Posts filed under ‘டிபன் வகைகள்’
மினுமினு முருங்கைக்கீரை அடை
தொடர்ந்து ப்ளாக் போஸ்ட்செய்ய ரிப்ளாக்தான் உபயோகமாகிறது. தின்க அலுக்காதது முருங்கைக்கீரை அடை. திரும்பவும் செய்யுங்கள்.ருசிக்கும். அன்புடன்.
தாய்லாந்து ஸ்டைல் நூடுல்ஸ்.
நூடல்ஸில் பனீர் சேர்த்துச்,செய்யும் விதமிது..ஸ்ப்ரவுட்ஸ்,வேர்க்கடலை முதலானது சேர்த்துச் செய்ததை மருமகள் அனுப்பிய குறிப்பிது. நம் விருப்பப் படி சற்று மாற்றியும் செய்யலாம். உங்கள் திறமைகளும், வெளிக் கொணறலாம். பாருங்கள்,செய்யுங்கள்.
Continue Reading மார்ச் 31, 2014 at 7:19 முப 19 பின்னூட்டங்கள்
நொய் புளி உப்புமா அல்லது புளிப் பொங்கல்.
கிராமங்களில் அடிக்கடி செய்யக்கூடியது இந்தவகை. யாவரும் நெல்லை
மிஷினி்ல் கொடுத்து அரிசியாக செய்து வரும்போது எப்படியும் சிறிதளவாவது
அரிசி இடிந்து நொய்யாக அதாவது குருணையாக மாறும். அதைத் தனியாக
எடுத்துப் பல விதங்களில் உபயோகப் படுத்துவார்கள். புழுங்கலரிசியில் அதிகம்
நொய் விழுவதில்லை. நான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே இந்தப் புளி உப்புமாவை
எழுத நினைத்தும் ஒன்று நொய் கிடைப்பதில்லை. இவ்விடம்
வரும்போது கவனத்தில் வருவதில்லை. இந்த ஸமயம் எல்லாம்
கூடி வந்தது. வகையாகவும் அமைந்தது. இது என்ன மஹாப்பெறிய
வஸ்துவென்று நினைக்கலாம். இங்கே சென்னையில் வீட்டைச் சுற்றி
பெயின்டிங் வேலை நடைபெற்றது. வேலையாட்கள் மிகவும் தூரத்திலிருந்து
வருவதால் அவர்களுக்கு டிபன், சாப்பாடு வீட்டிலேயே செய்து
கொடுத்தார்கள். இதில் நானும் இந்த உப்புமாவைச் செய்யும்படி சொல்லி
ஞாபகப்படுத்திக் கொண்டேன். எனக்கு உங்கள் யாவருடனும் அதைப்
பகிர்ந்து கொள்வதுதானே முக்கியக் காரணம். புளிப்பொங்கல் எனக்கு
ரொம்பவே பிடித்திருந்தது. கதையில்லை நிஜம் இது. சிறிய அளவில்
வேண்டியதைப் பார்ப்போம்.
வேண்டியவைகள்—
அரிசி நொய்–2 கப்
புளி—ஒரு கெட்டியான பெரிய நெல்லிக்காயளவு.
நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
கடுகு—அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு—வகைக்கு 2டீஸ்பூன்கள்
மிளகாய்வற்றல்—3
வெந்தயம்–கால் டீஸ்பூன்
பெருங்காயம்–ஒரு சிறிய கட்டி
ருசிக்கு—உப்பு
தேவைக்கேற்ப—வெங்காய, பூண்டுத் துண்டங்கள்
கறிவேப்பிலை—10 அல்லது 15 இலைகள்
சிறிது மஞ்சள்ப் பொடி
செய்முறை—
நாம் இதை ரைஸ் குக்கரிலேயே செய்வோம். மிகவும் சுலபம்
அரிசி நொய்யைக் களைந்து கல்லில்லாமல் அறித்தெடு்த்து தண்ணீரை
வடிக்கட்டவும்.
புளியைத் தண்ணீரில் ஊற வைத்து 2,3 முறை தண்ணீர்விட்டுக்
கறைத்துச் சக்கையை நீக்கவும்.
புளித்தண்ணீரை அளந்து விடவும்.மேற்கொண்டு தண்ணீர் சேர்த்து
ஒரு பங்கு நொய்யிற்கு 3 பங்கு தண்ணீரென மொத்தக் கணக்கில்
அளந்து விடவும்.
வாணலியில் நல்லெண்ணெயைக் காயவைத்து, கடுகு,வெந்தயம்,மிளகாய்,
பருப்புகள், பெருங்காயம் இவைகளைத் தாளித்துகறிவேப்பிலை,பூண்டு,
வெங்காயத் துண்டுகள் இவைகளையும் சேர்த்து வதக்கி புளித்தண்ணீருடன்
கூடிய நொய்யில் சேர்க்கவும்.
வேண்டிய உப்பு, மஞ்சள்ப்பொடி சேர்த்து ரைஸ் குக்கரில் இவைகளை
மாற்றி குக்கரை ஆன் செய்யவும்.
பதமாக வெந்து முடிந்ததும், குக்கரைத் திறந்து கரண்டிக் காம்பினால்
வெந்த கலவையை நன்றாகக் கிளறி மூடவும்.
5 நிமிஷங்கள் கழித்துத் தயாரான புளிப் பொங்கலை சுடச்சுடப்
பகிர்ந்து உண்ண வேண்டியதுதான்.
புளி, காரம் இரண்டுமே அதிகப்படுத்தலாம். இஞ்சி, பச்சை மிளகாய்
சேர்க்கலாம். வேர்க்கடலை தாளிக்கலாம். ரிச்சாக தயாரிப்பதானால்
இருக்கவே இருக்கிறது முந்திரி.
பாஸ்மதி அரிசியின் நொய் ஆனால் 2 பங்கு ஜலமே போதும்.
இது ஸிம்பிள் தயாரிப்பு.
பொங்கலோ, உப்புமாவோ எந்த பெயர் வேண்டுமானாலும் நாம்
சொல்லலாம்.
4 கப் செய்ததை அப்படியே போட்டிருக்கேன். யார் வேண்டுமானாலும்
எடுத்துச் சாப்பிடலாம்.
.
சேர்த்துப்
புழுங்கலரிசி சேவை
சேவை என்பது இடியாப்பம். எனக்கு இந்த பெயர் முன்பெல்லாம்
தெரியாது. சேவை என்றே சொல்லி வழக்கம்.
இந்தப் பெயரும் நன்றாகவே இருக்கிறது. இதனுடன் கலக்கும் பொருளைக்
கொண்டு பெயர் சொல்லுவோம். தேங்காய், எள், எலுமிச்சை,வெல்லம்,
தயிர்,காய்கறி, மோர்க்குழம்பு, தேங்காய்ப் பால் என பட்டியல் நீளும்.
இப்போது இடியாப்பம் குருமா தான் முதலிடத்தில் இருக்கிறது.
நாம் முதலில் ப்ளெயின் சேவை தயாரிப்பதைப் பற்றி அதுதான்
புழுங்கலரிசியில் தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.
வேண்டியவைகள்
புழுங்கலரிசி—3கப். இட்டிலிக்கு உபயோகிக்கும் அ ரிசி
இடியாப்பம் செய்ய உபயோகிக்கும் — சேவை நாழி
அரிசியைக் களைந்து நன்றாக ஊறவைக்கவும்.
செய்முறை-
கிரைண்டரில் , ஊறிய அரிசியை ப் போட்டு அதிகம் ஜலம் விடாமல்
கெட்டியாகவும், நைஸாகவும் அரைத்தெடுக்கவும்.
இட்டிலி வார்ப்பது போல குழித்தட்டுகளில் எண்ணெய் தடவி மாவை
விட்டு ரெடி செய்யவும்.
சேவை நாழியில் உட்புறம் லேசாக எண்ணெய் தடவி வைக்கவும்.
குக்கரில் அளவாக தண்ணீர்விட்டு இட்டிலி ஸ்டேண்டை வைத்து,
வெயிட் போட்டு இரண்டு விஸில் வரும் வரை மிதமான தீயில்
இட்டிலிகளாக வார்க்கவும்.
சாதாரண இட்டிலி வார்க்க வெயிட் போட மாட்டோம்.
நீராவி அடங்கிய பின் இட்டிலிகளை ஒன்றன் பின் ஒன்றாக
எடுத்து அச்சில் போட்டு அழுத்தி சேவைகளாகப் பிழிந்து
எடுக்கவும். சூட்டுடன் பிழியவும்.
திருகு முறையிலும், ப்ரஸ் செய்து பிழியும் முறையிலும்
சேவை நாழிகள் கிடைக்கின்றன.
ப்ளெய்ன் சேவை ரெடி.
இதனுடன் குருமா சேர்த்து சாப்பிடலாம்.
தேங்காய் சாதத்திற்கு தயாரிப்பது போல தாளிதம் செய்து
தேங்காயை வறுத்து சேர்க்கலாம். இது தேங்காய் சேவை.
எலுமிச்சை சாற்றில் தாளித்துக் கலக்கலாம். இது எலுமிச்சை
சேவை.
தயிரில் தாளித்து தயாரித்தால் தயிர் சேவை.
எள்ளில் தயாரித்தால் எள்ளு சேவை.
வெல்லப் பாகு சேர்த்து தயாரித்தால் வெல்ல சேவை.
மோர்க் குழம்பு, தேங்காய்ப் பாலுடனும், சாப்பிடும்
வழக்கம் உண்டு.
எல்லா காய் கறிகளுடனும், உப்பு சேர்த்து வதக்கி
ஸோயா ஸாஸ் கலந்தும் தயாரிக்கலாம்.
தக்காளியை உபயோகப் படுத்தலாம்.
குருமா தயாரித்து உடன் உபயோகிப்பதுதான் பிரபலமாக
உள்ளது.
நம்முடைய ரஸனைக்கு ஏற்றவாறு பலவிதங்கள்.
சுலபமாக மாவை அறைத்து முதல்நாளே பிரிஜ்ஜில்
வைத்துக் கொண்டு வேண்டும் போது தயாரித்து
உபயோகிக்கலாம்.
குருமா செய்முறை முன்பே இருக்கிறது.
சேவை படங்கள் சில.
எந்த விதமான ருசி வேண்டுமோ அந்த விதமான மேல் சாமான்கள்
கலவையைத் தயார் செய்து தக்கபடி ப்ளெயின் சேவையுடன்,
திட்டமாகக் கலந்தால் விருப்பமானது தயார்.
குருமா, தேங்காய்ப்பால், மோர்க்குழம்பு வகைகளை கிண்ணங்களில்
ஸ்பூனுடன் கொடுத்து ப்ளேட்டில் ப்ளெயின் சேவையைக் கொடுக்கவும்.
மற்ற வகைகளைக் கலந்த நிலையிலே சித்ரான்னங்கள் டைப்பில்
அழகாகக் கொடுக்கலாம்.
தோசையும் சுலப சட்னியும்.
இதுவும் வழக்கமான தோசைதான். நான் எந்த விகிதத்தில் அரிசி,
பருப்பு, கலந்து செய்கிறேனென்பதுதான் சொல்ல வந்த விஷயம்
என்று கூடத் தோன்றும். கரகரவென்று தோசை குழந்தைகளுக்குப்
பிடிக்கிரது. அதனால் நான் எப்படிச் செய்கிறேனென்று சொல்லுகிறேன்.
வேண்டியவைகள்.
இட்டிலிக்கு உபயோகிக்கும் புழுங்கலரிசி—3 கப்
பச்சரிசி—–1 கப்
துவரம்பருப்பு—-கால்கப்
வெந்தயம்—5 டீஸ்பூன்
நல்ல விழுது காணும் உளுத்தம் பருப்பு—-1 கப்
தேவைக்கு—-உப்பு
செய்முறை
அரிசிவகைகள், துவரம்பருப்பு, வெந்தயம் இவைகளைத் தண்ணீர்-
-விட்டுக் களைந்து சுத்தம் செய்து நல்ல ஜலம் விட்டு ஊற வைக்கவும்.
இதே போல் உளுத்தம் பருப்பையும் நன்றாகக் களைந்துத் தனியாக
ஜலம் விட்டு ஊறவைக்கவும்.
அரிசி நன்றாக ஊறினால் சீக்கிரம் அரைபடும்.
குறைந்த பக்ஷம் 5, 6 மணிநேரம் ஊறினால் நல்லது.
பருப்பு 2, 3 மணி நேரம் ஊறினால் கூட போதும்.
கிரைண்டரை நன்றாகச் சுத்தம் செய்து அலம்பி முதலில்
உளுத்தம் பருப்பைப் போட்டு திட்டமாக ஜலம் தெளித்து நன்றாக
அரைக்கவும். பஞ்சுப் பொதி மாதிரி, நன்றாகக் குமிழ்கள் வரும்படி
அரைக்கவும். நல்ல கிரைண்டரானால் 40 நிமிஷமாவது ஆகும்.
உளுந்து மாவைப் பூரவும் எடுத்துவிட்டு, அரிசியைச் சிறிது,சிறிதாகக்
கிரைண்டரில் போட்டு தண்ணீர் திட்டமாகச் சேர்த்து நன்றாக மசிய
வெண்ணெய் போல அறைக்கவும். இட்டிலி மாவைப்போல அல்ல.
நைஸாக அறைக்கவும். இப்போது வேண்டிய உப்பையும் சேர்க்கவும்.
2, 3 சுற்றுகள் சுற்றி முதலில் அறைத்து வைத்த உளுந்து விழுதையும்
சேர்த்து அறைக்கவும்.
இரண்டு மூன்று நிமிஷத்தில் மாவுக்கலவை ஒன்று சேர்ந்துவிடும்.
நல்ல சுத்தமான பாத்திரத்தில் மாவை எடுக்கவும்.சிலவுக்குத் தக்கபடி மாவைக் கொஞ்சம் வெளியில் வைத்தும்,
மிகுதியை ப்ரிஜ்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.
மாவு சற்று பொங்கி வருமளவிற்கு முதல்உபயோக மாவு வெளியில்
இருக்கலாம் . மிகுதி பிரிஜ்ஜில் இருந்தால்கூட மாவை 2, 3, மணி நேரம்,
தோசை வார்க்குமுன்னர் வெளியே எடுத்து வைத்தால் கூட போதும்.
மாவு பதமாக இருக்கும்.
தோசை வார்ப்பதற்கு நான் ஸ்டிக் தோசைக் கல்தான் சுலபமாகவுள்ளது.
கல்லில் எண்ணெய் தடவ, உருளைக் கிழங்கை பாதியாக நறுக்கி
எண்ணெயில் தோய்த்து உபயோகிக்கலாம்.
மாவைச் சற்று கெட்டியாகவே கறைத்து வைத்துக் கொள்ளவும்.
கல்லில் எண்ணெய் தடவி சூடாக்கவும்.
தீயை ஸிம்மில் வைத்து ஒரு கரண்டி மாவைக் கல்லில் விட்டு அடி-
-தட்டையான கரண்டியினால் மாவைச் சுழற்றி தோசையாகப்
பரப்பவும்.
தீயை அதிகமாக்கி, தோசையைச் சுற்றிலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய்
விடவும்.
தோசையின் மேல் பல பொத்தல்களுடன் ஈரப்பதம் குறையும்.
பதமாக தோசையைத் திருப்பிப் போட்டு தீயைக் குறைக்கவும்.
அடிபாக தோசை சிவக்க ஆரம்பித்தவுடன், திருப்பிப் போட்டு
மடித்து எடுக்கவும்.
கரகரஎன்று தோசை நன்றாக வரும்.
எண்ணெய் தடவி தோசையைப்பரப்பி, தீயை அதிகமாக்கி சுற்றிலும்
எண்ணெய்விட்டு , மேலே சொன்னபடிதான் மிகுதியும்.
இதுவே ஹாட் ப்ளேட்டானால் தீயைக் குறைத்தால் கூட ஒரு
தோசையின்இடைவெளியில் மற்றொன்று வார்க்குமுன் சிறிது
தண்ணீரைத் தெளித்து கல்லைத் துடைத்து வார்த்தால் தோசை
ஸரியாக எடுபடும்.
ஸரியாக புரிந்து கொண்டால் தோசை பட்டு பட்டாக வரும்.
தோசைத் திருப்பியை நுணியில் மாவு ஒட்டாமல் சுத்தமாக
வைத்துக் கொள்ளுதல் அவசியம்.
பசங்களுக்கு சட்டென்று அரைத்துப் போட ஒரு சட்னியும் கூட இதோ.
1வெங்காயம், ஒரு தக்காளிப்பழம், 1 பச்சைமிளகாய் நறுக்கிக்கொண்டு
எண்ணெயில் வதக்கவும்.
3டேபிள்ஸ்பூன் வேர்க்கடலையையும் சிவக்க வறுத்து கூட வைத்து
உப்பு சேர்த்து அரைத்தால் திடீர் சட்னியும் தயார். வேறு என்ன சேர்க்க
நினைக்கிறீர்களோ அதையும் சேர்த்து அரையுங்கள்.
வீட்டில் தோசை மாவு இருந்தால் துணைக்கு ஒருவர் இருப்பது போல
என்பது வசனம். வசனம் ஸரியாகத்தான் இருக்கும். இல்லையா
உருளைக்கிழங்கு கறி வைத்த மஸால் தோசை செய்யலாம்.
லேசாக சீஸ் தூவி தோசையை மடிக்கலாம்.
டொமேடோ, வெங்காயம் வதக்கி வைத்து தோசையை மடிக்கலாம்.
தோசையை மடக்கும் போது சிறிது வெண்ணெயைத் தடவி துப்பா-
-தோசை தயாரிக்கலாம்.
ஊத்தப்பம், நமது ரஸனைக்கேற்ப பொருள்களைக் கூட்டி விதவிதமாக
தயாரிக்கலாம்.
சுடச்சுட சாப்பிட கரகரதோசையும், எடுத்துப் போக மெத்தென்ற
மிருதுவான தோசையும் தயாரிக்கலாம்.
பலவித சட்டினி வகைகளும், மிளகாய்ப் பொடி தயாரிப்பும் ஏற்கெனவே
கொடுத்திருக்கிறேன்.