Posts tagged ‘எழுதுகோல்’
சித்திரா பவுர்ணமி.
நன்றி—-படம். கூகல்
இவ்வருஷத்திய சித்ரா பவுர்ணமி பூஜை 3—5—-2015 அன்று வருகிறது.
சித்திரைமாத, பவுர்ணமி,,சித்திரை நக்ஷத்திரமும் சேர்ந்து வரும்தினத்தைச்,சித்திராபவுர்ணமி என்று கொண்டாடி பூஜிக்கிறோம்.ஏறக்குறைய நக்ஷத்திரமும்,பவுர்ணமியும் சேர்ந்து வரும்.அன்று சித்திர குப்தனுக்கு பூஜை செய்து வழிபடும் வழக்கமிருந்தது.இதற்காக ஒரு கதையும் வழக்கத்தில் சொல்லுவார்கள்.
ஒருஸமயம் பார்வதிதேவி அழகான சித்திரமொன்றை வரைந்தார். அதற்கு சிவபெருமான் உயிர் வழங்கினார். சித்திரம் உயிர்பெற்றதால் சித்ரகுப்தனென்ற பெயர் வழங்கலாயிற்று.
யமதர்மராஜனுக்கு வேலை பளுஅதிகமாகிறதுயார்என்னபாவபுண்ணியங்கள்செய்தார்களென்று
பார்த்து அவர்களுக்கானதைச்செய்வதில் கடினம் ஏற்படுகிறது என்று
விஷ்ணுவிடமும்,சிவனிடமும் சொல்கிரார் யமன். உயிர்களைப் படைக்கும் பிரம்மதேவனிடம் சொல் என்கிரார்கள் அவர்கள். யமதர்மருக்கு,
அப்படி பிரம்ம தேவனால் கணக்குப்பிள்ளையாக சித்ரகுப்தன் நியமிக்கப்படுகிறார்.உலகத்தில் எல்லோருடைய பாப புண்ணிய கணக்குகளைத் துல்லியமாக வைப்பவர் சித்ர குப்தன்.
அவரை பூஜைசெய்து வணங்குவதுதான் சித்ரா பௌர்ணமியின் விசேஷம். தாங்கள் செய்த பாவங்ளைக் குறைத்தும்,புண்ணியங்களை அதிகரிக்க வேண்டுவதுதான் இந்த பூஜையின் நோக்கமே. புண்ணியமான காரியங்கள் அதிகம் செய்ய வேண்டுமென்பதை இந்த நாள் ஞாபகப்படுத்துகிறது. அதிலும் வயதான பெண்மணிகள் கட்டாயம் இதைச் செய்வார்கள்.
உப்பில்லாமல் சாப்பிடுவது இதன் விசேஷம். நிவேதனத்திற்கு உப்பு சேர்த்து ருசியாகச் செய்து நிவேதித்து தானமும் செய்வார்கள். இந்த நன்னாளில் தானம் செய்வது விசேஷம்.
கோடைகாலமாதலால் விசிறி,குடை,பாதரக்ஷை, பழங்கள் என தானம் கொடுப்பார்கள்.
எங்கள் ஊரில் ஐந்து ஆறு பெண்களாகச் சேர்ந்து இதனைச் செய்வார்கள். சித்திரகுப்தன் கதை ஏதோ பாட்டின் வடிவத்தில் இருக்கும். புத்தகம் பார்த்து பாடுவார்கள். மற்றவர்கள் பக்தியுடன் பாட்டைக் கேட்பார்கள். மிக்க சுலபமான நடையில், ஒரே ராகமாகத்தான் பாடிக் கேட்டிருக்கிறேன்.
ஒரே ஒரு அடி ஞாபகம் உள்ளது. சித்திர புத்திரனார், சீரார் பெரும் கணக்கர், நாட்டுக்கொரு கணக்கர் நல்ல கணக்கர் வந்தாரம்மா இப்படியே கதை பூராவும் பாடுவார்கள். பாட்டைக் கேட்பதற்கு அக்கம்,பக்கமுள்ள பெண்கள் எல்லோரும் வந்து பக்தியுடன் பாடலைக் கேட்பார்கள். பூஜையின் கடைசியில் பிரஸாத விநியோகமும் உண்டு. முக்கியமாக அன்று உப்பில்லாமல் சாப்பிடுவார்கள்.
சர்க்கரைப் பொங்கல்,மெயினாகப் பண்ணுவார்கள். மாங்காய் விசேஷமாக இருக்கும். அன்றைய தினம் தானங்கள் செய்தால் விசேஷமென்பர். கலந்தசாதங்கள்வடை முதலானதும் செய்து வந்தவர்களுக்குக் தானமாகக் கொடுப்பார்கள்.
போடும் இழைகோலத்தில் தெற்குபுறம் வாயிற்படி மாதிரி திறந்து விட்டுக் கோலம் அமைந்திருக்கும். நடுவில் சித்திர குப்தனாக கற்பனை செய்துஒரு படம். வைதீகர்கள் வீட்டில் ஓலைச்சுவடிகள் இருக்கும். அதனுடன் எழுதுகோலும் பூஜையில் வைத்து பூஜிப்பார்கள். கிருஷ்ணாஷ்டமிக்குப் போடுவதுபோல வாயிலிலிருந்து பாதமும் போடுவார்கள். இப்பொழுது பார்க்கவே கிடைக்காது. நிறைய பேர் வந்து பூஜையைப்பார்த்துப் போவார்கள். உப்பில்லாமலும் சாப்பிடுவார்கள்.
சென்றமாதம் காஞ்சீபுரம் போய் சித்ர குப்தன் கோவிலுக்குப் போய் வந்தோம். மிகவும் அருமையாக பராமரிக்கப்பட்டு வருகிறது கோவில். அதன் ஞாபகமாக இந்தப்பதிவு.