Posts filed under ‘பழங்கள்’
விளாம்பழம்
அனேகமாக எல்லோருக்குமே இப்பழத்தைப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை . ஆனால் மிகவும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பழ வகை. பார்வைக்கு வில்வப்பழத்தைப் போன்ற உருவமும், அதே போன்ற தடித்த ஓட்டுடனும் கூடியது. காயாக இருக்கும்போது அதன் உள்ளே இருக்கும் சதைப் பற்று துவர்ப்பு. ருசியுடன் இருக்கும். பழுத்த பின் புளிப்பும்,துவர்ப்புமான ஒரு கலவை ருசி வரும்.அத்துடன் வெல்லமோ,சர்க்கரையோ சேர்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும். உப்பு,புளி சேர்த்து காரத்துடன் கொதிக்க வைத்து காரப் பச்சடியும்,வெல்லம் சேர்த்து இனிப்புப் பச்சடியும் செய்வதுண்டு. பழம் நன்றாகப் பழுத்து விட்டால் விளாம்பழத்தை கையிலெடுத்து ஆட்டிப் பார்த்தால் உள்ளே ஓட்டை விட்டுப் பிரிந்து விளாம்பழத்தின் குலுக்கல் தெரியும். நன்றாக வயது முதிர்ந்த பெரியோர்கள் விட்டதடி ஆசை விளாம் பழத்தின் ஓட்டோடே என்பார்கள். பழம் பக்குவமானவுடன் லேசான எடையுடன் உள்ளுக்குள்ளேயே ஓட்டை விட்டு விலகிவிடும்.. பழத்தை உடைத்து அகன்ற திக்கான அதன் ஓட்டை அகற்றி பின்னர்தான் அது உபயோகத்தில் வரும். சிரார்த்த தினத்தில் இப்பச்சடி செய்வது மிகவும் விசேஷம்.
இதன் விசேஷ குணங்கள் பித்தத்தைப் போக்கும். வாயுத் தொல்லைகள் அகலும். இம்மரத்தின் பிசின் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த மருந்தாக உபயோகப்படும். வயிற்றுப் புண்ணைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு. எங்கள் வீட்டில் இதனுடைய ஓட்டின் பெரிய துண்டுகளை ரஸத்தை இறக்கும்போது சேர்த்து இறக்குவார்கள். ரஸம் கமகம என்று எங்களுக்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானது.
உயரமான இம்மரங்களில் சிறிது முள்ளும் உண்டு. ஆங்கிலத்தில் இதை Wood apple என்று சொல்வார்கள். காய்,பழம் எல்லாவற்றையும் உபயோகித்து மோரிலும் பானங்கள் தயாரிக்கலாம். எல்லா இடங்களிலும் வளரக்கூடிய மரம்..
திருக்காறாயில் என்ற இடத்தின் கோவிலின் ஸ்தல விருக்ஷமே இந்த விளா மரம்தான்.
இலை,பூ,காய்,பழம் என்ற எல்லாவித இதன் பாகங்களுமே மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது என்பதை மனதிற்கொண்டு நல்ல பழக்கடைகளில் விசாரித்து கிடைக்கும்போது யாவரும் உபயோகிக்க வேண்டுமென்பதே என் எண்ணம்.