Posts filed under ‘வற்றல் வகைகள்’
மோர் மிளகாய்
பெயர் தான் மோர் மிளகாயே தவிர ஊறுவதென்னவோ தயிரில்தான்.
நல்ல ருசியான மிளகாய். எண்ணெயில் வறுத்து தயிர் சாதத்துடன்
சாப்பிட கட்டு சாப்பாட்டுகளுடன் எடுத்துப் போக என சுலபமானது.
ஜெனிவா வெய்யிலில் தயாரித்த என்னை ஏன் போடவில்லை என்று
கேட்பது போல மனதில் ஒரு எண்ணம். எழுதின குறிப்பைப் போட்டுவிட்டால்
போகிறது. விருப்பமானவர்களுக்கு உபயோகமாக இருக்குமே.
வேண்டியவைகள்.
பச்சை மிளகாய்—அதிக காரமில்லாத சிறிய சைஸ் ஒரு 20 , 25.
பெறிய சைஸாக இருந்தால் நம்பரைக் குறைத்துக் கொள்ளவும்.
நல்ல தயிர்—–ஒருகப். அதிகமும் விடலாம்.
உப்பு ருசிக்குத் தக்கபடி .2 டீஸ்பூன் வரை ஸரியாக இருக்கும்.
செய்முறை.
மிளகாய்களை அலம்பித் துடைத்துக் காயின் நுனியில் சற்றுக் கீரவும்.
காம்பையும் சிறிது வைத்து மிகுதியை நீக்கவும்.
கண்ணாடி, அல்லது ஜாடிக் கிண்ணத்தில் மிளகாயைப் போட்டு அது
மூழ்கும்படி தயிரைக் கடைந்து அத்துடன் சேர்க்கவும்.
உப்பு சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும்.
2, 3நாட்கள் தயிரில் ஊறின பிறகு மிளகாயைச் சற்று பிழிந்தாற்போல
எடுத்து வெய்யிலில் காயவைக்கவேண்டும்.
ஒரு ட்ரேயிலோ, தட்டிலோ பாலிதீன் பேப்பரினால் கவர் செய்து
அதன் மேல் பரவலாக மிளகாயைப் பரப்பி நல்ல வெய்யிலில்
காயவைக்கலாம்.
தயிர்க் கலவையையும் கூடவே வெய்யிலில் வைக்கவும்.
வெய்யில் போன பிறகு மிளகாயைத் திரும்பவும் தயிருடனே
கலந்து வைக்கவும்.
ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படியே மிளகாயைக் காய வைக்கவும்.
வெய்யிலில் வைக்க வைக்க மிளகாயும், தயிரும் காய்ந்து விடும்.
கொஞ்சம்,தயிர், உப்பு காய்ந்து மிளகாயினின்றும் பொடியாக உதிரும்.
நன்றாகக் காய்ந்த மிளகாயை பாட்டிலில் போட்டு வைத்து, வேண்டும்
போது எண்ணெயில் சற்றுக் கருக வறுத்து உபயோகிக்கவும்.
தயிரில் ஊறின மிளகாய்கள் நல்ல மணத்துடன் உப்பும் உறைப்புமாக
ருசியாக இருக்கும். எண்ணெயில் வறுத்த பிறகுதான்.
ஊறும் போதே பச்சையாக தொட்டுக் கொள்ள உபயோகிப்பவர்களும்
உண்டு.
கெட்டியான புளிக்கரைசலிலும் மிளகாயை ஊறவைத்து இதே முறையில்
காயவைத்து தயாரிப்பதும் உண்டு.
தயிர் அதிகமாகவே சேர்க்கவும்.
மோர்க்குழம்பு, மோர்க்களி, இட்லிஉப்புமா இவைகளில் முக்கியமாக
இம்மிளகாய் உபயோகப்படும்.
வீட்டில் அதிகப்படியாக மிகுந்து போகும் 7, 8 மிளகாயில் கூட இதைச்
சிறிய அளவில் செய்து காயவைத்து உபயோகப் படுத்தலாம்.
மூன்றாவது படம் ஊறும் மிளகாய்.
கடைசி படம் நன்றாகக் காய்ந்த மோர் மிளகாய். இனி வறுக்க வேண்டியதுதான் பாக்கி.
