Posts filed under ‘பச்சடிவகைகள்’
நெல்லிக்காய்ப் பச்சடி
2011 வருஷ சொல்லுகிறேன் ரிவ்யூவில் 2011 வருஷத்திற்கு முன்பு
எழுதியவைகளை எழுதும்படி சொல்லியதாக ஞாபகம். இப்போது
செய்பவைகளை அவ்வப்போது போடுகிறேன்.
அந்தவகையில் நெல்லிக்காய்ப் பச்சடி.
வேண்டியவைகள்.
நெல்லிக்காய்—2
பச்சைமிளகாய்—1
இஞ்சி—சிறிது
புளிப்பில்லாத தயிர்—ஒரு கப்பிற்கு அதிகம
தேங்காய்த் துருவல்—3டீஸ்பூன்
சீரகம்–கால்டீஸ்பூன்
தாளித்துக்கொட்ட—சிறிது எண்ணெயும் கடுகும்.
ருசிக்கு—உப்பு
செய்முறை–
நெல்லிக்காயை கொட்டை நீக்கி வதக்கியோ, வேகவைத்தோ அதனுடன்
மிளகாய், சீரகம், தேங்காய்,இஞ்சியைச் சேர்த்து நன்றாக அறைத்து
உப்பு சேர்த்துத் தயிரில் கலந்து கடுகைத் தாளிக்கவும்.
கொத்தமல்லி, நறுக்கிய தக்காளியால் அலங்கரிக்கலாம்..
பச்சடி தயார்.
காய்ந்த நெல்லிக்காயானாலும், 4, 5, துண்டுகளை ஊறவைத்து
அறைத்துக் கலக்கலாம்.
துவாதசி சமையலின் ஒரு முக்கிய ஐட்டம் இது.
மற்றவைகளையும் ஒவ்வொன்றாக எழுதுகிறேன். வைட்டமின் ஸி நெல்லிக்காயில் அதிகம்.
நெல்லிக்காய்ப் பச்சடி.
வேண்டியவை—புளிப்பில்லாத தயிர் ஒருகப். கொட்டை நீக்கியநெல்லிக்காய் இரண்டு. மிளகாய்வற்றல் ஒன்று, தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள்ஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன்,
தாளிக்க கால்டீஸ்பூன் கடுகு, துளி பெருங்காயம், எண்ணெய் ஒரு டீஸ்பூன் பச்சைக் கொத்தமல்லி சிறிது,ருசிக்கு உப்பு.
செய்முறை——நெல்லிக் காயை சிறிது வதக்கிக் கொண்டு மிளகாய் தேங்காய், சீரகம் சேர்த்து
கெட்டியாக அரைத்து உப்பு சேர்த்துத் தயிரில் கலக்கவும்,. காயம் ,கடுகை தாளித்துக் கொட்டி கொத்தமல்லியைத் தூவவும். பச்சடி தயார். மிகவும் நல்ல மருத்துவ குணமுள்ள பச்சடி.
வெங்காயம் விரும்புவர்கள் எந்தப் பச்சடியிலும் சிறிது எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
வாழைத் தண்டைப் பொடியாக நறுக்கி மோரில் போட்டுப் பிழிந்து எடுத்து தயிர்ப் பச்சடி செய்யலாம்.
இஞ்சியைப் பிரதான பாகமாகச் சேர்த்தால் இஞ்சிப் பச்சடி.
கத்தரிக் காயை சுட்டு தோல் நீக்கிப் பிசைந்து தயிரில் போட்டுச் செய்யலாம்.
காரட் ,முள்ளங்கியையும் துருவிப் போட்டு செய்யலாம்.
பழ வகைகளைத் துண்டுகளாகச் சேர்த்துத் தயிரில்க் கலந்து சாட் மஸாலா சேர்த்தும் பச்சடி செய்யலாம்.
சௌ,சௌ, பாலக், புடலங்காய் உருளைக் கிழங்கு முதலான வற்றையும் பொடியாக நறுக்கி வேகவைத்தோ, அல்லது வதக்கியோ தயிரில்க் கலந்து பச்சடி செய்யலாம்.
இன்னும் எது எது தோதுபடுகிரதோ வகைவகையாகச் செய்யலாம்.
வறுத்த உளுத்த மாவு சேர்த்து ஓமம், பச்சை மிளகாய் தாளித்து டாங்கர் பச்சடி தயிரில் செய்யலாம்.
வடைமாவைக் கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுத்தும் தயிர்ப் பச்சடி செய்யலாம்.
பூண்டு வதக்கிப் போட்டும் செய்யலாம். பிடித்த ருசிக்குத் தக்கவாறு பொருள்களைத் தேர்வு செய்து அசத்துங்கள்.
சேனைக் கிழங்குத் துண்டை வேகவைத்து அரைத்தும் கலக்கலாம்.
எல்லாப் பச்சடிக்கும் இஞ்சி, தேங்காய் , உப்பு, பச்சை மிளகாய் கூட்டிக் குறைத்து ருசிக்கு ஏற்ப தயாரிக்கவும்.
வெள்ளரிக்காய் தயிர்ப் பச்சடி
வேண்டியவை——தோல் நீக்கித் துருவிய வெள்ளரிக்காயத் துருவல் ஒருகப்.
கெட்டியான கடைந்த தயிர் ஒருகப்,—-பச்சை மிளகாய் இரண்டு, இஞ்சி ஒரு துண்டு.
தாளிக்க அரைஸ்பூன் எண்ணெய், கடுகு சிறிது, ருசிக்கு உப்பு,
மேலே தூவ ஐந்தாறு நறுக்கிய பொதினா இலை , சில தக்காளி வில்லைகள்.
செய்முறை——தயிரைக் கடைந்து, சற்றே பிழிந்தத் துருவலுடன் இஞ்சி, பச்சை மிளகாயை
அரைத்துக் கலந்து உப்பு சேர்த்துக் கலக்கவும், கடுகு தாளித்து பொதினா இலையையும், தக்காளி வில்லையையும், மேலே சேர்த்து உபயோகிக்கவும். காரட் துருவல் தூவிநாலும் கலர்க் கலராக அழகாக இருக்கும்,
வெண்டைக் காய் பச்சடி
வேண்டியவை—ஒருகப் தயிர். வெண்டைக்காய் இளசாக 8
ஒருஸ்பூன் தேங்காய்த் துருவல் , மிளகாய் 1, இஞ்சி சிறிது
தாளிக்க -கடுகு கால்ஸபூன், பெருங்காயம் துளி, இரண்டுடீஸ்பூன் எண்ணெய், ருசிக்கு உப்பு
அறிந்த பச்சைக் கொத்தமல்லி. தக்காளி சிறிது.
செய்முறை—–வெண்டைக்காய்களை அலம்பித் துடைத்து மெல்லிய வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி மிளகாய், தேங்காயை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு பெருங்காயத்தை தாளித்து வெண்டைக்காய்த் துண்டங்களைப் போட்டு நிதானமான தீயில் வதக்கவும்.
சுருள வதக்கிய காயில் உப்பு சேர்த்து ஆற வைக்கவும்.
தயிரில் யாவற்றையும் சேர்த்துக் கலக்கி, கொத்தமல்லி தக்காளியால் அலங்கரித்துப் பறிமாரவும்.
பூந்திப் பச்சடி

பூந்திப்பச்சடி
வேண்டியவை
——-இரண்டுகப் தயிரைக் கால்கப் தண்ணீர் சேர்த்து கடைந்து கொள்ளவும்,-தவிரவும்
முக்கால்கப் பூந்தி, ருசிக்கு வேண்டியஉப்பு, மிளகாய்ப்பொடி .அறிந்த பச்சைக் கொத்தமல்லி.
செயமுறை மிகவும் சுலபமானது. கடைந்த தயிரில் யாவற்றையும் கலந்து பறிமாறவும். பூந்தி நீரை இழுக்கும் ஆதலால் சிறிது நீர் கலக்கிரோம் பரிமாறும் சற்று நேரமுன்பு பூந்தியைத் தயிரில் சேர்க்கவும்.
தக்காளித் தயிர்ப் பச்சடி
வேண்டியவை—புளிப்பில்லாத தயிர் ஒருகப்
சிறிய தக்காளிப் பழம் 2,—-திட்டமான வெங்காயம் ஒன்று
பச்சை மிளகாய் இரண்டு,—–சிறு துண்டு இஞ்சி இவைகளைத் தனித்தனியே மேல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
தாளிக்க தலா அரை டீஸ்பூன்கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு.
ருசிக்கு உப்பு,—— எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை— வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி தாளிக்கக் கொடுத்தவைகளைத் தாளித்து வெங்காயம், மிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் தக்காளியையும் சேர்த்து வதக்கி இறக்கி ஆற விடவும்.
தயிரில் உப்புடன் ஆறிய கலவையைச் சேர்த்து அறிந்த பச்சைக் கொத்தமல்லி தூவி உபயோகிக்கவும்.
வதக்காமலே தாளிப்பு மாத்திரம் செய்து தக்காளி வெங்காயத்தைப் பச்சையாகவே தயிரில் சேர்த்தும் செய்யலாம்.