Posts filed under ‘டால் வகைகள்’
டால்வகையில் வெள்ளைக் காராமணி.
நாம் அநேகமாக சுண்டல்,கூட்டுமுதலானவைகள்தான் இதில் அடிக்கடி செய்வோம். அதிலும் இனிப்புப் போட்ட சுண்டல்தான் வெகு இடங்களில். என் நாட்டுப்பெண் இந்த டாலை பூரி,ரொட்டிகளுக்காகவும்,சாதத்துடனும் ஒரு மாற்றத்திற்காகச் செய்வாள் . அப்படிச் செய்தது தான் இதுவும். பூரியும் இருக்கிறது. எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளலாம்.
தட்டப்பயறு,காராமணி, பெரும்பயறு என்று பலவிதப் பெயர்களில் பல வகைகள் கிடைக்கிறது. இது ப்ளாக் ஐ பீன்ஸ் என்று சொல்லப்படும் வெள்ளைக் காராமணி. ஹிந்திியில் Bபோடி
காராமணி,கத்தரிக்காய்,பலாக்கொட்டை இவைகள் சேர்த்துச் செய்யும் கூட்டு ருசியானது. இதில் பலாக் கொட்டை இல்லை. இதுவும் தானாக வருகிறது.
நாம் இப்போது டால் செய்வதைப் பார்க்கலாம்.
வேண்டியவைகள். டால் செய்வதற்கு–
வெள்ளைக்காராமணி—1 1/2 கப்,
வெங்காயம்–திட்டமானசைஸ்–2 பூண்டு இதழ்–4. இஞ்சி அரை அங்குலத் துண்டு.
பழுத்த தக்காளி–2
பொடிக்க —மிளகு–1டீஸ்பூன், லவங்கம்–4, பட்டை சிறிதளவு, ஏலக்காய்–1
பொடிகள்–மிளகாய்ப்பொடி—1டீஸ்பூன், தனியாப்பொடி—-2 டீஸ்பூன், மஞ்சள்பொடி–1டீஸ்பூன்
தாளிக்க —எண்ணெய்,நெய் வகைக்கு ஒரு டேபிள்ஸ்பூன். சீரகம்—1டீஸ்பூன்
கொத்தமல்லி, எலுமிச்சை ஒரு பாதி. ருசிக்கு—உப்பு.
செய்முறை.
வெள்ளைக்காராமணியை தண்ணீரில் நன்றாகக் களைந்து நான்கு மணி நேரம் ஊறவிடவும்.
வெங்காயம்,பூண்டு,இஞ்சி இவைகளைச் சுத்தம் செய்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியாக பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அல்லது அரைத்துக் கொள்ளவும்.
பொடிக்கக் கொடுத்தவைகளை முடிந்தவரை பொடிக்கவும்.
காராமணியின் தண்ணீரை நீக்கிவிட்டு மூன்று கப் தண்ணீரைச் சேர்த்து மஞ்சள் பொடியுடன் குக்கரில் நேரிடையாக மிதமான தீயினில் இரண்டு விஸில்வரும்வரையில் வைத்து இறக்கி விடவும்.
நன்றாக வெந்திருக்கும். ஒரு ஸ்பூன் வெந்த காராமணிையை எடுத்து மசித்துச்
சேர்க்கவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் நெய்யைவைத்துக் காய்ந்ததும் சீரகத்தைப் பொரியவைத்து, அரைத்த வெங்காயக் கலவையைச் சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து சுருண்டு வரும்போதுபொடிகளைச் சேர்த்துப் பிரட்டவும். பின்னர் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
டாலிற்கு வேண்டிய உப்பையும் சேர்க்கவும். தண்ணீர் வேண்டுமானால் ஓரிரண்டு கரண்டி இப்போதே சேர்த்துக் கொதிக்க விடவும் . வேகவைத்த காராமணிையைத் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். சற்று நெகிழ வைத்தால்தான் ஸரியாக இருக்கும்.
இந்தப்படம் எடுக்க மறந்துவிட்டது.
உப்புக்,காரம் ஸரிபார்த்து பச்சைக் கொத்தமல்லியால் அலங்கரிக்கவும். எலுமிச்சை சாறு வேண்டியளவு சேர்க்கவும். போலில் வைக்கவும்.
டாலும், பூரியுமாகச் சாப்பிடுங்கள். வெள்ளைக்காராமணிடால் ரொட்டி,சாதம் யாவற்றினுடனும் ஸரிவருகிறது.
நன்றி வழக்கம்போல மருமகளுக்கு.
டால் ஒன்று புதிதாய்,பயறும்,கருப்பு மசூர் முழுப் பயறும்.
ரொட்டிக்காக தயாரிக்கப்படும் முழு தானியங்களைக் கொண்டது இது. சாதத்துடனும் சாப்பிடலாம். முயற்சித்துப் பாருங்கள்.
Continue Reading ஜூலை 15, 2013 at 10:21 முப 8 பின்னூட்டங்கள்
டால்மஃக்னி. ராஜ்மா
ஸாதாரணமாக முழு உளுந்தும், ராஜ்மாவும் சேர்த்து செய்வது
டால்மஃக்னி.
இது சின்னவகை,ராஜ்மாவும், மஃக்னியும் சேர்த்துச் செய்தது.
இதுவும் ருசியானதுதான். ரொட்டி பூரியுடனும், சற்று லூஸாகச்
செய்து சாதத்துடனும் சாப்பிட நன்றாகவே இருக்கிறது.
எனக்குத் தெறிந்ததை நான் எழுதுகிறேன். நீங்களும் செய்து
பாருங்கள். அத்தோடு கொஞ்சம் கருத்தையும் சொல்லுங்கள்.
இப்போது வேண்டிய ஸாமான்களைப் பார்ப்போமா?
வேண்டியவைகள்.
சிரியவகை ராஜ்மா—-1 கப்
மஃக்னி—-அரைகப்
வெங்காயம்—2
தக்காளி—-1
பூண்டு இதழ்—-4
இஞ்சி—-சிறிய துண்டு.
வேண்டிய பொடிகள்
மிளகாய்ப் பொடி –அரைடீஸ்பூன். காரத்திற்கு வேண்டியபடி
மஞ்சள்ப்பொடி—அரை டீஸ்பூன்
தனியாப்பொடி–1 டீஸ்பூன்
சீரகப்பொடி—1 டீஸ்பூன்
எண்ணெய்—1டேபிள்ஸ்பூன்
வெண்ணெய்—1டேபிள்ஸ்பூன்
ருசிக்கு—உப்பு
பச்சைக் கொத்தமல்லி—வேண்டிய அளவு தூவ.
எந்த வகை மஸாலா வேண்டுமோ அந்த மஸாலாப்பொடி சிறிது.
செய்முறை.
1 சிறியவகை ராஜ்மாவைக் களைந்து அமிழ ஜலம் விட்டு
முதல் நாள் இரவே பாத்திரத்தில் ஊர வைக்கவும்.
2இஞ்சி,பூண்டு , வெங்காயம், தக்காளி இவைகளை மிக்ஸியில்
நைஸாக ஜலம்விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
3ராஜ்மாவைக் குக்கரில் ஜலம்வைத்து நன்றாக வேகவைக்கவும்.
4 பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து, அரைத்த விழுதைக்-
-கொட்டிக் கிளறவும். தீ நிதானமாக இருக்கட்டும்.
5 .விழுது கெட்டியாகி எண்ணெய்ப் பிறிந்து வரும் போது பொடிகளைப்
போட்டுக் கிளறவும்.
6 . வெந்த தண்ணீருடன் ராஜ்மாவைச் சேர்த்து , உப்பையும் போட்டு
நன்றாகக் கொதிக்கவிட்டு இரக்கவும்.
7 .வெண்ணெயைச் சூடாக்கி மஃக்னியை லேசாக வறுத்து
8 .கீழிறக்கின ராஜ்மாக் கலவையில் சேர்த்துக் கலக்கவும்.
பச்சைக் கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
9 . க்ரீமும் சேர்க்கலாம்.
10 .ரொட்டி வகையராக்களுடனும், ஏன் சாத வகைகளுடனும்
சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.
டால்.தோலுடன் கூடியபாசிப்பருப்பு
இந்த டாலைப் பயத்தம் பருப்பில் தயாரிப்போம். அதுவும்
தோலுடன் கூடிய பருப்பு. ருசி நன்றாகவே இருக்கிரது.
டால் வகைகளை தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பிலும்
தயாரிக்கலாம்.
ரொட்டி. பூரி வகைகளுடனும், சாத வகைகளுடனும் சேர்த்தும்
.உண்ணலாம்.
எளிய வகைதான். வேண்டியவைகளைப் பார்ப்போம்.
தோலுடன் கூடிய பயத்தம் பருப்பு—-முக்கால் கப்
பொடிக்க ஸாமான்—மிளகு–அரை டீஸ்பூன்
சீரகம்—1டீஸ்பூன்
லவங்கம்—4
நறுக்க வேண்டியவைகள்—பச்சைமிளகாய்–3
வெங்காயம்—-2
உறித்த பூண்டு இதழ்கள்—4
தக்காளி—1
இஞ்சி—சிறிது
தாளிக்க எண்ணெய், நெய் வகைக்கு 2, 3 டீஸ்பூன்கள்
பிரிஞ்சி இலை—1
சிவப்பு கேப்ஸிகம்—-விருப்பத்திற்கு
பொடிகள்—மஞ்சள்பொடி—1டீஸ்பூன்
மாங்காய்ப்பொடி–1 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—சிறிது
ருசிக்கு,—உப்பு, துளி சர்க்கரை
செய்முறை— பருப்பைக் களைந்து சற்று ஊறவைத்து, மஞ்சள்ப்
பொடி, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் ப்ரஷர் குக்கரில்
2விஸில் வரும்வரை வைத்து வேகவிட்டு இறக்கவும்.
பொடிக்கக் கொடுத்த ஸாமான்களைப் பொடிக்கவும்.
வெங்காயம் ,இஞ்சி மிளகாய், பூண்டு வகைகளைப் பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியாக நறுக்கிக் கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் நெய்எண்ணெயைக்காயவைத்து
பிரிஞ்சி இலையைப்போட்டு , வெங்காய வகையாராக்களையும்
சேர்த்து நன்றாக வதக்கவும். சுருள வதக்கி , பொடித்த
பொடியைப்போட்டுப் பிரட்டி நறுக்கிய தக்காளியையும் சேர்த்து
பின்னும் வதக்கவும்.
பெருங்காயம், மாங்காய்ப் பொடி சேர்க்கவும்.
வெந்த பருப்பைச் சிறிது மசித்து தாளிப்பில் சேர்த்து, வேண்டிய
உப்பு, துளி சக்கரை சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
ஆம்சூர் வேண்டாதவர்கள், எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.
பொடித்து போடுவது நல்ல வாஸனையைக் கொடுக்கும்.
காரம் வேண்டிய அளவு மிளகாயோ, பொடியோ கூட்டிக்
கொள்ளலாம்.
ரொட்டிக்காகவென்றால் டாலை சற்று திக்காகவும்,
சாதவகையுடனென்றால் சற்று நீர்க்கவும் தயாரிப்போம்.
பச்சைக் கொத்தமல்லி தூவி உபயோகிக்கலாம்.
காப்ஸிகம் சேர்த்தால் கண்ணிற்கும் விருந்தாக இருக்கும்.
தோலுடன் கூடிய பயத்தம் பருப்பு ஆதலால் வேக வைக்கும்
போது தண்ணீர் அதிகம் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
தாளித்து பருப்பில் சேர்த்தாலும், பருப்பை தாளிதத்தில்
சேர்த்தாலும் எல்லாம் ஒன்றுதான்.
கடலைப்பருப்பின் ஸப்ஜி
இதுதான் கடலைப் பருப்பில் செய்யும் டால்.
அதிகம் அரைத்து, கரைத்து விடாமல் சுலபமாக
செய்யக்கூடிய ஒன்று. தனித்த கடலைப் பருப்பில்
செய்வது.
வேண்டியவைகள்–
கடலைப் பருப்பு —அரைகப்
பெரிய பழுத்த தக்காளிப்பழம்—1
தோல்நீக்கிப் பொடியாக நறுக்கிய வெங்காயம் அரைகப்
நெய்–1 டீஸ்பூன்
எண்ணெய் –2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி–கால் டீஸ்பூன்
மஞ்சள் பொடி –சிறிது
சீரகப்பொடி—கால் டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு —நறுக்கிய சில துண்டுகள்
ருசிக்கு—உப்பு
கொத்தமல்லித் தழை—வாஸனைக்கு
செய்முறை.—-பருப்பைத் தண்ணீர் விட்டுக் களைந்து
திட்டமாக ஜலம் சேர்த்து, மஞ்சளும் போட்டு,ப்ரஷர்–
—குக்கரில் மலர வேகவிடவும்.
வாணலியில் எண்ணெயும், நெய்யுமாக காயவைத்து
வெங்காயம்,இஞ்சி,பூண்டு வகைகளை நன்றாக வதக்கி,
பொடிகளையும் சேர்த்துப் பிரட்டி, தக்காளித் துண்டுகளை
-ச் சேர்த்து நன்றாக வதக்கி சிறிது ஜலம் சேர்த்துக்
கொதிக்க விடவும்.
உப்பு சேர்த்து, பருப்பைச் சற்று மசித்தமாதிரி வதக்கிய
கலவையில் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கி, மல்லித்தழை
தூவி உபயோகிக்கவும்.
ரொட்டியுடன் சேர்த்துச் சாப்பிட இதுவும் ஒரு வகை. சில பேர்
ஒரு துளி சக்கரையும் சேர்க்கிரார்கள்.
விருப்பம்போல்எதையும் கூட்டிக்கழிக்கலாம்.அதுநம்கையில்
சிறிது புதிநா, பாலக் இவைகளை ப் பொடியாக நறுக்கி
வதக்கும் போது சேர்க்கலாம்.
முழு உளுந்து மஸாலா.
வேண்டியவைகள்
கருப்பு முழு உளுந்து—–1 கப்
ராஜ்மா—–கால்கப்
இஞ்சி—-1 அங்குலத் துண்டு
பூண்டு—–7 —-8,இதழ்கள்
வெங்காயம்—-பெரியதாக 3
தக்காளிப் பழம்–2
மிளகாய்ப் பொடி—-1 டீஸ்பூன்
தனியாப் பொடி—1 டீஸ்பூன்
பெரிய ஏலக்காய்—-1
லவங்கம்—–5
பட்டை—-மிகச் சிறிய அளவு
வெண்ணெய்—-2 டீஸ்பூன்
எண்ணெய்—–2 டேபிள் ஸ்பூன்
ருசிக்குத் தேவையான—-உப்பு
தக்காளி ஸாஸ் 2 டீஸ்பூன்
செய்முறை—–உளுந்து,ராஜ்மாவை முதல் நாள் இரவே களைந்து
தண்ணீரில் ஊற வைக்கவும்.
பட்டை லவங்கத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டு, வெங்காயத்தைத் தனியே நறுக்கி அரைத்துக்
கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
தக்காளியையும் தனியே அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை——ஊற வைத்தத் தண்ணீரை இறுத்துவிட்டு, உளுந்தை
4 கப் தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேகவிடவும்.
2—3 —-விஸில் வந்த பிறகு தீயை ஸிம்மில் வைத்து
7,—-8 நிமிஷங்கள் வேக வைத்து இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காயவைத்து, ஏலக்காய்,
வெங்காய விழுதைப்போட்டு நன்றாக வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் சமயம் வரை வதக்கி
மிளகாய்,தனியாப்பொடி. மஸாலா சேர்த்துக் கிளறி
அரைத்த தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
நன்றாகச் சேர்ந்து வரும் போது எடுத்து, வெந்த
உளுந்தில் சேர்க்கவும்.
உப்பு, டொமேடோ ஸாஸ் கலந்து வெண்ணெயையும்
சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கவும்.
தளர்வு செய்ய வேண்டுமானால் கொதிக்கும் போதே
ஜலம் சேர்க்கவும்.
க்ரீம் சிறிது சேர்த்தாலும் ருசி கூடும்.
ரொட்டி, சாதம் என எதனுடனும் சாப்பிடலாம்.
காரம் கூட்ட மிளகாய்ப் பொடி அதிகம் போடவும்.
மிக்ஸ் டால்
இந்த டாலை எல்லாவித பருப்புகளைக் கலந்து செய்யலாம்.
அதாவது கதம்பப் பருப்புதான் இது.
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு,பாசிப்பருப்பு,
கருப்பு உளுத்தம் பருப்பு ஆக எல்லா வகைகளிலும்
சமமாகக் கலந்து ஒருகப் பருப்பு எடுத்துக் கொள்க-
மற்றும் வேண்டியவை.
பழுத்த தக்காளிப் பழம் —-மூன்று
பச்சை மிளகாய்—–மூன்று
சின்ன வெங்காயம்——உறித்தது ஒருகப்
பூண்டு——5 அல்லது6 இதழ்கள்
இஞ்சி– அரை அங்குலத் துண்டு
லவங்கம்——6
எண்ணெய், நெய்,— 5 அல்லது 6 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு,——சிறிது மஞ்சள்ப் பொடி
வாஸனைக்கு —-பச்சைக் கொத்தமல்லி
செய்முறை——பருப்பைக் களைந்து அரைமணி நேரம்
முன்பே தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாயைப் பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியே நறுக்கிக கொள்ளவும்.
ப்ரஷர் பேனிலோ, அல்லது குக்கரிலோ நெய் கலந்த
எண்ணெயைச் சூடாக்கி லவங்கத்தைப் பொரித்து
தக்காளி நீங்கலாக வெங்காய வகைகளைப் போட்டு
வதக்கவும். வதங்கிய பின் தக்காளி சேர்த்துவதக்கவும்.
யாவும் வதங்கிய பின் ஊற வைத்த பருப்பு, மஞ்சள்,
உப்பு வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில்
வேக வைக்கவும்.
அவரவர்கள் குக்கரில் பருப்பு வேக எத்தனை விஸில்
என உங்களுக்குத் தெரியும். அப்படி வேக விடவும்.
ப்ரஷர் போன பின், கரண்டியால் மசித்து நறுக்கிய
கொத்தமல்லி தூவி உபயோகிக்கவும். அதிகம்
காரத்திற்கு வெறும் மிளகாய்ப் பொடியும் போடலாம்.
மிகவும் கெட்டியாக இல்லாமல் வேண்டிய அளவிற்கு
சிறிது வென்நீர் அவசியமானால் கலந்து கொள்ளவும்.
ரொட்டி, சாதம் மற்றும் விருப்பப் பட்டவைகளுடன்
சேர்த்து உபயோகிக்கவும்.
ரொட்டிக்கு உதவும் டால்
வேணடியவைகள்—-முக்கால்கப் பயத்தம் பருப்பு
கால்கப் கடலைப்பருப்பு, ஒரு துளி மஞ்சள்பப்பொடி.
மஸாலா ஸாமான் பொடிக்க—லவங்கம்-8 , பட்டை ஒரு சிறிய துண்டு,——-பெரியவகைஏலக்காய்1,—–மிளகுஅரை டீஸ்பூன் இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
நறுக்க வேண்டிய சாமான்கள்-பெரிய்ளவுபழுத்த தக்காளி 2,-
பச்சைமிளகாய 2,—சி றிய துண்டு இஞ்சி, விருப்பப் பட்டவர்கள் 2 பல்பூண்டும் சேர்க்கலாம். பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ருசிக்கு உப்பு,——தாளிக்க நெய,எண்ணெய்,சீரகம் .அலங்கரிக்கபச்சை கொத்தமல்லி,எலுமிச்சைத் துண்டுகள்.-
செய்முறை———-பருப்புகளை அரைமணிநேரம் ஊறவைத்துக் களைந்து தண்ணீர் சேர்த்து குக்கரிலோ பாத்திரத்திலோ மலர வேக வைத்துக் கொள்ளவும். அதிகம் குழையாமல் இருக்க நிதான தீயில் பாத்திரத்திலேயே மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
இரண்டு டேபிள்ஸேபூன் எண்ணெயும் நெய்யுமாகக் கலந்து,வாண லியில் காயவைத்து அரைஸ்பூன் சீரகம் தாளித்து நறுககிய மிளகாய்,இஞ்சி,வெங்காயம் சேர்த்து சுருள வதக்கவும். பின் மஸாலாப்பொடியைச் சேர்த்து ஒர் நிமிஷம் வதக்கிய பின்னர், தக்காளியையும் சேர்த்து வதக்கவும். யாவும் குழைந்து சேர்ந்து வரும்போது கரண்டியால் நனறாக மசித்து வெந்த பருப்பையும் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைத்து இரக்கவும்.
நறுக்கிய கொத்தமல்லிஇலையைத்தூவி எலுமிச்சைத் துண்டுகளுடன் கிண்ணங்களில்பருப்பை நிரப்பி , ரொட்டியுடன் பரிமாறவும்.
பருப்பை கெட்டியாகவோ சற்று நீர்க்கவோ செய்ய கொதிக்கும்போதே தண்ணீரைச் சேர்க்க வேண்டும். எல்லா வகைப் பருப்புகளிலும், தயார் செய்யலாம்.