Posts filed under ‘பிட்லை வகைகள்’
வாழைத் தண்டு பிட்லை
அதிகம் நாரில்லாத அடிமரத்து வாழைத் தண்டு
வீட்டிலேயே கிடைத்ததால் பிட்லை செய்ய நன்றாக
இருந்தது.
தண்டின் மேலிருக்கும் பட்டைகளை நீக்கவும்.
வாழைத் தண்டை வறுவலுக்கு நறுக்குவது போல ஒரு
வில்லையை நறுக்கி, ஒரு விரலில் நாரை இழுத்துச் சுற்றிக்
கொண்டு, அடுத்தடுத்து வில்லைகளை நறுக்கி நாரை
நீக்கவும்.
வில்லைகளை நாலைந்தாக அடுக்கி மெல்லிய துண்டுகளாக
நறுக்கவும்.
2 டேபிள்ஸ்பூன் மோர் கலந்த தண்ணீரில் நறுக்கிய துண்டுகளை
அவ்வப்போது போட்டு வைத்தால் தண்டு கறுக்காமல்
இருக்கும்.
வேண்டியவை
சுமாரான ஒரு துண்டு வாழைத் தண்டிற்கான பிட்லையைச்
செய்ய ஸாமான்கள்.
துவரம்பருப்பு—–அரைகப்
கொத்தமல்லி விதை—-1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல்—-5
கடலைப் பருப்பு—-2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—-1 டீஸ்பூன்
மிளகு—-கால் டீஸ்பூன்
சீரகம்—-அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—-அரைகப்
புளி—-ஒரு கோலியளவு
தக்காளி—-ஒன்று
எண்ணெய்—ஒரு டேபிள்ஸ்பூன், தாளித்துக் கொட்ட கடுகு,
பெருங்காயம்.
மஞ்சள் பொடி சிறிது
ருசிக்கு—உப்பு
செய்முறை.
துவரம் பருப்போடு வேண்டுமானால் சிறிது கடலைப் பருப்பும்
சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
தனியா,மிளகாய்,பருப்பு,,மிளகை துளி எண்ணெயில் வறுத்து
சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளியையும் வதக்கி,
தேங்காயையும், சேர்த்துப் பிரட்டி சீரகம் சேர்த்து ஆறியவுடன்
மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அறைத்து வைக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் சிறிது தண்ணீரைக் கொதிக்க
வைத்து, நறுக்கிய மோர்த் தண்ணீரில்போட்ட வாழைத்
தண்டை ஒட்டப் பிழிந்து போட்டு நன்றாக வேகவைக்கவும்.
புளியைக் கறைத்து விட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து
கொதிக்கவிட்டு, அறைத்த கலவையையும் சேர்த்துக் கிளறி
ஒரு கொதி விட்டு, வெந்த பருப்பைச் சேர்க்கவும்.
கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கி கடுகு, பெருங்காயம் தாளித்துக்
கொட்டி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
கெட்டியாகவோ, சற்று தளரவோ செய்யவும்.
வாழைத் தண்டு உடம்பிற்கு நல்லது.
சுடசுட சாதத்துடன் சாப்பிட்டால் ருசிதான். உடன் சாப்பிட
இருக்கவே இருக்கிறது பொறித்த அப்பளாம், வடாம்.
இது சென்னையில் செய்தது. காரம் உங்கள் இஷ்டம் போல
கூட்டிக் குறைக்கலாம்.
பாகற்காய் பிட்லை.
பாகற்காயில் எது செயவதானாலும் காயை அலம்பி இரண்டாக
நறுக்கி விதைகளை நீக்கி விட்டு மெல்லிய துண்டுகளாக நறுக்கிக்
கொள்ளவும் பின்பு சிறிது மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து பிசறி
ஒரு பாத்திரத்தில் அமுக்கி வைத்து ஊறவைக்கவும்.
பிட்லைக்கு வேண்டிய சாமான்கள்.
பாகற்காய்—–நான்கு
வறுத்தரைக்க சாமான்
மிளகாய் வற்றல்—-3
மிளகு—–1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தலா ஒரு டீஸ்பூன்
தனியா–2 டீஸ்பூன்
பெருங்காயம்—சிறிது
வேக வைக்க—–துவரம் பருப்பு 1 கப்
சேர்த்து அரைக்க—–துருவிய தேங்காய் 1 மூடி
கரைத்து விட—-புளி எலுமிச்சை அளவிற்கு
நலலெண்ணெய்—–3 டேபிள் ஸ்பூன்
வாஸனைக்கு—–கொத்தமல்லி, கறிவேப்பிலை
வெல்லப்பொடி—–1 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு உப்பு
மஞ்சள் பொடி —சிறிது ,—–தாளிக்கக் கடுகு
தக்காளிப் பழம்—-ருசிக்கு ஏற்ப
செய்முறை—-பருப்பைக் களைந்து திட்டமாகத் தண்ணீர் சேர்த்து
குக்க்கரில் வேக வைத்துக் கொள்ளவும். சிறிது கடலைப் பருப்பும்
சேர்த்து வேக வைக்கலாம்.
வறுக்கக் கொடுத்திருப்பவைகளை சிறிது எண்ணெயில் சிவக்க
வறுத்து முக்கால் பங்கு தேங்காயையும் உடன் சேர்த்துப்
பிரட்டி எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து
எடுக்கவும்.
புளியை 2அல்லது 3 கப் தண்ணீரில் நன்றாகக் கரைத்து
சாறு எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் 2—3-,ஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய வைத்து,
பாகற்காயை சற்றுக் கசக்கி நீரைப் பிழிந்து விட்டுச் சேர்த்து
வதக்கவும்.
மைக்ரோவேவ் உபயோகிப்பவர்களாக இருந்தால் காயை
எண்ணெய் விட்டுப் பிசறி 4–5, நிமிஷம் வைத்து எடுத்தால்
அருமையாக வெந்து விடும்.
வதக்கிய காயில் புளி ஜலம், உப்பு வெல்லம், மஞ்சள்
சேர்த்து கொதிக்க விடவும்.
காய் நன்றாக வெந்து புளி வாஸனை போனபின்
அறைத்து வைத்திருக்கும் கலவையைச் சேர்த்துக்
கிளறவும்.
ஒரு கொதி வந்ததும், வெந்த பருப்பையுமசேர்த்துக்
கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லி கறிவேப்பிலை
போடவும்.
எண்ணெயில் கடுகு தாளித்து மிகுதி தேங்காயைசிவக்க
வறுத்துச் சேர்க்கவும்.
தக்காளியை வதக்கியோ, அரைக்கும் போது சேர்த்தோ
உபயோகிக்கலாம்.
கொண்டைக் கடலை, காய்ந்த பட்டாணி இவைகளை
முதல் நாளே ஊற வைத்து பருப்பு வேகும்போது சேர்த்துக்
கலந்து உபயோகிக்கலாம்.
காரத்திற்கும், வாஸனைக்கும் பச்சை மிளகாய் கொதிக்கும்
போது ஒன்றிரண்டு சேர்க்கலாம்.
கத்தரிக்காய் ரஸவாங்கி.
வேண்டியவைகள்
சிறிய வகை கத்தரிக்காய்——-கால் கிலோ
துவரம் பருப்பு—முக்கால் கப்
காராமணி——–அரைகப
வறுத்து அறைக்க சாமான்கள்—
மிளகாய்— 3 . ——தனியா 2 டீஸ்பூன்
கசகசா——2 டீஸ்பூன், வெள்ளை எள் -2 டீஸ்பூன்
மிளகு—கால் டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—–அரைகப்
எண்ணெய்—5 —-6 டீஸ்பூன்
மஞ்சள், பெருங்காயப்பொடி—-சிறிது
புளி——-சிறிய எலுமிச்சை அளவு
தக்காளிப் பழம்—–இரண்டு
வாஸனைக்கு—–கொத்தமல்லி, கறிவேப்பிலை
செய்முறை—–காராமணியை சற்று வறுத்துக் கொண்டு துவரம்-
-பருப்புடன் சேர்த்து தண்ணீர் விட்டு குக்கரில் நன்றாக
வேக வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்துக் கரைத்து இரண்டரை கப்பளவிறகு
சாறு எடுத்துக் கொள்ளவும்.
கத்தரிக் காய்களை சற்று பெரிய துண்டங்களாக நறுக்கி
அலம்பி தண்ணீரில் வைக்கவும்.
சிறிது எண்ணெயில் வறுக்கக் கொடுத்திருப்பவைகளை
வறுத்து ,கடைசியில் தேங்காயைச் சேர்க்கவும். ஆறின
பிறகு மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்
கொள்ளவும்.
நறுக்கிய தக்காளி, கத்தரித் துண்டங்களை சிறிது எண்ணெயில்
வதக்கி, புளித் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.
உப்பு, ம்ஞ்சள், பெருங்காயம் சேர்க்கவும். காய்கள் வெந்து
புளி வாஸனை போனபின் அரைத்த விழுதைக் கலந்து
ஒரு கொதி விட்டு வெந்த பருப்பைச் சேர்த்து நன்றாகக்
கொதிக்க வைத்து இறக்கவும்.
தக்காளி போடுவதால் புளியைக் குறைத்துக் கொள்ளலாம்.
வெங்காயம் வேண்டுமானால் சின்ன வெங்காயம்
வதக்கிச் சேர்க்கலாம். கரம் மஸாலாவும் அப்படியே.
கடைசியில் கடுகு தாளித்து கொத்தமல்லி கறி வேப்பிலை
சேர்க்கவும். வழக்கம்போல உப்பு காரம் உங்கள் கையில்.