Posts filed under ‘கடலை மாவின் கரகரப்புகள்’
காராசேவு
நீண்ட நாட்களுக்குப் பிறகு தீபாவளிக்குள்ளாவது
ஏதாவது எழுதவேண்டும் என்ற நினைப்புடன்
வந்திருக்கிறேன். சுலபமாக எழுதவும், செய்யவும்
காராசேவு ஞாபகத்திற்கு வந்ததால் உடனே செய்தும்,
எழுதியும் போட்டிருக்கிறேன். நீங்களும் செய்து பாருங்கள்.
வேண்டியவைகள்.
கடலைமாவு—2 கப்
அரிசிமாவு—அரைகப்
சமையல் ஸோடா–கால் டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி—1 டீஸ்பூன்
உறித்த பூண்டு இதழ்கள்–3
லவங்கம்–2
ஏலக்காய்–1
கசகசா—2டீஸ்பூன்
வெண்ணெய்–1 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு–உப்பு
பொறித்தெடுக்க—தேவையான எண்ணெய்
செய்முறை—-மாவுகளைச் சேர்த்துச் சலிக்கவும்.
ஒரு தாம்பாளத்தில் உப்பு, ஸோடாஉப்பு, வெண்ணெய்
சேர்த்துத் தேய்த்துக் கலக்கவும்.
கசகசாவை ஊற வைத்து வடித்து. நறுக்கிய பூண்டுத்
துண்டுகள், ஏலம், லவங்கம்,மிளகாய்ப்பொடி சேர்த்து
சிறிது ஜலம் தெளித்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதைக் கரைத்து , மாவுடன் சேர்த்து
கெட்டியாக முறுக்கு பிழியும் பதத்தில் மாவைப்
பிசைந்து கொள்ளவும்.
தேன்குழல் பிழியும் அச்சில் பெரிய கண் கொண்ட
வில்லையைப் போட்டு மாவை நிரப்பிப் பிழிய வேண்டும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மாவை
வட்டமான வடிவத்தில் பிழியவும்.
நிதான தீயில், ஓசை அடங்கும்வரை வைத்து
திருப்பிப்போட்டு எடுக்கவும்.
ஆறினவுடன் , துண்டங்களாக ஒடித்துக் கொள்ளவும்.
காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து உபயோகிக்கவும்.
சேவு தேய்க்கும் உபகரணம் இல்லாததால் இப்படிச்
செய்வதே வழக்கமாகி விட்டது. நன்றாகவும் சுலபமாகவும்
இருக்கிறது. வேறு என்ன வேண்டும்.
மாவை நன்றாகப் பிசைவது அவசியம்.
மிக்சர்
வேண்டியவைகள்
முதலில் இதற்கு பூந்தி தயாரிப்போம்.
ஒருகப் கடலைமாவு, கால்கப், அரிசி மாவு, 1சிட்டிகை பேக்கிங்ஸோடா
ருசிக்கு உப்பு பெருங்காயம் சேர்த்து துளி கேஸரி பவுடரும் சேர்த்து
ஜலம் விட்டு தோசைமாவு பதத்தில் கரைத்து க் காயும் எண்ணெயில்,
பூந்திகளாக செய்து எடுத்து வைப்போம்.
அடுத்துஓமம் போடாத ஓமப்பொடி செய்வோம்.
வேண்டியவைகள்.
1கப் கடலைமாவு, கால்கப் அரிசி மாவு, உருக்கிய வெண்ணெய்ஒரு
டேபிள் ஸ்பூன், 2ஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயம்
சேர்த்து, ஜலம் விட்டுப் பிசைந்து, காயும் எண்ணெயில் ஓமப்பொடி
அச்சில் மாவை இட்டுப் பிழிந்து கரகர பக்குவத்தில் ஓமம் போடாத
ஓமப் பொடி தயாரித்து வைத்துக் கொள்வோம்.
மேலும் வேண்டியவைகள்.
கால்கப் பொட்டுக் கடலையை லேசாக சூடு படுத்தி வைத்துக்
கொள்வோம்.
வேர்க் கடலை ஒருகப் வறுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்வோம்.
இஷ்டத்திற்கு வேண்டிய முந்திரியும் வறுத்துக் கொள்வோம்.
கறிவேப்பிலையும் ஒரு அரைகப் வறுத்துக் கொள்ளலாம்.
எண்ணெயில்தான்.
கடைசியாக அவலுக்கு வறுவோம்.
ஒரு கப் அவல்.
கொஞ்சம் எண்ணெயைக் காய வைத்து அகலமான டீ
வடிக்கட்டியை எண்ணெயில் வைத்து, வடிக்கட்டியில்
சிறிது அவலைப் போட்டு வறுக்கவும். அவல் பொரிந்ததும்
வடிக் கட்டியை மேலே தூக்கி சுலபமாக எண்ணெயை
வடிக்கட்டி அவலை எடுத்து விடலாம்.
இப்படியே அவலைப் பொறித்து டிஷ்யூ பேப்பரில் போட்டு
எண்ணெய் நீக்கவும்.
கடைசியில் 1டீஸ்பூன் மிளகாய்ப் பொடி, உப்பு, பெருங்காயப் பொடி
கால் டீஸ்பூன் நெய்யில் கலந்து பிசறி யாவற்றையும், ஒரு பெறிய
தாம்பாளத்தில் சேர்த்துக் செய்தவைகள் யாவற்றையும் சேர்த்துக்
கலக்கவும்.
ருசி பார்த்து உப்பு காரம் சேர்க்கவும்.
அரிசி மிட்டாய், குச்சியாக நறுக்கி வறுத்த உருளை வறுவல்
யாவும் சேர்க்கலாம்.
பொதுவாக கடலைமாவு, அரிசி மாவு, எண்ணெய், உப்பு, நெய்
பேக்கிங் ஸோடா, பொட்டுக் கடலை,வேர்க் கடலை, முந்திரி
அவல்,,கறிவேப்பிலை, மிளகாய்ப் பொடி, பெருங்காயம்
இவைகள் முக்கியமாக வேண்டும்.
எதிரில் யாரிடமோ சொல்வது போல எழுதிவிட்டேன் போல இருக்கிரது.
சீரகமோ, பெருஞ்சீரகமோகூட வறுத்துப் போடலாம்.
ஓம்ப் பொடி
வேண்டியவைகள்.
சலித்த கடலைமாவு—–ஒருகப்
சலித்த அரிசி மாவு——கால்கப்
வெண்ணெய்—-ஒரு டேபிள் ஸ்பூன், சற்றே உறுக்கியது
எண்ணெய்—–ஒரு ஸ்பூன், நன்றாக சூடாக்கியது
ருசிக்கு உப்பு—-வேண்டிய அளவு
ஓமம்—-ஒரு டீஸ்பூன், பொடித்து சிறிது ஜலத்தில் கறைத்து வடிக்கட்டவும்.
ஓம்ப் பொடி, பொறிப்பதற்கு—–வேண்டிய எண்ணெய்
செய்முறை.
இரண்டு மாவுகளுடன்,எண்ணெய், வெண்ணெய், உப்பு ப் பொடி கலக்கவும்.
வடிக்கட்டிய ஓம ஜலத்தைவிட்டு மேலும் வேண்டிய ஜலம்
விட்டு மாவை மிருதுவாகப் பிசையவும்.
ஓமப்பொடி அச்சில் எண்ணெயைத் தடவவும்.
மாவு சற்று சுலபமாக பிழியும் அளவிற்கு தளர்வாக
இருந்தால்தான் பிழிவதற்கு சுலபமாக இருக்கும்.
இதற்காகவே ஒரு ஸ்பூன் காயும் எண்ணெயை மாவில்
அதிகமாக விடவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து ,,பிசைந்த மாவை
அச்சிலிட்டு, நெறுக்கமான வட்ட மாக மா வைப் பிழியவும்.
வேகும் சலசல ஓசை அடங்கும் போது திருப்பிவிட்டு கரகரப்பான
பதத்தில் அக்கரையுடன் எடுத்து வடிக்கட்டியில் டிஷ்யூ பேப்பர்
வைத்து வடிக்கட்டி, எடுத்து வைக்கவும். மிகுதி மாவையும்
இப்படியே செய்து எடுக்கவும்.
அதிகம் செய்வதானாலும், மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகவே
பிசைந்து செய்வது நல்லது.
கலராக இருக்க வேண்டுமானால் துளி மஞ்சள் கேஸரி பவுடர்,
விருப்பமானால் சேர்க்கலாம். ஓமப் பொடி ரெடி, சொல்வது
ஓம்ப் பொடிதானே_?
காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வைக்கவும்.
பூந்தி boondhi
வேண்டியவை—–ஒருகப் கடலைமாவு
கால்கப் அரிசிமாவு, கேஸரி கலர் ஒருதுளி
ருசிக்கு உப்பு, கால் டீஸ்பூனிலும் பாதியளவு சமையல் ஸோடா இவைகளை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
பொரிப்பதற்கு வேண்டிய எண்ணெய்.
செய்முறை——–மாவுக் கலவையை சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான தோசைமாவு போல கரைத்துக் கொள்ளவும்.
குழிவான வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, பூந்தி தேய்க்கும் கரண்டியில் [உபகரணத்தில்] முக்கால் கரண்டி மாவை விட்டு, எண்ணெயினின்றும் தூக்கலாக கரண்டியைப் பிடித்துக்கொண்டு, குழிக்கரண்டியின் அடிப் பாகத்தினால் மாவைத் தேய்க்கவும்.
பூந்திகள் எண்ணெயில் விழுந்து பொரியும். கிளறி விட்டு சல்லிக் கரண்டியினால் பூந்தியை எடுத்து வடிக்கட்டியில் போட்டு எண்ணெய் நீக்கவும். இப்படியே மிகுதி மாவையும் பூந்திகளாகத் தயாரிக்கவும்.
கரகர என்ற பதத்தில் வேகவிட்டு எடுக்கவும்.
வறுத்த முந்திரி, வேர்க்கடலை முதலானவற்றுடன், உப்பு ,காரம், காயம் பொடிகள் சேர்த்து பூந்தியைக் கலந்து கொடுக்கலாம்.
தயிர்ப் பச்சடி செய்யவும் பூந்தியை உபயோகிக்கலாம். மிக்சர் செய்யவும் உபயோகமாகும்.
லட்டு செய்ய தனி கடலைமாவில் பூந்தி செய்ய வேண்டும். அதைப் பிறகு எழுதுகிரேன்.
கார முருக்கு.—kara murukku.
வேண்டியவை—–—-அரிசிமாவு ஒருகப் ,இரண்டரைகப்கடலைமாவு
மிளகாய்ப் பொடி ஒரு டேபிள் ஸ்பூன்,
பெருங்காயப் பொடி அரைடீஸ்பூன்,—சீரகம் ஒரு டீஸ்பூன்.
வெண்ணெய் இரண்டு டீஸ்பூன்,—-எள் இரண்டு டீஸ்பூன்
பொரிக்க எண்ணெய்,——–ருசிக்கு உப்பு
செய்முறை—– எண்ணெய், உப்பு, நீங்கலாக எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து இரண்டு பாகமாகப் பிரித்துக் கொள்ளவும்,
வேண்டிய உப்பு ஜலம் சேர்த்து ஒரு பங்கு மாவை நன்றாகவும், மென்மையாகவும் பிசையவும்,
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, முருக்கு அச்சு போட்ட ,குழலில்,உள்ளே எண்ணெயைத் தடவி கொள்ளளவுக்கு, மாவைப் போட்டு முருக்குகளாகப் பிழிந்து, கரகரப்பான பதத்தில் வேகவைத்து எடுக்கவும்,
மிகுதி மாவையும், இதே மாதிரி பிசைந்து முருக்குகளாகச் செய்யவும்.
உப்பு காரம் அவரவர் ருசிக்கு கூட்டி குறைக்கவும்.
கடலைமாவின் ரிப்பன் பகோடா

கடலைமாவின் ரிப்பன் பகோடா
வேண்டியவைகள்
—–1கப் அரிசிமாவு.
கடலைமாவு——2கப்,——பெருங்காயப் பொடிகால் டீஸ்பூன்
4 டீஸ்பூன் வெண்ணெய்,———ஒனறரை டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
ருசிக்கு உப்பு,—–பொரிக்க எண்ணெய்,——-எள், அல்லது கசகசா 1 ஸபூன்
செய் முறை.—-இரண்டு மாவுகளையும் காரம், காயம், வெண்ணெய், கசகசா சேர்த்து, நன்றாகக் கலந்து 2பங்காகப் பிரித்துக் கொள்ளவும்.
ஒரு பங்கு மாவை வேண்டிய உப்பு ஜலம் சேர்த்து மென்மையாகவும் நனறாகவும், பிசைந்து கொள்ளவும். சிறிது தேங்காய்ப் பால் சேர்த்தும் பிசையலாம். மீதி மாவையும் இப்படியே உபயோகிக்கவும்.
ரிப்பன் அச்சு போடப்பட்ட குழலில் உள்ளே எண்ணெயைத் தடவி பிசைந்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, வாணலியில்காயும் எண்ணெயில் ரிப்பனைப் பிழிந்து ,திருப்பிப் போட்டும் வேகவைத்து ,கரகரப்பான பதத்தில் எடுத்து வடிய வைத்து உபயோகிக்கவும்.
மாவைக கொ்ஞ்சமாகப் பிசைவது சிவக்காமலிருக்க உதவும்.