தில் சாயங்காலம் சினிமாவிற்குக் கிளம்புகிறவர்களையும் பசங்களைக் கெடுத்து விடுகிறீர்கள் என்று கோபிப்பார்.
யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
உடல்நலம், மனநலம்.
உடல் நலம் ஏறத்தாழ இருந்தாலும் மனம் என்பது உறுதியாகவும், ஏற்றத் தாழ்வுகளை ஸமாளிப்பதாகவும் இருந்து கொண்டிருந்தது.
நீங்கள் எழுதியதில் உங்களுக்குப் பிடித்தது.
சிலநினைவுகள் என்ற நிஜஉறை free books டீமால் வெளியிடப் பட்டிருக்கிறது.
அன்னையர் தினம் என்ற என் அம்மாவின் நினைவுகளை முப்பது பகுதிகளாகச் சொல்லுகிறேனில் எழுதியது எனக்குப் பிடித்தமானது. மற்றும் படிப்பவர்கள்தான் பாக்கியைச் சொல்ல வேண்டும். ஏராளமான சமையல் குறிப்புகள்
இசை
எல்லோர் வீட்டிலும் இசை யாருடையது வேண்டுமானாலும் கேட்க வசதி இருக்கிறது. மனது லயிப்பது இசையில்தான்.
ஆளுமைகள்
அரசியலில் பெரிய பதவிகளை வகிக்கும் பெண்கள் துறவிமாதிரி உண்மையாகப் பதவிகளை வகித்து நல்லது செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஏனோ இவ்வளவு அவதூறுகளை எப்படி ஏற்றுக் கொள்கிரார்களோ என்றுதான் நினைப்பேன்.
பிடித்த பெண்கள் குடும்பத்தின் வெளியில்
.என்னை விட பத்துவயது சிறியவளான கங்கா கார்க்கி என்ற நேபாலி டீச்சர். ஆத்மஞானம் கற்கும் அவளின் உபயோககரமான ஒத்தாசைகளும், பேச்சும்.
என் சொல்லுகிறேன் என்ற பிளாகின் மூலம் விசேஷ நட்பைப் பெற்ற ஸ்ரீமதி ரஞ்ஜனி, மற்றும் காமாட்சிம்மா என்று அன்புடன் விளிக்கும் வலையுலக நட்புறவுகளும் மறக்க முடியாதவர்கள்
நகைச்சுவை நிகழ்ச்சிகள்.
காட்மாண்டு ஸென்ட்ரல் ஸ்கூல். பெற்றவர்களை கூப்பிட்டு ஒவ்வொரு வகுப்பிற்காக மீட்டிங் நடத்துவார்கள்
ஸரியான வகையில் ரப்பர், கொடுப்பதில்லை,நோட்புக்கும் அப்படியே. கைக்குட்டை அளிப்பதில்லை. ஹிந்தியில் சொல்லிக் கொண்டே போகிரார்கள்.
எப்படி பதில் சொல்லுவது என்று யோசிக்கும் போது, நீங்கள் என்ன இங்கு இது இரண்டாவது வகுப்பு பிள்ளைகளுக்கானது என்று கன்னடத்தில் சொன்னார் அங்கு வந்த ஒருவர்.
என் பிள்ளை பிளஸ் டூ. யாவரும் சிரிப்பு. நான் சொல்ல எழுந்து நிற்பதை அவர்கள் கவனிக்கவில்லை.
இதே மாதிரி பெண்ணுக்கு பிரஸவத்திற்கு ஆஸ்ப்பத்திரிக்குப் போனால் நான்தான் கர்பிணி என்று என்னை சோதிக்க வந்து விட்டார்கள். இது நேபாலில். சிரித்து மாளவில்லை.
பேஸ்புக் கற்றதும்,பெற்றதும்.
இந்த வயதில் காமாக்ஷி பேஸ் புக்கில். இதுவே என்னை புகழக் காரணமாக இருந்தது என் உறவினர் மத்தியில்.
இழந்த உறவுகள்,சிநேகங்கள்,புத்தம் புதிய விஷயங்கள், நம் ஆர்வங்களைப் பிறர் அறியச் செய்ய என்ற பல்வேறு நல்ல கோணங்களில்ப் பார்த்தால் நல்லதையே நினைக்கத் தோன்றுகிறது. பக்குவத்துடன், ஒருவித எல்லையுடன் உபயோகிக்க நல்ல ஆயுர்வேத மருந்து.
அழகென்பது. உள்ளும்,புறமும் சுத்தமான மனித நேயம்.
வீடு.
இகத்திற்கான வயோதிக காலத்திற்கு நம்முடையதென்ற ஸொந்த வீடு மிகவும் அவசியம். ஸுதந்திரம் என்பது ஸொந்த வீடுதான்.
வாழ்க்கை உங்கள் பாதையில்.
உழைப்பும்,ஆர்வமும், கட்டுப்பாடான வாழ்வும், மனோதைரியமும் அதிக ஆயுளைக் கொடுத்திருக்கிறது. வயோதிகத்திற்காக இன்னும் வசதிகளை முன் கூட்டியே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒதுங்கி வாழப் பழக வேண்டும்.
எழுத்தும் வாசிப்பும்.
மஹாபாரதம்,பகவத் கீதை,பாகவதம் என்று ஆன்மீகம் தேவையாக இருக்கிறது. புத்தக வாசிப்பும்,கம்யுட்டரில் ஏதோ எழுதுவதுமாக
ஸந்தோஷத்தை ஏற்படுத்திக் கொள்கிறேன். குறை ஒன்றுமில்லை.
புகைப்படக்கலை.
அமெரிகாவிலுள்ள பேரன் டிஜிட்டல் காமிரா வாங்கிக் கொடுத்தான் + தேர்ந்த கலைஞரில்லை. போதும் என்வரை விஷய தானங்களுக்குஇவை உதவுகிறது..
இவை தவிர நீங்கள் கூற விரும்புவது..
நீங்கள் யாவரும் சிரிய வயதுக்காரர்கள். வயதான காலம் என்றும் ஒன்று வரஉள்ளது. நமக்கே என்ற வீடு,வருமானம்,மெடிகல் பாலிஸி, தாராளமாக சிலவு செய்யும்படியான சேமிப்பு இவை யாவும் நமக்கு அவசியம். மனோ தைரியம் இவைகள் யாவையும் அடுத்த தலை முறைக்கு மிகவும் அவசியமானதொன்று. வயதானவர்களை நேசியுங்கள். அவர்களுக்கென்ற ஒரு மனமும் உண்டு.
குங்குமம் தோழி இதழ் பற்றி
நல்ல இதழ். அவ்வப்போது இணையத்திலும் படிப்பேன். இல்லாதவிஷயமே இல்லை.
குங்குமம் தோழியில் இடம் பெற வேண்டிய புதிய பகுதி விஷயங்கள்.
நாடகங்கள். பழைய பிரபலமான பெண் எழுத்தாளர்களின் தொடர் கதைகள் இப்படி காணக்கிடைக்காத விஷயங்கள், போடலாமே. குழந்தைகள் பெரியவர்களான பின் தனித்திருக்க அவசியம் நேரிடின் ஸோஷியல் ஸர்வீஸ் மூலம் எவ்வளவு நிம்மதி பெறலாம் என்பதைக் குறித்தெல்லாம்
எழுதலாமே. இந்த ஸ,ப்ஜெக்ட் வருங்காலத்திற்கு உதவும் என்பது என் பூரண நம்பிக்கை.