Posts filed under ‘பொடி வகைகள்’
பச்சை கொத்தமல்லிப்பொடி
கொத்தமல்லித் தழை வாங்கியது அளவுக்கு அதிகமாக மிகுந்து
விடும் போல இருந்தது. காரம் அதிகமில்லாமல் பொடியாகச்
செய்து உபயோகிக்கலாம் என்று செய்தது. சாதத்திலேயே
நெய்யுடன் கலந்து சாப்பிடலாம்போல அமைந்து விட்டது.
வேண்டியவைகள்
நிறைய மிகுந்த கொத்தமல்லித் தழையை சுத்தம் செய்து
நிழலில் ஃபேன் அடியில் ஒரு துணியில் பறத்தி மூடி காற்றாட
உலர்த்தவும். ஈரம் இல்லாதிருக்க வேண்டும்.
உளுத்தம் பருப்பு—2 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு—2 டேபிள்ஸ்பூன்
குண்டு மிளகாய்—-12,அல்லது இன்னும் சில
ருசிக்கு உப்பு
துளி சர்க்கரை
பெருங்காயப்பொடி–சிறிது
புளி—-ஒரு நெல்லிக்காயளவு.
நல்லெண்ணெய்—-2 டீஸ்பூன்
செய்முறை
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் பருப்புகள்,மிளகாய்
பெருங்காயத்தை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
புளியையும் வெறும் வாணலியில் , பிய்த்துப்போட்டு
லேசாக வேண்டுமானால் வறுத்துக் கொள்ளலாம்.
பருப்புகள்,மிளகாய்,உப்பு, பெருங்காயம்,சர்க்கரை
சேர்த்து மிக்ஸியில் ரவை மாதிறி கரகரப்பாகப் பொடித்து
எடுக்கவும்.
கொத்தமல்லி இலையையும் புளியையும் சேர்த்து மிக்ஸியில்
தண்ணீர் சேர்க்காமல் 4 சுற்று சுற்றினால் பேஸ்ட் பதத்தில்
இலைகள் மசியும்.
முதலில் செய்த வைத்த பொடியைச் சேர்த்து 2 சுற்று சுற்றி
எடுக்கவும்.
தயாராகும் போது சற்று சேர்ந்தாற்போல இருந்தாலும் நாழியாக
ஆக உதிர்ந்தாற்போல ஆகும்.
எல்லாவற்றுடனும் எண்ணெய் சேர்த்துச் சாப்பிட,மோர் சாதத்துடன்
தொட்டுக்கொள்ள ஏற்றது.
அதிகம் ஸாமான்கள் சேர்த்துத் தயாரித்து நாட்பட உபயோகிக்க
ஃப்ரிஜ்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.
ருசிக்கேற்ப காரம் அதிகரிக்கவும்.
இதுவும் முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன்.
நாம் செய்வதிலேயே சில வித்தியாஸங்கள் அவ்வப்போது
ஏற்படுகிறது.
கார சாரமான பூண்டுப் பொடி
இதைச் சின்ன அளவில் செய்து பாருங்கள். ஊறுகாய் போலவும்
சட்னிக்குப் பதிலாக அவசரத்திற்கும் உபயோகப்படும்.
இதுவும் கிராமங்களில் செய்யும் ஒரு ருசியான அவசர
தயாரிப்பு.
வேண்டியவைகள்
வேர்க் கடலை—3 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள்—3 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல்— 3, அல்லது 4.
உறித்த பூண்டு இதழ்கள்—கால் கப்
ருசிக்கு உப்பு
பெருங்காயம்—வாஸனைக்கு
ஆம்சூர்—ஒரு டீஸ்பூன் அல்லது துளி புளி
ஒரு துளி எண்ணெய்
செய்முறை.
வெறும்வாணலியில்தனித்தனியாகஎள்ளையும்,வேர்க்கடலையையும்
சிவக்க வறுக்கவும்.
வேர்க் கடலையை கையினால் தேய்த்து தோலை நீக்கவும்.
துளிஎண்ணெயில் மிளகாயையும் சிவக்க வறுக்கவும்.
இவைகளைப் பெருங்காயம்சேர்த்துமிக்ஸியில்கரகரப்பாகப்
பொடிக்கவும்.
உறித்த பூண்டைதுண்டுகளாக்கி அரைத்த சாமான்களுடன்
உப்பு சேர்த்து சற்று மசியும்படி 2 சுற்று சுற்றவும்.
சேர்ந்தாற் போல வரும்.
ஆம்சூர். சேர்த்து சிறிய உருண்டைகளாகச் செய்துசிறிதுநேரம்
வெளியில் வைத்து பாட்டிலில்எடுத்துவைத்துஉபயோகிக்கவும்.
புளிப்புக்காக புளியோ, ஆம்சூரோ உபயோகிக்கவும்.
எள், வேர்க் கடலை உபயோகிப்பதால், எண்ணெய்ப் பசையுடன்
சேர்ந்தாற்போல இருக்கும். ஜலம் உபயோகிப்பதில்லை.
நீண்ட நாட்கள் கெடாது.
எள்மட்டிலும் சேர்த்தும், செய்யலாம்.
அதேபோல் வேர்க்கடலை மட்டும் சேர்த்தும் செய்யலாம்..
லின் ஸீட் சேர்த்தும் செய்யலாம். நான் நினைத்துக்
கொண்டேன் அக்ரூட், பாதாம், முந்திரி, ஸன்ப்ளவர் ஸீட்
என ஏதாவது வீட்டிலிருப்பதையும் ஏதாவதொன்றை சிறிது
சேர்த்தும் செய்து பார்க்க வேண்டுமென்று.
பூண்டை பச்சையாகவே வதக்காமல் போட வேண்டும்.
சற்று ஊற,ஊற பொடி சற்று உதிர் பதத்தில் வரும்.
காரம் வேண்டிய அளவிற்கு கூட்டவும். நான்
செய்தது,எள்,வேர்க்கடலை சேர்த்து செய்ததுதான்
சாப்பிடும்போது தனியாக சிறிது எடுத்து தயிர் கலந்தும் உபயோகிக்கலாம்.
மஸாலாபொடி
வேண்டியவைகள்
சீரகம்—–100 கிராம்—-
மிளகு—50கிராம்
லவங்கம்—-15
பெறிய ஏலக்காய்—-8
வெந்தயம்—-100கிராம்
லவங்கப் பட்டை—-2அங்குல அளவு
வெறும் வாணலியைச் சூடாக்கி
மேற்கூறியவைகளை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
சுக்கு—-2அங்குல நீளத்திற்கு 2துண்டுகள் சிறிது அதிகமோ,
குறைவோ ஆனாலும் பரவாயில்லை
.சின்ன ஏலக்காய்—12
ஜாதிக்காய்—–1
மஸாலா இலை—பிரிஞ்சி இலை–2
வறுத்த சாமான்களுடன் இவைகளையும் துண்டுகளாகச்
சேர்த்து மிக்ஸியில் நன்றாகப் பொடித்து வைத்துக் கொண்டால்
வேண்டியபோது, இதில் சிறிது போட்டால் சமையல்
மஸாலா வாஸனையுடன் ருசியாக இருக்கும். பொடியை
காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
வீட்டில் பொடி இருந்தால் சமயத்திற்கு உதவும்.
வேப்பிலைக் கட்டி.
பெயரைப் பார்த்து இது ஒரு கசப்பான பொருளாக இருக்கும்
என்றுமுடிவுக்கு வந்து விடவேண்டாம். வாய்க்கு,ருசியாகவும்,
ஆரோக்கியமுமான , தயிர் சாதத்துடன் ஊறுகாய் ஸ்தானத்தில்
உபயோகப்படுத்தப்படும் ஒரு எளிய தயாரிப்பு இது. பெரிய,
பெரிய, சாப்பாட்டுப் பந்திகளில்கூட வேப்பிலைக் கட்டி
விசாரிப்பு அலாதியானது. துளி தொட்டுண்டு பாருங்கோ இன்னும்
இன்னும் கொஞ்சம் சாப்பிடணும்னு தோணும், சொல்லிக்
கொண்டே போடுவார்கள். எங்கம்மாவும் இப்படி சொல்லி, பிறருக்கு
போடுவது அடிக்கடி ஞாபகம் வரும்போது எழுத வேண்டும்
என்று நினைப்பேன். இலைக்கு எங்கு போவது?
சமய வாய்ப்பாக சென்ற வாரம் 5, 6 நாட்களுக்கு சென்னையில்
என் பெண் வீட்டிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த செடி அவர்களின் தோட்டத்தின் ஒரு மூலையில் மரமாக
வளர்ந்து இருந்தது. நாரத்தையா, சாத்துக்குடியா என்ற யோசனை
தானாக வளர்ந்த செடியின் மீது தீர்ந்து, நாரத்தை என்று உறுதி
யானது. எனக்கு மிகவும் ஸந்தோஷம். ப்ளாகில் போட ஒரு
பழைய உருப்படி, தயாராகிவிட்டது வேப்பிலைக்கட்டி.
அன்றைக்கென்று என்னைப் பார்த்துப் போக வந்தவர்கள்
சாப்பிடும்போது ரஸித்து சாப்பிட்டுவிட்டு மிகுதியிருந்த
வேப்பிலைக்கட்டியை எடுத்தும் போனார்கள். முடிந்தவர்கள்,
கிடைக்கும் போது செய்யுங்கள். அல்லது இப்படியும் ஒன்று
செய்யலாம் என்பதை மனதிற் கொள்ளுங்கள். பாலக்காட்டு
பந்தி உபசரிப்பிலும் முதன்மையானது இது. ரெடிமேடாக
கிடைக்கவும் செய்கிறது. அம்பிகாஸ்டோர்களில்.
வேண்டியவைகள்.
நாரத்தை, அல்லது எலுமிச்சை இலைகள்—–அடைத்தமாதிரி 2 கப்
கறிவேப்பிலை—அரைகப்
மிளகாய் வற்றல்—-3
ஓமம், அல்லதுசீரகம் 2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி— அரை டீஸ்பூன்
அழுத்தமாக உருட்டிய புளி—-ஒரு நெல்லிக்காயளவு
ருசிக்கு—-உப்பு
கடுகு, வெந்தயம் வகைக்கு கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய்—–சிறிது
செய்முறை.
நாரத்தை இலைகளைத் தண்ணீரில் அலசித் துடைத்து நல்ல
துணியில் போட்டு காற்றாடவிட்டு ஈரத்தைப் போக்கவும்.
வெற்றிலையை மடித்து காம்பிலிருந்து நுணிவரை நரம்பை
எடுப்பதுபோல் இந்த இலைகளிலும் அதே முறையில் இலைகளை
மடித்து, நடு நரம்பை நீக்கவும்.கறிவேப்பிலை அப்படியே
சேர்க்கலாம்.
வெறும் வாணலியில் கடுகு,வெந்தயத்தை சிவக்கவும்,ஓமத்தை
வாஸனை வரும்படியும் வறுத்து ஆறவிடவும்.
மிளகாயைத் துளி எண்ணெயில் வறுத்து , உப்பு,பெருங்காயம்
சேர்த்து யாவற்றையும் மிக்ஸியிலிட்டு பொடிக்கவும்.
பொடித்தவுடன் இந்த இலைகள், புளி யாவற்றையும் சேர்த்து
மிக்ஸியை ஓடவிடவும். ஒரு முறை கிளறிவிட்டு ஒன்று சேர
பொடிக்கவும். ஜலம் அறவே சேர்க்க வேண்டாம்.
சற்று கெட்டியாக மசிந்ததை எடுத்து சிறிய வில்லைகளாகவோ
உருண்டையாகவோ செய்து ஊறுகாயிற்கு பதில் சிறிது சிறிதாக
உபயோகிக்கலாம்.
சிறிய பாட்டில்களில் போட்டு மூடிவைத்து உபயோகிக்கவும்.
நாரத்தை, எலுமிச்சை,இலைகள் பித்தத்தை நீக்கி நாவிற்கு
ருசியைக் கொடுக்கும்.
நம்முடைய சித்திரை தமிழ் வருஷப் பிறப்பன்று ஒரேஒரு
வேப்பந் துளிரை இதனுடன் சேர்த்து, எமனுக்கு வேம்பாக
இருக்க வேண்டுமென ஆசீர்வதித்து சாப்பிடும்போது துளி
போடும் வழக்கத்தையும் எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன்.
அதனால்தான் இது வேப்பிலைக் கட்டி என சொல்லப் படுகிறது
போலும். குட்டி குறிப்பு. விரிந்த எண்ணங்கள்.நான் சொல்வது
ஸரிதானே?
நாள்பட இருந்தால் ஈரம் உலர்ந்து சற்று பொடியாக உதிரும்.
நான் இதை பொடி வகைகளில்தான் சேர்த்திருக்கிறேன்.
வாழைக்காய்ப் பொடி.
வேண்டியவைகள்
முற்றிய வாழைக்காய்——2
கடலைப் பருப்பு—-2டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு—2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு—-2 டேபிள் ஸ்பூன்
தனியா–1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல்—-3
எண்ணெய்—1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி—-அரை டீஸ்பூன்
புளி—நெல்லிக்காயளவு
ருசிக்கு—–உப்பு
செய்முறை——-வாழைக்காயை லேசாக எண்ணெய் தடவி
தீயில் ,எல்லா பாகமும் படும்படி திருப்பிச்,சுடவும்
மைக்ரோ வேவில் வைத்தும் சுடலாம்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பருப்புவகைகளையும்,
மிளகாயையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.
சுட்ட வாழைக் காயின் தோலை உறித்தெடுக்கவும்.
ஆறிய பருப்பு மிளகாயை மிக்ஸியிலிட்டு நறநற என்ற,
ரவை போன்ற பதத்தில் பொடிக்கவும்.புளியைப் பிரித்துப்போட்டு
ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
பொடியை எடுத்துவிட்டு வாழைக்காயை
உதிர்த்து, உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் ஒருமுறை
சுழலவிட்டு அரைத்த பொடியையும் சேர்த்துக் கலந்து எடுக்கவும்.
வாழைக்காய்ப் பொடி தயார்.
சாதத்தில் கலந்தும், சாப்பிடலாம். மோர்க் குழம்பு, பச்சடி வகைகள்
இதற்குத் தகுந்த ஜோடியாகும்.
காரம் வகைகள் அவரவர்கள் ருசிக்குத் தக்கவாறு கூட்டிக்
குறைக்கலாம்.
பச்சைக் கொத்தமல்லிப் பொடி
வேண்டியவை———சுத்தப்படுத்தி ஈரமில்லாது நறுக்கிய பச்சைக் கொத்தமல்லித் தழை–3 அல்லது 4 கப்
உளுத்தம்பருப்பு கால்கப்
கடலைப்பருப்பு கால்கப்
பெருங்காயம் சிறிது
எண்ணெய் ஒருஸ்பூன்
ஒரு பெரிய கோலி அளவு கெட்டியாக உருட்டிய புளி
மிளகாய் வற்றல் 6 அல்லது ஏழு
ருசிக்கு உப்பு
செய்முறை——–வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பருப்புகளையும்
மிளகாயையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.
கலவை ஆறிய பின்னர் உப்பு பெருங்காயம் சேர்த்து
மிக்ஸியில் இவைகளை உதிர்உதிரான பருமனான
பக்குவத்தில் பொடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு நறுக்கிய கொத்தமல்லியையும், புளியையும
சேர்த்துத் தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைக்கவும்.
அரைத்தவிழுதில் தயாராகி வைத்துள்ள கரகரப்பான
பொடியைக் கொட்டி ஒரு சுற்று சுற்றவும்.
ஈரத்தை பருப்புகள் உறிஞ்சிக் கொள்ளும்.
சுவையான பொடி தயார். ;சற்று சேர்ந்தாற் போல
இருந்தாலும் சரியாகிவிடும். வைத்தும் உபயோகிக்கலாம்.
தோசை இட்டிலி முதல், தயிர் சாதம்வரை சுவை கொடுக்கும்.
கொத்தமல்லியை அலம்பி ஈரம் போக துணியில் பரத்தி
உலர வைத்து உபயோகிக்கவும்.
தோசை மிளகாய்ப்பொடி
வேண்டியவைகள்—-வற்றல் மிளகாய் 12அல்லது 15,-
காரத்திற்கேற்ப.
கடலைப் பருப்பு——-அரைகப்.
உளுத்தம் பருப்பு——-அரைகப்,
சர்க்கரை—-ஒரு டீஸ்பூன்,
புளி–ஒரு நெல்லிக்காயளவு,
வெள்ளை எள்—-கால்கப்,
பெருங்காயப் பொடி—-ஒரு டீஸ்பூன்
ருசிக்கு தேவையான உப்பு.
செய்முறை——வெறும் வாணலியில் எள், பருப்பு முதலானவற்றை ,
தனித் தனியாக, சிவக்க வறுத்துக் கொள்ளவும் .
துளி உப்புப்பொடி சேர்த்து காம்பு நீக்கிய மிளகாயை.
வெறும் வாணலியில் வறுத்தால் கமராமல் இருக்கும்.
புளியையும் பிய்த்துப் போட்டு வெறும் வாணலியில்
சற்றே வறுத்துக் கொள்ளவும்.
யாவும் ஆறிய பின் வேண்டிய உப்பு சேர்த்து ,புளி,
எள், நீங்கலாக, யாவையும் ஒன்று சேர்த்து மிக்ஸியிலிட்டு
பொடிக்கவும். சற்று பொடித்த பின் எள்ளைச் சேர்க்கவும்.
ஒரு சுற்று சுற்றி புளியையும் சேர்த்து கரகர என்ற
பக்குவத்தில் அரைத்து சுத்தமான பாட்டில்களில் எடுத்து
வைத்து உபயோகிக்கவும்.
இட்லி, தோசை என எல்லாவற்றிற்கும், நல்லெண்ணெய் சேர்த்துச்
சாப்பிட அவசரத்திற்கும் , அவசியத்திற்கும் ருசியானதுமான உற்ற
தோழனிது. வேர்க்கடலை, அல்லது பொட்டுக் கடலை சேர்த்தும்
உப்புக் காரத்தைக் கூட்டிக் குறைத்தும் செய்யலாம்.
பருப்புப் பொடி
வேண்டியவைகள்——-துவரம் பருப்பு அரை கப்
கடலைப் பருப்பு——-அரைகப்
உளுத்தம் பருப்பு—-ஒரு டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள்–ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு——-ஒரு டீஸ்பூன்
வற்றல் மிளகாய்—-மூன்று
பெருங்காயம்—சிறிது
ருசிக்கு வேண்டிய உப்பு
செய்முறை——வெறும் வாணலியில் பருப்புகளைத்
தனித்தனியாகச் சிவக்க வறுத்துக் கொள்ளவும். எள்ளையும்
இப்படியே தனியாக வறுக்கவும். மிளகு, மிளகாயையும் தீயாமல்
வறுத்து , உப்பு, பெருங்காயம், சேர்த்து மிக்ஸியில் சற்று
கரகரப்பான பதத்தில் பொடிக்கவும்.
பருப்புகளையும், மற்றவைகளையும், நிதானமான தீயில்
வறுக்க வேண்டும். வறுபடுதல் குறைவானால் பொடி,
சாப்பிடும் போது வாயில் ஒட்டும்.
சாதத்துடன் நல்லெண்ணெய் அல்லது, நெய்யுடன் சேர்த்து
சாப்பிட ருசியாக இருக்கும். துணைக்கு பச்சடிகள் இசைவு.
கறிப்பொடி
வேண்டியவைகள்– ——–கடலைப் பருப்பு அரைகப்
உளுத்தம் பருப்பு அரைகப்,
தனியா அரை கப்,
மிளகாய் வற்றல் 15 , வேண்டிய காரத்திற்கு தக்கபடி
கட்டி பெருஙகாயம் சிறிதளவு
அரை டீஸ்பூன் எண்ணெய்
செய்முறை——நிதானமான தீயில் அரைஸபூன் எண்ணெயை
வாணலியில் விட்டு காய வைத்து தனியாவைத் தவிர
மற்ற சாமான்களைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
தனியாவைத் தனியாக வறுத்துச் சேர்க்கவும்.
ஆறியபின் யாவற்றையும் மிக்ஸியிலிட்டு ரவைபோன்ற
கரகரப்பான பதத்தில் அரைத்தெடுத்து பாட்டில்களில்
கொட்டி மூடி வைத்து உபயோகிக்கலாம்.
வாஸனை பிடித்தவர்கள் சிறிதளவு சீரகமோ, பட்டையோ,
சேர்த்துப் பொடிக்கலாம். எண்ணெயில் வதக்கும் காய்
கறிகளுக்கும், வாழைக்காய், கத்தரிக்காய் ,கறிகளுக்கும்
இப்பொடி மிகவும் ஏற்றதாக இருக்கும்.
ரஸப் பொடி
- வேண்டியவைகள்——–காய்ந்த மிளகாய் வற்றல் 200 கிராம்
- .கொத்தமல்லி விதை 500 கிராம்.
- துவரம் பருப்பு 200 கிராம்.
- மிளகு 200 கிராம்.
- சீரகம் 200 கிராம்.
- விரளி மஞ்சள் 100 கிராம்.
செய்முறை——–மிளகாயைக் காயவைத்து, காம்பை நீக்கிக கொள்ளவும். மற்ற சாமான்களையும் , வெய்யிலில் நன்றாகக்
காயவைத்து ,ஒன்றாகச் சேர்த்து மிஷினில் கொடுத்து மிகவும்
நைஸாக இல்லாமல், சற்று,கரகரப்பான பதத்தில், அறைத்துக்
கொடுக்கச் சொல்லி , பேப்பரில் கொட்டிப் பரவலாக வைத்து
ஆறவைத்து பாட்டில்களில் எடுத்து வைத்து உபயோகிக்கவும்.
அவ்வப்போது புதியதாகச் செய்வதானால் சிறிய அளவில்
வருத்துப் பொடி செய்து கொள்ளலாம். மிஷினில் அறைப்பதாநாலும்
லேசாக வறுத்துக் கொடுக்கலாம். வறுத்து அறைத்த பொடி
கெட்டுப் போகாது. நீண்ட நாட்கள் இருக்கும்.