Posts tagged ‘ஆம்ஸ்டர்டாம்’
யானை எப்பொழுது வந்தது ரஷ்யாவிற்கு.
இது நமக்கு அவசியம் இல்லை. ஆனால் என்னுடைய மகனின் நண்பருக்கோ நான் எழுதுகிறேன் ப்ளாக். அதில் அவர் சொன்னதும் நான் எழுதுகிறேனா என்று பார்க்க எண்ணம்.
நான் மிகவும் உடல் நலமில்லாது இருந்த நேரம். அவர் மாஸ்கோவினின்றும் அடிக்கடி ஜெனிவா வந்து போய்க் கொண்டு இருந்தார். கூட வேலை செய்த மிகுந்த நட்பானவர் ஆதலால் இங்கு வீட்டில்தான் தங்குவார். என்னை உற்சாக மூட்டுவதற்காக ஏதேதோ சொல்லிக்கொண்டு இருப்பார், அப்போது
. எதுவும் மனதில் ஏற்றுக் கொள்ளும்படியான நிலை இல்லை என்னுடயது.
ஒரு வாரத்திற்கு முன் அவர் வந்திருந்தார். ஆன்டி எழுதினீர்களா இல்லையா என்ற கேள்வியுடன்.
நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதே நினைவில்லை. அந்த ஸமயத்தில் நடந்தவைகள் கூட எதுவுமே ஞாபகத்திலில்லை. இதெல்லாமென்ன ? ஓரிருவரிகள் எந்த ஸ்லோகமாவது மனதில் வரவேண்டுமே. எவ்வளவு முயன்றும் அந்த ஸமயத்தில் எதுவும் வரவில்லை. ஊஹூம்
. அதனாலென்ன?
இப்போது திரும்பவும் சொல்கிறேன். கேட்டுக் கொள்ளுங்கள் என்றார்.
அவர் பெயர் வினய். இந்தியர். இந்திய மொழி எதுவும் தெரியாது. கூர்க்க தம்பதிகளின் மகனாகப்பிறந்தாலும் கானடா நாட்டில் பிறந்து வளர்ந்து ,ஆர்மீனியன் யுவதியை மணந்து , அழகிய இரண்டு கூர்க்க அழகிகளாகிய இரண்டு மகள்களைப் பெற்று, இந்திய மண்ணின் கலகலப்போடு மற்றவர்களை நேசிக்கும் குணம் கொண்டவர். அவரும் Unaids இல் மாஸ்கோவில் டைரக்டராகப் பணியாற்றுபவர்.
மடை திறந்தமாதிரி பேச்சு. சாப்பாட்டு மேஜை. உணவு உண்டு கொண்டே அவர் எனக்குக் கதை சொல்கிரார் ஆங்கிலத்தில். புரிந்த வகையில் பெயர் முதலானது குறித்துக் கொள்கிறேன்.
ஒரு அக்கரையுடன், ஆசாரிய சிஷ்ய பாவத்துடன் நானும் எதிர்க்கேள்விகளும் கேட்டு ஓரளவு புரிந்து கொள்கிறேன்.
அந்த ராஜாவின் பெயர் தி கிரேட் பீட்டர். ரஷ்யாவின் ராஜா.
இப்போது நான் இதை ஒரு பதிவாக இதை எழுதுகிறேன்.
அவர் பிறந்த இடம் மாஸ்கோ என்றாலும் வளர்ந்தது,படித்தது எல்லாம் லண்டன்,பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் போன்ற இடங்களில்தான்.
மாஸ்கோவைப் பார்த்தாலே பிடிக்காது பீட்டருக்கு. நாம் அரசாளும் போது தலைநகரை புதியதாக நிர்மாணம் செய்து அசத்த வேண்டும் என்று எப்போதும் நினைத்த வண்ணம் இருந்தான்.சிறிய வயது முதலே இதே எண்ணம். அரசனாகவும் வந்த பிறகு
1703 வருஷம் அவர் தலைநகரை அழகாக நிர்மாணம் செய்ய நினைத்தார். மாஸ்கோவை புதுப்பிப்பதைவிட வேறு ஒரு இடத்தில் தலைநகரை அழகுற நிர்மாணம் செய்ய வேண்டி நினைத்ததை நடத்த, ஒரு சட்டம் கொண்டு வந்தான்.
தான் தேர்ந்தெடுத்த இடத்தில் மட்டுமே புதியதாக வீடுகள் கட்ட முடியும். மாஸ்கோவிலோ மற்றும் வேறு எங்குமே புதியதாகக் கட்டிடங்கள் எழுப்பக்கூடாது என்று ஆணை பிறப்பித்து விட்டான். அதுவும் இருபது வருடங்களுக்கு.
அவர் தேர்ந்தெடுத்த இடத்தில் தானும் ஒரு சின்னதான அளவில் ஒரு காட்டேஜ்
அதைச்சுற்றி வனம்,காடு,அழகியதோட்டங்கள், நீரூற்றுகள்,அழகியசிலைகள்,என மிகவும்,வனப்பாகவும், பொழுது போக்கும் இடமாகவும்,நிர்மாணம் செய்தான்.அங்கே அவன் வசித்தான். புதியதாகக் கட்டும் எந்த ஒரு கட்டிடமும் அங்குதான் நிர்மாணிக்கப் பட்டது.
சுற்றிலும் பல பங்களாக்கள்,என மற்றும் பல அம்சங்களுடன் அந்தக்காலத்தில் அதைப்போன்ற நகரை உருவாக்குவது என்பது சிரமமான காரியம். இந்த இடமே தலைநகராக ஸெயின்ட் பீட்டர்ஸ் பர்க்காக உருவெடுத்துத் திகழ்ந்தது. தலைப்பில் உள்ள படம் அதுதான்.
1725 இல் தி பீட்டர்த கிரேட் காலமானார். அவருக்குப் பிறகு ரஷ்யன் பிரின்ஸைக் கலியாணம் செய்து கொண்ட ஒரு பெண்மணி பதவிக்கு வந்து விட்டாள். அவள் பெயர் கேத்தரின். அவளும் இந்தத் தலை நகரை மிகவும் பிரயாசைப்பட்டு அழகுற யாவையும் அமைத்து முடித்தாள்.
இதை ஒரு அதிசய நகராகவும்,அழகுப் பூங்காகவாகவும் யாவரும் விரும்பும் சுற்றுலா நகரமாகவும் இருக்க விரும்பி இதை முடித்தாள். பூங்காவினுள் நீரூற்றும், பளிங்குச்சிலைகளும் பல் வேறு இடங்களில் அமைத்தாள்.
ஆரம்பகாலத்தில் யாவரும் விரும்பிப் பார்க்க ஏராளமானவர்கள் வந்தனர். நாளடைவில் பார்வையாளர்கள் குறைய ஆரம்பித்தனர். வேனிற்காலத்தில் மட்டுமே பூங்கா களைகட்டும். அதுவும் மிகக் குறைய ஆரம்பிக்கவே ராணி கேத்தரினுக்கு, தான் முடித்த ஒரு இடத்தைப் பார்க்க, பார்வையாளர்கள் எப்போதும் வரும்படியாக இருக்க வேண்டும். கவலை சூழ்ந்து கொண்டது.
எப்படியாவது பார்வையாளர்களைப் பெற ஒரு யோசனை உதித்தது. ரஷ்யர்களும் அதிகம் பார்த்தே இராத ஒரு அதிசய ம் இங்கு இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.
அவள் யோசனையில் யானை முன்னணி யில் வந்தது. சிலயானைகளை இந்தியாவிலிருந்து கொண்டுவர வேண்டும். போக்கு வரத்து சாதனங்கள் அதிகமில்லாத காலம். பலதரப்பட்ட சீதோஷ்ணங்கள். மலைகள்,நதிகள்,கடந்து வந்தாலும் பராமரிக்க ஆட்கள், வருஷம் முழுவதும் யானைக்குத் தீனிபோட பச்சைத் தாவரங்கள் எல்லாம் யோசித்து ஏற்பாடு செய்து, யானைகள் வாங்க ஒரு ரஷ்யக் குழுவினரை அனுப்ப, அவர்கள் இந்தியா வந்தனர்.
வரும் வழியிலுள்ள பாலங்கள் எல்லாம் யானையின் பளுவைத் தாங்கக் கூடியதாக பலமாக உறுதிப்படுத்தினார்கள். இப்படி பாலங்களெல்லாம் மராமத்து செய்யப்பட்டு உறுதியாக்கப்ட்டது.
நம் இந்தியாவிலும் அப்போது அரசர்கள்தானே ஆண்டு வந்தனர். ஒருயானை மட்டும் இல்லை,சிலயானைகள்.பாகன்கள்,வைத்தியர்கள் என்று மிகுந்த பொருட் சிலவில் நான்கைந்து வருஷங்கள் நடந்தே யானைகள் ஸெயின்ட் பீடர்ஸ் நகர்வந்தடைந்தது.
அதற்கு வேண்டிய கொட்டாரங்களும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டு காக்கப்பட்டதாம். பார்வையாளர்கள் முன்பைவிட ஏராளமானவர்கள் வந்தனர். ராணி கேத்தரினுக்கு மிகவும் ஸந்தோஷம்.
அந்த யானையின் வம்சம் இன்னும் இருக்கா என்றேன். ? அதெல்லாமில்லை. ரஷ்யாவின் முக்கியமான இடங்களிலுள்ள மிருகக் காட்சி சாலையில் யானை இருக்கிறது. அவ்வளவு தான். ப்ளைட்டுக்கு நேரமாகிறது. நீங்களும் மாஸ்கோ வாருங்கள். உங்கள் கட்டுரை பார்க்கணும், எழுதுங்கள் என்று சொல்லி விடை பெற்றார் அந்த வினய். பாவம் அந்த யானைகள். ஜம்மென்று இந்த நாளானால் ப்ளேனில் கூட பறந்திருக்கலாம்!!!!!!!!!!!!!!!!!!!
ரஷ்யாவிற்கு எப்பொழுது யானைகள் வந்தது என்பதை விட ஸெயின்ட் பீடர்ஸ் பர்க் எப்படி உண்டாயிற்று என்ற ஸ்தல புராணம் என்ற தலைப்பே கொடுத்திருக்கலாம். எப்படியோ பாருங்கள். யானைகள்தான் அவ்விடத்தில் இல்லை. மற்ற யாவும் இருக்கின்றனவாம் ரஸிப்பதற்கு!!!